Monday, 10 April 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (10.04.2017 - 16.04.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

வார ஆரம்பத்தில் சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதும், துவக்கத்திலேயே பவுணர்மி யோகத்துடன் இந்த வாரம் ஆரம்பிப்பதும் மேஷ ராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் சாதகமற்ற பலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இது இருக்கும். குறிப்பாக அறிவை மூலதனமாக கொண்ட தொழில் மற்றும் வேலை அமைப்புகளில் இருப்பவர்களுக்கு இது சாதிக்கின்ற வாரமாகவும் இருக்கும். உங்களில் சிலருக்கு திருமணம் உறுதியாகின்ற நிகழ்ச்சிகளும் உண்டு.


மேஷராசிக்காரர்களுக்கு இந்த வருடத்திற்கு பிறகு கவலைகள் எதுவும் இல்லாத பிரச்சினைகள் அற்ற வாழ்க்கை அமையும் என்பது உறுதி. மேலும் சனிபகவானால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேற்றுமைகளையும் முணுமுணுப்புகளையும் இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். நல்லவர் போல் நடித்து குடும்பத்தில் நாரதர் வேலை பார்ப்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள்.

அஷ்டமச்சனியின் ஆதிக்கம் இளம்வயதில் வருவது மேம்போக்காகப் பார்க்கும் போது கெடுபலன்களைத் தருவதாகத் தெரிந்தாலும், சனிபகவான் இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதையும் நல்லவர் யார்? நம்மை விரும்பாதவர் யார்? நமக்கு வேண்டியவர் யார் என்பதையும் தெளிவாக்குவார். மேலும் பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் சொல்லிக்கொடுத்து பணத்தின் அருமையை இப்போது தெரிய வைப்பார். தற்போது சனியினால் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சனி முடிந்த பிறகு மேற்கண்ட அனுபவங்களினால் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

ரிஷபம்:

பத்தாமிடத்தில் சுபத்துவத்துடன் இருக்கும் கேதுவை உங்களின் யோகாதிபதி சனி பகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் சிலருக்கு ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும் வாரம் இது. குறிப்பிட்ட சில ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஞானிகள் தரிசனம் அல்லது இதுவரை போக முடியாமல் இருந்த திருக்கோவில் தரிசனம் இந்த வாரம் கிடைக்கும். ஐந்தாமிடத்தில் குருவும், சந்திரனும் இணைந்து குருச்சந்திர யோகம் உண்டாவதால் சிலருக்கு இளைய சகோதரம் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும்.

பணிபுரியும் இடங்களில் உண்டான சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் அலுவலகங்களில் உங்களுக்கு சாதகமான நிலைமை உண்டாகும். உங்களை பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து இனி நீங்கள் மேலே வருவீர்கள். நீண்டநாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த விஷயங்கள் இப்பொழுது வெற்றியடையும். வராது என்று கைவிட்ட பணம் வரும். பெண்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் சிறப்படைவார்கள். வெளிநாட்டில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

எழுத்துத்துறையில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான நற்பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு பணவரவுகளில் இருந்த தேக்கநிலையும் குழப்பங்களும் இப்போது மாறும். தாராள பணவரவு இந்தவாரம் உண்டு. அதேபோல இதுவரை தந்தையிடமிருந்து ஆதரவு இல்லாத நிலைமையும் இனிமேல் சீர்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் ஆனந்தம் பெறுகின்ற வாரமாக இருக்கும். சகாய ஸ்தானம் வலுப் பெறுவதால் உங்களுக்கு அருகில் இருக்கும் பெண்கள் மூலம் இப்போது ஆதாயங்களும், நன்மையான போக்கும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை எதிர்பார்த்திருந்த அரசுவேலை பற்றிய நல்ல தகவல்களும், தகப்பனார் வழி நன்மைகள் கிடைக்கின்ற வாரமாகவும் இது இருக்கும்.

வார இறுதியில் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் நல்ல விதமாக முடியும். பெண்களால் சாதகமான பலன்கள் நடக்கும். குறிப்பாக சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் இப்போது தீரும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாடு போன்ற தூரப்பிரயாணங்கள் அமையும். வெளிநாட்டு கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு இடம் மாறுதல் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும் உண்டு.குறிப்பிட்ட சிலர் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு பயணம் செய்வீர்கள். அது ஆன்மிகப்பயணமாக இருக்கலாம்.

செலவுகளில் சிக்கனமாக இருங்கள். அதிக வருமானம் வரும் நேரம் என்பதால் அனைத்தையும் செலவு செய்துவிடாமல் ஓரளவாவது சேமிப்பது நல்லது. இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் கைமீறிப் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள். ராசிநாதனின் தோஷம் நீங்குவதால் இனிமேல் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றிமேல் வெற்றி வரும் என்பது உறுதி. எனவே தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் இனி என்றும் உங்களுக்கு சந்தோசம்தான்.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் குருவுடன் இணைந்து பவுர்ணமி யோகத்துடன் பலம் மிகுந்த ஒரு அமைப்பில் இருப்பதால் கடக ராசிக்காரர்கள் எதிலும் வெற்றி பெறுகின்ற ஒரு வாரமாக இது இருக்கும். ராசிநாதன் பூரண வலுப் பெறுவதால் இந்த வாரம் நீங்கள் எடுக்க இருக்கும் அனைத்து முயற்சிகளும் பழுதின்றி நிறைவேறும் என்பது ஜோதிடத்தின் கணக்கு. எனவே கடகத்தினர் தயக்கங்களை உதறித் தள்ளி துணிச்சலுடன் இறங்குகின்ற வாரம் இது.

வார ஆரம்பத்தில் அப்பா விஷயத்தில் நன்மைகளோ, தந்தையிடமிருந்து பணம் கிடைப்பது அல்லது நீண்டநாட்களாக சம்மதிக்காத ஒரு விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பது போன்ற பலன் இருக்கும். வீட்டில் உங்களுக்கு மதிப்பு மரியாதை உயரும்படியான நிகழ்ச்சிகள் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் நடக்கும். அவர்களால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் ஏதேனும் உண்டு. சிலருக்கு புத்திரர்கள் மூலம் பணவரவு வந்து அதன் மூலம் ஏதேனும் வீடோ மனையோ வாங்கும் அமைப்பு உள்ளது.

தொழில் அமைப்புகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலன்கள் தரும் வாரமாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் இப்போது நீண்டகால பகை ஒன்று தீர்ந்து சமரசம் ஆவீர்கள். இளையபருவத்தினர் சிலர் இதுவரை நடைபெற்று வரும் எதிர்மறை பலன்களால் தன்னம்பிக்கை இன்றி இருப்பீர்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போல ஏதேனும் நல்ல நிகழ்ச்சிகள் இந்தவாரம் உண்டு. சிலருக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகளும் பொருளாதார சிக்கல்களும் இந்தவாரம் மாறும்.

சிம்மம்:

ராசிநாதன் எட்டில் மறைந்து பலவீனமானாலும், அவர் பூரணச் சந்திரனின் பார்வையில் இருப்பதோடு, கூடுதல் வலுவாக குருவின் பார்வையிலும் இருப்பதால், சிம்மராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கின்ற வாரமாக இது இருக்கும். தொழில் ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் சிலருக்கு தொழில் விஷயமான தூர பயணங்களும், அவற்றின் மூலம் நற்பெயர், போனஸ் போன்றவைகள் கிடைத்தலும் இப்போது உண்டு.

வாரஇறுதியில் தடைப்பட்டிருந்த அதிர்ஷ்ட நிகழ்வுகள் செயல்படத் துவங்கும். அலுவலகங்களில் நிம்மதியான சூழல் இருக்கும் என்றாலும் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்று நினைத்து தேவையில்லாமல் பயந்து கொண்டிருப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றைக்குமே மதிப்பு உண்டு என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் பயம் தேவையே இல்லை. கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். அவசரத்திற்கு நண்பர்கள் உதவுவார்கள்.

மனைவி வழியில் அனுகூலம் இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைக்கும். என்னதான் அடுத்தவர் உதவினாலும் நம்முடைய கை உழைத்தால்தான் நமக்கு நிம்மதி என்று நினைக்கக்கூடிய உங்களுக்கு இந்த வாரம் திருப்பம் தரும் வாரம்தான். சூரியன் பலமடைந்து இருப்பதால் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வெல்வதோடு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பெறுவீர்கள். போராட்ட குணமுடைய சிம்ம ராசிக்காரர்களை வீழ்த்த முடியாது என்பதை பிறருக்கு உணர்த்துவீர்கள்.

கன்னி:

எட்டுக்குடைய செவ்வாயுடன் அஷ்டம ஸ்தானத்தில் ராசிநாதன் புதன் மறைந்திருப்பதால் இந்த வாரம் கன்னி ராசிக்கு சில சங்கடமான நிகழ்வுகள் நடக்கும் என்றாலும், ராசியிலேயே குருபகவான் அமர்ந்திருப்பதும் அவருக்கு நிகரான இன்னொரு சுபரான பூரண சந்திரனும் அவருடன் ராசியில் இருப்பதும் சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி உங்களுக்கு சாதகமான அமைப்பு என்பதால் கன்னி ராசிக்கு இந்த வாரம் சாதிக்கும் வாரமே.

இதுவரை உடல்நலம், மனநலம் கெட்டிருந்தவர்கள் உடனடியாக அனைத்தும் சீர்பெற்று நல்லநிலைக்கு வருவீர்கள். கடந்த சில வாரங்களாக ராசிநாதன் நீசமாகி வலுவிழந்ததால் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் இந்த வாரத்துடன் முடிவுக்கு வரும். முப்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல மாறுதல்கள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் உண்டு. பெண்கள் சிலருக்கு இந்தவாரம் நகை சேரும் யோகம் இருக்கிறது.

மருத்துவத்துறையினர், அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் கட்டிடம் கட்டும் தொழில் சம்மந்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு இந்தவாரம் பணவரவு இருக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு நன்மைகள் இருக்கும். சீருடை அணியும் காவல்துறை ராணுவம் போன்ற அரசுப்பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும். மேலதிகாரிகளால் அடிக்கடி விரட்டப்படுவீர்கள் பெண்களுக்கு இது நன்மை தரும் வாரம் தான்.

துலாம்:

ராசிநாதன் ஆறாமிடத்தில் உச்சநிலையில் இருப்பதோடு ராசிக்கு மூன்றாமிடத்தில் யோகத்தை தரும் நிலையில் சனிபகவான் இருப்பதும் துலாம் ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் நீங்கப் போகிறது என்பதை காட்டுகின்ற கிரக நிலைகள் என்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் ஆரம்பமாகின்ற துவக்க வாரமாக இது இருக்கும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் திடீர் தனவரவு இந்த வாரம் உண்டு.

பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் மிகவும் யோகம் தரக்கூடிய வாரமாக இருக்கும் என்பதால் உங்களின் யோக வாரம் இது. உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலைசெய்வோர் போன்ற எல்லாத் துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் வாரம் இது. வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன.

விருச்சிகம்:

ராசிநாதன் ஆட்சி நிலையில் இருப்பதும் சூரியனும், சந்திரனும் பவுர்ணமி நிலையில் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதும் விருச்சிகத்திற்கு பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கின்ற அமைப்பு என்பதால் இந்த வாரம் விருச்சிகத்திற்கு நல்ல வாரமாகவே அமையும். குறிப்பாக கடந்த சில மாதங்களாக கடுமையான மனஅழுத்தத்தில் இருந்து வரும் அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் எதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும் வாரம் இது.

குருவும், செவ்வாயும் வலிமை பெற்ற நிலையில் இருப்பதால் விருச்சிகத்திற்கு சோதனைகள் எதுவும் இல்லை. இனிமேல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் சாதகமாக மாறும் என கிரக நிலைகள் காட்டுகின்றன. இதுவரை பணிபுரியும் இடங்களில் பிரச்னைகளை சந்தித்தவர்கள் தற்பொழுது அது நீங்குவதற்கான ஆரம்பங்கள் நடப்பதை உணர ஆரம்பிப்பீர்கள். மூன்றாமிடம் வலுப்பெறுவதால் உதவிகள் உங்களை தேடிவரும் வாரமாக இது இருக்கும். அதேபோல நீங்களும் முடிந்த அளவு அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள்.

என்னதான் நல்லபலன்கள் நடந்தாலும் சனியின் ஆதிக்கத்தினால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போன்ற நிலை இருக்கும். ஜன்மச்சனி முடியும் நேரத்தில் இருப்பதால் கவலைப்படும் அளவிற்கு எந்த சோதனையும் உங்களுக்கு வந்து விடப்போவது இல்லை. கடந்த காலங்களில் ஜன்மச்சனியாக இருந்த சனிபகவான் மாற்றமடைந்து பாத சனியாக மாறப்போவதால் இதுவரை இருந்து வந்த விரையங்கள் தவிர்க்கப்பட்டு இனிமேல் வரும் வருமானத்தை நீங்கள் சேமிக்க முடியும்.

தனுசு:

ஐந்துக்குடைய செவ்வாய் ஆட்சி வலுப்பெற்று, பாக்கியாதிபதி சூரியன், குருவின் பார்வையில் இருக்கும் யோக வாரம் இது. நட்புக்கிரகங்கள் வலுத்திருப்பதால் இந்த வாரம் எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவுகள் கிடைக்கும். இந்த விஷயம் நடக்கவே நடக்காது, இதை முடிக்கவே முடியாது என்று நினைத்திருந்த சில விஷயங்கள், மற்றும் சில காரியங்கள் தற்போது பரம்பொருளில் அருளினால் அதிகமான முயற்சி இன்றியே நல்லவிதமாக முடிவதை இப்போது பார்க்க முடியும்.

பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். எதிர் பார்க்காத பணவரவும் இந்தவாரம் உண்டு.

இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும்.

மகரம்:

எட்டாமிடத்தில் ராகு அமர்ந்து எட்டுக்குடைய சூரியன் குரு பார்வையில் இருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காத வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சில மகர ராசிக்காரர்களுக்கு ஏற்படுகின்ற அளவுக்கு மீறிய செலவால் கொஞ்சம் திகைத்துத்தான் போவீர்கள். என்னதான் இருந்தாலும் யோகாதிபதி சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் சங்கடங்கள் அனைத்தையும் சாதகமாக மாற்றிக் கொண்டு சாதித்தே தீருவது என்று நீங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யும் வாரம் இது.

அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். சகோதர உறவு நன்றாக இருக்கும். இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள்.

வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. இதுவரை குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கும்பம்:

வார ஆரம்பமே கும்ப ராசிக்கு சந்திராஷ்டம நிலையில் ஆரம்பித்தாலும் சந்திரன் குருவோடு இணையும்போதும், சுப வலுப்பெறும் போதும் சந்திராஷ்டம தீமைகளை செய்யமாட்டார் என்கின்ற விதிப்படி இந்த வாரம் கும்பத்திற்கு நல்ல பலன்கள் நடக்கின்ற வாரமாக இருக்கும். எட்டில் மறைவது முழு ஒளித்திறன் உடைய பவுர்ணமிச் சந்திரன் என்பதால் வாரத்தின் ஆரம்ப நாட்களில் மறைமுகமாக தனலாபமும், இதுவரை செய்ய முடியாது என்று நீங்கள் தயங்கிக் கொண்டிருந்த காரியங்களை நிறைவேற்றிக் காட்டுதலும் இப்போது நடக்கும்.

வேலை விஷயமாகவோ சிறுகருத்து வேறுபாட்டாலோ, பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் சேர்வீர்கள். இதுவரை கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். தம்பதிகளுக்கு நடுவில் சகுனி வேலை பார்த்தவர்களை அடையாளம் கண்டு இருவரும் சேர்ந்து துரத்துவீர்கள். எதிர்ப்புகள் பலவீனமாகி கடன் தொல்லைகளும் கட்டுக்குள் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும்.

வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு.

மீனம்:

ராசியில் சுக்கிரன் உச்சமடைந்து, ஆறுக்குடைய சூரியனுடன் இருப்பது மீன ராசிக்காரர்களுக்கு கடன், நோய், எதிர்ப்பு போன்றவைகளை கொடுக்கின்ற ஒரு அமைப்புதான் என்றாலும் இந்த வாரம் பிறக்கும்போதே பவுர்ணமிச் சந்திரன் ராசியை பார்க்கும் நிலை உண்டாவதால், துன்பங்கள் அனைத்தையும் நீங்கள் தூசாக்கி காட்டுகின்ற வாரமாகவே இது இருக்கும். ராசியோடு சுக்கிரன், பூரண சந்திரன், குரு ஆகிய மூவரும் வலிமை பெற்று தொடர்பு கொள்ளுவதால் இந்த வாரம் புத்துணர்ச்சியுடன் எதையும் செயல்படுத்திக் காட்டுவீர்கள்.

கடன் தொல்லைகள் எல்லை மீறாது. அதே நேரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் இழுத்தடித்துத்தான் வரும். தந்தையுடன் பிறந்தவர்களுடன் இந்த வாரம் ஏதேனும் சச்சரவு வரலாம் என்பதால் பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிலும் நிதானம் தேவை. தந்தைவழியில் இதுவரை இருந்து வந்த சாதகமற்ற நிலை இந்த வாரத்திலிருந்து மாறும். தடைபட்ட வருமானங்கள் மீண்டும் வர ஆரம்பிக்கும். முயற்சி எடுத்தும் பயன் இல்லாமல் போன சில விஷயங்கள் இந்த வாரம் அதிர்ஷ்டத்தினால் பலன் அளிக்கும்.

பெண்களை இந்த வாரம் நம்பலாம். சென்ற சிலநாட்களாக இருந்து வந்த பிரச்னைகளை தீர்த்து வைக்கும் அமைப்பு உள்ளதால் இந்த வாரம் நல்ல வாரமே. குரு வலுப் பெறுவதால் சிலருக்கு வங்கி, சிட்பண்டு போன்ற பணம் புரளும் துறைகளிலோ அல்லது பணத்தை எண்ணும் கேஷியர் போன்ற வேலை வாய்ப்புகள் இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு.

No comments :

Post a Comment