Monday, 15 May 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (15.5.2017 - 21.5.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

மேஷநாதன் செவ்வாயும், யோகாதிபதி சூரியனும் இந்த வாரம் இரண்டாமிடமான தனஸ்தானத்தில் குருபார்வையுடன் இணைந்திருப்பதும், இவர்களுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சமாக இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் மேஷராசிக்கு மனமகிழ்ச்சியும் நிறைவான பாக்கியங்களும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். உற்சாகம் உள்ள நல்ல வாரம் இது. சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்த வாரம் நல்ல பலன்கள் நடக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.

உங்களில் பரணி நட்சத்திரக்காரருக்கு அலைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் இருக்கும். மேஷராசிக்காரர்கள் கோபக்காரர்களாக இருந்தாலும் நீதிமான்களாக இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ளமாட்டீகள். விலை போகவும் மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள்.

சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும். அஷ்டமச் சனி நடப்பதால் இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு கவனக்குறைவு, மனத் தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும் மேஷராசி இளைஞர்களுக்கு இப்போது இருக்கும் எல்லா பிரச்சனையும் இன்னும் கொஞ்ச காலத்திற்குத்தான் என்பதால் எதையும் சமாளிக்கும் மனோதைரியத்தை இறைவன் உங்களுக்கு அளிப்பார் என்பது உறுதி.

ரிஷபம்:

எட்டாமிடத்தில் சனி அமர்ந்து ராசியில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் எதிர்பார்க்கும் அனைத்தும் வெறும் பேச்சளவிலேயே இருந்து செயல்பட முடியாத நிலைமை இந்த வாரம் ரிஷப ராசிக்கு ஏற்படலாம். என்ன இருந்தாலும் ராசிநாதனின் உச்ச வலுவால் அனைத்தையும் சமாளித்து வெற்றி வீரனாக வலம் வருவீர்கள். அதேநேரத்தில் உங்களின் ஈகோவை தூண்டி விட்டு அவசர முடிவு எடுக்க வைக்கும் செயல்கள் நடக்கும் என்பதால் எதிலும் நிதானம் தேவை.

உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். அரசு, தனியார் துறைகளில் மேல் வருமானம் வருகின்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம். அதிகமான வருமானத்திற்கு ஆசைப்படவும் வேண்டாம். சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் கவனம் வைக்கவும். சிறு பிரச்னை இருந்தாலும் அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. 15,17,18, ஆகிய நாட்களில் பணம் வரும். 13 ம் தேதி இரவு 11.11 மணி முதல் 16 ம் தேதி காலை 11.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மிதுனம்:

பனிரெண்டில் சூரியன், செவ்வாய் அமர்ந்து, ராசியை சனி பார்த்தாலும் ராசிநாதன் வலுவாக இருப்பது அனைத்து தோஷங்களையும் விலக்கி உங்களுக்கு யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால் இந்த வாரம் மிதுனத்திற்கு யோக வாரமே. இளைய பருவத்தினர் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் வாரம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வாரம் நிர்ணயிக்கும்.

சோதனைகளை சாதனைகளாக நீங்கள் மாற்றக்கூடியவர் என்பதால் இந்த வாரம் யோக வாரமே. அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்கள் இருக்கும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். பேசக் கூடிய மற்றும் சொல்லித்தரக் கூடிய தொழில்களில் மார்க்கட்டிங், ஆசிரியர்பணி, வக்கீல்கள் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இது நல்ல காலகட்டமாக இருக்கும்.

உங்களில் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு வெகு நாட்களாக முடியாத காரியங்கள் இந்த வாரம் முடியும் அமைப்பு உண்டு. மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்தவாரம் மேன்மையான பலன்கள் இருக்கும். 15,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 16 ம் தேதி காலை 11.35 மணி முதல் 18 ம் தேதி இரவு 10.12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கடகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் வலுப் பெறுவதும் தனாதிபதியும், லாபாதிபதியும் பலம் பெற்றிருப்பதும் கடகராசிக்கு பண வரவும், தொழில் மேன்மையும் அளிக்கும் என்பதால் இந்த வாரம் உங்கள் எதிர்கால ஜீவன அமைப்புக்கள் வலுப் பெறுவதற்கான ஆரம்பங்கள் உள்ள வாரமாக இருக்கும். குருபகவானின் பார்வை வலுவால் கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள்.

வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடுகளும், சண்டை, சச்சரவு போன்ற பிரிவினை சமாச்சாரங்கள் இருந்தவர்கள் சமாதானமாகச் செல்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பொருத்தமான வேலைகள் அமையும். மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார். சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். 17,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 18ம் தேதி இரவு 10.12 மணி முதல் 21ம் தேதி அதிகாலை 5.19 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

சிம்மம்:

ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் யோகாதிபதி செவ்வாயுடன் இணைந்திருப்பதும், தன, லாபாதிபதியான புதன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதும் சிம்மராசிக்கு எதிர்மறை பலன்களை நீக்கி புத்துணர்ச்சியைத் தரும் அமைப்பு என்பதால் சிம்மத்திற்கு கெடுதல்கள் சொல்ல எதுவும் இல்லை. அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.

நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த ஒரு காரியம் முடிந்து இந்த வாரம் பண வரவு உண்டு. குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் சொல்லைக் கேட்பார்கள். இதுவரை இருந்து வந்த வீண் செலவுகளும், விரயங்களும் தவிர்க்கப்பட்டு இனிமேல் சேமிப்பு இருக்கும். இந்த வாரம் குறிப்பிடத்தக்க அளவில் பண வரவும், லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்த இடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும்.

பருவ வயது பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மக்களின் மேல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் வயதுக்கே உரிய காதல் போன்ற விஷயங்களில் திரும்பும். இதுபோன்ற ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது. அர்ச்சகர்கள், கற்றுத் தருபவர்கள் நீதித்துறை, சட்ட வல்லுனர்கள், வங்கி, சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும்.

கன்னி:

ராசியில் இருக்கும் குருபகவானும், ராசியைப் பார்க்கும் உச்ச சுக்கிரனும் எத்தகைய தடங்கல்கள் வந்தாலும் உங்களைக் கெடுதல்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு கவச அமைப்பு என்பதால் கன்னிக்கு இந்த வாரம் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. உங்களில் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் சிலருக்கு வெளியூரிலோ, வெளி மாநிலத்திலோ, தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் உருவாகும்.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு இனிமேல் அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள். தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும்.

வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

துலாம்:

எட்டில் இருக்கும் செவ்வாய், சூரியன் போன்ற பாபக் கிரகங்களால் இந்த வாரம் உங்களின் நிதிநிலைமை சிறிது பாதிக்கப்படலாம் என்றாலும் பாக்யாதிபதி புதன் ராசியைப் பார்ப்பதாலும், சுக்கிரன் உச்சமாக இருப்பதாலும் கொஞ்சம் தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டு அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள் என்பது உறுதி. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும்.

உங்களில் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பு நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். துலாத்தினர் வெற்றியைக் குவிக்கும் வாரம் இது.

ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம். வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

விருச்சிகம்:

வாரம் முழுவதும் சூரியன் ராசியைப் பார்ப்பதும் பாக்யாதிபதி சந்திரன், வலுவுடன் இருப்பதும் விசேஷமான நிலை என்பதால் தற்போது விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவித்து வரும் மனக்கஷ்டங்களையும், பணப்பிரச்சினைகளையும் இந்த கோட்சார கிரகநிலை அமைப்பு தடுக்கும் என்பது உறுதி. உங்களில் கேட்டை நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடுவது நல்லது. இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சென்ற காலங்களில் வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகப் போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான். அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

அரசு ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது ஊர்மாற்றமோ இருக்கும். இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் அரைகுறையான மனதுடன்தான் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிக பொருட்களை விற்பனை செய்பவர்கள், வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சிலருக்கு வீண் விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் நடக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு தூரப்பயணங்களும், மாறுதல்களும் உள்ள வாரமாக இது இருக்கும். பனிரெண்டாமிடம் சுபவலுப் பெறுவதால் பூராடம் நட்சத்திரக் காரர்களில் சிலர் நாடுவிட்டு நாடு அல்லது கண்டம் விட்டு கண்டம் செல்லும் யோகமும் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அகலக்கால் வைக்காமல் இருக்கும் தொழிலை அப்படியே நடத்திக் கொண்டு வருவது நல்லது. தொழில் விரிவாக்கம் செய்வதோ, கிளைகள் ஆரம்பிப்பதோ இப்போது கை கொடுக்காது. எதற்கும் அடுத்தவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

ஆறுக்கதிபதி வலுவாக இருப்பதால் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்க வேண்டியது இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கூட கடன் வாங்கும்படி சுக்கிரன் செய்வார் என்பதால் ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள். செப்டம்பரில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சி முதல் நன்மைகள் நடப்பதற்கான ஆரம்பங்கள் உருவாகும். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் இப்போது நடக்கும்.

ஆறாம் அதிபதி உச்சம் என்பதால் அடங்கிக் கிடக்கும் கடன் பிரச்னைகள் லேசாகத் தலை தூக்கலாம். அனைத்திலும் கவனமுடன் இருக்கவேண்டிய வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகனமாற்றம் செய்வீர்கள். பொதுவாக நான்காமிட கேந்திர ஸ்தானத்தில் இயற்கைச் சுபரான சுக்கிரன் இருப்பது எல்லா வகையிலும் தடைகளையும் தாமதங்களையும் தரும் என்பதால் உங்களுக்கு அனைத்திலும் உற்சாகக் குறைவு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

மகரம்:

ஐந்தில் செவ்வாய், சூரியன், எட்டில் ராகு என்ற கிரக அமைப்பு விரயங்களையும், செலவுகளையும், மனவருத்தங்களையும் கொடுக்கும் ஒரு அமைப்புதான் என்றாலும் இவர்களுக்கு வீடு கொடுத்த யோகாதிபதி சுக்கிரன் வலுவடைந்திருப்பதால் கெடுபலன்களைக் கூட சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறமையுள்ள நீங்கள் அனைத்தையும் சமாளிக்கும் வாரமாக இது இருக்கும். மகரத்திற்கு இந்த வாரம் வாழ்க்கைத் துணைவரால் சந்தோஷங்களும் இன்பமான நிகழ்வுகளும் இருக்கும்.

இளைய பருவத்தினர் சிலருக்கு தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் வாய்ப்பும் இளமைப் பருவத்திற்கே உரிய காதல் அனுபவங்களும் உண்டு. பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும். எல்லா பிரச்சனையும் ஆகஸ்டில் நடைபெறும் ராகுகேதுப் பெயர்ச்சி வரைதான்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். பெரியதொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். ஆகஸ்ட் முதல் அதிர்ஷ்டம் ஆரம்பிக்கிறது.

கும்பம்:

உச்ச சுக்கிரனின் வீட்டில் இருக்கும் கிரகங்கள் உங்களுடைய செயல்திறமை, விடாமுயற்சி, உழைப்பு இவற்றை ஒரு போதும் தோல்வியடைய வைக்காது என்பதால் கும்பராசிக்கு இந்த வாரம் யோகமான வாரமாக இருக்கும். கேது பகவான் ராசியோடு தொடர்பு கொண்டிருப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் இப்போது மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். வீடு வாகன விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். வேலை மாற்றம் ஊர் மாற்றம் வீடுமாற்றம் தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்தும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.

வாரத்தின் இறுதி நாட்கள் தூரப்பிரயாணங்கள் செய்வதையோ புதிய ஆரம்பங்கள் மற்றும் முயற்சிகளைச் செய்வதையோ தவிர்ப்பது நல்லது. ராசியும் ராசிநாதனும் வலுவாக இருப்பதால் பின்னடைவுகள் எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும்.

மீனம்:

வாரம் முழுவதும் வலுப்பெற்று இருக்கும் சந்திரனும், சூரிய செவ்வாயும் உங்களுக்கு தைரியத்தையும் அதன் மூலமாக புகழையும் பெற்றுத் தருவார்கள் என்பதால் இந்தவாரம் நீங்கள் எடுக்கும் காரியம் யாவும் வெற்றியடைந்து உங்களை சந்தோஷத்தில் இருக்க வைக்கும் வாரமாக இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.

தனாதிபதி செவ்வாய் சுப வலுப் பெற்றுள்ளதால் தனம், வாக்கு, குடும்பம் ஆகிய மூன்று அமைப்புகளிலும் நன்மைகள் நடக்கும் வாரமாக இது இருக்கும். நீங்கள் சொல்வது பலிக்கும். பண சிக்கல்கள் இருக்காது. தந்தைவழி உறவினர் விஷயத்தில் வருத்தங்களும், மனஸ்தாபங்களும் இருக்கும். உங்களில் உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்கள் சிலருக்கு அப்பாவால் செலவுகளும், விரையங்களும் இருக்கலாம் என்பதால் தந்தையின் உடல்நிலை கவனிக்கப் படவேண்டிய ஒன்றாக இருக்கும்.

வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்ல நேரம் இது. அரசு தனியார் துறை ஊழியர்கள் தாங்கள் செய்யும் வேலையில் மதிப்பு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணை விஷயத்தில் ஆதாயம் இருக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள்.

No comments :

Post a Comment