Friday, 3 March 2017

ராகு என்ன தருவார்? C- 061 - Raahu Yenna Tharuvar?


ஒருவருடைய ஜாதகத்தில் ராகு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கும்போது அந்தஸ்து, கௌரவம், புகழ் உள்ளிட்டவைகளைக் கொடுத்து அனைத்திலும் வெற்றியைத் தருவார். குப்பையில் கிடந்ததை கோபுரத்தின் உச்சியில் வைப்பவர் ராகுதான். சுபத்துவம் அடைந்த ராகு ஒரு ஜாதகருக்கு அளவற்ற தனத்தையும் தந்து அவரைப் பிரபலப்படுத்தவும் செய்வார்.

ஒருநிலையில் ஆன்மிக அறிவிற்கும் ராகு காரணமாவார் என்பதால் ஜாதகத்தில் சுபராக இருக்கும்போது சிவபெருமான் மீது பக்தி, புனிதத்தலங்களைத் தரிசித்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல் போன்ற பலன்கள் ராகுவின் தசையில் நடக்கும். அதேபோல ராகு நல்லநிலையில் இருந்து தசை நடத்தும்போது ஒருவருக்கு அதிகமான ஆன்மிக ஈடுபாடும், இறைசக்தி சம்பந்தப்பட்ட ஆன்மிக அறிவாற்றலும் உண்டாகும்.

ராகு பாபத்துவம் அடைந்து, பாபர்களின் சேர்க்கை பெற்று, பாபர்களின் வீட்டில் அமர்ந்து கெடுபலன் தரும் அமைப்பில் இருக்கும்போது விஷப்பூச்சிகள், விஷம் போன்றவற்றில் கண்டங்களைத் தருவார். இந்நிலையில் ராகுதசையோ புக்தியோ நடக்கும்போது ஒருவருக்கு பாம்புகள், விஷஜந்துகளைப் பார்க்க நேரிடும்.

ஒருவரைத் தொழில் அமைப்பில் ஓடிக்கொண்டே இருக்க வைப்பவை ராகு,கேதுக்கள்தான். பத்தாம் வீட்டுடன் அல்லது ஜீவனாதிபதியுடன் ராகு தொடர்பு கொள்ளும் நிலையில், அல்லது பத்தாமிடத்தில் ராகு இருக்கும் நிலையில் ஒருவர் வாகனங்களுடன் தொடர்பு கொண்டவராக இருப்பார்.

ஆட்டோ டிரைவர்கள், டாக்சி ஓட்டுனர்கள் போன்றவர்கள் ராகுவின் ஆதிக்கத்தில் வருபவர்கள்தான். ஓட்டுபவர்கள் மட்டுமின்றி ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்தில் பணியாற்றும் கண்டக்டர்கள், உதவியாளர்கள் போன்றவர்களும் தொழில் ஸ்தானத்தில் ராகுவின் தொடர்பைப் பெற்றவர்கள்தான்.

கெடுபலன் தரும் நிலையில் உள்ள ராகுவால் ஒருவருக்கு வெளியே சொல்ல முடியாத ஒரு இனம் புரியாத மனக்கலக்கம் இருக்கும். மனம் ஒரு நிலையில் இருக்காது. ஒருவரைக் குறைந்த அளவு மனநோயாளியாகவும் ஆக்குவார் ராகு.

பிளாக் மாஜிக் எனப்படும் பில்லி, சூன்யம் போன்றவைகளின் பெயரைச் சொல்லி வருமானம் தருபவரும் ராகுதான். சிலநிலைகளில் ராகு பாபரின் வீடுகளில் அமர்ந்தோ, நீசத் தொடர்பையோ, பாபர்களின் இணைவையோ பெறும்போது தனது தசையில் மாந்த்ரீகத்தின் பெயரைச் சொல்லி மோசடியாக சம்பாதிக்க வைப்பார்.

பெரும்பான்மையான ஜோதிட மூலநூல்கள் ராகு-கேதுக்கள் இருவரையும் முழுப் பாபர் என்று சொல்லும் நிலையில் மகாபுருஷர் காளிதாசர் கேதுவை முழுப் பாபர் என்றும், ராகுவை முக்கால் பாபர் என்றும் தனிப்பட்டுக் குறிப்பிடுகிறார்.

ராகு சனியைப் போல செயல்படுபவர், கேது செவ்வாயைப் போன்றவர் என்றே அனைத்து மூலநூல்களும் உறுதிபடக் குறிப்பிடுகின்றன. மகாபுருஷர் காளிதாசரும் அவ்வாறே சொல்லியிருக்கிறார்.

ஆனால் கிரகங்களின் சுப, அசுப பலங்களைச் சொல்லும்போது மட்டும் காளிதாசர், ராகுவை சனியைப் போல முழுப் பாபர் என்று குறிப்பிடாமல், செவ்வாய்க்குரிய முக்கால் பாபர் என்று குறிப்பிடுவதும், செவ்வாயைப் போலச் செயல்படும் கேதுவை முக்கால் பாபர் சொல்லாமல் முழுப் பாபர் என்பதிலும் ஏதோ ஒரு சூட்சுமம் மறைந்திருக்கிறது. அது என்ன என்பதை பரம்பொருள்தான் நமக்கு உணர்த்தி அருள வேண்டும்.

அதேபோல ராகு கெட்ட நிலைமைகளில் இருந்து தசை நடத்தும்போது ஒருவர் நாத்திகவாதியாகவும் இருப்பார். இதுபோன்ற நிலைமைகளில் ஒருவரை கடைநிலை மக்களுடன் பழக வைப்பது, சேரிகளுக்குள் செல்ல வைப்பது போன்ற விஷயங்களை ராகு, கேதுக்கள் செய்வர்.

சுபத்துவமற்ற நிலைமைகளில் ராகு, சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் ஒருவருக்கு கீழ்நிலையில் இருக்கும் பணியாளரின் தொடர்பு அல்லது தன்னை விட வயது மூத்தபெண் அல்லது விதவை போன்றவர்களின் தொடர்பு ஏற்படும்.

அதேபோல சுபத்துவமுள்ள ராகு கடலும், கடல் சார்ந்த இடங்களையும் குறிப்பவர் என்பதால் ராகுதசை புக்திகளில் ஒருவரை வெளிநாடுகளில் கடற்கரை ஓரமாக வேலை செய்ய வைப்பார். கடகத்தில் ராகு இருக்கும் நிலையில் கடகம் ஜலராசி என்பதால் ஒருவருக்கு இந்த பலன் நடக்கும்.
ராகுதசை நடக்கும் நேரத்தில் துர்க்கையின் பேரில் ஈடுபாடு வரும். தாய்மொழியைத் தவிர ஆங்கிலம், உருது, தெலுங்கு ஆகிய அன்னிய மொழிகள் மீது ஆர்வம் வருவதற்கும் மிலேச்ச கிரகம் எனப்படும் இந்த ராகுதான் காரணம்.

ராகுதசை அல்லது புக்தி நடக்கும் போது ஒருவர் அந்நிய மொழிகளைக் கற்பார். உருதை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்களுக்கும் ராகுதான் காரணமாவார். ராகு பாபத்துவம் பெற்றிருக்கும் நிலையில் ஒருவருக்கு தனது சொந்த மதத்தை விட் அன்னிய மதத்தின் மேல் ஈடுபாடு வரும். மதமாற்றத்திற்கு காரணமானவரும் ராகுதான்.

சுபத்துவமாகி ராகு நன்மைகளைச் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அன்னிய மத, இன, மொழி நண்பர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். இவர்களின் மூலம் கூட்டுத்தொழில் அமைந்து ஜாதகர் உயர்வார். ராகு பாபத்துவம் பெற்றிருப்பின் பலன்கள் தலைகீழாக இருக்கும்.

அன்னிய மதம் அல்லது இனத்தில் திருமணம் செய்து கொள்ள வைப்பதும் ராகு,கேதுக்கள்தான். ஏழாமிடத்திலோ, ஏழுக்குடையவனுடனோ சம்பந்தப்படும் பாபத்துவ ராகு ஒருவருக்கு அன்னிய மத, குறிப்பாக இஸ்லாமிய வாழ்க்கைத் துணையையும், கேது கிறித்துவ வாழ்க்கைத் துணையையும் தருவார்கள்.

சுபத்துவம் பெற்ற ராகுவின் தசை நடக்கும்போது நுணுக்கமான அறிவும், நமது சாஸ்திரங்களில் மறைந்துள்ள சூட்சும விஷயங்களை உணரும் ஆற்றலும் கிடைக்கும். இதுபோன்ற நிலைகளில் ராகு,கேதுக்களின் தசை,புக்தி நடக்கும் போது ஒருவருக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் வரும் . ஜோதிடம் கற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். சிலநிலைகளில் ராகு,கேதுக்களின் புக்தி. அந்தரம் முடிந்தவுடன் அந்த ஆர்வம் போய் விடும்.

நீடித்த ஜோதிட ஆர்வத்திற்கோ அல்லது ஜோதிடர் ஆவதற்கோ பலநிலைகளில் ராகு அல்லது கேது சுபத்துவமோ, சூட்சுமவலுவோ அடைந்திருக்க வேண்டும். ஆயினும் ஒருவர் ஜோதிடத்தை தொழிலாகக் கொள்வதற்கும் அதில் உயர்நிலைக்குச் செல்வதற்கும் ராகுவின் தயவு அவசியம் தேவை.

ராகுவின் செயல்பாடுகள் என்ன?

ராகுவின் முக்கிய செயல்பாடுகளாக நமது மூலநூல்கள் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகின்றன.

மறைமுகமான தனலாபம், சாதுர்யமாக ஏமாற்றுதல், சமூகத்தில் பிரபலம், அதிகாரம், கூட்டத்தில் தனித்துத் தெரிதல், சினிமா, துர்க்கை, கோமேதகம், தென்மேற்குத்திசை, ருத்ரன், குதர்க்கம், கடைநிலையில் இருப்பவர்கள், சொகுசு வாழ்க்கை, உயர்தர வாகனம், சூதாட்டம், தாழ்வு மனப்பான்மை, அடிபட்ட வீக்கமும் அதனால் வரும் வலியும், உளுந்து, ஆடு

வடக்கு நோக்கிய பயணம், காடு, மலை, ஜோதிட அறிவு, மாந்த்ரீகம், வெளிநாட்டு வாசம், இனம் தெரியாத கலக்கம், பாம்பு, வேறுமொழி கற்றுக் கொள்ளுதல், மிரட்டிப் பணம் பெறுதல், எலும்புகள், கீழ்நிலையில் இருப்பவர்களின் தொடர்பு, ஊர்ந்து செல்லும் விஷப்பூச்சிகள், தோல்நோய், கெட்டகனவு, சிவவழிபாடு, தூரப்பயணம், டிரைவர், ஓடிக் கொண்டே இருத்தல்,

தாமத திருமணம், தந்தைவழிப் பாட்டன், பாட்டி, சுத்தம் இல்லாத நிலை, தற்கொலை, மனநோய், விதவையுடன் உறவு, குடிப்பழக்கம், சோரம் போகுதல், இயங்கிக் கொண்டே இருக்கும் வேலை, மேக்கப் போடுதல், அழகுக் கலை நிபுணர், காமிரா செல்போன் போன்ற கருவிகளைக் கையாளுதல், அரபுநாடுகள் ஆகியவை.

ராகுவிற்கான திருத்தலங்கள் - பரிகாரங்கள் என்ன?

அடிக்கடி நான் குறிப்பிடுவதைப் போல ராகுவை மூலவராகவும், கேதுவை அன்னையாகவும் கொண்ட திருக்காளத்தி ராகு,கேதுக்களுக்கான முதன்மைப் பரிகாரத்தலம் ஆகும். ராகு,கேதுக்கள் தோஷ அமைப்பில் இருக்கும்போது, தோஷத்தின் அளவிற்கு ஏற்ப, ஸ்ரீகாளஹஸ்தியில் சூரிய அஸ்தமனம் முதல் இரவு தங்கி சர்ப்ப சாந்தி பூஜைகள் மற்றும் ருத்ராபிஷேகம் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற திருத்தலங்களும், அருள்மிகு நாகநாதர், நாகவல்லி என்ற பெயரில் அருள்பாலிக்கும் அனைத்து ஆலயங்களும், சுயம்புவாகத் தோன்றிய புற்றுக்கோவில்களும் ராகு-கேது தோஷ பரிகாரத் தலங்கள்தான்.


குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ராகுதசை. புக்தி நடக்கும்போது குடும்பத்தினர் அனைவரும் சூலினி துர்கா ஹோமத்தில் கலந்துகொள்வது கண்கண்ட பரிகாரம். இந்த ஹோமத்தினை சென்னை மயிலாப்பூர் அருள்மிகு வெள்ளீஸ்வரன் ஆலயத்திலும், வேலூர் வாலாஜாபேட்டை அருள்மிகு தன்வந்திரி ஆலயத்திலும் செய்கிறார்கள். 


( ஜூன் 17 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

No comments :

Post a Comment