Wednesday, May 31, 2017

12 மிட கேதுவின் சூட்சுமங்கள்.. C - 065 - 12 Mida Kethuvin Sootchumangal ...


ராகு-கேதுக்களின் கடும் எதிரிகளாக உருவகப்படுத்தப்பட்ட சூரிய, சந்திரர்களின் லக்னங்களான கடகத்திற்கும், சிம்மத்திற்கு ராகு-கேதுக்கள் பெரிய நன்மைகளைச் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு பொது விதி.

ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் தரும் நல்ல, தீய பலன்களை தெளிவாகப் புரிந்து கொள்வதற்காகவே ஜோதிடத்தில் கிரகங்களுக்கிடையே மனித உறவுகளும், பகை-நட்புகளும், சொல்லப்பட்டது. என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

உதாரணமாக நமது புராணங்களில் யதார்த்தத்திற்கு ஒத்து வராத, அபத்தமாகக் கருதப்படும் அனைத்துக் கதைகளுக்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு தத்துவார்த்த உண்மையோ, சற்று ஆழமாகச் சிந்தித்தால் அற்புதமான இன்னொரு கோணமோ அல்லது ஏதேனும் ஒரு ஜோதிட சூட்சுமமோ மறைந்திருப்பதை முன்னரே நான் விளக்கி இருக்கிறேன்.

கிரகங்களை மனிதர்களாக்கி அவர்களுக்கு மனைவி, மகன் உறவுகளைத் கொடுத்தது ஜோதிடத்தை நமக்கு எளிமையாகப் புரிய வைக்கவே என்பதை உணர்ந்து கொண்டாலே நமது தெய்வாம்சம் பொருந்திய ரிஷிகளின் மேதமை எளிதில் விளங்கும்.

உதாரணமாக சந்திரனுக்கும், புதனுக்கும் உள்ள உறவு நிலை சற்றுச் சிக்கலானது. சந்திரனுக்கு புதன் நட்பு ஆனால் புதனுக்கு சந்திரன் பகை. இது புரிந்து கொள்ள சற்றுச் சிரமமான ஒரு விஷயம்.

இருவருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்லது நண்பர்கள் என்றால் விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்காது. அவர் இவருக்கு நண்பர் ஆனால் இவர் அவருக்கு எதிரி என்பது புரிந்து கொள்ள சற்றுத் தடுமாற்றத்தைக் கொடுக்கும்.

சந்திர, புதன் விஷயத்தைப் பொருத்தவரை இந்த நட்பு-பகை விவரங்களின் உண்மையான அர்த்தம் என்னவெனில், புதனின் மிதுன, கன்னி லக்னங்களுக்கு சந்திரன் நன்மைகளைச் செய்வார் என்பதும், சந்திரனின் கடகத்திற்கு புதன் முழுமையான நன்மைகளைச் செய்ய மாட்டார் என்பதும்தான்.

ஆனால் புரிந்து கொள்ள கடினமான இந்த ஜோதிட உண்மையை விளக்கவே நட்பு, பகை உறவுகள் இங்கே ரிஷிகளால் சொல்லப் பட்டன. அதிலும் ஒருவர் மற்றவருக்கு நட்பு அந்த மற்றவர் இவருக்குப் பகை என்பதை நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளவே நமது மேலான ரிஷிகள் சந்திரனைத் தாயாக உருவகப்படுத்தி சந்திரனின் கள்ளத் தொடர்பால் பிறந்தவன் புதன் என்று உருவகப்படுத்தி நமக்கு விளக்கினார்கள்.

மேலோட்டமாக பார்க்கும்போது இது அபத்தமான, ஆபாசக் கதையாகத் தோன்றினாலும், ஒரு முறையற்ற விதத்தில் பிறந்த ஒரு குழந்தை சகல திறமைகள் இருந்தும் ஒரு பொது இடத்தில் அதன் பிறப்பைக் குறித்தே அவமானப் படுத்தப்படும். அந்த நிலையைத் தனக்குத் தந்த தாயை எந்த நாளும் வெறுக்கும்.

அதேநேரத்தில் குழந்தை எந்த விதத்தில் பிறந்திருந்தாலும் தாய் அதனை ஒருபோதும் வெறுப்பது இல்லை. இந்தக் கதையில் உள்ள கருத்தை மனதில் பதித்துக் கொண்டு சந்திரன், புதன் இடையிலான ஜோதிட உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது சொல்லப்பட்டது.

இந்தக் கதையை தெரிந்து கொண்ட பின் ஒருவருக்கு சந்திர, புதனுக்கிடையிலான உறவு முறை மறக்காது என்பதோடு ஜோதிட சூட்சுமங்களை இதுபோன்ற கதை சொல்லி விளக்கிய நமது மகரிஷிகளின் ஒப்பற்ற ஆற்றலை விளக்க வார்த்தைகளே இல்லை.

இதுபோலத்தான் சூரிய, சந்திரர்களை மறைக்கும் திறனுடைய ராகு-கேதுக்கள் இயல்பாகவே அவர்களுக்கு எதிர்த் தன்மை உடையவர்கள் ஆவார்கள். இவர்களின் உறவையும் புரிந்து கொள்வதற்காகவே அமுதம் கடைந்த போது தேவர்களுக்கிடையே அமர்ந்து அமுதத்தை அருந்திய அசுரர்களான ராகு கேதுக்களை சூரிய, சந்திரர்கள் காட்டிக் கொடுத்து ஒருவருக்கொருவர் விரோதிகளானார்கள் என்ற கதை நமக்குச் சொல்லப்பட்டது.

ஒரு பொதுவிதியாக கடக, சிம்ம லக்னங்களுக்கு ராகுதசை நன்மைகளைச் செய்யாது. அப்படிச் செய்ய வேண்டுமெனில் அது சகல சூட்சும அமைப்புகளுடன் இருக்க வேண்டும்.

அதேநேரத்தில் ஒரே உயிராகச் சொல்லப்படும் ராகு, கேதுக்களில் ராகுவே தலை கேது, வால் என்பதால் ராகுவைப் போல கடக, சிம்ம லக்னங்களுக்கான விரோதம் வால் பகுதியான கேதுவிற்குக் கிடையாது.

சிம்ம லக்னத்திற்கு இரண்டாம் வீடான கன்னியிலும், நான்காம் வீடான விருச்சிகத்திலும், ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் இடங்களிலும் குரு மற்றும் செவ்வாயின் தொடர்பு பெற்ற கேது நன்மைகளைச் செய்வார். இந்த லக்னத்தின் பாபரான ஆறுக்குடைய சனியின் தொடர்பை அவர் பெறுவது நன்மைகளைத் தராது.

சனியின் தொடர்பைப் பெற்று கேது தசை,புக்தி நடக்கும்போது சனியின் பலன்களான கடன், நோய் போன்றவற்றை தனது தசை,புக்திகளில் கேது தருவார். அதேநேரத்தில் சனி சூட்சும வலுப் பெற்று சுபத்துவமாகும் நிலையில் கும்பம், கன்னி, மகரம் ஆகிய வீடுகளில் கேது சனியுடன் இணையும் போது அபரிமிதமான ஆன்மீக ஈடுபாட்டை ஜாதகருக்குத் தருவார்.

மேற்கண்ட அமைப்பில் கேதுவும், சனியும் இருந்து இவர்களைக் குருவும் தொடர்பு கொண்டால் ஜாதகர் துறவியாக இருப்பார். இதுபோன்ற அமைப்பை ஆன்மீக வாதிகளின் ஜாதகங்களில் காணலாம்.

கன்னி லக்னத்திற்கு லக்ன சுபர்களான சனி, சுக்கிரனுடனோ, லக்னாதிபதியான புதனுடனோ தொடர்பு கொண்டுள்ள நிலையில் கேதுதசை, புக்திகள் நன்மைகளைத் தரும். லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும் கேது நன்மைகளைச் செய்வார்.

பதினொன்றாம் இடமான கடகத்திலும், பனிரெண்டான சிம்மத்திலும் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொருத்து தனது தசை,புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு அனுப்பி வைப்பார்.

அதேபோல ஒரு விஷயத்தில் மாற்றங்களைக் குறிப்பவரும் கேதுதான். உங்களின் ஒரு முக்கிய நிலை மாற்றம் கேதுவின் தசை, புக்தி அந்தரங்களிலோ அல்லது கேதுவின் சாரம் போன்ற தொடர்புகளைப் பெற்ற கிரகங்களின் தசை புக்தி அந்தரங்கங்களிலோதான் நடக்கும்.

ஒருவருக்கு வேலை கிடைப்பது, பறி போவது, வாழ்க்கையைத் தலைகீழாக்கும் நல்ல கெட்ட மாற்றங்கள், மனதைப் பாதிக்கும் மாற்றங்கள், இருப்பிட மாற்றம் போன்றவைகளைக் கேதுதான் தருவார்.

சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் போன்றவற்றில் அமர்ந்தோ எட்டு, பனிரெண்டாமிடங்களுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் கேது ஒருவரை வெளிநாட்டில் நிரந்தரமாகக் குடியேற்றுவார்.

ஏற்கனவே ராகுவின் சூட்சுமங்களில் நான் சொன்னதைப் போல இரு மாபெரும் சுபர்களுக்கு முன்பாக நடைபெறும் தசையின் நாதர்களான ராகு,கேதுக்கள் அவர்களின் தசையில் நீங்கள் சுபங்களைப் பெறுவதற்கான அமைப்பில் உங்களை நகர்த்துவார்கள் என்பதன்படி கேதுவிற்குப் பின் நடக்க இருக்கும் சுக்கிர தசையில் நீங்கள் அனுபவிக்க இருக்கும் நல்ல கெட்ட பலன்களுக்கான மாற்றம் கேது தசையில் இருக்கும்.

கன்யா கேது என்பதன் சிறப்பு என்ன?

கன்னிக்கு மட்டும் கேது நன்மை தரும் இடங்களாக அதிக வீடுகளை ஏன் சொல்கிறேன் என்றால், கன்னியில் அமரும் கேது கன்யா கேது என்று நமது மூல நூல்களில் சிறப்பாகச் சொல்லப் படுவதால் கன்னி நாதனான புதனின் மேல் கேதுவிற்கு எப்போதுமே ஒரு புரிதல் உண்டு.

ராகு, கேதுக்கள் தலை வாலான ஒரே உயிர் என்பதால்தான் புதனின் முதல் வீடு எனப்படும் தலை வீடான மிதுனத்தின் ஒரே சுபர் ராகு எனவும், இறுதி வீடான வால் வீடு கன்னி கேதுவிற்கு சிறப்பாக இடமாகவும் சொல்லப்பட்டது.
ராகு, கேதுக்களை எதிரெதிர் நிலைகளைக் கொண்ட ஒரே உயிர் என்ற அமைப்புடன் தெளிவாக உணர முடிந்தால் பல ஜோதிட சூட்சுமங்கள் புரியும்.

இன்னும் துல்லியமாகச் சொன்னால் கேது ஒரு வால் என்பதனால் ராகு ஒரு செயலின் ஆரம்பம் என்றால் கேது அந்தச் செயலின் இறுதியாக இருப்பார். ஒரு செயலின் அனைத்து இறுதிகளோடும் கேதுவிற்குச் சம்பந்தம் உண்டு. எல்லா இறுதிகளிலும் இருக்கும் கேது சுபராவார். ஒரு சம்பவத்தின் இறுதி கேதுவால் நடக்கும்.

ஒரு மனிதனின் அன்றைய தினத்தின் இறுதிப் பகுதியான இரவு கேதுவோடு சம்பந்தப்பட்டது. அதுபோலவே ஒரு மனிதனின் வாழ்வின் இறுதி நிகழ்ச்சியான மரணம் வரும் அமைப்பும், மரணத்திற்குப் பின் அந்த மனிதனின் நிலையையும் கேதுவே குறிப்பிடுவார்.

இந்த அமைப்பினால்தான் ஒரு ஜாதகத்தின் இறுதி நிலையான பனிரெண்டாம் வீட்டில் இருக்கும் கேது நல்ல நிலையாக நமக்குச் சொல்லப்பட்டு இந்த அமைப்பு இருப்பவர்களுக்கு இதுவே இறுதிப் பிறவி என்றும் ஞானிகளால் நமக்கு அறிவுறுத்தப் பட்டது.

(22-7-2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)

2 comments :

  1. அமையான பதிவு ஐயா, ராகு கேது வுக்கு நீச்சம் இல்லை என்பது உண்மையா ஐயா

    ReplyDelete
  2. அமையான பதிவு ஐயா, ராகு கேது வுக்கு நீச்சம் இல்லை என்பது உண்மையா ஐயா

    ReplyDelete