Monday, 22 May 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (22.5.2017 - 28.5.2017)


இந்த வாரம் எப்படி?

மேஷம் :

மேஷநாதன் செவ்வாய் வார இறுதியில் மூன்றுக்குடைய தைரிய ஸ்தானாதிபதி புதனுடன் பரிவர்த்தனை நிலையில் அமர்வதால் இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் மன உறுதியுடன் நீங்கள் செயல்படும் வாரமாக இருக்கும். உதவி ஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை யாரிடமாவது நீங்கள் உதவி கேட்டு அதைச் செய்ய முடியாத நிலையில் இருந்தவர்கள் இந்த வாரம் உங்களுக்கு உதவுவார்கள்.


செவ்வாயை சனி பார்ப்பதால் திடீரென முகத்தை சிடுசிடுவென மாற்றிக்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிப் போவார்கள். நீங்களே இந்த வாரம் மற்றவர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருப்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனவருத்தம் இருக்கலாம். நீங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்து அது சிக்கலில் முடிந்து கடைசியில் அந்த சிக்கலையும் நீங்களே தீர்க்க வேண்டிய வரும் என்பதால் பிள்ளைகளின் மேல் ஒரு கண் வைக்கவும்.

வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். ஞானிகளின் ஜீவசமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள்.

ரிஷபம் :

ராசிநாதனின் உச்ச வலுவோடு ராசிக்கும் குரு பார்வை இருப்பதால் ரிஷபத்தினர் சாதிக்கும் வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் 2, 12-க்குடைய தன, விரையாதிபதிகள் செவ்வாயும், புதனும் இந்த வாரம் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் உங்கள் வருமானங்கள் வீண் விரையமாகும் நிலையும் இருக்கும். உங்களில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சுக போகங்களுக்காகவும், வீண் ஆடம்பரத்திற்காகவும், தேவையின்றி இந்த வாரம் செலவு செய்வீர்கள்.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

குறிப்பாக ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு கெடுதல்கள் எதுவும் இனிமேல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும்.

மிதுனம் :

ராசிநாதன் 11-ல் அமர்ந்து, பாவக்கிரகங்களான சனி, செவ்வாய் தொடர்பு ராசிக்கு ஏற்பட்டாலும் பரிவர்த்தனை யோகம் இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் அனைத்து சிக்கல்களில் இருந்தும் வெற்றிகரமாக வெளியே வரும் வாரம் இது. அதே நேரத்தில் ராசியில் செவ்வாய் அமர்ந்து, சனியின் பார்வை பெறுவதால் குறிப்பிட்ட சில மிதுனத்தினருக்கு மனம் பதற்றப்படும் சில விஷயங்கள் நடக்கலாம் என்பதால் எதிலும் நிதானமாகவும் இந்த வாரம் இருக்க வேண்டும்.

செவ்வாயின் ராசி இருப்பால் தேவையில்லாத விஷயத்திற்கு கோபப்படுவீர்கள். காரணமின்றி யார் மேலாவது எரிந்து விழுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் கூட உங்களுடைய மாற்றத்தைப் பார்த்து விலகி இருக்க விரும்புவார்கள். எவரிடமும் கருத்து மோதல்களிலோ, வாக்குவாதங்களிலோ ஈடுபட வேண்டாம். யாரையாவது நீங்கள் கோபப்பட்டு திட்டினால் அது நீண்டநாள் மனஸ்தாபத்தில் கொண்டு போய்விடும் வாய்ப்பு இருக்கிறது.

திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும்.

கடகம் :

வாரம் முழுவதும் ராசிநாதன் சந்திரன் மிக நல்ல இடங்களான 10, 11-ம் இடங்களில் இருப்பதால் கடகராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. 2-க்குடைய சூரியன் 11-ம் வீட்டில் அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த லாபாதிபதி சுக்கிரன் உச்சமடைகிறார். 9-க்குடைய குரு இவர்கள் இருவரையும் பார்க்கிறார். இந்த அமைப்பின் மூலம் 2, 9, 11-க்குடையவர்களின் தொடர்புகள் உண்டாகி கடக ராசிக்காரர்களுக்கு நிறைவான தனம் லாபம் கிடைக்கும் வாரமாக இது இருக்கும்.

ஆறு எட்டுக்குடையவர்கள் பலம் இழந்து நிற்கும் வாரமாக அமைவதால் கடக ராசிக்கு இந்த வாரம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகள் இருக்கும். வார ஆரம்பத்தில் தேவையற்ற மனக்கலக்கம் உருவானாலும் நண்பர்கள் வலுவான நிலைமையில் இருப்பதால் எந்த ஒரு பிரச்சினையையும் இப்போது உங்களால் சமாளிக்க முடியும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வீடு கட்டித்தரும் புரோமோட்டர்கள், இறைச்சி வியாபாரிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும்.

கலைத்துறையினர் வாய்ப்புகளை பெறும் வாரம் இது. நூதனக் கருவிகளை இயக்கும் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். இரண்டில் இருக்கும் ராகுவால் சிலருக்கு தொழில் விஷயங்களிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் ஏமாற்றம் இருக்கும் என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களின் திறமைகள் வெளிப்படும் வாரம் இது. போட்டி இருந்தால்தானே ஜெயிக்க முடியும் என்பதற்கு இணங்க இந்த வாரம் எதிரிகளை வெல்வீர்கள்.

சிம்மம் :

ராசிநாதன் சூரியன் 10-ம் வீட்டில் குரு பார்வையுடன் அமர்ந்து பாபகிரகங்களான சனியும், செவ்வாயும் 6, 12-ல் இருக்கும் நல்ல வாரம் இது. 9, 11-க்குடைய புதனும், செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் பணவரவிற்கு எவ்வித தடங்களும் இல்லாமல் சென்ற இடங்களில் காரியம் முடியும் வாரமாகவே இது இருக்கும். பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை, உடல்நலக்கோளாறுகள் தீரும் வாரமாகவும் இது இருக்கும்.

சுக்கிரன் எட்டில் உச்சமாக இருப்பது எந்த ஒரு நல்லதும் உங்களுக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே கிடைக்கும் என்பதையும் மறைமுக எதிரிகளும், போட்டிகளும் இருக்கும் என்பதையும் காட்டுகிறது. எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு நல்லபலன்கள் அதிகம் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் அதிகமாக நன்மைகள் நடைபெறும். 25,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 21 ம் தேதி அதிகாலை 5.19 மணி முதல் 23ம் தேதி காலை 8.24 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கன்னி :

இதுவரை எட்டில் மறைந்து வலுவிழந்திருந்த ராசிநாதனின் நிலை இந்த வாரம் பரிவர்த்தனையின் மூலம் மாறி யோக அமைப்பாக 10-ம் இடத்தில் அமரும் நிலை பெறுவதால் கன்னி ராசிக்காரர்கள் தொழில்துறையில் சாதிக்கின்ற வாரமாக இது இருக்கும். 8-ம் இடத்தில் பரிவர்த்தனை யோகம் நடைபெறுவதால் உங்களில் சிலர் மறைமுகமான ரகசிய வேலைகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்து கொள்ளாமல் அதில் வெற்றியும் பெறுவீர்கள். உத்திர நட்சத்திரக்காரர்கள் சகல மேன்மையும் பெறுகின்ற வாரம் இது.

அஷ்டம விரைய ஸ்தானங்கள் வலுப்பெறுவதால் இந்த வாரம் உங்களுக்கு வீண்செலவுகள் உள்ள வாரமாக இருக்கும். வசந்த காலம் இன்னும் சில வாரங்களில் வரப்போகிறது. செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் குளிர்ந்த மனதுடன் உள்ளே நுழையும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் இப்போதிருக்கும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

உற்சாகமும் சந்தோஷமும் மறுபடியும் உங்களிடம் வரும். ஏதாவது ஒரு விஷயத்தில் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டும், எதற்காக கலங்குகிறோம் என்று தெரியாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் தெளிவு பிறக்கும். 24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 23 ம் தேதி காலை 8.24 மணி முதல் 25 ம் தேதி காலை 8.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

துலாம் :

ராசிநாதன் உச்சமாகி பாக்கியாதிபதி புதன் பரிவர்த்தனை யோகத்தின் மூலம் 9-ம் வீட்டில் அமர்ந்து அவரை சனி பார்க்கும் யோக வாரம் இது. ராசியின் யோகர்களான சுக்கிரன், சனி, புதன் மூவரும் ஒருவருக்கொருவர் நல்ல முறையில் தொடர்பு கொள்வதால் இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் வாரமாக இருக்கும். குறிப்பாக சித்திரை நட்சத்திரக்காரர்கள் சிறப்பான விஷயங்களில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள்.

ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் ஆசி பெறுவீர்கள். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்யக்கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இடமாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

இளையபருவ துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கப் போகும் நல்ல வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையக்கூடிய சம்பவங்களும் அறிமுகங்களும் இப்போது நடக்கும். 22,24,25, ஆகிய நாட்களில் பணம் வரும். 25 ம் தேதி காலை 8.29 மணி முதல் 27 ம் தேதி காலை 7.34 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

விருச்சிகம் :

ராசிநாதன் செவ்வாய் பரிவர்த்தனையின் மூலம் ஆறாமிடத்தில் ஆட்சி பெறும் வாரம் இது. விருச்சிக ராசிக்கு படிப்படியாக கஷ்டங்கள் விலக துவங்கி இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து சராசரியான நல்ல வாழ்க்கைக்கு திரும்புவீர்கள் என்பதால் இனிமேல் உங்களுக்கு கெடுபலன்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. உங்களில் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இருந்து வரும் அனைத்து தொல்லைகளும் நீங்க ஆரம்பிக்கும் நல்ல வாரம் இது.

தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். லாபகுருவின் வலுவால் வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம். எனவே வரும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது.

வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். 26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 27 ம் தேதி காலை 7.34 மணி முதல் 29 ம் தேதி காலை 7.53 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

தனுசு :

இருபெரும் பாபக் கிரகங்களான சனியும், செவ்வாயும் ராசியோடு தொடர்பு கொள்ளும் சவாலான வாரம் இது. உங்களில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் சகல விஷயத்திலும் நெருக்கடிகள் இருக்கும். குறிப்பாக தொழில் இடங்களில் முதுகில் குத்துதல், காலை வாருதல் போன்ற நம்ப முடியாத எதிர்மறை விளைவுகளால் மனக்கலக்கம் அடைவீர்கள். ஆயினும் ராசிக்கு நான்கு கேந்திரங்களிலும், கிரகங்கள் வலுவாக இருப்பதால் நீங்கள் எதிரிகளை ஜெயிக்கும் வாரம் இது.

மத்திய மாநில அரசுகளின் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குழந்தைகள் பேரில் சேமிக்க முடியும். தனலாபங்கள் இருக்கும்.

மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மகரம் :

30 வயதுகளில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு படிப்பினை போன்ற சில அனுபவங்களை கற்று தரும் வாரமாக இது இருக்கும். குறிப்பாக உங்களில் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் யாரையாவது நம்பி ஏமாறும் கசப்பான அனுபவம் உண்டு. நம்புவது உங்கள் குற்றம் என்பதால் ஏமாற்றுபவரை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. மகர ராசிக்காரர்களுக்கு பணம், உறவு, நட்பு ஆகியவைகளை பற்றி கிரகங்கள் சொல்லி கொடுக்கும் வாரமாக இது இருக்கும்.

பொதுவாக மகர ராசிக்காரர்கள் பள்ளிப் படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய வாரம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனிதயாத்திரை போகமுடியும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

கும்பம் :

வாரம் முழுவதும் உங்களின் எதிர்தன்மையுடைய கிரகமான சந்திரன் நல்ல இடங்களில் அமரும் வாரம் இது. சுக்கிர உச்சத்தால் இந்த வாரம் உங்களை எதிர்த்து கொண்டிருந்தவர்கள் உங்கள் முன் அடிபணிவார்கள். உங்களின் கருத்துக்களுக்கு இதுவரை கிடைக்காத அங்கீகாரம் தற்போது கிடைக்கும். உங்களில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இந்த வாரம் குடும்ப விஷயங்களில் நல்ல திருப்பங்கள் உண்டு.

வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும்.

எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் போன்ற விஷயங்கள் வரும்.

மீனம் :

ராசிக்கு நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் அமர்ந்து உங்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகளை தரப்போகும் வாரம் இது. ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு கடந்த இரண்டு வாரங்களாக இருந்து வந்த மனக்குழப்பங்கள் தற்போது தீரும். ஐந்திற்குடையவன் இந்த வாரம் உச்ச நிலை பெறுவதால் இதுவரை அதிர்ஷ்டம் இல்லாத நிலையால் சாதகமற்ற பலன்களை எதிர் நோக்கி கொண்டிருந்த மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் முதல் உங்களை நீங்களே அதிர்ஷ்டக்காரராக உணர்வீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். ஆறில் இருக்கும் ராகுவால் சிலருக்கு மறைமுகமான வருமானங்கள் இருக்கும். பொதுவாக ராகு எப்படி சம்பாதித்தோம் என்று வெளியில் சொல்லமுடியாத வகையில் பணம் தரும் கிரகம் என்பதால் இப்போது இது போன்ற வழிகளில் மீனராசிக்காரர்களுக்கு வருமானம் வரும் இதுவரை எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருந்த விஷயங்கள் இப்போது சாதகமாக முடியும்.

வார ஆரம்பத்தில் இருக்கும் கிரகநிலைகளால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்து போவதோடு மற்றவர் செய்யும் தவறை பொறுத்து போவதும் நல்லது. பணவரவிற்கு குறை எதுவும் இருக்காது. குருவின் பார்வையினால் எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் யோககாலம் ஆரம்பிக்க இருப்பதால் இந்த வாரம் யோக வாரம்தான்.

No comments :

Post a Comment