Monday, 20 March 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (20.03.2017 - 26.03.2017)


இந்த வாரம் எப்படி?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களின் மன அழுத்தங்களுக்கு காரணமான பிரச்னைகள் அனைத்தும் தீர ஆரம்பிக்கும் வாரமாக இது இருக்கும். அஷ்டமச் சனியின் தாக்கம் இன்னும் கொஞ்சகாலத்திற்கு நீடிக்கும் என்பதால் மேஷத்தினர் உடனே செய்யக்கூடிய எளிய பரிகாரமாக சிறிதளவு எள்ளை சனிக்கிழமை இரவு தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்திற்கு உணவிடுங்கள். கறுப்புநிற நன்றியுள்ள பிராணிக்கு அன்புடன் விருப்பமான உணவு அளியுங்கள்.


பங்குச்சந்தை போன்ற யூகவணிகத்துறையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதாலும் ராகுபகவான் ஐந்தில் இருப்பதாலும் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். கடன் பெற்று வீடு வாங்கும் அமைப்பு உள்ளது. புதிய வாகனம் அமையும். இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும்.

இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வாரம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

ரிஷபம்:

லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராசிநாதன் சுக்கிரன் அமர்ந்து அவரை லாபாதிபதி குரு பார்ப்பதால் இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தனயோகம் உண்டாகி எதிர்பாராத பணவரவுகளும் நீண்டநாட்களாக கிடைக்காமல் இருந்த நிலுவைத் தொகைகள் கிடைக்கும் வாரமாகவும் இருக்கும். ராசிநாதன் சுபவலுவடன் இருப்பதால் இந்த வாரம் வேலை, வியாபாரம், தொழில் போன்ற அமைப்புகளில் நன்மைகளும், முன்னேற்றங்களும் இருக்கும்.

இதுவரை வெளிநாடு வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தவர்களுக்கு விசா கிடைத்து வெளிநாடு செல்வீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரும் வாரம் இது. மாணவர்களுக்கு கல்விக் கூடங்களில் நல்ல சூழ்நிலை இருக்கும். நன்கு பரீட்சை எழுதுவீர்கள். அரசு, தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கும், காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வாரம் நல்லபலன்கள் உண்டு. சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர் பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம். 25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி காலை 9 மணி முதல் 22-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் இந்த நாட்களில் தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் நீசநிலையில் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தடைகள் இருக்கும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் ராசியின் மற்ற யோகாதிபதிகள் சுக்கிரனும், சனியும் வலுவாக இருப்பதால் வாரக்கடைசியில் தடைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் வாரமாகவும் இருக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழில் இருப்பது பாபகிரகம் என்றாலும் அவர் உங்களின் யோகாதிபதி என்பதால் கெடுதல் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.

மேலதிகாரிகளிடம் மோதல் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 22, 23, 24 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி இரவு 9 மணி முதல் 25-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை இந்த நாட்களில் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நடக்க வேண்டிய சுப காரியங்களுக்கான ஆரம்பங்களை கூட இந்த நாட்களில் செய்யக்கூடாது.

கடகம்:

ஒன்பதில் சூரியன் நீசபுதனுடன் இருப்பதால் இந்தவாரம் கடகராசிக்காரர்களுக்கு தந்தையாலோ அல்லது தந்தைவழி உறவினர்களாலோ செலவுகளோ விரையங்களோ இருக்கும். சிக்கனமாக இருக்க வேண்டிய வாரம் இது. வாழ்க்கைத்துணை வழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைப்பேறு தள்ளிப் போன தம்பதிகளுக்கு இந்த வாரம் குழந்தை சம்பந்தப்பட்ட நல்லசெய்தி உண்டு. முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத சிலருக்கு இப்போது திருமணம் உறுதியாகும்..

பொதுவாக கடகத்தினர் நடுநிலை தவறாதவர்களாகவும் நல்ல நீதிமான்களாகவும் இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீகள். விலை போக மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள். இந்தவாரம் அந்தரங்கமான விஷயங்களை அனாவசியமாக யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உயரதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது.

அரசாங்கத் தேர்வுகளில் வெற்றி உண்டு. ஏற்கனவே தேர்வு எழுதி முடிவுகளுக்கு காத்து இருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் தடையின்றி நடக்கும். 21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 27-ம் தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், முதலீடு எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின்னாளில் உங்களுக்கு தலைவலியை தரக்கூடியவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியன் எட்டில் மறைந்தாலும் குருவின் பார்வையில் இருப்பதும், சூரியயோடு சுக்கிரன், சந்திரன் ஆகிய சுபக்கிரகங்கள் சம்பந்தப்படுவதும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபச்செலவுகளும், நன்மை தரும் விஷயங்களுக்கு பணம் செலவு செய்தலும் நடக்கும் என்பதைக் காட்டுகிறது. ஐந்தாம் இடத்தில் இருக்கும் சனி பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளையும், சங்கடங்களையும் தருவார் என்பதால் பிள்ளைகளின் சுபகாரியங்கள் நிறைவேறுவதற்கு தடைகள் உருவாகும்.

சிலருக்கு பிள்ளைகளுடன் விரோதமும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் போவதும் இருக்கும். எந்த நேரமும் படபடப்பாக இருப்பீர்கள். டென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் நீங்கள் மட்டுமே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்குமாதலால் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

தந்தைவழி உறவினர்களிடம் சுமுகஉறவு தடைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்களிடம் கொடுக்கல் வாங்கல் எதுவும் இந்த வாரம் செய்ய வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவி தேடி வரும். தாராளமான பணப்புழக்கம் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயணங்களும், ஞானிகள் தரிசனமும் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தின்படி குரு புக்தி நடப்பவர்கள் நல்ல பலன்களை அடைவீர்கள்.

கன்னி:

ராசிநாதன் புதன் நீசமடைந்திருந்தாலும் அவர் ராசியை பார்ப்பதால் எவ்விதமான கெடுபலன்களும் இன்றி இது நன்மைகள் மட்டுமே உள்ள வாரமாக இருக்கும். இந்த வாரம் மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம். அனைத்தையும் சமாளிப்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.

உடல் நலம் சிறப்பாக இருக்கும் என்பதையும், கடன் தொல்லைகள் நிச்சயம் இருக்காது மற்றும் புதிய கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் தாராளமாக உங்களுக்கு வரப் போகின்றது என்பதையும் கிரகநிலைகள் காட்டுகின்றன. சிலருக்கு சம்பளஉயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

தற்போது இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. அம்மாவால் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள். யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

துலாம்:

ராசிக்கு ஆறாமிடத்தில் பனிரெண்டுக்குடையவன் பரிவர்த்தனை அடைவதால் இந்த வாரம் மறைமுகமான வழிகளில் துலாம் ராசிக்காரர்களுக்கு பணவரவுகள் வரும். சுக்கிரன் ஆறில் மறைவது பெண்கள் விஷயத்தில் விரயங்களையும், செலவுகளையும், மனவருத்தங்களையும் கொடுக்கும் ஒரு அமைப்புதான் என்றாலும் அவர் உச்ச வலுவடைந்திருப்பதால் கெடுபலன்களைக் கூட சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறமையும், அதிர்ஷ்டமும் உங்களுக்கு கைகொடுத்து நீங்கள் அனைத்தையும் சமாளிக்கும் வாரமாக இது இருக்கும்.

சிலருக்கு இதர வருமானங்கள் எனப்படும் வெளியில் சொல்லமுடியாத வகையில் உள்ள வருமானங்கள் உண்டு. துலாம் ராசிக்காரர்களில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு போன்ற வகைகளில் தொழில் அமைப்புகளில் இருப்பவர்கள் லாபம் பெறும் வாரம் இது. வலுப்பெற்ற ராகுவால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். சுய தொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் இந்த வாரம் விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்கனவே வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கி அலுவலகங்களில் நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள். இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இளையபருவத்தினர் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ஆட்சி வலுவுடன் இருப்பதோடு, ஐந்து பதினொன்றில் கிரகங்கள் பரிவர்த்தனையாகி இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வீடு, தொழில் இரண்டு இடங்களிலும் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கும் வாரமாக இருக்கும். மாறுதல்களுக்கான வாரம் இது. சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், தொழிலிட மற்றம் செய்ய வேண்டியிருக்கும். நிறைய அலைச்சல்கள் இருக்குமாதலால் வேளாவேளைக்கு சரியான நேரத்தில் சாப்பிடுவது கஷ்டம்தான்.

வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்கள். செய்யாத தவறுக்கு இந்த வாரம் தண்டனை கிடைக்கலாம். வீண்பழி வரலாம். அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இருக்கும் நிலையான வேலையை விட்டு விட்டு வேறொரு கம்பெனிக்கு மாறுவது இப்போது வேண்டாம். அது அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாகி விடும். சிலருக்கு தூரப்பயணங்கள் இருக்கும். குறிப்பிட்ட சிலர் நாடுவிட்டு நாடு அல்லது கண்டம் விட்டு கண்டம் செல்லும் யோகமும் இருக்கிறது.

கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்ப்புகள் தொந்தரவு செய்யாது. உங்களைப் பிடிக்காதவர்கள் அடங்கி இருப்பார்கள். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் அனைத்தும் மேலோங்கி நல்ல நிலைமையில் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த ஆரோக்கியக்குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னியமத நண்பர் கை கொடுப்பார்.

தனுசு:

செவ்வாயின் ஆட்சிபலத்தாலும், குரு, புதன் பரிவர்த்தனையினாலும் எதிரிகளை உங்களால் ஜெயிக்க முடியும் என்பது உறுதி. வேலை, வியாபாரம் போன்றவற்றில் இருந்த சிக்கல்கள் இப்போது தீரும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும்.

அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வார ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உங்கள் மனதைரியம் குறையும் சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

குருபகவானின் ஆறாமிடத்துப் பார்வையால் நீங்கள் தொழில் ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கூட கடன் வாங்கும்படி குருபகவான் செய்வார் என்பதால் ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள். பெண்களால் வீண்பழி வந்து சேரும். பெண்களிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். பெண்களால் செலவுகளும், மனவேதனைகளும் இருக்கும்.

மகரம்:

குரு, சுக்கிரன், புதன் என மூன்று சுபக்கிரகங்கள் இந்த வாரம் ஒருவருக்கொருவர் மூன்று ஒன்பதாமிடங்களோடு சம்பந்தப்படுவதால் மகர ராசிக்கு பெண்கள் விஷயத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் வாரமாக இருக்கும். சிலரின் மகள், சகோதரி போன்றவர்களின் திருமணம் உறுதியாகும் நிகழ்ச்சி இப்போது உண்டு. சிலருக்கு இந்தவாரம் அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதமான நிலை வரும்.

குலதெய்வவழிபாடு செய்யாதவர்கள் செய்யும்படி இருக்கும். சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்கள், இந்த வாரம் பிரச்சனையை தள்ளி வைப்பதும், வாய்தா வாங்குவதும் சாதகமான பலனை தரும். திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் திருமணம் சம்பந்தப்பட்ட நல்ல செய்திகள் உண்டு.

காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் நல்ல செய்திகள் உண்டு. கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

கும்பம்:

அஷ்டமகுருவால் உங்களுடைய எண்ணம், செயல் அனைத்தும் எதிர்மறையாக இருந்தாலும் இந்த வாரம் பரிவர்த்தனையின் மூலம் எட்டில் குரு இருக்கும் தோஷம் நீங்குவதால் நடக்கும் அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் அமைப்பாகவே இருக்கும் என்பது உறுதி. குறுக்குவழி பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். இந்த வாரம் எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது.

வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் நன்கு யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் தடைப்பட்டு வீட்டை முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். இதுவரை நல்ல பெயர் எடுத்த இடங்களில் சற்று மதிப்பு குறையலாம். எனவே எல்லா நிலைகளிலும் விழிப்புடன் இருப்பது நல்லது.

வெளிநாட்டுப் பயணத்திற்கு இருந்த தடைகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். வழக்குகள் வெற்றி பெறும். தந்தையின் ஆதரவு பூரணமாய்க் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

மீனம்:

ராசிநாதனின் பரிவர்த்தனையால் ராசிக்கு வலிமை உண்டாவதால் இந்த வாரம் எதிர்மறை பலன்கள் எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதேநேரத்தில் நடக்கும் அனைத்து நன்மைகளும் தாமதமாகவே நடைபெறும் என்பதால் உங்களுக்கு டென்ஷன் உள்ள வாரமாகவும் இது இருக்கும். போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலைமை மாறி போட்டியாளர்கள் ஒழிவார்கள். எதிலும் எதிர்ப்பில்லாத நிலை உருவாகும். தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள்.

பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து வேறுபக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது. குருபகவானின் பரிவர்த்தனையால் கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது. சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

No comments :

Post a Comment