Monday, 8 May 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (8.5.2017 -14.5.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

வார ஆரம்பத்தில் யோகாதிபதி சந்திரன் ஆறாமிடத்தில் குருவின் இணைவுடனும், ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் அமைப்பிலும் இருப்பதால் இந்த வாரம் முழுவதும் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நிகழ்ச்சிகளும், புத்துணர்வு தரும் சம்பவங்களும் நடந்து மகிழ்வைத் தரும் வாரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு நல்ல முறையில் இருக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்திருந்த திட்டங்களை நல்ல விதமாக செயல்படுத்த முடியும்.


உடல் நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகு விரைவில் குணமடைவார்கள். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள்.

இதுவரை டென்ஷனும், படபடப்புமாக இருந்தவர்கள் இனிமேல் நிதானமாக இருப்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி இருக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் எந்த பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. 11,12,13 ஆகிய நாட்களில் பணம் வரும். 11ம் தேதி காலை 10.37 மணி முதல் 13ம் தேதி இரவு 11.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

ரிஷபம்:

ராசியில் செவ்வாய் இருப்பதால் சிறிய விஷயத்திற்கு கூட இந்த வாரம் கடுகடுவென இருப்பீர்கள் என்பதால் அடுத்தவர்கள் உங்களை கோபமூட்டி பார்த்தாலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். குறிப்பாக கணவர்-மனைவி இடையே கருத்து வேற்றுமைகள் வரும் வாரம் என்பதால் கோபத்தை ஒத்தி வைப்பது நல்லது. இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வருகிறது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து இப்போது திருமணம் நடக்கும்.

தந்தை வழி உறவினர்களால் நன்மைகளும், பூர்வீக சொத்து விஷயங்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்களும், சண்டை, சச்சரவுகளும் விலகும். பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷமான சமாச்சாரங்களும், நல்ல தகவல்களும் உண்டு. பத்தாமிடத்தில் கேதுபகவான் சனி பார்வையில் இருப்பதால் ஆன்மீக விஷயத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பக்தி இயக்கங்களில் ஈடுபாடு வரும் சிலர் புதிதாக சில குறிப்பிட்ட கோவில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து போவதற்கு ஆர்வம் கொள்வீர்கள். சிவபக்தி மேன்மை தரும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. 11,13,15 ஆகிய நாட்களில் பணம் வரும். 13 ம் தேதி இரவு 11.11 மணி முதல் 16 ம் தேதி காலை 11.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மிதுனம்:

சகாய ஸ்தானாதிபதி சூரியன் லாப வீட்டில் உச்சம் பெற்று இருப்பதால் இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வாரம்தான். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கதிற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். இதுவரை அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக இருந்து வந்த தடைகள் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும்.

புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை அமையும். அரசுவேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்லசெய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ் குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல் திருமணம் நடப்பதற்கான ஆரம்பங்கள் இப்போது உண்டு.

வாரம் முழுவதும் சந்திர பகவான் நல்ல நிலைமையில் இருப்பதால் வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் நன்மைகள் உண்டு. இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அது வாங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகளும் மனதில் அது சம்பந்தப்பட்ட எண்ணங்களும் இருக்கும். சுக்கிரன் உச்சமாக இருப்பதால் உங்கள் அந்தஸ்து, கவுரவம் உயரும். சிலருக்கு நீண்ட காலமாக தடங்கலாகி வந்த ஒரு விஷயம் இப்போது எண்ணம் போலவே நடைபெறும். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், பொருள் விற்பவர்கள் உயர்வு பெறுவீர்கள்.

கடகம்:

தனம், வாக்கு, குடும்ப வீட்டின் அதிபதி பத்தாம் வீட்டில் உச்சவலுவுடன் இருக்கும் அற்புதமான வாரம் இது என்பதால் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி அனைத்தும் இப்போது பலிக்கும். அதோடு அதிக சிரமமின்றி கிடைக்கும் பண வரவாலும் குடும்பத்தில் சந்தோஷம் கண்டிப்பாக உண்டு. குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு ஆகஸ்டு மாதம் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறும்.

இளைய பருவத்தினருக்கு காதல் வரக்கூடிய அமைப்பு இருக்கிறது. இதுவரை குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சிறிய பிரச்னை என்றாலும் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். ட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பாதிபதி உச்ச வீட்டில் இருப்பதால் இந்த வாரம் குடும்பத்திற்காக வீண் செலவுகள் உண்டு. சிலருக்கு குடும்பத்தோடு உல்லாச பயணம் அமையும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் பத்தில் உச்சம். யோகாதிபதி செவ்வாய் பதினொன்றில் அமர்வு. ஐந்திற்குடையவர் இரண்டில் என யோகக்கிரகங்கள் வலுவடைந்து இருப்பதால் எதிலும் வெற்றி என்பது இப்போது நிச்சயம். எனவே சிம்ம ராசிக்காரர்கள் பழையவை எதையும் நினைத்து கலக்கம் அடையாமல் இனிமேல் நடக்கப் போகும் நல்லவைகளை நினைத்தால் கவலைகள் ஏதும் இல்லை.

கடந்த சில வாரங்களாக நடந்த சம்பவங்களின் அர்த்தம் தற்போது புரியும். நெருங்கிய சிலரைப் பற்றி இப்போது நன்றாகத் தெரிந்து கொள்வீர்கள். இதுவரை விடை தெரியாத பல கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியும். இனிமேல் எந்த வழியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்பதும் அந்த பாதையும் கண்ணுக்கு தெரியும். ஆகஸ்டு மாதம் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சிக்குப்பின் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும். கடந்த காலங்களில் குழந்தைப் பேறு தாமதமாகி வந்தவர்களுக்கு இந்தவாரம் முதல் வழி பிறக்கும். இந்தாண்டு இறுதிக்குள் நிச்சயம் நல்ல செய்தியைக் கேட்பீர்கள்.

இதுவரை எதிர்ப்புகளினால் தங்களின் உண்மையான திறமையை வெளிகொண்டு வர முடியாதவர்களும் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாதவர்களும் இந்த வாரம் வெற்றிகளை பெறுவீர்கள். குறிப்பிட்ட சிலர் தேவையற்ற பொருள் வாங்கி பணத்தை விரையம் செய்வீர்கள். வருமானமும் அதற்கேற்ற வகையில் வரும். இளைய பருவத்தினருக்கு எதிர்பால் இனத்தவர் மேல் இந்த வாரம் ஈர்ப்பு உண்டாகும். ஒரு சிலர் காதலிக்க ஆரம்பித்து எதிர்கால வாழ்க்கை துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

கன்னி:

யோகம் தரும் கிரகங்கள் அனைத்தும் நன்மை தரும் அமைப்பில் உள்ளதாலும், சுக்கிரனும், குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதாலும் இந்த வாரம் கன்னி ராசிக்கு கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. வாரத்தின் பிற்பகுதியில் சந்திரனின் தயவால் திடீர் பண வரவு ஒன்றும் உண்டு. அடுத்தவர்களால் கௌரமாக நடத்தப் படுவீர்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. பெண்களுக்கு நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு.

கடன்தொல்லைகளில் நிம்மதி இழந்திருந்தவர்களுக்கு கடனை முழுமையாக அடைக்கவோ அல்லது குறைக்கவோ வழிபிறக்கும். கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும் குறிப்பாக அஸ்தம் நட்சத்திரக்கார்களுக்கு இந்த வாரம் நல்லவாரம். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. சிறுகலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

துலாம்:

துலாநாதன் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்து ராசி உச்ச சூரியனால் பார்க்கப்பட்டு புனிதமடைவதால் துலாத்திற்கு நன்மைகள் நடக்கும் வாரமாக இருக்கும். அதேநேரம் எட்டில் இருக்கும் செவ்வாயால் குறிப்பிட்ட சிலருக்கு உறவினர்கள் பங்காளிகள் போன்றவர்களால் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மனைவியுடன் கருத்து வேற்றுமை இருக்கும். பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும்.

யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். லாப ஸ்தானதிபதி உச்சமாக இருப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகுபகவான் வலுப்பெற்றிருப்பதாலும் இப்போது நீங்கள் கேட்காமலையே உதவிகள் கிடைக்கும். குறிப்பாக அந்நிய இன, மத, மொழிக்காரர்கள் மூலம் நன்மைகள் உண்டு. ஒரு சிலருக்கு இஸ்லாமிய நண்பர்கள் தக்க சமயத்தில் கைக்கொடுப்பார்கள். உங்களில் சித்திரை நட்சத்திரக் காரருக்கு அதிக நன்மைகள் உண்டு.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்த்து, ராசி வலுவடைவதால் ஏழரைச்சனியின் துன்பங்களை அனுபவித்து வரும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் நன்மைகளை அனுபவிக்கும் வாரமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். என்னதான் பிரச்சினை இருந்தாலும் செவ்வாயின் வலுவால் உங்களின் அந்தஸ்து கௌரவம் பாதிக்காமல் பணவரவும் நன்றாக இருக்கும் என்பதால் கஷ்டங்கள் என்று எதுவும் இல்லை.

நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு தாமதங்களும் தடைகளும் ஏற்படும் என்பதால் எல்லாவிதமான சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் சுலபத்தில் நடைபெறுவது கடினம். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

சகோதரவிஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன ஆயினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது. முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் அமைந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். அரசு, தனியார் துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பு விருச்சிக ராசிக்காரர்களுக்கும் குறையில்லாத வாரம் இது.

தனுசு:

உச்ச சுக்கிரனால் பெண்களால் வீண்பழியோ, சிரமங்களோ, செலவுகளோ வரும் என்பதால் இந்த வாரம் பெண்களை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வேண்டிய வாரமாக இருக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் குரு அவரைப் பார்ப்பதால் எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே இருக்கும் என்பதும் உறுதி. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இட மாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கக் கூடிய கால கட்டம் இது. வியாபாரிகள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியது அவசியம். வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கும். எனவே அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

எட்டு, பனிரெண்டாமிடங்கள் வலுப்பெறுவதால் பண விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். வரவுகள் கண்டிப்பாக தடைபடாது என்றாலும் தேவையற்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றும் என்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

மகரம்:

பத்திற்குடையவன் மூன்றில் மறைந்து பத்தாம் இடத்தை எட்டிற்குடையவன் பார்ப்பதால் சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்கள் அகலக்கால் வைக்காமல் அடுத்தவரை நம்பாமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதை சற்று ஒத்தி வைப்பது நல்லது. ஆனாலும் மாற்றங்கள் வந்தே தீரும் என்பதால் வேலையை விட்டு வெளியேறுவதற்கான நெருக்கடிகள் அதிகரிக்கக் கூடும்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தாய்வழி உறவிலும் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். இதுவரை உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகுவிரைவில் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் விலகும்.

வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் உண்டு. வேலை செய்பவர்களிடையே மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய யோசனை கேட்கப்படும். கணவரால் பாராட்டப் படுவீர்கள். குழந்தைகளும் பெரிய அளவிற்கு உங்களை இம்சை படுத்த மாட்டார்கள். வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் நடைபெறும். சிலருக்கு தாயார் வழி சொத்து போன்ற ஆதாயங்கள் இப்போது உண்டு.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் கடந்த ஒரு வருடமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்களை ஆகஸ்டு, செப்டம்பரில் நடக்க இருக்கும் ராகுகேது, குருப்பெயர்ச்சிகள் மாற்றியமைத்து உங்களை நன்மைகள் நடக்கும் காலத்திற்குக் கூட்டிச் செல்லும் என்பதால் இப்போதே நல்லவைகளுக்கான ஆரம்பங்கள் உள்ள வாரமாக இது இருக்கும். இந்த வாரம் தாய்வழியில் உங்களுக்கு எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும்.

தாழ்வுமனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள்.

வரும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் தற்போது இருக்கும் எட்டாமிடத்தில் இருந்து மாறி மிகவும் யோகம் தரும் ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு வந்து உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து மீண்டும் அதிர்ஷ்டம் தேடி வந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது. இதுவரை தொழில், வியாபாரத்தில் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் அது விலகுவதைக் காண்பீர்கள்.

மீனம்:

ஆறுக்குடைய சூரியன் இரண்டாம் வீட்டில் அமர்ந்ததால் கடந்த நான்கு வாரங்களாக பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருந்த மீன ராசிக்காரர்கள் அனைவருக்கும் இந்தவாரம் சூரியபகவான் மூன்றாம் இடத்திற்கு மாறப்போவதால் பின்னடைவுகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும் வாரமாக இருக்கும். உங்களில் ரேவதி நட்சத்திரக் காரருக்கு கூடுதலான நன்மைகள் இருக்கும். வருமானம் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.

குறிப்பிட்ட சில பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும். பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் இந்தவாரம் உண்டு. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். சிலருக்கு வீடுமாற்றம் தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். 11,12 ஆகிய நாட்களில் பணம் வரும். 8 ம் தேதி இரவு 10.50 மணி முதல் 11ம் தேதி காலை 10.37 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment