Monday, 26 June 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (26.6.2017 - 2.7.2017)

மேஷம் :

மேஷ ராசிப் பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ள வாரம் இது. பிள்ளைகளிடமிருந்து சந்தோஷச் செய்திகள் வரும். சிலருக்கு வாகனம் வீடு மாற்றம் உண்டு. இதுவரை இருந்ததைவிட நல்ல வீட்டிற்குப் போவீர்கள். பழைய வாகனத்தை விற்று விட்டு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்குவீர்கள். மீண்டும் சனி எட்டாமிடத்திற்கு மாறி இருப்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். யாரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டையோ போட வேண்டாம்.

இன்னும் சில வாரங்களில் குரு சுப வலு அடையப் போவதால் இப்போதே சிலருக்கு தனலாபம், பண வரவு இருக்கும். ஆறுக்குடைய புதபகவான் ராசினாதனுடன் இணைந்து ஆட்சி வலுப் பெறுவதால் வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. நாற்பது வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். அவர்களால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் இனிமேல் சாதகமான திருப்பங்களை காண்பார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரம்தான். கலைஞர்களுக்கு புகழும், வாய்ப்பும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். கணவன் மனைவி உறவு கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் மனக் கசப்புகள் வராது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருக்கும். அலுவலகத்தில் வேலை முடிந்து எப்போதடா வெளியேறுவோம் என்று இருப்பீர்கள்.

ரிஷபம்:

உங்களில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் இந்த வாரம் தாயார் விஷயத்தில் அன்பையும், ஆதரவையும் அனுபவிப்பீர்கள். சிலருக்கு தாயார் வகையிலான சொத்து விவகாரங்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் சந்தோஷங்கள் இருக்கும். திரவ ரீதியிலான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு பணவரவு உண்டு. விவசாயிகள் காய்கறி வியாபாராம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களும் அரசு, தனியார் துறை ஊழியர்களும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மனம் சந்தோஷப்படும்படியான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். சிலர் தங்களது தொழில் அமைப்பில் சாதனைகள் செய்து புகழடைய வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்ல விசா கிடைக்காதவருக்கு விசா வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். வயதான சிலருக்கு பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. தூரப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் உண்டு.

இதுவரை தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி உங்களின் மனம் போல் நடக்கும். இளையபருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் உண்டு. வயதானவர்கள் குடும்பத்தில் மதிக்கப்படுவார்கள். அவர்களின் ஆலோசனை ஏற்கப்படும். ரிஷபராசிக்காரர்களுக்கு இந்தவாரம் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இருக்கும். ஒரு சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் நபர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்:

உங்களைத் தொல்லைப்படுத்தி கொண்டிருந்த கடன் சிக்கல்களில் இருந்து இந்த வாரம் மீண்டு வருவீர்கள். இதுவரை நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபர் முக்கியமான நேரத்தில் உதவுவார். எதிர்ப்புகள் விலகும் வாரம் இது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் சரியாகும். குறிப்பாக பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி மேன்மைகளைத் தரும் வாரம் இது. திருமண விஷயத்தில் வழக்கு, கோர்ட் என அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான திருப்பங்களும் முடிவுகளும் உண்டு.

குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரியங்களுக்கு அல்லது வீடு வாங்க வேண்டி வீட்டுக்கடனுக்கு வங்கியில் விண்ணப்பிப்பது போன்றவைகள் இந்த வாரம் இருக்கும். மூன்றில் சுபவலுவுடன் இருக்கும் ராகு பகவான் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி தேடித்தந்து உங்களை புகழ் அடைய வைப்பார். இந்த வாரம் நல்ல பணவரவு இருக்கும் என்பதால் வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையைக் காட்ட முடியும். தேவைப்படும் பணம் எப்படியும் கடைசி நேரத்திலாவது கிடைத்து விடும்.

கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். கிரகங்கள் வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன. வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் வசூலாகும். கொள்முதல் நன்றாக இருக்கும். சுக்கிர பலம் நன்றாக இருப்பதால் கலைஞர்களுக்கு பிரமாதமான வாரம் இது. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.

கடகம்:

உங்கள் ராசி நாதன் சந்திரன் வாரம் முழுவதும் நல்ல அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் நல்ல பலன்களை உங்களுக்குத் தரும். பெண்களுக்கு மிகவும் சந்தோஷம் கொடுக்கக் கூடிய வாரமாகவும் இது இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை உறுதியாகும் அமைப்புகள் இருக்கிறது. எதிர்காலத் துணைவரை சிலர் சந்திப்பீர்கள். 30 வயதிற்குட்பட்ட இளைய பருவத்தினருக்கு வாழ்க்கை நல்லவிதமாக அமைவதற்கான திருப்புமுனைகள் உண்டு.

சிலருக்கு கேளிக்கை, உல்லாச அனுபவங்கள் இருக்கும். செயல்திறனுடன் இருப்பீர்கள். நன்கு சிந்திப்பீர்கள். எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். நீண்ட நாட்களாக முடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தை முடித்துக் காட்டி, மற்றவரின் பாராட்டைப் பெறுவீர்கள். தாயார் வழியில் நல்ல விஷயங்களும், அவர் மூலம் ஆதாயங்களும் இருக்கும். சொந்த வீடு இல்லாதவருக்கு வீடோ, மனையோ அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் வாகன யோகம் பெறுவீர்கள்.

இது வரை இருந்து வந்த கஷ்டங்கள் இனிமேல் படிப்படியாக விலகத் தொடங்கும். நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவருக்கு வேலை கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி, தீர்வுகள் தெரிய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரமே. கலைஞர்கள் வளம் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு.

சிம்மம்:

அரசுஊழியர், கலைத்துறையினர், பொதுவாழ்வில் இருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்மைகளைத் தரும் வாரம் இது. சிலருக்கு குறுகிய தூரப்பயணங்கள் மற்றும் விருப்பமில்லாத மாற்றங்கள் இருக்கும். அம்மா வழி உறவினர்களால் லாபம் உண்டு. பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். விரயாதிபதி வலுப்பெறுவதால் செலவு செய்து ஏதேனும் ஒரு அத்தியாவசிய பொருள் குடும்பத்திற்கு வாங்குவீர்கள்.

வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரப் பதவி கிடைக்கும்.தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு.

மைத்துனர்கள் உதவுவார்கள். கூட்டுத் தொழில் சிறப்படையும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. தந்தைவழி உறவினர்கள், பங்காளிகள் போன்றோர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். புதிய நபர்களிடம் இந்த வாரம் கொடுக்கல், வாங்கல் செய்ய வேண்டாம். ஒரு சில இளைய பருவத்தினருக்கு அவர்கள் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்கள் ஏற்படும்.

கன்னி:

தனாதிபதி சுக்கிரன் நன்மை தரும் அமைப்பில் உள்ளதால் கன்னி ராசிக்காரர்களின் வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். அதிக பணம் புரளும் இடங்களில் பணி புரிபவர்கள், வங்கித் துறையினர் அலுவலகங்களில் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். தொழில் சிறப்படையும். வியாபாரம் விருத்தியாகும். வேலை செய்யும் இடத்தில் புகழ் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அரசு ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

பன்னிரண்டாமிடம் வலுப்பெறுவதால் அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும். அதனால் லாபங்கள் உண்டு. வெளிநாடு சம்மந்தப்பட்ட மல்டிநேஷனல் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு சிறப்புகள் சேரும். பெண்களால் செலவுகள் இருக்கும். மனைவிக்கு ஏதேனும் நகை வாங்கி கொடுப்பீர்கள். அம்மாவின் வழியில் மனவருத்தங்களோ வீண்செலவுகளோ வர வாய்ப்பு இருக்கிறது. இளையவருக்கு திருமணம் கை கூடி வரும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

விவசாயிகள், வியாபாரிகள், அரசு, தனியார்துறை, ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்ற சகல தரப்பினருக்கும் இந்த வாரம் மாற்றங்களை தரும் வாரமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை நிகழ்வுகள் இந்த வாரத்திலிருந்து நடக்க ஆரம்பிக்கும். வார ஆரம்பத்தில் சந்திரன் வலுப்பெற்றதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. எதிர்பாராத பணவரவும் இருக்கும்.

துலாம்:

லாபாதிபதி சூரியன் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம். அதேபோல தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் இப்போது நன்மைகள் நடக்கும். உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம்.

சிலருக்கு பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு விஷயங்கள் கை கொடுக்கும். அந்தஸ்து, கௌரவம் மேம்படும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் இருக்கும். தனியார்துறை ஊழியருக்கும், கலைஞர்களுக்கும் சிக்கல்கள் எதுவும் இருக்காது.

வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம். வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். மாமியார் வீட்டில் மதிக்கப் படுவீர்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு குலதெய்வம் துணையிருக்கும் வாரம் இது. கவலைகள் வேண்டாம்.

விருச்சிகம்:

உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மிக நல்ல வாரம். மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனிமேல் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் இருந்த பிரச்னை தீர ஆரம்பிக்கும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் இருக்கும்.

கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பிரச்னைகள் தீருவதற்கான சம்பவங்கள் நடக்கப் பெறுவீர்கள். சில தடைகளுக்குப் பிறகு சாதனைகள் செய்வீர்கள். யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் துயரங்கள் எதுவும் இல்லை. பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் தெய்வ அருள் இனிமேல் உண்டு. உங்களின் எல்லாக் கவலைகளும் தீரப் போகிறது.

வியாபாரிகளுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் கலைஞர்களுக்கும் இது நல்ல வாரம். அரசு, தனியார் துறைகளின் ஊழியர்கள், உழைப்பாளிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பு விருச்சிக ராசிக்கும் இனி அதிர்ஷ்டத்தை தரப்போகும் வாரம் இது. எனவே இனிமேல் உங்களுக்கு எவ்விதக் குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும்.

தனுசு:

சுக்கிரன் ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதால் நீங்கள் மறைமுகமான எதிர்ப்புகளையும், செலவுகளையும், மந்தமான சூழ்நிலைகளையும் சந்திக்கும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் குலதெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும் வாரம் இது. நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள். நட்பு வட்டாரம் கை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்திருந்த ஒருவரை இந்த வாரம் பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

புதிய அனுபவங்கள் இந்த வாரம் உண்டு. சிலருக்கு இதுவரை தெரியாத விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவம் கிடைக்கும். இப்போது நடக்கும் திருப்பு முனையான சம்பவங்களால் உங்கள் எதிர்காலம் இனிமையாக இருக்கும். சிலருக்கு நடக்கும் சில விஷயங்கள் பிடிக்காதவையாக தேவையற்றவையாக தோன்றினாலும் அவை யாவும் எதிர்கால நன்மைக்கு அஸ்திவாரம் போடும் அமைப்புகள் என்பதை பின்னால் உணர்ந்து கொள்வீர்கள்.

மருத்துவத்துறையினர், சிவில் இன்ஜினியர்கள், சிவப்புநிற பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ரியல்எஸ்டேட் துறையினர், சீருடை பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். பிள்ளைகளால் பெருமை வரும். 27,28,29 ஆகிய தினங்களில் பணம் வரும். 25-ம்தேதி அதிகாலை 6.01 மணி முதல் 27-ம்தேதி இரவு 7.57 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். வெகுதூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்:

வியாபாரிகள், கலைஞர்கள், இளைஞர்கள், தலைமைப் பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், அரசு வேலை செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியங்கள் நிறைவேறும் வாரம் இது. தந்தையுடன் பிறந்த அத்தைகள் உதவுவார்கள். எதிலும் இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும். சிலருக்கு வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருந்து வந்த வேலைப்பளு குறையும். வீட்டிலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். சற்று நிம்மதியாக உணர்வீர்கள்.

கடன் தொல்லைகள் எதுவும் இருக்காது. எதிரிகள் ஒழிவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு. அம்மா வழி உறவினர்களால் குடும்பத்தில் மனக்கசப்புக்கள் இருக்கும் இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும்.

உத்திராடம் நட்சத்திரக்கார்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகார பதவி கிடைக்கும். மொத்தத்தில் பிரச்னைகள் இல்லாத வாரம் இது. 26,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 27 -ம்தேதி இரவு 7.57 மணி முதல் 30-ம்தேதி அதிகாலை 1.32 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

கும்பம் :

இந்த வாரம் உங்களின் தெய்வ பக்தி அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும் வாரம் இது. ஆன்மிக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். சிலருக்கு திருப்பணி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். அதிர்ஷ்டம் இனிமேல் கை கொடுக்கும். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் அது விலகுவதை உணருவீர்கள்.

வீட்டை அழகுபடுத்துவீர்கள். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இனிமேல் இருக்காது. தனியார் ஊழியர்களுக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும். போக்குவரத்து துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். இளைஞர்களுக்கு சில நல்ல அனுபவங்கள் இருக்கும். அரசு ஊழியர்கள், பத்திரிக்கை துறையினர், தொலைக்காட்சித் துறையினர் நன்மைகளை பெறுவார்கள். மக்கள் பிரதிநிதிகளுக்கு இது சிறப்பான நல்ல பலன்களை தரும் வாரமாக அமையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு.

நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்க கூடிய அமைப்புகள் இருப்பதால் அனாவசிய தேவையற்ற செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டாம். 27,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 28 ம் தேதி காலை 10.01 முதல் 30ம் தேதி மதியம் 1.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

மீனம்:

செவ்வாய் கேந்திர பலத்துடன் வலுவாக இருப்பதால் வியாபாரம், வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் தொந்தரவுகள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொள்முதல் சற்று முன் பின்னாக இருந்தாலும், லாபத்தில் குறைவிருக்காது. சொந்தத்தொழில் செய்பவருக்கு நல்ல வருமானம் உண்டு. சிலர் ஏதேனும் ஒரு தொலைதூர திருக்கோவிலுக்கு செல்வீர்கள். பாக்யாதிபதி வலுவாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். அம்மா வழியில் ஆதாயங்கள் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.

பெண்களால் லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கையுடன் வலம் வருவீர்கள். நட்பு வட்டாரத்தால் பாராட்டப் படுவீர்கள். வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்லவை நடைபெறும். திருமணமாகாமல் இருப்பவருக்கு திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் நடப்பதற்கு தடைகள் எதுவும் இல்லை. சிலர் நீண்டதூரப் பயணம் செய்வீர்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும்.

No comments :

Post a Comment