Friday, June 30, 2017

மேஷம்: 2017 ஜூலை மாத பலன்கள்

மேஷம்:

இந்தமாதம் மேஷநாதன் செவ்வாய் பெரும்பாலும் நல்லநிலையில் இருப்பதாலும், இன்னும் சில வாரங்களில் உங்களுக்கு சாதகமான குருப்பெயர்ச்சி நடக்க இருப்பதாலும் நாளை நன்றாக இருக்கவேண்டும் என்றால் இன்றைக்கு கஷ்டங்கள் வராது எனும் விதிப்படி ஜூலை மாதம் எவ்வித கெடுதல்களையும் உங்களுக்குச் செய்யாத மாதமாக இருக்கும். நடுத்தர வயதுக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. இந்தமாதம் முதல் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது.


வாழ்க்கைத்துணை விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சனைகள் தொந்தரவுகள் தராது. கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்.

ராசிக்கு குருவின் பார்வை கிடைக்கப் போவதால் இனிமேல் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். சிறு விஷயத்திற்கு கூட நீங்கள் பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். கோபத்தைப் பற்றி குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஏதாவது தவறாக நடந்த பிறகு வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. பெண்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள் அதிகம் இருக்கும்.

1,3,7,8,10,11,17,18,20,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம்தேதி இரவு 10.43 மணி முதல் 7-ம்தேதி காலை 11.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.

No comments :

Post a Comment