Monday, 24 April 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (24.4.2017 - 30.4.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் பணவரவைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் குரு பார்வையுடன் அமர்ந்திருப்பது மேஷத்திற்கு ஒரு சிறப்பான அமைப்பு. மேலும் செவ்வாய்க்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சநிலைமையில் இருப்பதால் இந்த வாரம் மேஷராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வாரமாகவும் அமையும். குறிப்பிட்ட சில மேஷத்தினரின் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க இருப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாரம் இது.


ஏழுக்குடையவன் உச்சமாக இருப்பதால் வாழ்க்கை துணைவர் விஷயத்தில் நன்மைகளும், லாபங்களும் இருக்கும். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். இந்தவாரம் சகோதரர்களால் எதிர்மறையான பலன்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போது மாற்றங்களுக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும். அந்த மாற்றங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையானதாகவே இருக்கும். அம்மா வழி உறவினர்களால் இந்த வாரம் ஆதாயங்கள் இருக்கும். அம்மாவின் ஆதரவும் உண்டு. குழந்தைகள் செலவு வைப்பார்கள். மேற்படிப்பு படிப்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்த சிலருக்கு அவை வெற்றி பெறும். குடும்பத்தாரோடு சேர்ந்து வெளியூர் பயணம் செல்வீர்கள். எதிலும் நிதானம் காட்டவேண்டிய வாரம் இது.

ரிஷபம்:

ராசிநாதன் உச்ச வலுவுடன் அமர்ந்து அவரையும், ராசியையும் குருபகவான் பார்ப்பதால் ரிஷபத்திற்கு கெடுபலன்கள் எதுவும் சொல்ல முடியாத வாரம் இது. இளைஞர்களுக்கு இந்த வாரம் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாறுதல்கள் ஏற்படும். இந்த வருடம் இறுதியில் நடைபெற இருக்கும் கிரக நிலைகள் மூலம் தொழில் அமைப்பு மாற்றங்கள் உங்களுக்கு இருக்கும் என்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.

ராசிக்கு குரு பார்வை இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் இல்லாமல் அனைத்தும் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் ராசிநாதனே ஆறுக்குடையவனுமாகி உச்சம் பெறுவதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலும் சில விஷயங்கள் இருக்கும். எதிர்ப்புகள் வலுவாகும் வாரம் இது . வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை சிலர் எடுப்பீர்கள். பணவரவிற்கு குறை இல்லை என்றாலும் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் இருக்கும். நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, குல தெய்வ வழிபாடோ செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. தந்தை வழி உறவினர்களால் நன்மைகளும், பூர்வீக சொத்து விஷயங்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்களும், சண்டை, சச்சரவுகளும் விலகும். சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷமான சமாச்சாரங்களும், நல்ல தகவல்களும் உண்டு. வீட்டில் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

மிதுனம்:

ஏழில் இருக்கும் சுபத்துவமற்ற சனியின் பார்வையால் உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும் வாரம் இது. அதேநேரத்தில் ராசியின் யோகாதிபதியான சுக்கிரன் குருபார்வையில் உச்சமடைந்திருப்பதால் கேட்கும் இடத்தில் கேட்கின்ற உதவிகள் அனைத்தும் கிடைக்கின்ற வாரமாகவும் இது இருக்கும். இதுவரை எதிர்ப்புகளினால் தங்களின் உண்மையான திறமையை வெளிக் கொண்டு வர முடியாதவர்களும் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாதவர்களும் இந்த வாரம் வெற்றிகளை பெறுவீர்கள்.

சகாய ஸ்தானதிபதி உச்சமாக இருப்பதாலும் உதவி ஸ்தானத்தில் ராகுபகவான் வலுப் பெற்றிருப்பதாலும் இப்போது நீங்கள் கேட்காமலையே உதவிகள் கிடைக்கும். குறிப்பாக அந்நிய இன, மத, மொழிக்காரர்கள் மூலம் நன்மைகள் உண்டு. ஒரு சிலருக்கு இஸ்லாமிய நண்பர்கள் தக்க சமயத்தில் கைக்கொடுப்பார்கள். குறிப்பிட்ட சிலர் நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற சண்டையில் ஈடுபடுவீர்கள். இதுவரை மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் இந்தவாரம் நீங்கும்.

வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துவதற்கு. முன்னேற்பாடுகள் இந்தவாரம் உண்டு. அரசு, தனியார் துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பு மிதுன ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் எவ்விதக் குறையும் இல்லாத வாரம் இது.

கடகம்:

ராசிக்கு ஆறில் சனியும், பதினொன்றில் செவ்வாயும் இருக்கின்ற நிலை கடக ராசிக்கு அதிர்ஷ்டத்தை செய்கின்ற அமைப்பு என்பதால் இந்த வாரம் கடகத்திற்கு நன்மைகள் நடக்கின்ற வாரமாக இருக்கும். இரண்டு பெரும் பாவக் கிரகங்களான செவ்வாயும், சனியும் உபசய ஸ்தானம் எனப்படும் ஆறு, பதினொன்றாம் இடங்களில் அமர்ந்திருப்பதால் இப்போது கடக ராசிக்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் கிடைக்கும். சிலருக்கு விருப்பமில்லாத வழிகளிலும், நேர்மையற்ற முறைகளிலும் நல்லவைகள் நடக்கும்.

தனாதிபதி சூரியன் உச்சம் பெற்று, ஒன்பதாமிடத்தில் சுக்கிரனும் வலுப் பெற்றுள்ளதால் தனம், வாக்கு, குடும்பம் ஆகிய மூன்று அமைப்புகளிலும் இப்போது நன்மைகள் இருக்கும். இந்த வாரம் நீங்கள் சொல்வது பலிக்கும். பண சிக்கல்கள் இருக்காது. அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.

பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும் குறிப்பாக பூசம் நட்சத்திரக்கார்களுக்கு இந்த வாரம் நல்லவாரம். ஆண்களுக்கு பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மனைவியுடன் கருத்து வேற்றுமை இருக்கும். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியன் உச்சமாக இருப்பதும், அவருடன் தன,லாபாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் இணைவதும், சிம்மத்திற்கு ஜீவன அமைப்புகளில் லாபம் தருகின்ற கிரக நிலைமைகள் என்பதால் சிம்மத்தினர் எதையும் சாதிக்கும் வாரமாக இது இருக்கும். உங்களின் அந்தஸ்து, கவுரவம் உயர்கின்ற அமைப்பு இந்த வாரம் இருப்பதால் ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிதாக வேலை கிடைத்தல் போன்றவைகள் இருக்கும்.

சிலருக்கு நீண்ட காலமாக தடங்கலாகி வந்த ஒரு விஷயம் இப்போது எண்ணம் போலவே நடைபெறும். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், பொருள் விற்பவர்கள் உயர்வு பெறுவீர்கள். குடும்பாதிபதி புதன் பாக்கிய வீட்டில் இருப்பதால் இந்த வாரம் குடும்பத்திற்காக செலவுகள் உண்டு. சிலருக்கு குடும்பத்தோடு உல்லாச பயணம் அமையும். ஆடம்பர பொருள் வாங்கி பணத்தை விரையம் செய்வீர்கள். வருமானமும் அதற்கேற்ற வகையில் வரும்.

இளைய பருவத்தினர் சிலருக்கு எதிர்பால் இனத்தவர் மேல் இந்த வாரம் ஈர்ப்பு உண்டாகும். ஒரு சிலர் காதலிக்க ஆரம்பித்து எதிர்கால வாழ்க்கை துணைவரை அடையாளம் காண்பீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல் திருமணம் நடப்பதற்கான ஆரம்பங்கள் இப்போது உண்டு. சகோதரவிஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன ஆயினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

கன்னி:

ராசிநாதன் புதன் எட்டில் மறைந்து பலவீனமானாலும் இரண்டு சுப கிரகங்களான குருவும், சுக்கிரனும் ராசியோடு சம்பந்தப்படுவதால், ஆரம்பத்தில் நிதானமான பலன்கள் நடக்கும் வாரமாக இது இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் தடைகள் நீங்கி நீங்கள் சுறுசுறுப்பாக சாதிக்கும் வாரமாக இது இருக்கும். வாரம் முழுவதும் சந்திரன் நல்ல நிலைமையில் இருப்பதால் வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் நன்மைகள் உண்டு. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அது வாங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகளும் மனதில் அது சம்பந்தப்பட்ட எண்ணங்களும் இருக்கும்.

ஆறாமிடத்தில் கேதுபகவான் சுபத்துவமாக இருப்பதால் சிலர் ஆன்மீக விஷயத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பக்தி இயக்கங்களில் ஈடுபாடு வரும் சிலர் புதிதாக சில கோவில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து போவதற்கு ஆர்வம் கொள்வீர்கள். சிவபக்தி மேன்மை தரும். முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் அமைந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும்.

சுக்கிரன் உச்சமாக இருப்பதால் உங்கள் அந்தஸ்து, கவுரவம் உயரும். எட்டு, பனிரெண்டாமிடங்கள் வலுப் பெறுவதால் செலவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய வாரம் இது. பண வரவுகள் கண்டிப்பாக தடைபடாது என்றாலும் தேவையற்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக உள்ள நிலையில் ராசியையும், ஒரு உச்ச கிரகம் பார்ப்பதால் இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களின் மனம் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும். பிறந்த ஜாதகப்படி சுக்கிர தசை அல்லது சுக்கிர புக்தி நடந்து கொண்டிருப்பவர்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றிய அமைப்புகளில் கவனம் செலுத்தி கொண்டிருப்பீர்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை தடையாகி வந்த அனைத்து விஷயங்களும் கைகூடி வரும் வாரம் இது.

இந்த வாரம் தாய்வழி உறவில் நல்ல பலன்கள் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். ராசிநாதன் உச்சமாக இருப்பதும் அவருக்கு வீடு கொடுத்த குரு அவரைப் பார்ப்பதும் நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் உங்களுக்கு குறைகள் என்று சொல்ல எதுவும் இல்லை. அதே நேரத்தில் அலைச்சல்களும் சிலருக்கு சரியான வேளையில் சாப்பிட முடியாத நிலையும் இருக்கும்.

கடன்தொல்லைகளில் நிம்மதி இழந்திருந்தவர்களுக்கு கடனை முழுமையாக அடைக்கவோ அல்லது குறைக்கவோ வழி பிறக்கும். இதுவரை உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகுவிரைவில் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் விலகும். குறிப்பாக விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு கெடுதல்கள் எதுவும் இனிமேல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள்.

விருச்சிகம்:

ராசிநாதன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும், பதினொன்றாம் இடத்தில் உள்ள குருபகவான் தனது சுப பார்வையால் அவரை பார்த்து வலுப்படுத்துவதும் விருச்சிக ராசிக்கு நன்மைகளை தரக்கூடிய அமைப்பு என்பதால் இரண்டாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய பண வரவுகளை தடுத்து கொண்டிருக்கும் சனிபகவானையும் மீறி நன்மைகள் நடக்க இருக்கும் வாரம் இது. விருச்சிக ராசிக்கு வேதனைகள் விலகும் காலகட்டம் ஆரம்பிக்க போவதால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள்.

நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக தீர்ந்து நிம்மதியை தரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

இதுவரை சொந்த வாழ்க்கையிலும் வேலை, தொழில் போன்ற அமைப்புகளிலும் ஏமாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் நடைபெறும் வாரமாக இது இருக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.

தனுசு:

நான்கில் சுக்கிரன் உச்சம், பத்தில் ராசிநாதன் குருபகவானுக்கு சுக்கிர பார்வை என்பது தனுசு ராசிக்கு சாதகமற்ற அமைப்புத்தான் என்றாலும், ஒன்பதுக்குடைய சூரியன் ஐந்தாம் வீட்டில் உச்சவலுப்பெற்று இருப்பது அனைத்து கஷ்டங்களையும் விலக்கி வைக்கின்ற ஒரு அமைப்பு என்பதால் தனுசு ராசிக்காரர்களின் ஜீவன அமைப்புகளான வேலை, தொழில் போன்றவைகளில் நன்மைகளை தரக் கூடிய மாறுதல்கள் நடக்கும் வாரம் இது. கலைஞர்கள் வளம் பெறுவார்கள். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு.

சுக்கிரனின் உச்சத்தால் நான்காமிடம் சுப பலம் பெறுவதால் இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களின் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் நடைபெறும். குறிப்பிட்ட சிலருக்கு தாயார் வழி சொத்து போன்ற ஆதாயங்கள் இப்போது உண்டு. தாய்வழியில் உங்களுக்கு எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். தாழ்வுமனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். சிறிது தள்ளிப் போடுங்கள். இதுவரை வியாபாரத்தில் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் அது விலகுவதைக் காண்பீர்கள். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும்.

மகரம்:

எட்டுக்குடைய சூரியன் உச்சமாக இருப்பது ஒருவகையில் மகரராசிக்கு பின்னடைவுகளை தரும் ஒரு கிரக நிலைதான் என்றாலும், ஒன்பதாமிடத்தில் இருக்கும் குரு ராசியை பார்ப்பதால் உங்களின் புத்திசாலித்தனத்தின் துணை கொண்டு நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் வாரமாக இது இருக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்களை பிடிக்காதவர்களின் கை ஓங்கி இருக்கும் என்பதால் சற்று நிதானத்துடனும், கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டிய வாரம் இது.

ராசியை குருபகவான் வலுப் பெற்றுப் பார்ப்பதால் பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். எட்டுக்குடையவனின் வலுவால் உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். யோகாதிபதி சுக்கிரனும் உச்சமாக இருப்பது உங்களுடைய அனைத்து கவலைகளையும் தீர்க்கும் அமைப்பு என்பதால் இந்த வாரம் துன்பங்களுக்கு இடமில்லை. வருமானம் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும். இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும்.

கும்பம்:

நான்கில் செவ்வாய், எட்டில் குரு இருப்பது கும்பத்திற்கு நன்மைகளை செய்கின்ற அமைப்பு இல்லை என்றாலும், ஏழுக்குடைய சூரியனும், ஒன்பதுக்குடைய சுக்கிரனும் உச்சமாக இருப்பது பிரச்சினைகளை சமாளிப்பதற்கான மன தைரியத்தையும், அடுத்தவர்களிடமிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைப்பதையும் எடுத்து காட்டுவதால் கும்பத்தினருக்கு இந்த வாரம் நல்ல வாரம்தான். வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது.

கும்பத்தினரின் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும். சுக்கிரனின் உச்சத்தால் இந்த வாரம் தாய், தகப்பன் வழியில் இருந்து வந்த எதிர்மறை பலன்கள் நீங்கி உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலர் எதிர்கால வாழ்க்கை சம்பந்தமான முக்கிய முடிவுகளை தற்போது எடுப்பீர்கள். திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

வியாபாரிகளுக்கு இது நல்லவாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரப்பதவி கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு. நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். கடன் பிரச்சினையில் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதனை தீர்ப்பதற்கான ஆரம்பங்களும், வழி முறைகளும் தோன்றும்.

மீனம்:

ஆறு, எட்டுக்குடைய சுக்கிரனும், சூரியனும், ராசியிலும் இரண்டாம் இடத்திலும் வலுவாக இருப்பது மீனராசிக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஒரு நிலையைத்தான் தரும் என்றாலும், ஒன்பது, பத்துக்குடைய குருவும், செவ்வாயும் வலுப் பெற்ற அமைப்பில் இருப்பதால் எதுவும் எல்லை மீறி போகாது. சங்கடங்கள் எதுவும் இல்லாமல் மீன ராசிக்காரர்கள் சாதிக்கும் ஒரு வாரமாக இது இருக்கும். சிலருக்கு இதுவரை தள்ளிப்போய் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்று கூடி நிறைவேறுகின்ற வாரமாக இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும். சூரியன் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம். அதேபோல தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் நன்மைகள் உண்டு.

சிலருக்கு இதுவரை தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிதலும், பணவரவு கிடைத்தலும் இந்த வாரம் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல மேன்மையான பலன்கள் இருக்கும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள்.

No comments :

Post a Comment