Monday, 3 April 2017

மாலைமலர் வார ராசிபலன்கள்(03.04.2017 -09.04.2017)


இந்த வாரம் எப்படி?

மேஷம்:

ஐந்திற்குடைய சூரியன் பனிரெண்டில் மறைவதால் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும் வாரமாக இருக்கும். பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு இந்த வாரத்திலிருந்தே நீங்கள் பட்ஜெட் போட வேண்டி இருக்கும். ஆனாலும் பணவரவிற்கு குறை இருக்காது. வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். பிடித்தமில்லாத வேலையில் இருந்தவர்கள் உங்களுக்கேற்ற தகுதியான வேலையில் சேர்வீர்கள்.

குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். உங்களுடைய பேச்சுக் கேட்கப்படும். ஆலோசனை ஏற்கப்படும். குறிப்பிட்ட சிலருக்கு வாழ்க்கைத் துணைவரிடம் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், கசப்பான அனுபவப் பரிமாறல்களும் இருக்கும் என்பதால் எல்லா விஷயத்திலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருக்க வேண்டும். மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள்.

வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் நன்கு யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் தடைப்பட்டு வீட்டை முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் சூரியனுடன் இணைந்திருப்பதால் வாழ்க்கைத்துணைக்கு நீங்கள் செலவுகள் செய்யும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலர் மனைவி கேட்கும் வீட்டுப்பொருட்களை கடன் வாங்கியாவது வாங்கித் தருவீர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணம் செல்வதற்கான ஆரம்பங்கள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறை ரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றமோ இருக்கலாம்.

சிலருக்கு மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல தொழிலிலும், வீட்டிலும் ஏதேனும் ஒரு விஷயத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படும் நிலைமை இருக்கும். குறிப்பாக சிலர் வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும், அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும் நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை.

ராகுபகவான் மூன்றாம் இடத்தில் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும். வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.

மிதுனம்:

ராசிநாதன் புதன் வாரம் முழுவதும் பதினொன்றில் அமர்ந்து ஆட்சி பெற்ற செவ்வாயுடன் இருப்பதால் வார ஆரம்பத்தில் தாய்வழி உறவில் முட்டல்களும் மோதல்களும் உங்களுக்கு இருக்கும். தாயுடன் பிறந்தவர்கள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பற்றி குறை சொல்வதோடு உங்களை மனக்கஷ்டத்திற்கும் ஆளாக்குவார்கள். செலவுகள் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு பெண்களால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குழந்தைகள் பேரில் சேமிக்க முடியும். தனலாபங்கள் இருக்கும்.

ராசியை சனி பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள்ளும் ஏதாவது ஒரு விஷயத்தில் சந்தேக விதையை சனி விதைப்பார். எனக்கு தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்கு தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் வேலைகளை சனி செய்வார் என்பதால் எதிலும் வெளிப்படையாக இருப்பது நல்லது. பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும்.

கடகம்:

உங்கள் யோகாதிபதியான செவ்வாய் பத்தாமிடத்தில் ஆட்சியாக இருப்பது தொழிலுக்கும், வேலைக்கும் நல்ல அமைப்பு என்பதால் இந்த வாரம் உங்களின் வியாபாரம் மேம்பட்ட நிலையில் இருக்கும். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இல்லாமலும், பொருளாதார நன்மைகளும் இருக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள்.

கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும். கருத்து வேற்றுமையால் சண்டை போட்டு பிரிந்திருந்தவர்களுக்கும் இது பொருந்தும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும்.

செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் இந்த வாரம் நன்மைகள் நடைபெறும். வயதானவர்கள் காசி, கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சகோதர விஷயத்தில் நன்மைகளும், சுப நிகழ்ச்சிகள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவைத்தொகை கைக்கு வரும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் எட்டில் இருப்பதால் இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார விஷயத்தில் சுணக்கங்களும், இடையூறுகளும் இருக்கும். இதோ வந்து விட்டது அதோ முடிந்து விட்டது என்று எதிர்பார்க்கும் விஷயங்கள் இந்த வாரமும் இழுத்துக் கொண்டு போய் உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும். வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம்.

வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம்.

ஐந்தில் சனி இருப்பதால் பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தொடர்பு இடைவெளி எனப்படும் தலைமுறை இடைவெளி இப்போது வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த ஐந்தாமிட சனியை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும்.

கன்னி:

கன்னிநாதன் புதன் எட்டில் மறைந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி பெற்று அவருடன் இணைந்திருப்பதால் கன்னிக்கு சோதனைகளோ, வேதனைகளோ இல்லாத வாரமாக இது இருக்கும். ஆயினும் ராசிநாதன் மறைவதால் எதிலும் ஒரு தடங்கலை உணருவீர்கள். எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் இந்த வாரம் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு நல்லபலன்கள் அதிகம் இருக்கும். தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்கள், பிரச்சனையை தள்ளி வைப்பது நல்லது.

சகோதரவிஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது. சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் சிறு காய்ச்சல் என்றாலும் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை வைக்க வேண்டும். பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது கருவுறுதல் இருக்கும்.

துலாம்:

ராசியையும், ராசிக்கு இரண்டாம் வீட்டையும் தனது ஏழு, எட்டாம் பார்வைகளால் பாபக்கிரகமான செவ்வாய் பார்த்து உங்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தாலும் ராசிநாதன் சுக்கிரன் உச்சம் அடைவதால் அனைத்துத் தடைகளையும் மீறி நீங்கள் வெற்றி பெறும் வாரமாக இது இருக்கும். செவ்வாய் ஆட்சிபலத்தில் இருப்பதால் இளைய சகோதரத்திற்கு நன்மை தரும் விஷயங்களும், இழுபட்டுக் கொண்டிருந்த தங்கையின் திருமண விஷயம் உறுதியாவதும் இருக்கும்.

துலாம் ராசியினர் இப்போது சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள். குறிப்பாக சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் அவர்களுக்கு செய்தாலும் அண்ணன் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவதையும் கேட்க வேண்டியிருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வாரம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கலைஞர்களுக்கு நல்ல வருமானம் வரும் வாரம் இது. வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்றாலும், அவர் ஆறில் மறைவது எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத ஒரு நிலையை விருச்சிகத்திற்கு தரும் அமைப்பு. இன்னொரு நிலையாக ஜீவனாதிபதி சூரியன் உச்ச சுக்கிரனுடன் இணைவதால் இந்த வாரம் பெண்கள் விஷயத்தில் செலவுகளும் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதோடு இவற்றிற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும்.

தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது தொழில் முன்னேற்றம் பெறுவதை காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதைப் பார்க்க முடியும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை அமையும். உயர்கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும்.

விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. விவசாயிகளுக்கும், கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் சுமாரான பலன்கள் நடக்கும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.

தனுசு:

ஐந்திற்குடையவன் ஆட்சியாகவும் ஒன்பதிற்குடையவன் நான்காம் கேந்திரத்திலும் இருப்பது தனுசுராசிக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் தொழில் இடங்களில் அன்னிய மத, இன, மொழி நண்பர்களால் உதவிகளும் சந்தோஷ விஷயங்களும் உள்ள வாரமாக இது இருக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. அரசு தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் வேலை செய்ய வேண்டியது அவசியம்.

உடன் பணிபுரிபவர்கள் எவரையும் நம்ப வேண்டாம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களை கண்காணிப்பது அவசியம்.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் தனுசு ராசிக்காரர்கள் மிகப் பெரிய நன்மைகளை அடையப் போகிறீர்கள். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது. விவசாயிகளுக்கு அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். வேலை இழந்தவருக்கும், வேலை தேடுபவருக்கும் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

மகரம்:

எட்டாமிடத்தில் ராகு அமர்ந்து எட்டுக்குடையவன் தன் வீட்டிற்கு எட்டில் இருப்பதால் மகரத்தினருக்கு அப்பா விஷயத்தில் மனக்கஷ்டங்களும், விரயங்களும் இந்த வாரம் இருக்கும். இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்புவது சரிபட்டு வராது.

வயதான தந்தையைக் கொண்டவர்கள் அவரது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இது நல்ல வாரம். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணைவர் இனிமேல் உங்களை புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். அந்தஸ்து உயரும். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

ஊடகத்துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல வாரம். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

கும்பம்:

லாப ஸ்தானமான பதினொன்றில் ராசிநாதன் சனி அமர்ந்து, தொழில் ஸ்தானம் வலுவாக இருப்பதாலும், யோகாதிபதி சுக்கிரன் உச்சமாக இருப்பதாலும் இந்த வாரம் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இயங்கும் வாரமாக இருக்கும். முக்கிய பலனாக சிலருக்கு கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும் வாரமாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலைமை மாறி வியாபாரம் சூடு பிடிக்கும்.

போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கடை திறக்க முடியும். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள். சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பெருநகரங்களில் இருப்பவர்கள் நல்ல இடத்தில் சொந்தமாக பிளாட் வாங்கவோ அருமையான புதிய வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இந்த வாரம் உண்டு. நேரடி எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளிவார்கள். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் நல்ல விதமாக தீரும் வாரமாக இது இருக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் முன்னேற்றம் காணுவீர்கள். அதிர்ஷ்டம் இப்போது கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.

மீனம்:

ஆறுக்குடைய சூரியன் ராசியில் இருந்து, எட்டிற்குடைய சுக்கிரனும் அங்கே உச்சமாக இருப்பதால் இந்தவாரம் வெளிமாநிலம் வெளிநாட்டில் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு பணவிஷயங்களில் திருப்தியற்ற நிலைகளும், சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வராமல் நெருக்கடியான சூழல்களும் இருக்கும். உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். சிலருக்கு வாரம் முழுக்க அலைச்சல்களும் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது.

நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள். கடன் பிரச்னைகள் எதுவும் இருக்காது. அதே நேரத்தில் சுபக் கடனாக வீடு வாங்குவது விஷயமாக ஹவுசிங் லோன் வாங்க வேண்டியிருக்கும். தொழில் வியாபார வேலை இடங்களில் கூடவே சிரித்துப் பேசி உங்களை கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். எதிலும் கவனமாக இருங்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். திரவப் பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப் பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப் பளுவும் நீங்கும். அனாவசியமான வாக்குவாதங்களை தவிருங்கள். தேவையின்றி எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

No comments :

Post a Comment