Tuesday, 21 March 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 127 (21.3.2017)

எல். என். பெருமாள், மருங்கூர்.

கே
   குரு
சந்
ராசி
சூ,பு
சு,சனி
செ,ல
ரா


கேள்வி :

அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவச் செலவு அதிகமாக உள்ளது. உயிருக்கு ஆபத்து ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. வீட்டில் நாங்கள் மூன்று பேர். ஈசனின் பிறந்த நாளான திருவாதிரை நட்சத்திரத்தில்தான் பிறந்திருக்கிறோம். பிரதோஷம் உள்ளிட்ட எல்லா வழிபாடுகளையும் முறையாகச் செய்கிறோம். இருந்தாலும் துன்பம் குறைந்த பாடு இல்லை. வேலைக்குச் செல்ல முடியாமல் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று தினமும் பயப்படுகிறேன். எனது உடல்நிலை, ஆயுள்பற்றி தெரிவிக்கவும்.

பதில்:

(சிம்ம லக்னம், மிதுன ராசி. 1-ல் செவ். 3-ல் ராகு. 10-ல் குரு. 12-ல் சூரி, புத, சுக், சனி. 25.7.1976, காலை 9.35, நாகர்கோவில்)

கடந்த 18 வருடங்களாக சிம்மத்திற்கு கடன் அல்லது நோயைக் கொடுக்கக்கூடிய சனிதசை நடந்து கொண்டிருக்கிறது. லக்னாதிபதி சூரியன் சனியுடன் சேர்ந்து 12-ல் மறைந்து பலவீனமாக உள்ள நிலையில், தசாநாதன் சனி தனது நோய் ஸ்தானமான ஆறாம் பாவத்தை பார்த்து வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார். லக்னத்திற்கோ, ராசிக்கோ சுபர் சம்பந்தம் எதுவும் இல்லாமல் செவ்வாய் லக்னத்தில் அமர்ந்திருப்பதால் அதிகமாக உங்களுக்கு நோய் பாதிப்பு இருக்கும். குருவும், சுக்கிரனும் ஆறாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதும் இதை உறுதி செய்கிறது.

வர இருக்கும் நவம்பர்மாதம் சனிதசை முடிவது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம். எட்டுக்குடைய குருபகவான் அம்சத்தில் நீசமாகி, சூரியன் பலவீனமாக உள்ளதால் ஏற்கனவே நான் மாலைமலரிலும், இந்த கேள்விபதில் பகுதியிலும் எழுதியுள்ள சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். பிரதோஷம் போன்ற வழிபாடுகள் உங்கள் ஆயுளை நீட்டித்து தரும். கவலை வேண்டாம்.

எஸ். துரைராஜ், கோட்டார்.

கேள்வி :

என்னுடைய ஒரேமகன் ஒரு பெண்ணை விரும்புகிறான். இருவருக்கும் பொருத்தம் இல்லை. இந்த திருமணத்தை நடத்தக் கூடாது என்று பல ஜோதிடர்கள் சொல்லிவிட்டார்கள். அந்தப் பெண்ணும் இவனை விட இவன் வருமானத்தைத்தான் அதிகமாக விரும்புகிறாள். மகனை எங்களிடம் இருந்து பிரிப்பதற்கு பல முயற்சிகள் செய்கிறாள். ஒரே மகனான இவன் அந்தப் பெண்ணின் காரணமாக எங்கள் மேல் பாசம் இல்லை என்றும், அவள் இல்லாமல் வாழ முடியாது என்றும் சொல்கிறான். இந்த விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்பது தெரியமல் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம். தயவுசெய்து நல்ல வழி காட்டி ஆலோசனை வழங்க வேண்டுகிறோம். உங்களை நம்பி காத்து கொண்டிருக்கிறோம்.

பதில்:

ஜோதிடத்தில் காந்தர்வம் எனப்படும் இரு மனங்கள் இணைந்து ஒருவரை ஒருவர் விரும்புகின்ற காதல் என்கின்ற நிலைக்கு பொருத்தம் பார்க்க தேவையில்லை என்ற விதிவிலக்கு இருக்கின்றது. ஆகவே மகனின் காதலைப் பிரிப்பதற்கு ஜோதிடத்தின் மேல் பழியை போட வேண்டாம்.

ஒரே மகனைப் பெற்று விட்ட எல்லோருக்கும் வருகின்ற பிரச்சினை தற்போது உங்களுக்கும் வந்து விட்டது. மகனை விட மகனின் வருமானத்தை தான் அந்தப் பெண் விரும்புகிறாள் என்பதை எந்த ஸ்கேல் வைத்து அளந்து பார்த்தீர்கள்? எல்லாப் பெண்களும் தனக்கு வருபவன் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கைதானே? சரி... நீங்கள் பார்த்து மணமுடிக்கும் பெண்ணும் அவன் பணத்தை மட்டும் பார்த்தால் என்ன செய்வீர்கள்?

எல்லோரும் ஒருநாள் நம்முடைய குழந்தைகளை விட்டு விட்டு போகத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் இல்லவே இல்லை. பெரியவர்களாகிய நாம் சின்னவர்களின் ஆசை நியாயமானதாக இருந்து அது அவர்களுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருந்தால் அதை நிறைவேற்றித் தரவேண்டுமே தவிர தடைக்கல்லாக இருக்கக் கூடாது. இங்கே மகனின் மகிழ்ச்சி மட்டுமே நம் கண்ணிற்கு தெரிய வேண்டும். மற்ற எவையும் குறுக்கே நிற்கக் கூடாது. அப்படி மகன் தேர்ந்தெடுத்தது தவறாகப் போனால் அது அவனது கர்மா என்றுதான் சொல்லப்படும். மேலும் நம்முடைய சமூகத்தில் காதலில் ஆணுக்கு சேதங்கள் அதிகம் இல்லை. பெண்ணைப் பெற்றவன்தான் பயப்பட்டாக வேண்டும்.

ஒவ்வொரு தகப்பனுக்கும் மகனுடன் கடைசி வரை இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அதற்காகத்தான் பெற்று வளர்க்கிறோம். நீங்கள் பார்க்கிற பெண்ணும் கல்யாணம் முடிந்த மறுநாள் அப்பா அம்மாவை விட்டுவிட்டு வா என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? வருகின்ற மருமகளை நிஜமாகவே மறு மகளாக ஆக்கிக் கொண்டால் என்ன பிரச்னை வரப் போகிறது?

கல்யாணம் என்பது இருவரைச் சேர்ப்பது என்றாலும் வேறுவகையில் இருவரைப் பிரிவதுதான். அந்தப் பெண் தன்னுடைய அப்பா அம்மாவை பிரிந்துதான் ஆகவேண்டும். உங்கள் மகனும் தன்னை தகப்பனாக்கப் போகும் அந்தப் பெண்ணிற்காக மனதளவிலாவது தகப்பனை விட்டுப் பிரிந்து அவளுக்கு முதலிடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். உங்கள் கல்யாணத்திற்குப் பிறகு உங்கள் அப்பாவை விட்டு நீங்கள் விலகத்தானே செய்தீர்கள்?

ஆரம்பத்திலேயே அந்தப் பெண்ணின் மேல் உங்களுக்கு ஈகோவும், வெறுப்பும் வந்து விட்டது. இனிமேல் யார் என்ன சொன்னாலும் அது மாறாது. இதுபோன்ற பெற்றோர்கள் மாறவும் மாட்டீர்கள். வரப் போகிறவளும் சிறு பெண்தான். மகளைப் போன்றவள்தான். அவளிடம் உண்மையான அன்பைக் காட்டினால் உங்கள் மகனை விட அவள்தான் உங்களை நன்றாக கவனிப்பாள். விட்டுக் கொடுக்க மாட்டாள். மருமகளை மறு மகளாகவே ஆக்கிக் கொண்ட எத்தனையோ குடும்பங்கள் குதூகலமாகவே இருக்கின்றன.

பி. கணபதிசுப்பிரமணியன், சென்னை.

சந்,சூ,பு
செ,கே
ராசி
வி
சு
சனி,ரா


கேள்வி :

சிறுவயதில் பெற்ற தாயை இழந்து தகப்பனார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் சித்தப்பா வீட்டில் வளர்ந்தேன். எனக்கு இதுவரை 38 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. எப்போது நடைபெறும் என்று பதில் அளிக்க வேண்டுகிறேன்.

பதில்:

(மேஷ லக்னம், கும்ப ராசி. 4-ல் குரு. 5-ல் சனி, ராகு. 10-ல் சுக்.11-ல் சூரி, புத, செவ், கேது. 26.2.1979, காலை 10 மணி, திருவாரூர்)

ராசிக்கு 7-ல் சனி, ராகு. ராசியில் செவ்வாய் அமர்வு. சனி, செவ்வாய் நேருக்கு நேர் பார்வை போன்ற கடுமையான களத்திரதோஷ அமைப்புகளை விட குருவும், சுக்கிரனும் நேருக்கு நேராக 5 டிகிரி வித்தியாசத்தில் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதாலும், கடுமையான புத்திரதோஷம் இருப்பதாலும் உங்களுக்கு திருமணம் தாமதமாகும்.

தற்போது லக்னத்திற்கு ஆறு, ராசிக்கு எட்டு ஆதிபத்தியமுடைய புதனின் புக்தி நடப்பதால் 40 வயதிற்கு பிறகே உங்களுக்கு திருமணம் ஆகும். மாலைமலரில் நான் ஏற்கனவே எழுதியுள்ள செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

ஆர். ஜெகந்நாதன், விருதுநகர்.

கே
வி
ராசி
செவ்
சனி
சூ,பு
சுக்
சந்
ரா


கேள்வி :

வாழும் வழியைக் கூறி வாழ வைக்கும் குருவே வாழி.... தொழில், வேலைவாய்ப்புகள் சரியாக அமையாமல், தினமும் குழப்பங்களுடன் மிகவும் கஷ்டப்படுகிறேன். பிள்ளைகளை நல்ல நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்வு சிறக்க ஏதேனும் பரிகாரம் உண்டா? என்ன தொழில் செய்யலாம் என்று கூறி வாழ்க்கைக்கு விளக்கேற்றுங்கள்.

பதில்:

(மகர லக்னம், விருச்சிக ராசி. 3-ல் கேது. 6-ல் குரு. 7-ல் செவ். 8-ல் சனி. 12-ல் சூரி, புத, சுக். 7.1.1978, காலை 8.20, விருதுநகர்.)

கடந்த சில வருடங்களாகவே உங்களின் கேட்டை நட்சத்திரத்திற்கு கடுமையான ஏழரைச்சனியின் பலன்கள் நடப்பதோடு 2013 முதல் 2019 வரை மகர லக்னத்திற்கு நன்மைகளைச் செய்யாத அஷ்டமாதிபதி சூரியனின் தசையும் நடந்து கொண்டிருக்கிறது. சூரியன் பனிரெண்டாம் வீட்டில் மறைந்து குருவின் பார்வையில் இருப்பதால் பெரிய கெடுதல்களை செய்ய வாய்ப்பில்லை. ஆனாலும் இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் தொழில் முயற்சிகள் அனைத்தும் சரி வராது. விரையங்கள் இருக்கும்.

ஜாதகப்படி லக்னத்திற்கு பத்திற்குடையவன் பலவீனமானதோடு ராசிக்கு பத்தில் சனி இருப்பதும் நல்ல அமைப்பு அல்ல. எனவே கொஞ்சகாலத்திற்கு வேலைக்கு போவது நல்லது. இயலாத சூழ்நிலையில் அதிக முதலீடு இல்லாமல் மூளையையும், சொந்த உழைப்பையும் மட்டும் பயன்படுத்தும் தொழிலை மட்டும் செய்யவும்.

லக்னாதிபதி சனி எட்டில் மறைந்து, லக்னத்திற்கோ, ராசிக்கோ சுபர் பார்வை இல்லாததாலும் ஜீவனாதிபதி சுக்கிரன் பனிரெண்டில் உள்ளதாலும் ஒருமுறை குடும்பத்துடன் கும்பகோணம் கஞ்சனூர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். சனிக்கிழமை தோறும் இரவு படுக்கும் போது சிறிதளவு எள்ளை தலைக்கடியில் வைத்து படுத்து மறுநாள் சாதத்தில் கலந்து காகத்திற்கு வைக்கவும். இதனை தொடர்ந்து செய்யச் செய்ய தொழில் நிலைமைகள் சீராகும். குழந்தைகள் ஜாதகம் யோகமாக இருப்பதால் அவர்களது எதிர்காலம் மிகவும் நன்றாக இருக்கும்.

ராகுவிற்கான ராசிக்கல்லை அணியலாமா?


சிந்துபைரவி, கொன்றைக்காடு.

கேள்வி :

கடக லக்னம், கன்னி ராசிக்கு ராகுதசை யோகதசையா? அவயோக தசையா? சனியின் வீட்டில் இருக்கும் ராகுவை சனி பார்ப்பது ராகுவிற்கு பலமா? பலவீனமா? கடகமும், கன்னியும் ராகுவிற்கு பிடித்த வீடுகள் என்று தாங்கள் எழுதியுள்ள கட்டுரையில் படித்துள்ளேன். ராகுதசை நடக்கும் போது ராகுவிற்கான நவரத்தின மோதிரம் அணியலாமா? அப்படி என்றால் எந்த ராசிக்கல், எந்த விரலில் அணியலாம்?

பதில்:

எத்தனை பெரிய யோகம் செய்யும் இடத்தில் இருந்தாலும் கடக, சிம்ம லக்னக்காரர்கள் ராகுவிற்குரிய கல்லான கோமேதகத்தை அணியவே கூடாது. இங்கே பலருக்கும் ராசிக்கற்களின் தத்துவம் புரியவில்லை. பொதுவாகவே ராகு-கேதுக்களுக்குரிய கற்களை விதிவிலக்கான சூழலைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அணிவது தவறு. அதிலும் இணையவே முடியாத இரண்டு துருவங்களான - ஒரு நேர்கோட்டின் இரண்டு எதிரெதிர் முனைகளான ராகு-கேதுக்களை ஒரே மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது மகா பெரிய தவறு.

ராசிக்கற்கள் என்பவை ஒரு கிரகத்தின் வலுவை கூடுதலாக்கி கொடுப்பவை. ஒரு கிரகம் நமக்கு கெடுபலனை தர விதிக்கப்பட்ட அவயோக கிரகமாக இருக்கும் போது அதனுடைய தசையில் அந்தக் கிரகத்தின் கல்லை அணிந்தால் கெடுபலன்கள் இன்னும் கூடுதலாகத்தான் நடக்குமே தவிர குறையவே குறையாது. ஆனால் இங்கே சனிதசை நடக்கிறதா? அது யோகம் செய்ய வில்லையா? உடனே நீலம் போட்டுக் கொள் என்று யோசிக்காமல் சொல்லுவது தான் நடக்கிறது.

எந்த ராசிக்கல் அணிய வேண்டும் என்று கணிப்பதற்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாவது அனுபவம் இருக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட கிரகம் அவருக்கு நன்மைகளைச் செய்யுமா? தீமைகளை செய்யுமா? என்பதைக் கணித்து மேற்படி கிரகம் வலுவாக இருக்கிறதா? வலுவின்றி இருக்கிறதா என்பதை முடிவு செய்து சொல்ல முடியும்.

இதுபோன்ற கணிக்கும் திறன் இல்லாமல் பொத்தாம்பொதுவாக நீ மிதுன ராசியா? மரகதப்பச்சை போட்டுக் கொள் என்று சொல்லும்போது போடுபவர் விருச்சிக லக்னமாக இருந்தால், எட்டுக்குடையவரின் கல்லை அணிந்தவுடன் விபத்து, கடன், நோய், எதிரி, வழக்கு போன்ற தொல்லைகளுக்கு ஆளாவார். எனவே ராசிக்கற்கள் விஷயத்தில் நீண்ட அனுபவமுள்ள, முறையான ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு அணிவது நல்லது.

கடகநாதன் சந்திரனுக்கு ராகு பகை என்பதால் ராகு மூன்று, பதினொன்றாம் இடங்களை தவிர வேறு எங்கு இருந்தாலும் பெரிய நன்மைகளை செய்யாது. இந்த இடங்களில் ராகு இருந்தாலும் அவருக்கு வீடு கொடுக்கும் கிரகம் சுப வலுப்பெற்று இருக்க வேண்டும். ராகுவை செவ்வாய், சனி பார்ப்பது நல்லது அல்ல. கடகமும், கன்னியும் ராகுவிற்கு பிடித்த வீடுகள் என்றாலும் கடக லக்னத்திற்கோ, கன்னிராசிக்கோ ராகுவால் நன்மைகள் கிடைக்க வேண்டுமானால் ராகுவிற்குரிய விதிகளின்படி அவர் இருக்க வேண்டும்.

No comments :

Post a Comment