Monday, 12 June 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (12.6.2017 - 18.6.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

மேஷராசிக்கு இந்த வாரம் நன்மைகளும், தீமைகளும் கலந்த வாரமாகவும், தடைகள் உள்ள வாரமாகவும் இருக்கும். அதேநேரத்தில் யோகாதிபதிகளான சூரியன், குரு, சந்திரன் ஆகியோர் வலுவான அமைப்பில் இருப்பதால் எதுவும் எல்லைமீறி போகாமலும் இருக்கும். இழுத்தடித்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் நல்லபடியாக சாதகமாக தீரும். குறிப்பாக கோர்ட்டு, கேஸ் என்று அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நிம்மதி கிடைக்கும் நேரம் இது. வெகு சிலருக்கு புதிய வீடு அமையும் யோகமும் உள்ள வாரமாக இது இருக்கும்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் இருக்கும். அடுத்தவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவரிடம் எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதனால் சிக்கல்களும் நம்பிக்கை துரோகங்களும் உங்களுக்கு இருக்கும். இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து ஆகஸ்டுக்கு மேல் திருமணம் நடக்கும்.

காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் கிடைக்காத சில விஷயங்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைக் கண்டாலே ஒளிந்து ஓடுவார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. உடல்நலம் இல்லாமல் இருப்பவர்கள் வெகு விரைவாக குணம் அடைவார்கள்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதும் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்றவைகளை தரும் சூரியன் ராசியிலேயே இருப்பதும் ரிஷப ராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் வரும் இந்த வாரம் நன்மைகள் நடக்கும் வாரமாக இருக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேலதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. குறிப்பிட்ட சில ரிஷபராசிக்காரர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது.

திருமணமாகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மிதுனம்:

ராசிநாதன் புதன் நண்பர் வீட்டில் வலுவாக இருப்பதும் மற்ற யோகாதிபதிகளான சுக்கிரனும், சனியும் நல்ல நிலையில் இருப்பதும் மிதுன ராசிக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத அமைப்பு என்பதால் இந்த வாரம் மிதுனத்திற்கு யோக வாரம்தான். அதேநேரத்தில் செலவுகளை குறிக்கும் சுக்கிரன் வீட்டில் ராசிநாதன் இருப்பதால் உங்களின் பெரும்பாலானவர்களுக்கு சுபச்செலவுகள் எனப்படும் சுப விரையங்கள் இந்த வாரம் உண்டு.

போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் நட்புக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளியே நில்லுங்கள். அவர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் சிலருக்கு அம்மாவே ஆதரவாக இருக்க மாட்டார்.

சிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் உருவாகும். 12,14,15 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம்தேதி பகல் 5.30 மணி முதல் 15-ந்தேதி அதிகாலை 4.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்.

கடகம்:

உங்களுக்கு தடைகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் விஷயங்கள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நல்லவை நடக்கும். செவ்வாய் வலுப் பெறுவதால் தெய்வ அனுகூலம் இப்போது முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக குல தெய்வ வழிபாடு செய்யாதவர்களுக்கு தற்போது அதை நிறைவேற்ற வாய்ப்பு வரும்.

சிலருக்கு மகாபெரியவர், ஷீரடிபாபா, ராகவேந்திரர், பகவான் ரமணர் போன்ற அவதார புருஷர்களின் புனித ஸ்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவிஉயர்வு சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

எவரையும் நம்பி முதலீடு செய்வதோ, அடுத்தவரை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ வேண்டாம். புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். 13,15,17, ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி அதிகாலை 4.28 மணி முதல் 17-ம் தேதி மதியம் 12.45 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் தூரப்பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் பத்தாவது கேந்திரத்தில் அமர்ந்து குருபகவான் பார்வையில் இருப்பதால் சிம்மராசிக்கு சிறப்புகளைத் தரும் வாரம் இது. சிம்மத்தினர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் ஜெயித்து உங்களுடைய ஆளுமைத்திறனை நிலைநாட்டுவீர்கள் என்பதால் சிம்மத்திற்கு ஒரு போதும் சரிவுகள் இல்லை. இளையபருவத்தினர் சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இப்போது ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வாரஇறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். காவல்துறை, கோர்ட் போன்றவற்றில் வழக்கு இருப்பவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். மேலதிகாரியிடம் அனுசரித்துப் போங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களைப் பிடிக்காதவரின் கை ஓங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை கண்காணியுங்கள். யாரையும் நம்ப வேண்டாம். ராகுபகவான் ராசியில் இருப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். 12,13,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம்தேதி மதியம் 12.45 மணி முதல் 19-ம்தேதி மால 5.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் செய்வதையும் தள்ளி வைக்க வேண்டும்.

கன்னி:

கன்னி ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் சொல்ல இயலாத வாரம் இது. அதே நேரத்தில் சிலருக்கு மனக்குழப்பங்களும் செயல்திறன் குறைதலும் இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், பங்குச்சந்தை சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேசன் துறைகளில் லாபம் வருவதும் வந்த வாரம் உண்டு. தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும்.

பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல தகவல்களும், குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு தொடக்க வாரமாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவது நிச்சயம். ஆறாம் இடத்தில் உள்ள கேதுபகவான் உங்களின் எதிர்ப்புகள் அனைத்தையும் ஒடுக்கி உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவார்.

பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். வாகனச் செலவுகள் இருக்கும். தாயார்வழியில் செலவுகளோ, விரயங்களோ இருக்கும். வீடு ரிப்பேர், வாகனபழுது போன்றவைகளை செய்யவேண்டி இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும் என்றாலும் அதற்கு சரியாக வீண் செலவுகளும் இருக்கும் என்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செலவு செய்யவும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு இது யோகவாரம்தான். அதிகாரம் செய்யும் பதவியில் இருப்போருக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும்.

துலாம்:

இந்தவாரம் குடும்பத்திலும் தொழில் இடங்களிலும் துலாம் ராசிக்காரர்கள் நிதானமாகவும் கவனத்துடனும் நடக்க வேண்டிய வாரமாக இருக்கும். இஷ்டதெய்வ அல்லது குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும்.

தொழில் விஷயங்களில் எந்தவித சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. வேலையும் சுமுகமாகவே நடைபெறும். வேலை மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. அரசு ஊழியர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு நேர்மையற்ற விஷயங்களை செய்யாதீர்கள். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகப் போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான்.

என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும் கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் நல்ல விஷயங்கள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் உண்டு. சிலருக்கு குடும்பத்தில் சுப காரியங்களுக்கான நிச்சய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விருச்சிகம்:

உங்களில் கேட்டை நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிதுகாலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். பொருட்கள் திருட்டு போவதற்கோ தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. எதிர்பார்க்கும் விஷயங்கள் சட்டென்று முடியாமல் வளவளவென்று இழுத்துக்கொண்டு போகும். அடுத்தவரை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். அவர்கள் காலை வாரிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்களின் கை சற்றுத் தாழ்ந்து உங்களைப் பிடிக்காதவர் கை ஓங்கும் வாரம் இது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். மருத்துவச் செலவுகள் இருக்கலாம். எட்டில் இருக்கும் செவ்வாயால் யாரையாவது நீங்கள் கோபப்பட்டுத் திட்டி அதனால் ஏதாவது எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. செவ்வாய் உங்களை எங்கே கொண்டு போய் கவிழ்க்கலாம் என்று செயல்படுவார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம். பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். பெரியதொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் திருப்பு முனையான நல்ல விஷயங்களை சந்திக்கும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் முப்பதுவயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு ஏழரைச்சனி அமைப்பின் காரணமாக அனைத்து விஷயங்களிலும் பின்னடைவுகள் இனிமேல் வரக்கூடும் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிய முயற்சிகளைத் தொடங்காமல் கவனத்துடன் இருக்க வேண்டிய வாரமாகவும் இது இருக்கும்.

ஒன்பதாமிடத்தில் இருக்கும் ராகுவால் தந்தை விஷயத்தில் செலவுகள் மற்றும் மனச்சங்கடங்கள் இருக்கும் என்பதால் அப்பாவின் உறவினர்களுடன் உள்ள கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் சிலருக்கு மனவருத்தங்களும் செலவுகளும் இருக்கும்.

ராசியில் இருக்கும் சனி குழந்தைகளின் போக்கில் மாற்றங்களை உண்டு பண்ணுவார் என்பதால் பருவ வயதுக் குழந்தைகளின் மேல் ஒரு கண் வைப்பதும் அவர்களை கண்காணிப்பதும் நல்லது. உங்களில் சிலருக்கு இந்த வாரம் வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் சில ஏறுக்குமாறான விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதன் மூலம் எதையும் சமாளிக்கலாம் என்பதால் பொறுத்துப் போங்கள்.

மகரம்:

சுக்கிரன் நல்ல அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். குறிப்பாக சகோதரிகள் உங்களுக்கு உதவுவார்கள். குடும்பத்தில் சகோதர சம்பந்தமான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அகலக்கால் வைக்காமல் இருக்கும் தொழிலை அப்படியே நடத்திக் கொண்டு வருவது நல்லது. புதிதாக பணம் போட்டு தொழில் விரிவாக்கம் செய்வதோ, கிளைகள் ஆரம்பிப்பதோ இப்போது கை கொடுக்காது. இளைய பருவத்தினர் வேலையில் அக்கறையுடன் இருங்கள்.

சிலருக்கு வாகனச்செலவுகள் இருக்கலாம் அல்லது வீடு ரிப்பேர், வீட்டை அழகுபடுத்துதல் போன்ற செலவுகள் இருக்கலாம். வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மாற்றம் ஊர் மாற்றம் வீடுமாற்றம் தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்கள் இருக்கும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். பேசக் கூடிய மற்றும் சொல்லித்தரக் கூடிய தொழில்களில் மார்க்கட்டிங், ஆசிரியர்பணி, வக்கீல்கள் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு செழிப்பான காலகட்டமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இல்லாமல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கும்பம்:

கும்பராசிக்காரர்களுக்கு சாதகமற்ற பலன்கள் எதுவும் நடக்காமல் அனைத்தும் உங்கள் எண்ணம் போலவே நடக்க இருக்கின்றன நல்ல வாரம் இது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பெண்களின் மூலமான அனுகூலங்களும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கிடைக்காமல் போன சில விஷயங்களும் உங்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமாக கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வாரம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.

சிலருக்கு ஒரு காரியத்தை நல்லவிதமாக முடித்து பாராட்டுப் பெறக்கூடிய சம்பவங்கள் இருக்கும். பதினொன்றாமிட சனியால் பொருளாதார மேன்மைகள் இருக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரம். சிலருக்கு எதிர்பார்த்த சிலவிஷயங்கள் கிடைக்காமல் தள்ளிப் போவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடியுங்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் சிறப்பான சம்பங்கள் இப்போது இருக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் குறைந்து குடும்பத்தில் பிரச்னையே இல்லாத நிலைமை ஏற்படும். கும்ப ராசிக்கு இனிமேல் குடும்பப் பிரச்னைகள் எதுவும் இல்லை. சிலர் வெளிநாடு செல்வதற்கு இப்பொழுது வாய்ப்புக்கள் வரும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெங்களூர், மும்பை, டில்லி என்று அலைந்து திரிவீர்கள். பயணங்களால் வருமானங்களும், நற்பெயர்களும் இருக்கும்.

மீனம்:

மீனத்தினர் சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் இந்த வாரம் யோக வாரமே. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேருவீர்கள். தொழிலில் பங்குதாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.

கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும். சூரியனுடன் புதன் இணைந்திருப்பதால் சிலருக்கு பெண்களால் வில்லங்கங்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரும்.. சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பத்தாம் வீட்டில் இருக்கும் சனியால் அம்மாவைப் பற்றி வருத்தமான சம்பவங்கள் இந்த வாரம் இருக்கலாம். தாயாரின் உடல்நிலையை அக்கறையுடன் கவனியுங்கள். ஒருமுறை ஊருக்கு சென்று அம்மாவைப் பார்த்து பேசி அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுத் திரும்புங்கள். இளைய பருவத்தினர் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் வாரம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வாரம் நிர்ணயிக்கும்.

No comments :

Post a Comment