Monday, 5 June 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (5.6.2017 - 11.6.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம் :

பிடிக்காதவர்களிடம் இருந்து பணம் வரும் வாரம் இது. பணம் கொடுத்ததன் காரணமாக சண்டைக்கு உள்ளாகி எதிரியாகி விட்டவர்களிடமிருந்து கொடுத்த பணம் இப்போது திரும்ப வரும். குடும்பப் பிரச்னைகளும் தீர்வுக்கு வரும். வார ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பது சாதகமற்ற பலன்களை தடுத்து நிறுத்தும் ஒரு அமைப்பு என்பதால் மேஷ ராசிக்கு இந்தவாரத்தில் பிரச்சினைகள் இருக்காது.


கடந்த இரண்டு வருடங்களாக அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் எந்த நல்லவைகளும் நடக்காமல் மேஷராசிக்காரர்கள் முடங்கிப் போயிருக்கிறீர்கள். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சங்கடங்களைத் தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் இன்னும் சில வாரங்களில் படிப்படியாக நீங்கி செப்டம்பர் மாதம் முதல் உங்கள் அனைவருக்கும் வாழ்க்கை சீராகச் செல்லும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். 6,8,11 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி மாலை 4.35 மணி முதல் 10-ம்தேதி அதிகாலை 5.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் எவருடனும் வீண் வாக்குவாதம் செய்வதோ சண்டை போடுவதோ வேண்டாம். மேற்கண்ட தினங்களில் எதிலும் பொறுத்துப் போங்கள். நீண்ட தூர பயணங்களையும், புதிதாக எதையும் ஆரம்பிப்பதையும் இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் :

இந்த வாரம் உங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாக நீங்கள் சமாளிக்கும் வாரமாக இருக்கும். சுக்கிரன் வலிமையோடு இருந்து ராசிக்கு குருபார்வை இருப்பதால் எந்த சூழ்நிலையையும் உங்களால் சமாளிக்க முடியும். இறுதியில் சாதித்துக் காட்டுவீர்கள். கேது சுபவலிமையுடன் இருப்பதால் ஆன்மிகம், மருத்துவம், மெடிக்கல்ஷாப், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

வர இருக்கும் ராகு கேது பெயர்ச்சியில் ராகு,கேது இருவரும் நல்ல இடங்களில் மாறப் போவதால் இனிமேல் வெளிநாட்டு விஷயங்கள் நன்மை தரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி, அவுட்சோர்சிங் போன்ற தொழில்கள் நடத்துபவர்களுக்கும், அதுபோன்ற நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் இதுவரை இருந்துவந்த தடைகள் விலகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இனிமேல் வெற்றிகரமாக கை கொடுக்கும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது ஐந்தில் குரு, ராசிநாதன் சுக்கிரனும் புதனும் வலுவான நிலை என சாதகமான கிரகநிலைகள் நடந்து கொண்டிருப்பதால் இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாகவே அமையும். 6,7,11 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம்தேதி அதிகாலை 5.11 மணி முதல் 12-ம்தேதி பகல் 5.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பதும், அறிமுகமில்லா ஆட்களிடம் தேவையின்றி விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் நல்லது.
 
மிதுனம் :

ராசிநாதன் புதன் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் நட்பு பலம் பெற்று கீர்த்தி ஸ்தானத்திற்குரிய சூரியனுடன் இணைந்திருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் மன உறுதியுடன் முடிவுகளை எடுக்கும் வாரமாக இது இருக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் முடிவுக்கு வரும். உங்களைப் பிடிக்காதவர்களின் கை வலுவிழக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் உங்களை ஒன்றும் செய்யாது. எதிர்ப்புகளைக் கண்டு நீங்கள் தயங்கிக் கொண்டிருந்த நிலை மாறி எதிரிகள் உங்களைப் பார்த்து ஒளிகின்ற நிலை ஏற்படும்.

சிலருக்கு அதிகமான ஆன்மிக நாட்டமும், ஞானிகள் தரிசனமும் கிடைக்கும். இதுவரை தவிர்க்க இயலாமல் செய்து கொண்டிருந்த வீண் செலவுகள் நிற்கும். ஏதாவது ஒரு வகையில் சிறுதொகையாவது சேமிக்க முடியும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபடியாக கை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது விசா கிடைக்கும். ராசிநாதன் புதன் நட்புவலுவில் இருப்பதோடு, யோகாதிபதி சுக்கிரனும் நல்ல நிலையில் இருப்பதால் தொழில் அமைப்புகளில் நல்ல விதமான பலன்கள் நடக்கும்.

இதுவரை சிறுதொகையை கூட புரட்ட முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பணப்பற்றாக்குறை நீங்கி லாபங்கள் வருகின்ற வாரம் இது. தனாதிபதி சந்திரன் வலுவடைவதால் இந்த வாரம் பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் இருப்பீர்கள். குறிப்பாக சந்திரனின் வலுவால் சிலருக்கு வேலை செய்யும் இடங்களில் நற்பெயர் எடுக்க கூடிய அமைப்புகள் இந்த வாரம் உண்டு.

கடகம் :

கடகநாதன் சந்திரன் வார ஆரம்பத்திலேயே நான்காமிடத்தில் சுபவலுப் பெறுவதால் இந்த வாரம் கடகத்திற்கு அனைத்து விதமான நன்மைகளையும் அளிக்கும் வாரமாக இருக்கும். இதுவரை ஆரோக்கியம் இல்லாமல் இருந்தவர்கள் உடல் நலம் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொல்லைகளால் தலையை பிய்த்துக் கொண்டிருந்த கடகராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கோ கடன்கள் இந்த வாரத்தில் அடைபடும்.

ராசிநாதன் சந்திரனுக்கு சுக்கிர பார்வை உள்ளதால் கடகராசிக்காரர்களுக்கு தனலாபங்களும், பொருளாதார மேன்மைகளும் கிடைக்கும் லாபகரமான வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு நல்ல பெயரை தரக்கூடிய சம்பவங்களும் இந்த வாரம் நடக்கும். சோதனைகள் எதுவும் இருக்காது. குருவின் பார்வை ஏழாமிடத்திற்கு இருப்பதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள்.

கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு சாதகமான திருப்பங்கள் இருக்கும். தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

சிம்மம் :

யோகக்கிரகங்கள் அனைத்தும் வலுவான நிலையில் இருப்பதால் சிம்மராசிக்கு இது யோக வாரமே குறிப்பாக ராசிநாதன் சூரியன் பத்தாம் வீட்டில் இருப்பதால் சிம்ம ராசிக்கு இது வரை தொழில் விஷயங்களில் இருந்து வந்த போட்டிகளும், பொறாமைகளும் விலகி நீங்கள் எல்லா விதத்திலும் சாதிக்கும் வாரமாக இது இருக்கும். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை செய்ய முடியும்.

இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும். கணவன் மனைவி உறவு சீராகும். அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பு முனையான ஆர்டர்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநில, வெளிநாட்டு பயணங்கள் உண்டு. அதனால் நல்ல இலாபங்கள் இருக்கும். ராசியில் இருக்கும் ராகுபகவான் இன்னும் சில வாரங்களில் விலகப்போவதால் நன்மைகள் நடக்க இனி தடைகள் ஏதும் இல்லை. கணினி மென்பொருள், கணக்கு, ஆடிட்டிங், புத்தகம், பிரிண்டிங், எழுத்து மற்றும் பத்திரிகைத்துறையினர் வளம்பெறும் வாரம் இது.

கன்னி :

ராசிநாதன் புதன் தனக்கு வலிமை தரும் வீடான ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் கன்னி ராசிக்காரர்களுக்கு எல்லா விதமான மேன்மைகளும் தரும் வாரம் இது. சிலருக்கு எதிர்பாராத தொகை அல்லது நீண்ட நாள் முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் வாரமாகவும் இது இருக்கும். கன்னிராசிக்கு நீண்டகாலமாக தொந்தரவு கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் இந்த வாரம் தீரும். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும்.

உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழில் அமைப்புகளில் லாபம் வரும். சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும்.

ராசிநாதன் புதன் நல்லநிலைமையில் இருப்பதோடு நண்பரான சூரியனுடன் இணைந்திருப்பதால் கன்னிக்கு வீண் செலவுகள் இல்லாத வாரம் இது. ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாமிடங்களை குருபகவான் பார்ப்பதால் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கின்ற மனோதைரியமும், சந்தர்ப்பங்களும் இந்தவாரம் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகப் பணியாக நீண்ட தூர பிரயாணங்கள் இப்போது உண்டு.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களின் துயரங்கள் தீருகின்ற வாரம் இது. இதுவரை குடும்பத்தில் மூன்றாவது மனிதரால் குழப்பங்கள் உருவாகி கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, அண்ணன்-தம்பி சண்டை போன்றவைகள் ஏற்பட்டிருந்தவர்கள் இந்த வாரம் சங்கடங்களை மறந்து வேற்றுமைகளைத் துறந்து ஒன்று கூடுவதற்கு வழிபிறக்கும். குறிப்பிட்ட சிலருக்கு நண்பர்களால் ஆதாயமும், பங்குதாரர்களின் மூலம் இணக்கமான நிகழ்வுகளும் உண்டு. குறிப்பாக இந்தவாரம் கெடுதல்கள் இல்லாத நிம்மதிகளைத் தருகின்ற நல்ல வாரமாக இருக்கும்.

துலாம்நாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் அமர்ந்து தனது ராசியையே பார்ப்பதால் எந்த ஒரு விஷயமும் இப்போது உங்களுக்கு நன்மையாகவே முடியும். செப்டம்பருக்கு மேல் குரு ராசிக்கு வருவதால் குடும்பத்தில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடக்கும். மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை நீங்கும். சிலருக்கு புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

அலுவலகங்களில் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம் உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை கேது ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களில் விசாகம், அனுசம் ஆகிய நட்சத்திரக்காரர்களின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், சில கேட்டை நட்சத்திரக்காரர்கள் மட்டும் கடுமையான குழப்ப நிலைகளில் இருந்து வருகிறீர்கள். இன்னும் சில அனுஷத்தினருக்கும் பிரச்சினைகள் தீருவது போன்ற தோற்றம் இருந்தாலும் முழுவதுமாக எந்த நல்லவைகளும் நடக்கவில்லை. இது போன்ற நிலைகள் இந்த வாரம் முதல் விலக ஆரம்பிக்கும் என்பதால் இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரம் தான்.

பெரும்பாலான விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் நடக்கும் வாரமாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் பாக்யாதிபதி சந்திரன் உங்கள் ராசியிலேயே இருப்பதால் எல்லா நன்மைகளும் உண்டு. ஏழரைச் சனியின் பாதிப்பில் இருக்கும் உங்களுக்கு ஆறுதலான வாரம் இது. குறிப்பாக கேட்டை நட்சத்திரத்திற்கு கெடுதல் இல்லாத வாரம் இது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்கும் வேலை இந்தவாரம் வேண்டாம். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். அடுத்தவருடம் முதல் உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது.

தனுசு :

தனுசுராசிக்கு கோட்சார கிரகநிலைகள் நல்லபடியாக அமைந்திருந்தாலும் ஏழரைச்சனி ஆரம்பித்திருப்பதால் நீங்கள் எதிலும் அகலக்கால் வைக்காமல் இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். தனுசுராசி இளைஞர்கள் வேலை விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டிய வாரமும் இது. இருக்கும் வேலையில் இருந்து மாறுவதற்கு முன் ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும். முன் யோசனை இன்றி எதுவும் செய்தால், அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடும் என்பதால் நிதானமாக இருக்க வேண்டிய வாரம் இது.

ஆயினும் பொதுவில் தனுசுக்கு நன்மைகள் நடக்கும் வாரம் இது. எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல தகவல்களும், சிலருக்கு சுபவிரயம் எனப்படும் நல்ல காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருப்பதும் நடக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.

அறுபது வயதைக் கடந்தவர்கள் சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட உடனடியாக சிகிச்சைக்கு செல்வது நல்லது. பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் குழந்தைகளின் மேல் கவனம் செலுத்துங்கள். அவர்களின் கவனம் படிப்பிலிருந்து விலகி வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏதாவது வம்புகளில் சிக்கி மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

மகரம் :

மகரநாதன் சனிபகவான் குருவின் வீட்டில் வலுவாக இருக்கும் நிலையில், குருவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கும் நல்லவாரம் இது. இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் கிடைக்காமல் நிரந்தர வருமானம் இல்லாத மகரத்தினருக்கு இந்த வாரம், மாதமானால் நிரந்தர வருமானம் தரக்கூடிய அமைப்புகள் உருவாகும். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை நடக்காத சில விஷயங்கள் நல்லபடியாக ஆரம்பித்து மனம்போல முடியும் வாரமாகவும் இது இருக்கும்.

மகரராசிக்கு இந்த வாரம் கெடுதல்கள் இல்லாத வாரமாகத்தான் இருக்கும். வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. அதேநேரத்தில் ஏழரைச் சனி ஆரம்பிக்கப் போவதால் தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் கூடுதல் கவனம் தேவை. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த வாரம் உங்களுக்குப் பிடிக்காதவர்களை ஜெயிக்கும் வெற்றி வீரனாகவும் இருப்பீர்கள்.

புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதால் கருவுறுதல் இருக்கும். குழந்தைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.

கும்பம் :

ராசியின் யோகாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் கும்பத்திற்கு கெடுபலன் சொல்லுவதற்கு கிரக நிலை ஏதும் இல்லை. அதைவிட மேலாக இன்னும் சில வாரங்களில் நடைபெறப் போகும் குருப்பெயர்ச்சியின் மூலம் கும்ப ராசி குருவின் பார்வையை அடையும் என்பதால் இப்போதிருந்தே உங்களுக்கு நன்மைகளும், நல்லவைகளும் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். கும்பத்திற்கு குறை ஒன்றும் இல்லை.

கும்பத்திற்கு இது நல்ல வாரம்தான். அதேநேரம் சளைக்காத உழைப்பாளிகளான உங்களுக்கு நடக்க இருக்கும் அனைத்து நன்மைகளும் உங்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகுதான் நடக்கும் என்பதால் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டிய வாரம் இது. இன்னுமொரு சிறப்பு பலனாக அஷ்டம குருவின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கத் துவங்கும் வாரம் இது.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைஞர்கள் மாற்றங்களை உணரப்பெறுவீர்கள். இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

மீனம் :

ராசிக்கு குருபார்வை இருப்பதால் சந்தேகம் இல்லாமல் நல்ல பலன்கள் தரக்கூடிய வாரம் இது. மீனராசிக்கு எதிர்கால வாழ்க்கை அமைப்புகள் உருவாகும் வாரம் இது. சிலர் தாங்கள் எதிர்காலத்தில் சாதிக்க போகும் துறையினை தேர்ந்தெடுப்பதும், இன்னும் சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நபர்களை சந்திப்பதும் இந்த வாரம் நடக்கும். சிலருக்கு தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ இருக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

செவ்வாயின் வலுவினால் சிகப்பு நிறம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், மணல், ஜல்லி, வியாபாரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வருமானம் இருக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இது சிக்கல் இல்லாத வாரம்தான். தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது முன்னேற்றமான வாரம்தான்.

பெற்றோர் வழியில் ஆதரவு நிலை இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம். 7,8,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி காலை 4.33 முதல் 7-ம்தேதி மாலை 04.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment