Monday, 13 March 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (13.03.2017 - 19.03.2017)

இந்த வாரம் எப்படி?


 மேஷம்:

ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து ஐந்துக்குடையன் பனிரெண்டில்  மறைவதால் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு குழந்தைகளால் செலவுகளும் பிள்ளைகளால் மனவருத்தங்களும் உள்ள வாரமாக இருக்கும். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் இப்போது நல்லபடியாக முடிவுக்கு வரும்.  சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் உண்டு. மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.



சூரியனைக் குரு பார்ப்பதால்  பஞ்சமஸ்தானம் வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்தவைகள் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இந்த வாரம் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும் வாரமாக அமையும். அதேநேரத்தில் செலவு செய்ய பணம் வேண்டுமே? எனவே பணவரவுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் சேமிக்க முடியாமல் போகும்.

சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். 18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம் தேதி இரவு 9 மணி முதல் 20-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் ரிஸ்க் எடுக்கும் விஷயங்களை செய்ய வேண்டாம். புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிக்காமல் இருப்பதும் நல்லது.


ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்று  நல்ல நிலையில் இருப்பதால் ரிஷபத்திற்கு தொட்டது துலங்கும் வாரம் இது. இரண்டிற்குடைய தனாதிபதி புதனுடன் சூரியன் இணைந்து இவர்களை குருபகவான் பார்ப்பதால் பணவரவுகளுக்கும் பஞ்சமில்லாத வாரமாகவும் இது இருக்கும். குருபகவான் ஐந்தில் இருப்பதால் சரளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும்  ஏற்படும். ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் இருக்கும்.

லாபஸ்தானம் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும்  சிறப்பாக நடைபெறும். குறிப்பாக அரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் மிகுந்த நன்மைகளைப் பெறுவீர்கள். சிலர் வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவீர்கள். இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. சிலருக்கு துயரங்கள் அனைத்தும் தீருவதற்கான வாரமாக இது இருக்கும்.

ஏதேனும் ஒரு வகையில் திடீர் பண வரவு உண்டு. நண்பர்களால் பயன்களும் இருக்கும். அதேநேரத்தில் நீங்கள் இப்போது அதிசாரமுரையில் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் சோம்பலுக்கு இடம் கொடாமல் எதிலும் சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வேலை மாற்றம், தொழில் விரிவாக்கம் போன்ற விஷயங்களில் அவரசப்படாமல் அடுத்தவரை நம்பாமல் நிதானமாக எதையும் சிந்தித்து செய்யுங்கள்.

மிதுனம்:

இந்த வாரம் ராசிநாதன் புதன் நீசமடைவதால் மிதுனராசிக்கு அனைத்து விஷயங்களிலும் தடைகளும், தாமதங்களும் உள்ள வாரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்ப்புகளை குறிக்கும் ஆறாமிடத்தின் அதிபதி செவ்வாய் அந்த இடத்திற்கு ஆறில் மறைந்து பதினோன்றாமிடத்தில் இருப்பதால் நீங்கள் எதிலும் வெற்றி பெறும் வாரமாகவும் இது இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள். தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்.  தொழில்ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் இனிமேல் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம்.

சிலருக்கு மட்டும் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. எதிர்பாராத பணவரவு  இருக்கும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். கணவன் மனைவி உறவில் நெருடல்கள் இருக்காது.


கடகம்:

ராசியை ஆட்சி வலுப் பெற்ற செவ்வாய் பார்ப்பதால் இந்த வாரம் உங்களை கோபமும், எரிச்சலும் ஊட்டும் சம்பவங்கள் நடந்தாலும் வார ஆரம்பத்தில் சந்திரன் குருவுடன் இணைவதால் அனைத்தையும் நிதானமாகவும், மன உறுதியுடனும் நீங்கள் சமாளித்து வெற்றி கொள்ளும் வாரமாக இது இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள்.

ஒருசிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். வியாபாரிகளுக்கு இது சாதகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும் உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் வாரமாக இது இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை  வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும்.

கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

சிம்மம்:

இன்னும் நான்கு வாரங்களுக்கு ராசிநாதன் சூரியன் எட்டில் மறைந்தாலும் இரண்டில்  இருக்கும் குருபகவானின் பார்வையைப் பெறுவதால் பலவீனங்கள் விலகி சிம்மத்திற்கு சிறப்பான நன்மைகள் இருக்கும் வாரம் இது. தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.

சிம்ம ராசிக்காரர்கள்  ஒருமுறை ராகுபகவான் பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது. இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது  சந்திப்பீர்கள்.

தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்பொழுது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளையபருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள்.


கன்னி:

ராசிநாதன் புதன் நீசமடைந்தாலும் ராசியை பார்க்கிறார் என்பதாலும் அவருடன் யோகாதிபதி சுக்கிரன் உச்சமாக இணைந்து புதனுக்கு நீசபங்க ராஜயோகத்தைக் கொடுப்பதாலும் கன்னி ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் நடக்க முடியாத வாரம் இது. உங்கள் திறமைகள் வெளிவரும் வாரம் இது. குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் இந்த வாரம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இப்போது நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள்.

கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. இந்த வாரம் வீண் செலவுகளும், தேவையற்ற விரயங்களும் இருக்கும் என்பதை கிரகநிலைகள் குறிப்பாக உணர்த்தினாலும் செலவு செய்வதற்கு ஏற்ப தேவையான வருமானமும், பணவரவும் நிச்சயம் இருக்கும் என்பதை  உறுதி செய்கின்றன. என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும்.

ராசிநாதன் வலுக்குறைந்து இருப்பதாலும் எட்டுக்குடைய செவ்வாய் ஆட்சி பெறுவதாலும்  குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் சுக்கிரன்  வலுவாக இருப்பதால்  கெடுபலன்கள் எதுவும் வரப்போவது இல்லை. நண்பர்களுக்கு இடையே கசப்பும் கருத்து வேறுபாடுகளும் இருக்கும் என்பதால் அதற்குரிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுவது நல்லது.


துலாம்:

ராசிநாதன் ஆறாம் வீட்டில் இருந்தாலும் உச்சவலுவாக இருக்கும் நிலைமையில் அவரை இன்னொரு இயற்கை சுபரான குருபகவான் பார்ப்பதால் எதிலும் துலாம் ராசிக்காரர்கள் வெற்றியை மட்டுமே எதிர்நோக்கப்போகும் நன்மையான வாரம் இது. துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் மனதளவிலும் உடல்நிலையிலும் புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம்.  இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது.

வருடக் கடைசியில் ஏழரைச்சனி விலகப் போகிறது என்பதால் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். இதுவரை வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். வேலை கிடைக்காதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும்.

தனாதிபதி செவ்வாய் வலுப்பெற்று ஜீவனஸ்தானத்திற்கு பத்தாமிடத்தில் இருப்பதால் பேச்சினால் வருமானம் பெறும் துறையினரான வக்கீல், ஆசிரியர், மார்க்கெட்டிங் போன்ற அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அந்நிய இன, மத, மொழிக்காரர்களால் லாபங்களும், உதவிகளும் கிடைக்கும். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள்.


விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ஆட்சி வலுவுடன் அமர்ந்து ஐந்து, பத்தாம் வீடுகளுக்கு அதிபதிகளான குருவும், சூரியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால் அதிர்ஷ்டமும், தொழிலும் உங்களுக்கு கை கொடுக்கும் வாரம் இது. அதேநேரத்தில் தொழிலில் கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும்.  இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயமானாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது.

இரண்டுக்குடையவன் அந்த பாவத்தைப் பார்த்து தனயோகம் ஏற்படுவதால் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. வார ஆரம்பத்தில் குரு சந்திர இணைவால் பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

ராசியை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது கண்டிப்பாக அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். இந்தவாரம் விருச்சிகராசிக்கு ஏழரைச்சனியையும் மீறி நன்மைகள் நடக்கும் வாரமாக இருக்கும். இப்போது இருக்கும் பிரச்னைகள் இன்னும் கொஞ்சகாலம் மட்டும்தான் என்பதால் விருச்சிகம் என்றும் வீண் போகாது.


தனுசு:

ராசிநாதன் குருபகவானே உங்களுடைய நான்காம் வீட்டிற்கும் அதிபதியாகி ஒன்பதுக்குடையவனான சூரியனைப் பார்ப்பதால் கேந்திர கோணாதிபதிகள் வலுப்பெற்ற அமைப்பில் அமர்ந்து உங்களுக்கு அனைத்திலும் நன்மைகள் நடக்கும் வாரம் இது. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது.

எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். உங்களின் ராசிநாதன் வலுவாக இருப்பதால்  கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை. அதேநேரத்தில் வார இறுதியில் ராசிநாதன் குரு நீசபுதனின் பார்வையை பெற்று பரிவர்த்தனை அடைய இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முழுமையான ஈடுபாடு தேவைப்படும். குறிப்பாக சாப்ட்வேர், கணக்கு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு டார்கெட் போன்ற இலக்கு நிர்ணையிக்கப்பட்டு அலைச்சல்கள் அதிகம் இருக்கும்.

காவல் துறையினருக்கு இது நல்ல வாரம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.  பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றம் இருக்கும்.


மகரம்:

எட்டுக்குடைய சூரியன் குருவின் பார்வையைப் பெறுவது மகரத்திற்கு நன்மைகளை தராத ஒரு அமைப்பு என்றாலும் யோகாதிபதி சுக்கிரன் சூரியனுடன் இணைந்து உச்சநிலையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரம் இது. அதேநேரத்தில் கடும் முயற்சிகளுக்குப் பிறகுதான் நல்லவைகள் நடக்கும். எட்டாமிடம்  வலுப்பெறுவதால் இப்போது புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.

வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த வாரம்  சுமாராகத்தான் இருக்கும். கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டு. தெய்வவழிபாடு செய்வீர்கள்.

சிலருக்கு சீக்கிரமாக முடியவேண்டிய வேலைகள் கூட இழுத்துக் கொண்டே போய் எரிச்சலை ஏற்படுத்தும். குருவும், புதனும் சுபத்துவ நிலையில் பரிவர்த்தனையாவதால் தூர இடங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல் கிடைப்பதும் குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு மற்றும் இதுவரை தாமதித்து வந்த விசா கிடைப்பதும் இருக்கும். அரசியல்வாதிகள் மற்றும் ஒரு நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு நல்லதிருப்பங்கள்  இருக்கும்.

கும்பம்:

வாரம் முழுவதும் ஐந்து எட்டுக்குடைய புதபகவான் நீசமாவதும், தனாதிபதி குருபகவான் ஏழுக்குடைய சூரியனை  பார்ப்பதும் இந்த வாரம் வாழ்க்கை துணை மூலமாக கும்ப ராசிக்காரர்களுக்கு பொருள் வரவோ, நல்ல விஷயங்களோ உள்ள வாரமாக இருக்கும். உங்கள் ராசியின்  மேல் ஆக்கிரமித்து சிலரின் உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதித்துக் கொண்டிருந்த சூரியன் இந்த வாரம் முதல் விலகி அடுத்த ராசிக்கு செல்வதால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளும், சிக்கல்களும் இப்போது தீரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வார ஆரம்பத்தில் தேவையற்ற விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்து உங்களைக் குழப்பினாலும் பிற்பகுதியில் அனைத்தையும் நல்லமுறையில் சமாளித்து வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் என்பதை நிரூபிப்பீர்கள். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.

சிலருக்கு அனைத்து விஷயங்களிலும் ஏறுக்குமாறான நிலைகளும், தடைகளும் இருக்கும். பனிரெண்டாம் இடம் வலுப்பெறுவதால் அடிக்கடி பயணம் செய்வீர்கள். எதிர்மறை எண்ணங்களுடைய நபர்களால் கோபம் வரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். 13-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் 15-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் எவருக்கும் ஜாமின் கையெழுத்து போடுவது கூடாது. இந்த நாட்களில் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மீனம்:

ராசியில் இருக்கும் புதனுடன் குருபகவான் பரிவர்த்தனை அடைவதால், குருவே ராசியில் இருக்கும் நிலை உண்டாகி உங்களுடைய சிந்தனை, செயல்திறன் மனோதைரியம் அனைத்தும் சிறப்புடன் இருக்கும் வாரம் இது. அதே நேரத்தில் ஆறாமிடத்தோன் சூரியனின் சம்பந்தத்துடன்  பரிவர்த்தனை நடப்பதால் சிலருக்கு அடங்கிக் கிடந்த கடன்தொல்லைகள் மீண்டும் எட்டிப் பார்க்கும் வாரமாகவும் இது இருக்கும்.

பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த வாரம் நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும்.

ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அவசியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். 15-ம் தேதி காலை 9 மணி முதல் 17-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் தூர பிரயாணங்களை ஒத்தி வைப்பது நல்லது. புதிய முயற்சிகள் செய்வதோ இந்த நாட்களில் புதிதாக ஒருவரை அறிமுகம் செய்து கொள்வதோ வேண்டாம்.


No comments :

Post a Comment