Friday, 2 June 2017

கன்னி: 2017 ஜூன் மாத பலன்கள்

கன்னி :

மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் நட்பு வலுவுடனும், பிற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடனும் உங்கள் ராசிநாதன் புதன் இருக்கும் நல்ல மாதம் இது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் தனது நண்பரான சூரியனுடனும் புத பகவான் இணைந்திருப்பதால் கன்னி ராசிக்கு ஜூன் மாதம் கவலைகள் இல்லாத மாதமாக இருக்கும். உங்களில் ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல திருப்பமான நிகழ்வுகள் நடக்கும் மாதம் இது.

பத்தாமிடம் எனப்படும் ஜீவனஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் நிலைத்தன்மை பெறாத இளைய பருவ கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் நிரந்தரமான வேலை, மற்றும் தொழில் அமைப்புகளுக்கான ஆர்டர்களைப் பெறுவீர்கள். ராசிநாதன் பனிரெண்டாம் அதிபதியுடன் சுபத்துவமாக இணைந்திருப்பதால் வேலை விஷயமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு பயணம் செல்லுதலும், அதன் மூலம் நல்லவிதமான வாழ்க்கை மாற்றங்களும் நடக்கும். இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இப்போது உங்களின் உண்மை மனதைப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு இருக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு புதிய தொழில் ஆரம்பம் இருக்கும். குழந்தைகளின் சுப காரிய விஷயமாக சிலருக்கு அலைச்சல்களும், ஒன்றும் சரியாக அமையவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. குறைகள் எதுவும் இல்லாத மாதம் இது. சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லவைகளாக நடக்கும்.

4,5,6,8,10,12,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 19ம் தேதி மாலை 5.26 மணி முதல் 21-ம் தேதி மாலை 6.48 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment