Friday, June 16, 2017

2017 ஆனி மாத பலன்கள்

மேஷம்:

ஆனிமாதம் மேஷராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். ஆறுக்குடையவன் வலுப் பெறுவதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் மாத ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் மாத பிற்பகுதியில் வெற்றி பெறும் என்பது உறுதி. ஐந்தில் இருக்கும் ராகு பணவரவுகளையும், வர வேண்டிய வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.


ஜீவனஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள்.

வேலை செய்யும் இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். நண்பர்கள் எதிரியாகும் அமைப்பு இருக்கிறது. நன்றாகப் பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். மாத பிற்பகுதியில் செவ்வாய் நீசம் அடைவதால் சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. செவ்வாய் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்குவார் என்பதால் அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.

ரிஷபம்:

ஆனி மாதம் ரிஷபராசிக்கு தடைகள் தாமதங்களைக் கொடுத்தாலும் ராசிநாதன் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதால் எல்லாவற்றையும் நீங்கள் சமாளிக்கும் மாதமாக இருக்கும். ராசிக்கு சனியின் பார்வையால் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். அதே நேரத்தில் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் நல்லவிதமாக செயல்பட்டு உங்களுக்கு நன்மைகளைத் தரும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இந்தமாதம் மேன்மைகளை தரும்.

மாத ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு அந்த விஷயத்தை ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், இலாகா மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு.

முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். ரிஷப ராசிக்காரர்கள் இனிமேல் அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றிக்கம்பத்தை வேகமாகத் தொடப் போகிறீர்கள் என்பது உறுதி.

மிதுனம்:

ஆனி மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் நல்ல நிலையில் இருப்பதாலும், உங்களின் யோகாதிபதி சுக்கிரனும் ஆட்சி வலுவுடன் இருப்பதாலும் இந்த மாதம் பெண்களால் நன்மைகளும், வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் உள்ள மாதமாக இருக்கும். மாத இறுதியில் புதன் பகைவீட்டில் அமர்வதால் சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்துக் கஷ்டங்களும் சுக்கிர வலுவால் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி.

இதுவரை உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால் மிதுன ராசிக்கு திருப்புமுனையான மாதமிது. இந்த மாதம் பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கலாம். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு.

வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்கள் இருக்கலாம். குடும்பத்தில் பிரச்னை வரும் பொழுது இருவரில் ஒருவர் பொறுத்து போவதன் மூலம் பெரிய அளவில் சண்டை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.

கடகம்:

ஆனிமாதம் கடக ராசிக்கு மேன்மையான மாதம்தான். இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் உங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும். இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும்.

எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். குறிப்பிட்ட சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படும் அவற்றால் நன்மைகள் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு இந்த மாதம் பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

சிம்மம்:

யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் ஆனிமாதம் முழுவதும் சிம்ம ராசிக்கு சுபநிகழ்ச்சிகளும், தூரஇடங்களில் இருந்து நல்லசெய்திகளும், பணவரவும் உள்ள மாதமாக இருக்கும். குருவின் பலத்தால் வருமானம் குறையாது. பணவரவும் நன்றாக இருக்கும் என்பதால் எந்தக் குறையும் இல்லாமல் இந்த மாதத்தை சமாளிக்க உங்களால் முடியும். மாதமுற்பகுதியில் எதிர்பாராத பணவரவுகளும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு.

குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

கன்னி:

கன்னிநாதன் புதன் ஆட்சி நிலையில் இருப்பதாலும், கன்னியின் யோகாதிபதி சுக்கிரனும் வலுவாக உள்ளதாலும் ஆனிமாதம் கன்னிக்கு பொருளாதார மேன்மைகள், மற்றும் திருப்தியான பணவரவுகள் உள்ள மாதமாக இருக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனிமேல் முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டுவர். வெகுநாட்கள் திருமணம் தாமதமான குழந்தைகளுக்கு இப்போது திருமணம் உறுதியாகும்.

சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.

முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்பவராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும். ஆசைப்பட்ட குழந்தைப்பேறு கிடைக்கும். ஜூலைக்கு பிறகே வீடு, வாகனம், மாறுதலுக்கு உண்டாகும்.

துலாம்:

ஏழரைச் சனி முடியப் போவதால் விட்டுப் போயிருந்த சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் இனிமேல் உங்களை தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் நேரமிது. முயற்சி இல்லாமலேயே அதிர்ஷ்டத்தால் இனி எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள்.

சிலருக்கு மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் தனவரவுகளும் வருமானமும் இருக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட், சிகப்பு நிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள் போன்றோருக்கு “லம்ப்சமாக” ஒரு பெரிய தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதம் வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.

ஆறாம் வீட்டு அதிபதி வலுவாக இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். பெண்களுக்கு மிகவும் நல்ல மாதமாக இது அமையும். தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது செய்யவேண்டாம்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் சுபகிரகங்களுடன் இணைந்து வலுவாக இருப்பதால் பிரச்னைகள் எது வந்தாலும் அதை நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும் மாதமாக இது இருக்கும். குறிப்பாக வேலை, தொழில் போன்றவற்றில் பணப்பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளையபருவத்தினர் இந்தமாதம் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். மாதம் முழுவதும் உங்களுக்கு மனதைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும் என்பது உறுதி. ராசியின் எதிரிகள் வலுவிழப்பதால் ஆனி மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான்.

வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த அனைத்தும் முடிவுக்கு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும். எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விருச்சிக ராசிக்காரர்கள் படவேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் அனுபவித்து விட்டீர்கள். இனிமேல் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனதைத் தளர விட்டு விட வேண்டாம். இனி உங்களுக்கு நல்ல காலம்தான்.

இளைய பருவத்தினர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வலிமை உள்ளதுதான் வாழும் என்பதை உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியிருக்காது. வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் இனிமேல் வேறுவிதமான வடிவங்களைப் பெறும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். கேட்டை நட்சத்திரக் காரர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

தனுசு:

தொழில்ஸ்தானம் வலுப்பெறுவதால் இந்தமாதம் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பளஉயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து உங்களுக்கு நண்பராக இப்பொழுது மாறுவர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இந்த மாதம் இல்லை.

மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் நல்ல மாதம் இது. குறிப்பாக பெண்களுக்கு மிக நல்ல பலன்கள் இந்த மாதம் நடக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள்.

வீண்பழி சுமத்தி வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சகோதரர்களிடம் சிறுசிறு சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மகரம்:

உங்களில் வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த நல்ல மாற்றங்கள் இந்த மாதம் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் இப்பொழுது கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இனிமேல் சிக்கல்கள் எதுவும் இருக்காது. அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு இந்த மாதம் பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது எதிர்காலத்தில் நல்லவைகளுக்கு வழிவகுக்கும்.

கும்பம்:

“எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவியின் சத்தியவார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும் என்பதால் அனைத்திலும் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் வருமானம் உள்ள மாதம்தான்.

இந்த மாதம் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். சுக்கிரன் புதன் வலுப் பெறுவதால் இந்த மாதம் தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கலாம்.

மீனம்:

மீனா ராசிக்கு ஆனி மாதத்தின் முக்கிய பலனாக பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் உண்டு. அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இந்த மாதம் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை தள்ளி வையுங்கள். வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம்.

இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். எதிலும் ரகசியம் காப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக உறுதி அளிக்க வேண்டாம்.

குடும்பத்தில் ஒருவர் கோபித்தால் கூட மற்றவர் அடங்கி போவது நல்லது. மாதம் முழுவதும் யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்டநாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இந்தமாதம் செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் தாராளமாகவே இருக்கும்.

No comments :

Post a Comment