Friday, June 2, 2017

மிதுனம்: 2017 ஜூன் மாத பலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் நட்பு நிலையில் பனிரெண்டாம் வீட்டிலும், பிற்பகுதியில் ராசியிலேயே ஆட்சி நிலையில் இருக்கும் சாதகமான மாதம் இது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாதத்தின் முதல் பாதியில் சுபச் செலவுகளும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதலும் இருக்கும் என்பதோடு இந்தச் செலவுகளை கடன் வாங்காமல் செய்வதற்கான வருமானங்களும் உங்களுக்கு இருக்கும். மாத பிற்பகுதி முழுவதும் இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உதவிகள் கிடைத்தலும், குடும்பத்துடன் பிரயாணங்கள் செய்வதும் இருக்கும்.

வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் வரவில்லையே என்று எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களில் சிலரு\க்கு வரப்போகும் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் ஐந்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கப் போவதால் இப்போது இருக்கும் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனைக் கண்ட பனி போல விலகி மிகச்சிறந்த மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்கும் என்பதால் இந்த ஜூன் மாதம் முதல் நல்லவைக்கான ஆரம்பங்கள் இருக்கும். எனவே மிதுன ராசிக்காரர்கள் நன்மைகளை எதிர் நோக்கப் போகும் மாதமாக இது இருக்கும்.

நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வரும். ராசிநாதன் பனிரெண்டில் இருப்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. அவர் நட்பு வீட்டில் இருப்பதால் பணவரவும், தனலாபங்களும் நிறைவாகவே இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு. தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள்.

3,5,8,9,10,12,13,14,15,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம்தேதி பகல் 5.30 மணி முதல் 15-ந்தேதி அதிகாலை 4.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்.

No comments :

Post a Comment