Monday, 29 May 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 29.5.2017 - 4.6.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம் :

அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது உங்களுக்கு நிறைவான வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைப்பவர்களுக்கு இந்தவாரம் அபாரமான நன்மைகள் உண்டு. அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதையும் இந்தவாரம் நிரூபிப்பீர்கள். செலவுகளைச் சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.


மேஷநாதன் செவ்வாயும், யோகாதிபதிகள் சூரியனும், சந்திரனும் நல்லநிலையில் இருப்பதால் மேஷராசிக்கு மனமகிழ்ச்சியும் நிறைவான பாக்கியங்களும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டு. முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும்.

எல்லா நிலைகளிலும் நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும் என்பதால் இது யோக வாரமே. இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. சூரியன் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம்.

ரிஷபம் :

உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சனி இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அஷ்டமச் சனி ஆரம்பிக்க இருப்பதால் புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது.

அஷ்டமச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது. பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம்.

திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு இது நல்லவாரம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரப்பதவி கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

மிதுனம் :

இந்தவாரம் உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. குடும்பத்திலோ, அலுவலகத்திலோ ஒருவர் ஏதாவது பேசிவிட்டாலோ, திட்டி விட்டாலோ பொறுத்துப் போங்கள். மனம் விட்டு பேசினாலே பிரச்னைகளை இல்லாமல் செய்து விடலாம் என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

இதுவரை கடன் பிரச்சினையில் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதனை தீர்ப்பதற்கான ஆரம்பங்களும், வழிமுறைகளும் தோன்றும் வாரமாக இது இருக்கும். எத்தனைதான் பிரச்னைகள் என்றாலும் ஆகஸ்டுக்கு பிறகு உங்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் என்பதால் தற்போது நீங்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. தந்தைவழி உறவினர்களிடமும், பங்காளிகளிடமும், குறிப்பாக அத்தைகளிடம் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிமையான அனுபவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். சுக்கிரனின் உச்சத்தால் தாய் வழியில் இதுவரை இருந்து வந்த எதிர்மறை பலன்கள் நீங்கி உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலர் எதிர்கால வாழ்க்கை சம்பந்தமான முக்கிய முடிவுகளை தற்போது எடுப்பீர்கள்.

கடகம் :

கடகநாதன் சந்திரன் வார ஆரம்பத்தில் ஆட்சி நிலையில் வலுவாக இருப்பதால் கடகராசிக்கு பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் மிகவும் யோகம் தரக்கூடிய வாரமாகவும் இருக்கும். உங்களின் யோக வாரம் இது. உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும்.

எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் லாபங்கள் குறைவாகத்தான் இருக்கும். தனஸ்தானம் வலுப் பெறுவதால் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். சகோதர உறவு நன்றாக இருக்கும்.

வாரம் முழுவதும் சூரிய, சந்திரர்கள் வலுவாக இருப்பதும் ஒன்பதாமிடத்தில் ஒரு சுப கிரகம் உச்சமாக இருப்பதும் நன்மைகளை தரும் என்பதால் இதுவரை சொந்த வாழ்க்கையிலும் வேலை, தொழில் போன்ற அமைப்புகளிலும் ஏமாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். தந்தைவழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும்.

சிம்மம் :

இந்த வாரம் உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். சிறு விஷயத்திற்கு கூட அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலைசெய்வோர் போன்ற துறையினருக்கு நல்ல பலன்கள் நடைபெறும். பணவரவு சரளமாக இருக்கும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் பணத்திற்கு தட்டுபாடு இருக்காது. எனவே எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் அசட்டையாக இருக்க வேண்டாம்.

யோகாதிபதிகள் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் இந்த வாரம் வலுவான நிலையில் இருப்பது சிம்மராசிக்கு எதிர்மறை பலன்கள் அனைத்தையும் நீக்கி புத்துணர்ச்சியும் புது வாழ்க்கையும் தரும் அமைப்பு என்பதால் சிம்மராசிக்கு கெடுதல்கள் சொல்ல எதுவும் இல்லை. சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி :

செய்யும் முயற்சிகளில் இந்த வாரம் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் வாரம் இது. வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள்.

இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.

பத்தில் செவ்வாய், இருந்து அந்த வீட்டிற்கு சனி பார்வை என இரண்டு பெரும் பாவ கிரகங்கள் தொழில் ஸ்தானத்துடன் சம்பந்தப்பட்டாலும் ராசிநாதனும் ஜீவன ஸ்தானாதிபதியுமான புதன் பரிவர்த்தனையாக இருப்பதும், வார ஆரம்பத்தில் லாபாதிபதி சந்திரன் ஆட்சியாவதும் அனைத்து தோஷங்களையும் விலக்கி உங்களுக்கு யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால் இந்த வாரம் கன்னிக்கு யோக வாரமே. வரும் குருப்பெயர்ச்சியில் இருந்து உங்கள் வாழ்க்கை வசந்தமாக மாறும்.

துலாம் :

ஆகாத எதிரிகளை நீங்கள் சிரித்த முகத்தோடு உறவாடிக் கெடுக்கும் வாரமாக இது இருக்கும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வாரம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது.

தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சகோதர உறவு, கூட்டுத் தொழிலில் நன்மைகள் ஆகியவை சுமுகமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்தவாரம் சிகப்பு நிறமுடைய பொருட்களால் நன்மைகளும் பணவரவும் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இதுவரை குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும்.

சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக இருப்பதும் யோகாதிபதி சனி மூன்றாமிடத்தில் அமர்ந்திருப்பதும் இந்த வாரம் துலாம் ராசிக்கு நல்ல மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரும் என்பதால் பிரச்னைகளில் சிக்கி இருக்கும் துலாத்தினருக்கு சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக தீர்ந்து நிம்மதியை தரும்.

விருச்சிகம் :

சூரியன், சந்திரன், குரு என மூன்று யோகாதிபதிகளும் வார ஆரம்பத்தில் வலுவாக இருப்பது தற்போது விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவித்து வரும் மனக் கஷ்டங்களையும், பணப்பிரச்சினைகளையும் இந்த கோட்சார கிரகநிலை அமைப்பு தடுக்கும் என்பது உறுதி. விருச்சிக ராசிக்கு இப்போது இருக்கும் எல்லா பிரச்சனையும் இன்னும் சிலவாரங்களுக்குத்தான் என்பதால் எதையும்சமாளிக்கும் மனோதைரியத்தை இறைவன் உங்களுக்கு அளிப்பார் என்பது உறுதி.

இந்தவாரம் உங்கள் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் சரியான முடிவுகள் எடுக்கத் தடுமாறும் வாரமாக இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம். விருச்சிகநாதன் செவ்வாய் வலுவான நிலையில் இருப்பதோடு ராசிக்கு சூரியன் பார்வையும் இருப்பதால் உங்களுக்கு இதுவரை இருந்து வரும் சிக்கல்களுக்கு தீர்வுகளை தரும் வாரமாக இது இருப்பதோடு புதிதாக எந்த சிக்கல்களும் வராத வாரமாகவும் இருக்கும்.

டைவர்ஸ்கேஸ், அடிதடி, போலீஸ்கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நன்மை அடைவார்கள். தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.

தனுசு :

தனுசு ராசி இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதிவேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு இருப்பதால் வாரம் முழுமையும் மேன்மையான வாரமாக அமையும் என்பது உறுதி. ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள்.

படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். சிறிது தள்ளிப் போடுங்கள்.

எதிலும் நேர்வழியில் செல்லுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். 29,3,4 ஆகிய நாட்களில் பணம் வரும். 29 ம் தேதி காலை 7.53 மணி முதல் 31 ம் தேதி காலை 11.13 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மகரம்:

மூன்றாமிடத்தில் வலுப்பெற்று இருக்கும் சுக்கிரன் உங்களுக்கு தைரியத்தையும் அதன் மூலமாக புகழையும் பெற்றுத் தருவார் என்பதால் இந்தவாரம் நீங்கள் எடுக்கும் காரியம் யாவும் வெற்றியடைந்து உங்களை சந்தோஷத்தில் இருக்க வைக்கும் வாரமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் உண்டு. வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும்.

உங்களுடைய செயல்திறமை, விடாமுயற்சி, கடும் உழைப்பு போன்றவை உங்களை ஒரு போதும் தோல்வியடைய வைக்காது என்பதால் இது யோகம் உள்ள வாரம்தான். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வியாபாரத்தில் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டிகள் விலகுவதைக் காண்பீர்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும். 1,2,5 ஆகிய நாட்களில் பணம் வரும். 4 ம் தேதி அதிகாலை 4.28 மணி முதல் 6 ம் தேதி மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கும்பம்:

இன்னும் சில வாரங்களில் குருபகவான் ஒன்பதாமிடத்திற்கு மாறி ராசியை பார்க்கப் போவதால் எந்தப் பிரச்னையும் கும்பத்திற்கு வரப்போவது இல்லை. கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளும், கோர்ட் கேஸ் போன்றவைகள் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாகப்பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ இப்போது கிடைக்கும்.

தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்றும் இப்போது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. செப்டம்பருக்குப் பிறகு திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.. இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

ஜீவனஸ்தானம் வலிமை பெறுவதால் இதுவரை கிடைக்காத நல்லவேலை மற்றும் அமையாத தொழில் சிலருக்கு கிடைப்பதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் இருக்கும். இளைய சகோதரர்களால் சிலர் நன்மை அடைவீர்கள். மருத்துவத்துறையில் பணிபுரியும் கும்பராசிக்காரர்களுக்கு இப்போது மாற்றங்கள் இருக்கும். வெகுநாள் இழுத்து கொண்டிருந்த விவகாரங்கள் முடிவடைந்து பணவரவு உண்டு. பெண்கள் உதவுவார்கள். தொலைக்காட்சி துறையினருக்கு இது சிறந்த வாரம்.

மீனம்:

ஐந்துக்குடைய சந்திரன் ஆட்சி, ஒன்பதுக்குடைய செவ்வாய் கேந்திரம் என்ற நிலை இந்த வாரம் உண்டாவதால் மீன ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லாத நல்லவாரமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும் உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் வாரம் இது. சிலருக்கு எதிர்பாராத ஆட்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும்.

சிலருக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல் வேலைமாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவை நடக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும் வாரம் இது.

வாழ்க்கைத்துணையால் கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். தொழில்நஷ்டம் வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் நல்ல மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்து வந்தவைகளை விட நல்ல தொழில் வேலை போன்றவைகளை அடைவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வரன்கள் அமையும். ஏற்கனவே முதல் திருமணம் கசப்பாக அமைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்ல முறையில் அமைவதற்கான ஏற்பாடுகள் நடக்கும்.

No comments :

Post a Comment