Tuesday, 9 May 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 134 (9.5.2017)

ரவி, மதுரை – 9.

கேள்வி :

என் சொந்தக்காரர் மூலம் பார்ட்னர்ஷிப்பாக ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்தேன். அவர் என்னை ஏமாற்றி பணத்தை வைத்துக் கொண்டு தனியாக தொழில் நடத்துகிறார். இப்போது என் தொழில் மோசமாக உள்ளது. எனக்கு பணம் திரும்ப கிடைக்குமா? தொழில் நன்றாக நடக்குமா ?

பதில்:

உங்களின் விருச்சிக ராசிக்கு தற்போது ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதால் 2012 முதல் பண விஷயங்களில் நல்லது எதுவும் நடந்திருக்காது. உறவு, நட்பு, விஷயங்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று அடையாளம் காட்டப்படும் நேரம் இது. குறிப்பாக பணம் பற்றிய விழிப்புணர்வு இப்போதுதான் கிடைக்கும். வரும் அக்டோபர் மாதம் 26 ம் தேதி நடக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அனைத்தும் சீராகும். ஏமாந்த பணம் இரண்டு வருடங்களில் படிப்படியாக கிடைக்கும்.

இரா. நீலகண்டன், கும்பகோணம்.

கேள்வி:

இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது இல்லை என்ற வாதப் பிரதிவாதங்கள் மணப்பெண், மணமகன் வீட்டாருக்கு இருக்கிறது. ஓரளவு ஜோதிட அறிவுள்ள எனக்கும் இது ஒரு பெரிய குழப்பமாகவே உள்ளது. யாராலும் தெளிவாகச் சொல்ல முடியாததால் இறுதி முடிவிற்காக உங்களிடம் இரு வீட்டார் சம்மதத்துடன் அனுப்பியுள்ளோம். உங்கள் முடிவே இறுதியானது. நாங்கள் என்ன செய்ய?

பதில்:

இரண்டாம் வீடாக இருந்தாலும் அது ராஜ யோகாதிபதியான இயற்கைச் சுபர் சுக்கிரனின் வீடு என்பதாலும், நவாம்சம் உள்ளிட்ட வேறு நிலைகளாலும் வரப்போகும் செவ்வாய் தசை கெடுதல்கள் எதுவும் செய்யாது. தாராளமாக திருமணம் செய்யலாம்.

இறந்த மகனுக்கு என்ன செய்ய வேண்டும்?

எம். மகேஸ்வரி, கோவை.

கேள்வி :

கோடிக்கணக்கான மக்களின் துன்பங்களுக்கு வடிகாலாகவும், வழிகாட்டியாகவும் திகழும் தாங்கள் இந்த அவலைப் பெண்ணிற்கு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். வேறு ஜாதியில் பிறந்த என்னை என் கணவர் எனது தாய், தந்தையிடம் மன்றாடி என்னைத்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத 14 வயதில் ஊர் கூடி திருமணம் செய்து கொண்டார். தெய்வத்தை மட்டுமே நம்பியும், கஷ்ட நேரங்களில் உதவியவர்களை கடவுளாக கருதியும், உழைப்பு, உண்மை என்று சேர்ந்து உழைத்து வாழ்கிறோம். எனக்கு 2 பிள்ளைகள். எனக்கே என்னை பிடித்தது என் பிள்ளைகளால்தான். பெற்றால் இப்படித்தான் பிள்ளைகளை பெற வேண்டும். வாழ்ந்தால் இவர்களைப் போல் வாழ வேண்டும் என்று காதுபடவே புகழ்வார்கள். தெய்வமே எனக்கு பிள்ளையாக பிறந்தான் என்று நினைத்திருந்தேன். கஷ்டங்களைச் சொல்ல கோவிலுக்கு போகாத நான், இப்படிப்பட்ட பிள்ளைகளை கொடுத்ததற்காக நன்றி உரைக்க மட்டும் கோவிலுக்கு செல்வேன். வாழ்க்கை சந்தோஷமாக போய் கொண்டிருந்த நிலையில் 7.3.2016 அன்று காலை எனது 18 வயது மகன் மயங்கி விழுந்ததில், டாக்டர்கள் அவனுக்கு ரத்தப் புற்று நோய் என்று அறிவிக்க, எழுபதே நாளில் 17.5.2016 அன்று எனது மகன் என்ற தெய்வம் வைகுண்டம் சென்று விட்டது. மரணத் தருவாயில் என் மகனிடம் சத்திய வாக்கு ஒன்று பெற்றேன். எனக்கு என்றும் நீதான் இனிமேல் கடவுள். நீ நினைத்தபடி நம் குடும்பத்தை வழிநடத்த நீதான் துணை இருக்க வேண்டும். எங்கள் கர்மாவால் உனக்கு இந்த நிலை என்றால் அதற்காக மன்னித்துக் கொள் என்றோம். என்னிடம் விடைபெற்றுக் கொண்டு சுயநினைவுடன் என் முகம் பார்த்து கொண்டே, என்னையும், என் கணவரின் கைகளையும் பற்றிக் கொண்டே, அவனுக்கு நாங்கள் கொடுத்த நீரை பருகிக் கொண்டே அவன் உயிர் பிரிந்தது. குடும்பம் கண்ணீரில் மிதக்கிறது. வாழவும் மனதில்லை. கன்னிப் பெண்ணை வைத்துள்ள எங்களால் சாகவும் முடியவில்லை. பெற்றவுடன் அவனுக்கு சர்க்கரை தண்ணீர் விட்டவள், கடைசி நீரையும் விட்டது எந்தக் கர்மாவால் நடந்தது? ஏன் இப்படி எனக்கு நடந்தது? மலை போன்ற சந்தோஷவாழ்வு தரைமட்டமானது ஏன்? குடும்பத்துடன் உயிர் விடுவது என முடிவெடுத்த நாங்கள் இன்றுவரை உயிருடன் வாழ்வது ஏன்? பெற்ற மனம் ஒவ்வொரு கணமும் அவனைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. மிகவும் தைரியமான நான் தற்போது சின்னச் சின்ன சம்பவத்திற்கெல்லாம் ரொம்ப பயப்படுகிறேன். மருத்துவச் செலவுக்கு தாலிக்கொடி முதற்கொண்டு விற்று விட்டோம். ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு மட்டும்தான் மீதம் இருக்கிறது. மகளின் எதிர்காலம் எப்படி அமையும்? எங்களின் ஆயுள், ஆரோக்கியம் எதுவரை? எங்கள் மூவருக்கும் ஒரே ராசியாக இருப்பதால்தான் இப்படி நடந்ததா? மகனுக்காக இனி நான் என்ன செய்ய வேண்டும்? தெளிவில்லாத இந்த மகளுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து தெளிவான விளக்கம் தந்து ஆற்றித் தேற்றுவீர்கள் என்று நம்பி பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

சனி
ரா
ராசி
சந்
கே
சூ,பு,வி
சுக்
செவ்

ராசி
ரா
சந்,கே
செ
சூ,பு
சுக்
ல,வி
சனி

சனி
கே
ராசி
சந்
சு,செ
வி
சூ,ல
பு,ரா


பதில்:

பாக்கியங்களில் சிறந்த பாக்கியம் புத்திர பாக்கியம், சோகங்களில் பெரிய சோகம் புத்திர சோகம் என்பதை ஸ்ரீராமனைப் பெற்ற தசரதரின் வாழ்க்கை நிரூபிக்கும் அம்மா... நடப்பவை அனைத்தும் கர்மா என்று நீயே உன் அருமைச் செல்வனிடம் சொல்லி அழுது விட்ட பிறகு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

சருகுகள் உதிராமல் இருக்கும் நிலையில், பச்சை இலை உதிருவதும், பட்டுப் போன மரம் மறுபடி துளிர்ப்பதும் அவனின் விளையாட்டுத்தான். வைகுண்ட நாதனின் திருப்பாதங்களை தரிசிக்கும் பாக்கியம் நமக்கு இன்னும் தள்ளிக் கிடைக்கும் என்ற நிலையில் உன் மகனுக்கு சீக்கிரம் கிடைத்து விட்டது. முந்திக் கொண்டு விட்டான். இனி என்றும் அவன்தான் உனக்கும் உன் குடும்பத்திற்கும் தெய்வம். எந்த ஒரு சூழ்நிலையிலும் உன் குடும்பத்தை அவன் வழி நடத்துவான். கவலைப் படாதே.

எங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறாய், இருந்ததிலேயே உன்னதமானதை இழந்து விட்டாய், இனியும் போவதற்கு என்ன இருக்கிறது உன்னிடம்? ஒன்றுமேயில்லை. பரம்பொருள் உனக்கு கொடுத்திருக்கும் மிகுதி நாட்களை நிம்மதியுடன் கழிப்பதற்கு உன் மகனே அருள் புரிவான். உன் வாழ்வில் இதை விட ஒரு கஷ்டம் இனி வரப் போவதே இல்லை. கவலைப் படாதே.

குடும்பத்தில் அனைவருக்கும் ஒரே ராசி என்றால் என்ன பலன் என்ற கேள்விக்கு “சந்தோசம் என்றால் திகட்டத் திகட்ட கிடைக்கும். கஷ்டம் என்றாலும் தாள முடியாமல் வரும்” என்று ஏற்கனவே பதில் தந்திருக்கிறேன். உன் கடிதமும் அதை நிரூபிக்கிறது. உனக்கும், உன் கணவருக்கும், உன் மகளுக்கும் மகர ராசி என்பதால் இன்னும் மூன்று வருடங்களுக்கு உன் குழந்தையை இழந்த மன அழுத்தம் மூவருக்கும் இருக்கும். அதன் பிறகு படிப்படியாகக் குறையும். கவலைப் படாதே.

கணவரின் ஜாதகத்திலும், உன் ஜாதகத்திலும் புத்திர சோக அமைப்பு இருப்பதால் உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. அதே நேரத்தில் உங்கள் மூவருக்கும் தீர்க்காயுள் அமைப்பு இருப்பதால் அவனை நினைத்துக் கொண்டாவது நீங்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும். எப்படி உன் மகனின் முடிவு உன் கையில் இல்லையோ, அதேபோல உன் முடிவும் உன் கையில் இல்லை. அனைத்தும் அவன் தயவில் இனி நன்றாகவே நடக்கும். கவலைப் படாதே.

மகளின் ஜாதகப்படி அவளின் கல்வி, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் போன்ற அனைத்தும் நன்றாகவே உள்ளது. அவளின் எதிர்காலம் நல்ல கணவன், குழந்தைகளுடன் செல்வச் செழிப்புடன் சிறப்பாகவே இருக்கும். உன் ஆறுதலுக்காகச் சொல்லவில்லை. அவள் ஜாதகப்படியே சொல்கிறேன். மகர ராசி என்பதால் இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவள் வாழ்க்கை அனைத்திலும் செட்டில் ஆகிவிடும். கவலைப்படாதே.

தந்தை ஸ்தானத்தில் என்னை நிறுத்தி, மகனை நினைத்து பக்கம் பக்கமாக உருகி என் கண்களை கசியச் செய்த தாயே... ஒழிக்க ஒழியாத உறவு என்று நம்மாழ்வார் சொல்லும் உலகின் உன்னத தாய்மையின் உயர் வடிவே... உலகில் உள்ள அனைவருக்கும் தாயாகும் தகுதி கொண்டவள் நீ. உன் திருப்பாதங்களுக்கு வணக்கம். மகனுக்கு இனி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறாய்.. நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இன்னும் சில ஆண்டுகளில் உன் மகனே உனக்குப் பேரன் என்ற உறவில் உன் மடியில் தவழ்வான், கவலைப்படாதே.

ராசிப்படி மரணத்தைச் சொல்ல முடியுமா?

ஆர். முருகேசன், மதுரை.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எல்லா பலாபலன்களையும் துல்லியமாக கணித்துச் சொல்லும் தாங்கள் ஒருவரின் அந்திம காலத்தை தெளிவாகச் சொல்வது இல்லையே ஏன்? ராசிப்படி ஒருவரின் முடிவுகாலத்தை தெரிந்து கொள்ள முடியுமா?

பதில்:

ஜெனனமும், மரணமும் பரம்பொருளின் பரிபூரண ஆளுமைக்கு உட்பட்டது. சிசேரியனுக்கு நேரம் குறித்துத் தரும்போதே “பரம்பொருள் இந்தக் குழந்தையை இந்த நேரத்தில் பிறக்க அனுமதித்தால்” என்றுதான் எழுதித் தருகிறேன். ஒரு பிறப்பைத் தடுக்க எவ்வாறு உங்களுக்கு உரிமை இல்லையோ அதேபோல ஒரு இறப்பைத் தடுக்கவும் உங்களுக்கு உரிமை இல்லை.

அனுபவமும் ஞானமும் உள்ள ஜோதிடரால் மரணகாலத்தை நிச்சயமாகச் சொல்ல முடியும். அத்தியாவசியமான நேரங்களில் ஒருவரின் மரண காலத்தை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். கடந்த வருடம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு மேற்கொண்டு லட்சக்கணக்கில் மருத்துவச்செலவு ஆகும் போலிருக்கிறது. இருக்கும் வீட்டைக் கூட விற்றாகி விட்டது. இனிமேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் அவரது நிலை என்ன என்ற வாசகரின் கேள்விக்கு, ஒரு தேதி குறிப்பிட்டு பதில் கொடுத்திருந்தேன். குறிப்பிட்ட அதே தேதியில் சம்பந்தப்பட்டவர் இறந்து விட்டதாக தகவல் வந்து விட்டது.

4 வருடங்களுக்கு முன்பு திரிகோணமலையைச் சேர்ந்த ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் கை விரித்து விட்டனர். தங்களுடைய கணிப்பு வேண்டும் என்ற நிலையில் இன்னும் 4 வருடங்களுக்கு உயிருடன் இருப்பார் என்று பலன் சொல்லப்பட்டு, மீண்டும் கடந்த மாதம் நீங்கள் சொன்ன நபர் அப்போது பிழைத்து கொண்டார். சரியாக 4 வருடம் ஆகிறது. அதே பிரச்சினையில் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். இன்றைய நிலை என்ன என்ற கேள்விக்கு ஏப்ரல் மாதம் அவரது முடிவு காலமாக இருக்கும் என்று சொல்லப்பட்டு அதேபோல அவருடைய நல்முடிவும் அமைந்தது.

எதிர்காலம் என்பது பரம்பொருள் ஒன்றுக்கு மட்டுமே கட்டுப்பட்ட, அவரால் எப்போதும் மாற்றப்படகூடிய சாத்தியம் உள்ள ஒன்று என்பதால் நடக்க இருக்கும் அனைத்தும் ஏதோ ஒரு சக்தியால் அல்லது தீவிரமான பிரார்த்தனையால் மாற்றப்படலாம் என்கிற நிலையில், எதையுமே நீங்கள் உறுதியாகச் சொல்வது கடினம். இது முழுக்க முழுக்க மரணத்திற்கு பொருந்தும். ஆயினும் மரணத்தை சொல்வதற்கு ஜோதிட சாஸ்திரம் அனுமதிக்கத்தான் செய்கிறது.

மாலைமலரில் கேள்வி-பதில் பகுதி ஆரம்பமான நாட்களில் ஓரிருவருக்கு அவர்களது மரண காலத்தை கணித்து பலன் சொன்னதன் விளைவாக, அதன் பிறகு எனது மரணம் எப்போது நிகழும் என்ற கேள்விகள் வந்து குவிந்து விட்டதாலேயே நான் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் தருவது இல்லை.

ராசிப்படி ஒருவரின் அந்திம காலத்தை சொல்லவே முடியாது. பத்திரிக்கைகளில் எழுதப்படும் ராசிபலன்கள் எல்லோருக்கும் பொருந்தும் என்பது அவசியம் இல்லை. மரணத்தை கணிப்பதற்கு ஆயிரமாயிரம் விதிகள் உள்ள நிலையில் பொதுவான ராசியை மட்டும் வைத்து மரணத்தை சொல்லவே முடியாது. ஆயினும் இன்றைய கிரகநிலையான கோட்சார அமைப்பு ஒருவரின் மரணத்தைக் கணிப்பதற்கு மிகவும் அவசியம்.

ஒருவரின் மரணம் பிறந்த நேர ஜாதகப்படியும், இறப்பு நாளின் அன்றைய கிரக நிலையின் படியும் அமைகிறது. மேலே உள்ள கேள்வியான பதினெட்டு வயது மகனை தாய் இழந்த அன்று, அந்த மகனின் லக்னாதிபதியான குரு, ராகுவுடன் மிக நெருக்கமாக ஐந்து டிகிரிக்குள்ளும், ஆயுள் ஸ்தானாதிபதியான சந்திரன் பதிமூன்று டிகிரிக்குள்ளும் இணைந்திருந்ததால் அந்த மரணம் நிகழ்ந்தது.

உங்களைப் போல 70 வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலே எப்போது முடிவு நேரும் என்கிற ஆவல் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது. முடிவினை ஜோதிடத்திடம் கேட்பதை விடுத்து அவனிடம் கேட்பதே பொருத்தமாக இருக்கும்.

No comments :

Post a Comment