Monday, May 1, 2017

மீனம்: 2017 மே மாத பலன்கள்

மீனம்:

பாக்கியாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தோடு தொடர்பு கொள்வது வருமானத்திற்கு நல்ல அமைப்பு என்பதால் மீனத்திற்கு மே மாதம் மேன்மையான மாதம்தான். ராசியில் எட்டுக்குடையவன் உச்சமாக இருப்பது ஒரு சாதகமற்ற அமைப்புத்தான் என்றாலும் அவர் ராசிநாதன் குருவின் பார்வையில் இருப்பதால் பாதகம் எதையும் செய்ய வாய்ப்பில்லை. பாவக்கிரகங்களான ராகு, சனி ஆகியோர் உபசய ஸ்தானங்களான ஆறு, பத்தில் இருப்பதும் நன்மைகளைத் தரும் நிலைகள் என்பதால் இந்த மாதம் மீனத்திற்கு ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் மாதம் என்பதோடு புதிதாக எந்த பிரச்னையும் வராத மாதமாகவும் இருக்கும்.

ராசி சுபத்துவமாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு வரப் போவது இல்லை. நல்ல வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்த சிலருக்கு இந்த மாதம் நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புகள் தேடி வரும். நான்கு பேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும் மாதம் இது. மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள்.

ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். மீனராசி இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழி உறவினருடன் உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

2,3,5,6,11,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 8 ம் தேதி இரவு 10.50 மணி முதல் 11ம் தேதி காலை 10.37 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment