Monday, 27 March 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (27.03.2017 - 02.04.2017)


 இந்த வாரம் எப்படி?

 மேஷம்:

இரண்டுக்குடைய தனாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று, ஒன்பதுக்குடைய குருவின் பார்வையில் இருப்பதால் மேஷராசிக்கு இது யோகவாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதும் பெண்களால் செலவுகளும் இருக்கும். அலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் வெகு சீக்கிரம் குணமடைவார்கள்.


புனிதயாத்திரை செல்ல ஆர்வம் காட்டுவீர்கள். இளையபருவத்தினருக்கு வேலை விஷயமான பயணங்கள் இருக்கும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். சொத்து பிரச்சினை, பங்காளித் தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமான முடிவிற்கு வரும். கோர்ட் விவகாரங்கள் மூலம் இனிமேல் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

அம்மாவின் வழியில் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். எதிர்பார்த்திருந்த தாய்வழி சீதனங்கள் சொத்துக்கள் தற்பொழுது கிடைப்பதற்கான வழி பிறக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். ராகுபகவான் ஆறாமிடத்தில் வலுவாக இருப்பதால் பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் மேஷ ராசிக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள் அதாவது ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சமடைவதாலும், ராசியைக் குருபகவான் பார்ப்பதாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லவைகளுக்கான மாற்றங்கள் உண்டாகும் வாரம் இது. சிலருக்கு பெண்களின் விஷயத்தால் லாபங்களும், வருமானங்களும் இருக்கும். இந்த வாரம் வேலை செய்யும் இடங்களில் நெருக்கடிகள் தோன்றலாம். வேலை தருபவரிடமோ, முதலாளியிடமோ கருத்துவேறுபாடுகள் தோன்றி வேலையை விட்டு விடக்கூடிய சூழல் உருவாகும். எதிலும் அவரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.

எட்டில் இருக்கும் சனிபகவான் உங்களை ஆத்திரமூட்டி பார்ப்பார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பணி புரியும் இடங்களில் வீண் அரட்டைகள் வேண்டாம். தனாதிபதி வலுப்பெறுவதால் பணவரவு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். அதேநேரத்தில் சேமிக்க முடியாத அளவுக்கு விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும்.

வருமானத்தை மனைவியின் கையில் கொடுத்து பத்திரப் படுத்தினால் மட்டுமே செலவிலிருந்து தப்பிக்க முடியும். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக போக்கு காட்டிக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பு வீடு தேடி வந்து கிடைக்கும். டெக்ஸ்டைல், கார்மெண்ட் போன்ற ஆடை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்தவாரம் நல்ல லாபம் உண்டு. சிலருக்கு தந்தை வழியில் வீண் விரயங்களும், செலவுகளும் அப்பாவினால் மனக்கஷ்டங்களும், விரோதமும் உண்டு. தந்தையுடன் பிறந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

மிதுனம்:

வார இறுதியில் ராசிநாதனும், ஆறுக்குடைய செவ்வாயும் இணைகின்ற அமைப்போடு, யோகாதிபதி சுக்கிரன் உச்சமடைந்த வாரம் இது என்பதால் மிதுன ராசிக்காரர்களின் அனைத்து விஷயங்களிலும் அவரவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்லதாக நடக்கும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் ராசியை சனி பார்ப்பதால் அனைத்திலும் குழப்பங்கள் உள்ள வாரமாகவும் இது இருக்கும். சிலர் ரகசியமான வேலைகளை செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

சனி பார்வை ராசியில் விழுவதால் டென்ஷனும், படபடப்புமாக இருப்பீர்கள். காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். எல்லோரையும் சந்தேகப்படும் சூழ்நிலை வரலாம். பிடிவாதமான போக்கை கடைப்பிடிப்பீர்கள். தாயார் வழியில் செலவுகளும், விரயங்களும் ஏற்படும். ஹவுசிங் லோன் கிடைக்கும். தொழில் வியாபார வேலை இடங்களில் சிரித்துப் பேசி உங்களை கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். எதிலும் கவனமாக இருங்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக எவரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.

வயதான தாயாரின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். மருத்துவ விஷயங்களுக்கு இந்த வாரம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். திரவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள், துறைமுகம் சம்பந்தபட்டவர்களுக்கு பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பணிபுரியும் இடங்களில் நல்ல திருப்பங்கள் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் தொல்லைகள் வரும். அலுவலகங்களில் வீண் அரட்டையை தவிர்க்கவும்.

கடகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சந்திரன் நல்ல நிலைமைகளில் இருப்பதாலும் யோகாதிபதிகள் செவ்வாய், சூரியன், குரு ஆகியோர் நன்மை தரும் அமைப்பில் உள்ளதாலும் இந்த வாரம் கடக ராசிக்கு கெடுபலன்கள் எதையும் தராத நல்ல வாரமாகவே இருக்கும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் சிலருக்கு காரணமின்றி கோபமும் எரிச்சலும் வருவதற்கு வரும். பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள். நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

ஐந்து ஒன்பதுக்குடையவர்கள் சஷ்டாஷ்கமாக இருப்பதால் எத்தனை வருடம் பழகியவராக இருந்தாலும் மனதில் இருப்பதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்லுங்கள். சாதகமற்ற நேரத்தில் பணிவு காட்டுவதால் ஒன்றும் குறைந்து போக மாட்டீர்கள். பெண்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். சிலருக்கு உடல் ரீதியான சிறு தொந்தரவுகள் இருக்கலாம் என்பதால் உடல் நலத்தில் அக்கறை வையுங்கள்.

திரைப்படக் கலைஞர்களுக்கு மேன்மை வரும். வயதான தாயாரை அக்கறையுடன் கவனியுங்கள். ஒரு அலுவலகத்திலோ அல்லது ஒரு அமைப்பிலோ தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தனது கீழே இருப்பவர்களை நம்பாமல் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை நம்ப வேண்டாம். சுக்கிரன் உச்சம் பெறுவதால் சிலருக்கு நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்துவது போன்ற விஷயங்கள் நடக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் உச்ச சுக்கிரனுடன் இணைந்திருப்பதாலும் சுக்கிரனே உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற பத்தாமிடத்திற்கு அதிபதி என்பதாலும் இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் முறை சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும் வாரமாக இருக்கும். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மபலம் கூடும். எதிலும் நம்பிக்கையாக இருக்க முடியும். தாழ்வுமனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

குருபகவான் இரண்டில் அமர்ந்து ராசிநாதனைப் பார்ப்பதால் இந்த வாரம் நல்ல வருமானங்கள் உண்டு. பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வாரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. மக்களைப் பற்றி மனக்கவலைகள் ஐந்தாமிட சனியால் வரும் என்பதால் குழந்தைகளுடன் தகாதவர்கள் யாராவது பழகுகிறார்களா என்பதில் அக்கறை தேவை.

உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். 27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி காலை 10 மணி முதல் 29-ம் தேதி மதியம் 12 மணி வரையும் சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

கன்னி:

கன்னிநாதன் புதன் எட்டில் மறைந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். ராஜயோகாதிபதி சுக்கிர பகவான் உச்சம் பெற்று ராசியை பார்க்கிறார். இந்த இரண்டு நிலைகளும் கன்னிக்கு சாதகமான அமைப்புகள் என்பதால் இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் உங்கள் ராசிக்கு சொல்லுவதற்கு இல்லை. இந்த வாரம் கைப்பொருளின் மேல் கவனம் இருக்கட்டும். பொருட்கள் தொலைந்து போவதற்கோ, திருட்டு நடப்பதற்கோ, விரயம் ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.

சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் சிறு காய்ச்சல் என்றாலும் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை வைக்க வேண்டும். சிறுசிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்வதில் யோசித்துச் செய்யவும். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். 28, 29 ஆகிய நாட்களில் பணம் வரும். 29-ம் தேதி மதியம் 12 மணி முதல் 31-ம் தேதி மதியம் 1 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையை அடைந்திருப்பதால் இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவைகள் நடக்க துவங்கும் வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் சுக்கிரன் ஆறாம்வீட்டில் வலுப்பெறுவதால் உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ளும் சில விஷயங்களை இப்பொழுது செய்வீர்கள். செவ்வாய் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் தேவையில்லாமல் எதையாவது பேசி வேண்டப்பட்டவர்களை மனம் நோக அடிப்பீர்கள்.

பதினோறாமிட ராகுவால் சிலருக்கு வெளிமாநிலம் வெளிநாடு அமைப்புகளால் நன்மைகள் கிடைக்கும். எப்படி இந்த வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத மறைமுக தனலாபங்களை ராகுபகவான் தருவார். அரசு சம்பந்தப்பட்டவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், வெரிபிகேசன் துறை தபால் மற்றும் கூரியர் துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள்.

பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வாரம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வாரம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. வேலைக்காரர்களின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். பணம் கொடுத்து விடுவதில் யாரையும் நம்ப வேண்டாம்.

விருச்சிகம்:

ஏழுக்குடைய சுக்கிரன் உச்சம் பெறுவதால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத்துணை விஷயத்தில் செலவுகள் செய்யும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் துணைவரால் சந்தோஷமும், குடும்பத்தில் உற்சாகமும் இருக்கும். தற்போது நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் கரை தெரிய ஆரம்பிக்கும். ஒரு நம்பிக்கை பிறக்கும். எதிர்காலத்தைப் பற்றிய பிடிப்பு வரும். எனவே எதற்கும் கவலைப்பட வேண்டாம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்லகாலம் பிறந்து விட்டது.

என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் தனஸ்தானம் வலுவாக இருப்பதால் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்பதால் இந்த வாரத்தின் தடைகளையும் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். இதுவரை தன்னம்பிக்கை இன்றி இருந்து வந்த சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். வேலைசெய்யும் இடங்களில் சுமுக சூழ்நிலை இருக்கும்.

வியாபாரிகளுக்கு போட்டியாளர்கள் உருவாகலாம். எனவே கொள்முதல், விற்பனை ஆகியவற்றில் நிதானமாக இருப்பது நல்லது. புதுவீடு வாங்குவதற்காக பழைய வீட்டை விற்று, வீட்டை விற்ற பணம் வேறு வகையில் செலவாகி இருந்த சொந்தவீடு போய் வாடகை வீட்டில் குடியிருக்க நேரும் காலம் இது. எங்கும் எதிலும் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. இனிமேல் வேலை, தொழில் விஷயங்களில் நன்மைகள் உண்டு. இதுவரை இருந்த விரயங்கள் தடுக்கப்பட்டு இனிமேல் நல்ல விஷயத்திற்காக மட்டுமே செலவு செய்வீர்கள்.

தனுசு:

ஆறுக்கதிபதி சுக்கிரன் நான்காம் வீட்டில் சூரியனுடன் உச்சம் பெறுவதால் தந்தைவழி சொத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் நல்ல திருப்பங்களும் இருக்கும். இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் போன்ற விஷயங்கள் வரும். வருமானத்தைச் சேமிக்க முடியாமல் இந்த வாரத்திலேயே செலவும் செய்ய வேண்டி இருக்கும். புதிய முயற்சிகளையும் தொலை தூர பிரயாணங்களையும் தவிர்க்கவும்.

வெளிநாட்டு வேலை அல்லது இங்கேயே வேலை வாங்கித் தருகிறேன் என்று பணம் கேட்கும் ஏஜண்டுகளை நம்பி கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டாம். ஏமாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் பத்து தடவை யோசித்து செய்யுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் எதிலாவது சனி மாட்டி வைப்பார். எதிலும் அவசரப்படாதீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் குறிப்பிட்ட சிலர் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பேச்சினால் தொழில் செய்யக்கூடிய ஆசிரியர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு வீடுமாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கும். எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை இந்தவாரம் கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் பங்குச்சந்தை விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது.

மகரம்:

ராசிநாதன் பனிரெண்டில் மறைந்தாலும் யோகாதிபதி சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் இந்தவாரம் எல்லா விஷயங்களும் மகர ராசிக்கு இழுத்துக் கொண்டே போய் இறுதியில்தான் நிறைவாக முடியும் என்பதால் பொறுமை தேவைப்படும் வாரமாக இது இருக்கும். பயணங்களால் லாபங்கள் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. தந்தைவழியில் எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இனிமேல் கைகூடி வரும்.

உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனிதயாத்திரை போகமுடியும். குறிப்பிட்ட சிலருக்கு ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். கிரகங்கள் யோக நிலையில் இருப்பதால் இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்தவாரம் போட்டியாளர்கள் நெருக்கடிகளை தருவார்கள்.

அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். சாதாரணமாக சிறிய விஷயம்தானே என்று அலட்சியப்படுத்தும் ஒரு விஷயம் பூதாகரமாக உருவெடுத்து நீடித்த தலைவலியை தரும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கண்டிப்பும் கவனமாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் ஏதேனும் குழப்பங்கள் வரலாம். உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

கும்பம்:

ராஜயோகாதிபதி சுக்கிரன் உச்சநிலையில் இருப்பதால் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி பணவரவுகளும், குழந்தைகளால் சந்தோஷமான செய்திகளும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனிமேல் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும்.

ராசியின் பாக்கியாதிபதி உச்சமாகி ஜீவனாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று தர்மகர்மாதிபதி யோகம் உண்டாவதால் கும்ப ராசிக்காரர்கள் நினைப்பதை நடத்தி காட்டி தங்களின் ஆளுமை திறனையும், அதிர்ஷ்டத்தையும் சுற்றி உள்ளவர்களுக்கு எடுத்து காட்டும் வாரமாகவும் இது இருக்கும். இதுவரை எதிலும் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் படிப்படியாக போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய வாரம் இது.

வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் ஆசி பெறுவீர்கள். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.

மீனம்:

எட்டுக்குடைய சுக்கிரன் ராசியில் உச்சமாகி, அவருடன் ஆறுக்குடைய சூரியனும் இணைந்து ராசியில் இருப்பது சாதகமற்ற நிலை என்று தோன்றினாலும் ராசிநாதன் குரு இருவரையும் பார்ப்பதால் எவ்வித கெடுதல்களும் மீனராசிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் வலுப்பெற்ற செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருப்பதால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உயரமான இடங்களுக்கு செல்லும் போது கவனம் தேவை. புதிய முயற்சிகள், முதலீடுகளை இந்த வாரம் தவிர்க்கவும்.

நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாரம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி சிந்தனைகள் செயல்கள் கை கொடுக்காது. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும்.

வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

No comments :

Post a Comment