Monday, 1 May 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (1.5.2017 - 7.5.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

மேஷத்திற்கு இது மேன்மையான வாரம்தான் என்றாலும் உங்களில் பரணி நட்சத்திரக்காரருக்கு தொழில் மற்றும் பணவரவுகளில் எவ்வித இடையூறுகளும் இல்லாத வாரமாக இருக்கும். அஸ்வினிக்கு வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. கடந்த காலங்களில் வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். நல்ல பணவரவு இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள்.

பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கும். வாரம் முழுவதும் சுக்கிரன் குருவின் பார்வையில் இருப்பதால் பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.

கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். பூமி சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வீட்டு கட்டிக் கொடுக்கும் பில்டர்கள் செங்கல், மணல், ஜல்லி போன்றவை விற்பனை செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு லாபங்கள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நாள் வராத வாடகை குத்தகை பணம் இந்த வாரம் வசூலாகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை.

ரிஷபம்:

ரிஷபராசிக்கு வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். குருவும் சுக்கிரனும் நேருக்கு நேர் சம்பந்தப்படுவதால் இந்த வாரம் கெடுபலன் எதுவும் இல்லை. செப்டம்பர் மாதத்தில் குருபகவான் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து மாறி ஆறாமிடத்திற்குச் செல்லப் போவதால் அது முதல் உங்களுக்கு சில மாற்றங்கள் நடைபெறும். எனவே இப்போதிருந்தே தேவையற்ற அனாவசியக் கடன் எதுவும் வாங்காமல் சிக்கனமாக இருப்பது நல்லது.

சுக்கிரன் உச்சமாகி புதன் விரயத்தில் உள்ளது ரிஷபத்திற்கு நன்மைகளைச் செய்யும் என்றாலும் நான்கிற்குடைய சூரியன், பனிரெண்டில் மறைவதால் வீடு, வாகனம், அம்மா போன்ற இனங்களில் வீண் செலவுகளும், விரையங்களும் உள்ள வாரமாகவும் இது இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் இருக்காது. புதிய கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் தாராளமாக வரப் போகின்றது. எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும்.

அதிசார முறைப்படி அஷ்டமச்சனி நடப்பில் உள்ளதால் சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். சிறிது தள்ளிப் போடுங்கள். எதிலும் நிதானமாக இருங்கள். அவசரப்பட்டு எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். பதறாத காரியம் சிதறாது என்பது இப்போது உங்களுக்குப் பொருந்தும். சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும்.

மிதுனம்:

ராசிநாதன் புதனும், சுக்கிரனும் வலுவான அமைப்பில் பத்து பதினொன்றில் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான செயல்கள் நடக்க கூடிய வாரமாகவும் பணவரவு உள்ள வாரமாகவும் இது இருக்கும். ஒன்பதாமிடத்து கேதுவால் தந்தையின் ஆரோக்கியம் கவனிக்கப் பட வேண்டும். வியாபாரிகளுக்கு இது நல்ல வாரம்.. இளைய வயதினருக்கு வாழ்க்கை செட்டில் ஆகும் சம்பவங்கள் உண்டு. நல்ல சம்பளத்துடன், விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையும் அமையும் வாரம் இது.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இதுவரை தொல்லையாக இருந்தவைகள் இனிமேல் இருக்காது. வீட்டில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், பிறந்தநாள் விழாக்கள் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் உற்சாகமும், உறவினர் வருகையும் இருக்குமாதலால் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ராசியை சனி பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் பிடிவாதத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தில் ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் அனைத்து பிரச்னைகளையும் வெற்றிகரமாக தீர்க்கலாம் என்பதை புரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த வாரம் உங்கள் வாரம்தான். இதுவரை தந்தையிடம் ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்கும் விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பார்.

கடகம்:

கடகராசிக்கு இந்த வாரம் எந்த விதமான எதிர்மறை பலன்களும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு இதுவரை நடந்து வந்த சாதகமற்ற நிலை மாற்றம் அடைந்து இனிமேல் அனைத்தும் உங்கள் பக்கம் நன்மையாக திரும்பும் நிலை ஆரம்பிக்கிறது. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். பூச நட்சத்திரக் காரர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் வாரம் இது.

மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. வீடு வாங்குவீர்கள். வீடு கட்டுவது இடையில் தடைப்பட்டு நின்ற நிலையில் இருப்பவர்கள் இந்த வாரம் முதல் மறுபடியும் வேலையை ஆரம்பிப்பீர்கள்.. தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி கற்க முடியும். தடைபட்ட படிப்பு மறுபடி தொடரும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பும். ஞானிகளின் தரிசனமும் கிடைக்கும்.

பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்கள், இப்போது பிரச்சனையை தள்ளி வைப்பதும், வாய்தா வாங்குவதும் சாதகமான பலனை தரும். ஆசிரியர், பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு செலவுகளும், சுபவிரயங்களும் இருக்குமாதலால் வீட்டில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியனும் உச்சம், பத்தாமிட அதிபதி சுக்கிரனும் எட்டில் மறைந்து உச்சம் என்பதால் இதுவரை உங்கள் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்து வந்த மந்த நிலைகள் விலகும். முயற்சிகள் அனைத்தும் இனிமேல் வெற்றியாகி காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கும். வேலை கிடைக்காமல் இருந்த இளைய பருவத்தினருக்கு பிடித்தமான இடங்களில் வேலை கிடைக்கும். முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இனிமேல் நல்லவேலை, திருமணம் என்று செட்டிலாவீர்கள்.

மூத்த சகோதரஸ்தானம் வலுவாக இருப்பதால் அண்ணன், அக்காக்கள் மூலமாக நன்மைகளும், உதவிகளும் உண்டு. தாயாரை தேடிச்சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்று வருவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ரியல்எஸ்டேட் தொழிலர்கள் நல்ல பணவரவு ஒன்றினை இப்பொழுது அடைவார்கள். சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் சிலருக்கு வேலைக்காரர்களால் விரையங்களும், அவர்கள் மூலம் பண இழப்பு நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதால் கொடுக்கல், வாங்கல்களிலும் வெளிஇடங்களுக்கு பணத்தை கொடுத்து விடுவதிலும் கவனம் தேவை. குறிப்பாக வேலைக்காரர்கள் திருடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கன்னி:

கன்னிராசியின் தர்ம கர்மாதிபதிகள் புதனும், சுக்கிரனும் வலுவான நிலையில் அமர்ந்து ராசியை உச்ச கிரகம் பார்ப்பதால் கன்னிக்கு கவலைகள் இல்லாத வாரமாக இது இருக்கும். ராசிநாதன் எட்டில் இருப்பது உங்கள் மனதைச் சற்றுக் குழப்பினாலும் சுக்கிர வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வாரம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும்.

தொழில் ஸ்தானாதிபதி புதன் உச்ச கிரகத்துடன் இணைந்திருப்பதால் தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கும், காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வாரம் சம்பளம் தவிர்த்த வருமானங்கள் படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். ரொம்பநாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதல் இப்போது நடைபெறும்.

உங்கள் ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும் வாரமாக அமையும். வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள்.

துலாம்:

துலாம் ராசிக்கு ஏழரைச்சனி முடியப் போவதால் இதுவரை தோல்வி மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப் பெற்று சுறுசுறுப்பாவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக்குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்களுக்கு உங்கள் பக்கம் சாதகமான பலன்கள் நடக்கும்.
 
புதிதாக தொழில் தொடங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் இனிமேல் தொழில் தொடங்கலாம். தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். குலதெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும் வாரம் இது. திருமணமாகாத இளம் வயதினருக்கு திருமண ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறும். புத்திரபாக்கியம் கிடைக்கும். மங்கள காரியங்கள் வீட்டில் நடக்கும்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வாரம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். ஸ்டேஷனரி, புக்ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இது முன்னேற்றமான வாரமாக இருக்கும்.

விருச்சிகம்:

வார ஆரம்பமே சந்திராஷ்டம நாளாக இருந்தாலும் சூரியன், செவ்வாய், குரு மூவருமே வலுவாக இருப்பதால் குடும்பத்திலும், தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளிலும் கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரமாக இது இருக்கும். கிரக நிலைமைகள் சாதகமாக இல்லை என்றாலும் ராசிநாதன் வலுப் பெற்றால் ராசிக்கு கெடுதல்கள் நடக்காது என்ற விதிப்படி உங்களுக்கு இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.

கடந்த சில மாதங்களாக மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்த விருச்சிக ராசியினருக்கு நிம்மதியை தரும் சம்பவங்களும் நல்ல செய்திகளைக் கேள்விப்படுதலும் இப்போது இருக்கும். இனிமேல் எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் பிறக்கும் வாரம் இது. வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இப்போது உங்களிடம் இருக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ஜென்மச்சனி நடப்பதால் பொருளாதார நிலைமைகள் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் செலவுகளை தவிருங்கள். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்த்தவர்கள் இனிமேல் மனம் மாறி உங்களுக்கு சாதகமாக திரும்புவார்கள். உடல் நலத்தில் அக்கறை தேவை. கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

தனுசு:

வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் எதிலும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீண்டதூர பிரயாணங்களை இந்த நாட்களில் ஒத்தி வையுங்கள். பயணங்களால் சில சங்கடங்கள் இருக்கலாம். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டு இந்த வாரம் டென்ஷன் ஆவீர்கள். வேலை செய்யும் இடங்களில் முதலாளி மற்றும் மேலதிகாரி சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. எல்லா நிலைகளிலும் விழிப்புடன் இருங்கள்.

தொழில் செய்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம். எதிலும் தேவையின்றி அனாவசிய ரிஸ்க் எடுக்காதீர்கள். ராசிநாதன் வலுவாக சுபர் பார்வையில் இருப்பதாலும், பாக்யாதிபதி உச்சத்தில் இருப்பதாலும் வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்வீர்கள். வார இறுதியில் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் அமர்வதால் தொழில் சிக்கல்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. வியாபாரிகளுக்கு வேலைக்காரர்களால் பிரச்னை வரும்.

வெளியில் பணம் கொடுத்து விடும் போதோ வங்கியில் இருந்து பணம் எடுத்து வரும் போதோ மிகுந்த கவனம் தேவை. கடன் சிக்கல்கள் எதிலாவது சனி மாட்டி வைப்பார். எதிலும் அவசரப்படாதீர்கள். மகன், மகள் விஷயமாய் நல்ல செய்திகளும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். 5,6 ஆகிய நாட்களில் பணம் வரும். 1 ஆம் தேதி இரவு 11.32 முதல் 4 ஆம் தேதி அதிகாலை 4.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் சிலர் எதிர்மறை எண்ணங்கள் உடைய நபர்களை இந்த வாரம் சந்திப்பீர்கள். உங்களை கோபமூட்டக்கூடிய சம்பவங்கள் நடக்கும். சிலருக்கு கோர்ட், காவல்துறை போன்ற இடங்களுக்கு போக வேண்டி இருக்கும். இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.

வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திரன் எட்டில் இருப்பதால் எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு இதுவரை அடங்கிக் கிடந்த கடன் தொல்லைகள் லேசாக எட்டிப்பார்த்து மனவருத்தத்தைத் தரும் வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் குரு ராசியைப் பார்ப்பதால் எதுவும் உங்கள் கையை மீறி போகாமால் கட்டுக்குள்ளும் இருக்கும். வேற்று மதத்தினர் உதவுவார்கள். தாய்வழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும்.

தொழில், வேலை விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். நீதித்துறை, வங்கி, சொல்லிக் கொடுப்பவர்கள் மருத்துவம், ஆன்மிகம், ஜுவல்லரி, வட்டி, சிட்பண்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். 2,3, ஆகிய நாட்களில் பணம் வரும். 4 ம் தேதி அதிகாலை 4.28 மணி முதல் 6 ம் தேதி மதியம் 12.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கும்பம்:

ராசியில் இருக்கும் கேதுபகவான் இந்த வாரம் உங்களுக்கு ஆன்மிக ஈடுபாட்டையும் முக்கியமான திருக்கோவில்களுக்கு செல்லும் சந்தர்ப்பத்தையும் தருவார். சிலருக்கு குலதெய்வ வழிபாடோ புனித யாத்திரைகளோ இருக்கும் ஆன்மிக வாரம் இது. குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரப் போகிறது என்பதை இப்போது உணருவீர்கள். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதுத் தொழில் தொடங்கலாம். செய்யும் தொழில் சிறப்பாக நடக்கும்.

வேலை மாற்றம், தொழில்மாற்றம், இடமாற்றம் ஆகியவை சாதகமாக ஏற்படும். சிலருக்கு பிரயாணங்களும், அலைச்சல்களும் இருக்கும். பயணங்களால் லாபங்களும் இருக்காது. கூடுமானவரை தூர பிரயாணங்களை ஒத்தி வைப்பது நல்லது. தொழில், வியாபாரம் போன்றவைகளில் நல்ல பலன்களும் பண வரவுகளும் இருக்கும். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும்.

அரசியலில் இருப்போருக்கும் கலைஞர்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்து வந்த போட்டிகள் மறைந்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்களே தனிக்காட்டு ராஜாவாக உலா வருவீர்கள். 2,5, ஆகிய நாட்களில் பணம் வரும். 6 ம் தேதி மதியம் 12 .30 மணி முதல் 8 ம் தேதி இரவு 10.50 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு விருப்பம் நிறைவேறும் வாரம் இது. பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு விசேஷமான நல்ல பலன்கள் இந்த வாரம் நடக்கும். இதுவரை இருந்து வந்த காரியத்தடைகள் அடியோடு முற்றிலும் நீங்கும். கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

ஆன்மீக ஈடுபாடு இந்த வாரம் அதிகமாக இருக்கும். வீடு வாகனம் தாயார் போன்ற விஷயங்களில் நன்மைகள் நடக்கும். சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அதே போல வாரம் முழுவதும் பணவரவும் நல்லபடியாக உண்டு. வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். அரசு தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.

திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் சிறப்பாகத் திருமணம் நடைபெறும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. தந்தைவழி உறவினர்களால் லாபம் உண்டு. அப்பாவிடம் காரியத்தை சாதித்துக் கொள்ள இது நல்ல வாரம். இளைஞர்கள் தந்தையிடம் ஏதேனும் கேட்டுப் பெறவேண்டியது இருந்தால் இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments :

Post a Comment