Monday, 17 April 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (17.04.2017 - 23.04.2017)

மேஷம்:

வார ஆரம்பத்தில் நான்கிற்குடைய சந்திரன் சனியுடன் இணைவதால் வீடு, வாகனம், தாயார் போன்ற விஷயங்களில் மேஷ ராசிக்காரர்கள் பின்னடைவினைச் சந்திக்கின்ற வாரமாக இது இருக்கும். சிலருக்கு வீட்டுக்கடன் தவணை கட்டமுடியாத நிலைமை அமைந்து அதன் மூலமான மனக்கஷ்டங்கள் இருக்கும். எப்படி இருந்தாலும் இன்னும் சில வாரங்களில் மேஷத்திற்கு நடந்து கொண்டிருக்கின்ற சாதகமற்ற பலன்கள் விலகும் நேரம் வந்து விட்டதால் எதற்கும் கவலைப்பட தேவையில்லாத வாரம் இது.

ஐந்திற்குடைய சூரியன் உச்சமாகி, ராசிநாதன் செவ்வாய் குருவின் பார்வையில் இருப்பது வெகுநாட்களுக்கு பிறகு உங்கள் தொழில் அமைப்புகளை கெட்ட பலன்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு அமைப்பு என்பதால் வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை உங்களுக்கு இருந்துவந்த தடங்கல்களும் முன்னேற்றமற்ற நிலைகளும் இனிமேல் மாறி இப்போது உருப்படியான மாற்றங்கள் இருக்கும் என்பது உறுதி.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல வாரம். அனைத்து விஷயங்களிலும் இப்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள். தலைமைப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு கீழே பணிபுரிவோர்களை புரிந்து கொள்வது நல்லது. எதையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில் சுவருக்குக் கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை மறக்காதீர்கள். சூரியனின் உச்சவலுவால் அனைத்தையும் சமாளித்து வெற்றி வீரனாக வலம் வருவீர்கள் என்பது உறுதி.

ரிஷபம்:

வார ஆரம்பமே சந்திராஷ்டம நாளாக அமைவதால் இந்த வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்கள் உங்களின் மனம் ஒரு நிலையில் இல்லாத நாட்களாக இருக்கும். சந்திரன் சனியுடன் இணைவதால் இந்த நாட்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் கடுமையான மனக் குழப்பத்திலும் இருப்பீர்கள். இதுபோன்ற நிலைமை இரண்டு நாட்களுக்கு மட்டும்தான் இருக்கும் என்பதால் வாரத்தின் பிற்பகுதியில் ரிஷபத்தினர் நன்மை காணும் வாரம் இது.

செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் வாரம் இது. வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்ல பலன்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் வேலைமாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவை நடக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் அப்போது வேலை கிடைக்கும்

மிதுனம்:

ராசிநாதன் லாபத்தில் அமர்ந்து பலம் பெரும் வலுவான வாரம் இது. வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக அமைந்தாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் இப்போது நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். செப்டம்பர் மாதத்திலிருந்து குருபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறி ராசியை பார்க்கப் போவதால் எந்தப் பிரச்னையும் இனிமேல் உங்களுக்கு வரப்போவது இல்லை.

இந்த வாரம் சகாய ஸ்தானாதிபதியான சூரியன் உச்சமாக இருக்கிறார். ராசிநாதன் புதன் நீசநிலை நீங்கியிருக்கிறார். இந்த இரண்டும் உங்களுக்கு யோகம் தரும் அமைப்புகள். மேலும் ராசியின் யோகாதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றதானால் வேலை, வியாபாரம், தொழில் போன்ற அமைப்புகளுக்கான பத்தாமிடம் வலுப் பெறுவதால் மிதுனராசிக்காரர்களுக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரமாக இது இருக்கும்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வாரம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் இப்போது உண்டு.

கடகம்:

வாரம் முழுவதும் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் லாப வலுவுடன் இருப்பதும், தனம், வாக்கு ஸ்தானாதிபதி சூரியன் உச்ச நிலையில் இருப்பதும் கடக ராசிக்கு நன்மை தரக்கூடிய அமைப்புகள். மேலும் இரண்டாமிடத்தில் இருக்கும் ராகு சூரியனின் உச்சநிலையால் சுபத்துவம் பெறுவதும் இந்த வாரம் உங்களுடைய அனைத்துக் காரியங்களும் வெற்றி பெறும் என்பதைக் காட்டுகிறது. எனவே கடகத்திற்கு கவலைகள் தராத வாரம் இது.

திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். வீட்டில் சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். வேறு சில மங்கள நிகழ்ச்சிகளும் நடக்கும். இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும். கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது.

தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவு, கூட்டுத் தொழிலில் நன்மைகள் ஆகியவை சுமுகமாக இருக்கும். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் அளவான நன்மை அடைவார்கள். பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்றும் இப்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

சிம்மம்:

வாரம் முழுவதும் சிம்ம நாதன் சூரியன் உச்சநிலையில் இருப்பதும், யோகாதிபதி செவ்வாய் பத்தாம் வீட்டில் குருபார்வையில் இருப்பதும் சிம்மத்திற்கு நன்மை தரும் அமைப்புகள் என்பதால் இந்த வாரம் சிம்மத்திற்கு நல்ல வாரமே. அதே நேரத்தில் ராசிநாதன் இருள் கிரகமான ராகு இருப்பதால் எந்த விஷயமும் நேரிடையாக முடிவுபெறாமல் சுற்றிவளைத்து மூக்கைத் தொடும் விஷயமாகவே அமையும் என்பதால் அனைத்திலும் நிதானமும், கவனமும் உங்களுக்கு தேவைப்படும்.

உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் இனி கண்டிப்பாகத் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சனி இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் பிரச்னைகள் வரும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும்.

பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள். இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

கன்னி:

கடந்த சில வாரங்களாக நீசம் பெற்று வலுவிழந்து இருந்த ராசிநாதன் புதன் அது நீங்கப் பெற்றதும், வாரம் முழுவதும் தன பாக்யாதிபதி சுக்கிரன் உச்ச நிலையில் ராசியைப் பார்ப்பதும் இந்த வாரம் கன்னிராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் கன்னிக்கு இது நன்மை தரும் வாரமாக அமையும் என்பது உறுதி. கிரக நிலைகளால் சிலருக்கு இந்த வாரம் குறுக்கு வழியில் பணவரவு இருக்கும். கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள்.

எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு.

தந்தைவழியில் எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் வாரம் முழுவதும் உச்சநிலை பெற்றிருக்கிறார். குருவின் பார்வையும் அவருக்கு இருக்கிறது. இதுபோல குரு பார்வையுடன் நீண்ட நாட்கள் சுக்கிரன் உச்சம் பெறுவது மிகவும் அரிதான ஒன்றாகும். அதே நேரத்தில் அவர் ஆறில் மறைந்து வலுப் பெறுவதால் இந்த வாரம் துலாம் ராசிக்கு எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் முதலில் தடைகள் வந்து பிற்பகுதியில் உங்களுக்கு சாதகமாக மாறி தீர்வு கிடைக்கும்.

தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித் துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத்துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும் வாரம் இது. அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வேலை தொழில் விஷயமாக எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்யுங்கள். பெண்களுக்கு இது நல்ல வாரம் தான். வார பிற்பகுதியில் பணவரவு சரளமாக இருக்கும். பணத்திற்கு தட்டுபாடு இருக்காது. எனவே எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்த அழுத்த குறைபாடுகள் உள்ளவர்கள் அசட்டையாக இருக்க வேண்டாம். சிறு உடல்நலக் குறைவு என்றாலும் உடனே கவனிப்பது நல்லது.

விருச்சிகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் குரு பார்வையுடன் ஏழாமிடத்தில் அமர்ந்து தன் ராசியை பார்த்து வலிமைப் படுத்தும் நிலையோடு இன்னொரு உன்னத அமைப்பாக, ஜீவனாதிபதி சூரியன் உச்சம் பெறுவதாலும் விருச்சிகத்திற்கு இந்த வாரம் திருப்பு முனை வாரமாக, இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலையும் தீர்வும் கிடைக்கும் வாரமாக இருக்கும். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும். சேமிப்புகள் செய்ய முடியும்.

வெற்றித் திருமகன் முருகப்பெருமானின் பூரண அருளுடன் பிறந்த விருச்சிக ராசியினர்கள் எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர்கள் என்பதால், தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இனிமேல் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்க இருப்பதால் இனிமேல் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நம்பிக்கையை கை விடாதீர்கள். சிலருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் இந்த வாரம் நடக்கும். தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்கு இப்போது செல்வீர்கள்.

ஆகஸ்டுக்கு மாதத்திற்கு மேல் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாரிசு உருவாகி வீட்டில் தவழ்ந்து விளையாடப் போகிறது. நேர்த்திக் கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற்றலாம். குல தெய்வ வழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யும்படி இருக்கும். பெண்கள் மிகுந்த மேன்மை அடைவீர்கள். மாமியார் மாமனார் வகையிலும் நல்லபலன்கள் இருக்கும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் குருபகவான் செவ்வாயைப் பார்ப்பதால் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

தனுசு:

ஒன்பதுக்குடைய சூரியன் உச்ச வலு அடைந்திருப்பதும், ஐந்துக்குடைய செவ்வாய் குருவின் பார்வையில் இருப்பதும் இந்த வாரம் தனுசு ராசிக்கு அனைத்து நன்மைகளையும் லாபங்களையும் தரும் வாரம் என்பதைக் காட்டுக்கிறது. அதே நேரத்தில் சுக்கிரனின் உச்ச நிலையால் ஆறாமிடம் வலுப் பெறுவதால் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்ப்புகள் உள்ள வாரமாகவும், நடுத்தர வயதுள்ளவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டிய வாரமாகவும் இருக்கும்.

குடும்பத்தில் ஒருவர் ஏதாவது பேசிவிட்டாலோ, திட்டிவிட்டாலோ மற்றவர்கள் பொறுத்துப் போங்கள். குடும்பப் பிரச்னைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து மனம் விட்டு உட்கார்ந்து பேசினாலே ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம். இளைய வயதில் இருப்பவர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்னைகளும் அணி வகுத்து வரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும்.

பெண்களுக்கு இது சுமாரான வாரமாகத்தான் இருக்கும். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் எல்லா வேலையையும் உங்கள் தலை மேல்தான் சுமத்துவார்கள். புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. ஏழரைச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது.

மகரம்:

எட்டிற்குடைய சூரியன் நான்காமிடத்தில் உச்ச வலுப் பெறுவதால் மகர ராசிக்காரர்களுக்கு தாயார் விஷயத்தில் வருத்தங்களும், செலவுகளும் உள்ள வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயத்தில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையும், சிலருக்கு பழைய வாகனங்களால் வீண் விரையங்களும் இருக்கலாம் என்பதால் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.

சொந்தத் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது. ஆனால் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் இருக்கட்டும் சுயதொழில், வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

இளைஞர்களுக்கு இந்த வாரம், கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கப் போவதால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சனி எப்போதுமே கொடுத்துக் கெடுப்பார் என்பதால் சனி கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். கெட்டுப் போகாதீர்கள். மகன் மகளுக்கு திருமணம் உறுதியாகும். பேரன் பேத்திகள் மூலம் நல்ல சுபநிகழ்ச்சிகள் இருக்கும். வயதானவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும்.

கும்பம்:

பாக்கியாதிபதி சுக்கிரன் உச்சமாகி, ஜீவனாதிபதி செவ்வாய் உச்சனின் வீட்டில் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் இதுவரை செய்யாமலும், சொல்லாமலும் யோசிக்க மட்டுமே செய்து கொண்டிருந்த சில விஷயங்களில் உங்களுடைய தயக்கங்கள் விலகி இந்த வாரம் பளிச்சென்று தெளிவான சில முடிவுகளை எடுப்பீர்கள். அதுபோலவே எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு.

வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டு. முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும்.

மீனம்:

இந்த வாரம் ஒன்பதுக்குடைய செவ்வாய் ஒன்பதாமிடத்தைப் பார்த்து உங்களை சந்தோஷத்திற்கு உள்ளாக்கினாலும், ஆறுக்குடைய சூரியன் இரண்டாம் வீட்டில் உச்ச நிலையில் நிலையில் இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு கடன் வாங்க வேண்டி இருக்கும். இன்னும் சிலருக்கு செலவுகள் அதிகமாகவும் இருக்கும். அதேநேரத்தில் உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், யூகத்திறமைக்கும் ஏற்ற வாரம் இது. மனதிற்குள் நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை இப்போது செயல்படுத்தி சோதனை செய்வீர்கள்.

இந்த வாரம் நெருங்கிய ஒரு நண்பரிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். இதுவரை குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். சகோதர உறவு மிகவும் நன்றாக இருக்கும். கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும்.

பெண்களுக்கு சிறப்புக்கள் வீடு தேடி வரும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அமையும். தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும். தங்களின் திறமையை முதலீடாகக் கொண்டவர்கள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இந்த வாரம் நல்ல வருமானங்களும், மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

No comments :

Post a Comment