Wednesday, March 1, 2017

தனுசு: 2017 மார்ச் மாத பலன்கள்

தனுசு:

ராசிநாதன் குருவின் கேந்திர பலமும், மாத முற்பகுதியில் ஐந்தாமிடத்தில் ஆட்சிநிலையில் அமர்ந்திருக்கும் செவ்வாயின் வலுவும் தனுசு ராசிக்கு மேன்மைகளை தருவதோடு, மூன்றில் இருக்கும் கேதுவின் மூலம் உங்களின் செயல்திறனும், மன உறுதியும் அதிகரிக்கும் என்பதால் மார்ச் மாதம் நீங்கள் சாதனைகளை செய்யும் மாதமாக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும்.

சனிபகவான் ராசியில் இருப்பது சிறப்பான நிலை அல்ல என்றாலும் மாத பிற்பகுதியில் பாக்கியாதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை கிடைப்பதால் எதிர்மறைபலன்கள் நடந்தாலும் அவை அனைத்தும் சூரியனை கண்ட பனி போல உடனே மறைந்து கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி. நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.

தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு.

1,4,5,6,7,13,14,15,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி மதியம் 12 மணி முதல் 10-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள், சொந்த தொழில் செய்பவர்கள் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment