Friday, June 2, 2017

மேஷம்: 2017 ஜூன் மாத பலன்கள்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நல்ல மாதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மாத ஆரம்பத்தில் ராசிக்கு ஐந்துக்குடைய சூரியன் இரண்டாமிடத்தில் அமர்ந்து ஒன்பதுக்குடைய குரு அவரைப் பார்ப்பது யோக அமைப்பு என்பதால் அஷ்டமச்சனியின் ஆதிக்கம் உங்களுக்கு கெடுபலன்கள் எதுவும் தரப்போவது இல்லை. உங்களில் சிலர் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்ற இடங்களில் ஏமாற்றங்களையும், வேதனைகளையும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சிலருக்கு எரிச்சலும், கோபமும் வரக்கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவை அனைத்தும் வருகின்ற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் ராகு-கேது, குருப்பெயர்ச்சிக்கு பிறகு நீங்கி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நல்ல விதங்களில் நடக்க இருக்கின்ற ஆரம்ப மாதமாக ஜூன் மாதம் இருக்கும். அதேநேரத்தில் ஏறத்தாழ மாதம் முழுவதும் சனி, செவ்வாய் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இருப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும்.

எதிர்பாராத பணவரவு இருக்கும். கடன் பிரச்னைகள் கண்டிப்பாகத் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை, ரெவின்யூ போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

1,2,3,6,8,11,12,13,21,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி மாலை 4.35 மணி முதல் 10-ம்தேதி அதிகாலை 5.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் எவருடனும் வீண் வாக்குவாதம் செய்வதோ சண்டை போடுவதோ வேண்டாம். மேற்கண்ட தினங்களில் எதிலும் பொறுத்துப் போங்கள். நீண்ட தூர பயணங்களையும், புதிதாக எதையும் ஆரம்பிப்பதையும் இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment