Monday, 6 March 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (06.03.2017 - 12.03.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

மேஷ நாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சிநிலையில் இருக்கிறார். வார இறுதியில் ஆறுக்குடைய புதன் நீசமாகி வலிமையிழந்து இருப்பதாலும் வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதாலும் இந்த வாரம் பணச் சிக்கல் இல்லாமல் வருமானம் வரும் வாரமாக இருக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள்.

கடந்த காலங்களில் அஷ்டமச் சனியாக இருந்த சனிபகவான் அதிசார முறையில் மாற்றமடைந்து பலவீனமாகி விட்டதால் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த விரையங்கள் தவிர்க்கப்பட்டு இனிமேல் வரும் வருமானத்தை நீங்கள் சேமிக்க முடியும். சனியிடம் இருந்து இனிமேல் கெடுதல்கள் வராது. அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். பெண்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது. அவர்களால் வீண்பழி ஏதாவது வரலாம்.

அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். பத்தாமிடம் வலுப்பெறுவதால் இந்த வாரம் வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவார்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். வியாபாரிக்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் உச்ச பலம் பெற்று இருப்பதால் ரிஷபராசிக்கு நினைத்தது நடக்கும், தொட்டது துலங்கும் வாரமாக இது அமையும். அதே நேரத்தில் வார இறுதியில் சுக்கிரனுடன் நீசபுதன் இணைவதால் நடக்கும் நல்லவைகள் அனைத்தும் இழுபறியாகவே நடந்து இறுதியில் சாதகமாக முடியும். குறிப்பிட்ட சிலருக்கு தந்தை வழியில் வீண் விரயங்களும் மருத்துவ செலவுகளும் அப்பாவினால் மனக்கஷ்டங்களும், விரோதமும் இந்தவாரம் உண்டு. தந்தையுடன் பிறந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

குரு ஐந்தாமிடத்தில் வலுப்பெற்று அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் சிலருக்கு வங்கி, சிட்பண்டு போன்ற பணம் புரளும் துறைகளிலோ அல்லது பணத்தை எண்ணும் கேஷியர் போன்ற வேலை வாய்ப்புகள் இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக எவரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். பனிரெண்டாம் இடம் வலுப்பெறுவதால் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரம் பிரயாணங்களும், அலைச்சல்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபங்களும் இருக்காது. கூடுமானவரை நீண்ட தூர பிரயாணங்களை ஒத்தி வைப்பது நல்லது.

மிதுனம்:

ஆறு, எட்டுக்குடைய செவ்வாயும் சனியும் தங்கள் வீட்டிற்கு மறைவிடங்களில் அமர்ந்திருக்கும் வாரமாக இது அமைவதால் மிதுன ராசிக்கு இந்த வாரம் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நன்மைகள் இருக்கும் வாரமாக அமையும். இதுவரை நிறைவேறாமல் எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது உங்களுக்கு சாதகமாக முடியும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும்.

குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சுக்கிரனின் வலுவால் கலைஞர்களுக்கு தற்போது நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். புகழ் அடையும் வாய்ப்பும் இருக்கிறது. குறிப்பாக பெண் கலைஞர்களுக்கு மிக சிறந்த வாரமாக இது இருக்கும். தந்தைவழி உறவினர்களால் லாபம் உண்டு. அப்பாவிடம் காரியத்தை சாதித்துக் கொள்ள இது நல்ல வாரம்.

இளைஞர்கள் தந்தையிடம் ஏதேனும் கேட்டுப் பெறவேண்டியது இருந்தால் இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். வார ஆரம்பத்தில் இருக்கும் கிரகநிலைகளால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சண்டை, சச்சரவுகள், கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து போவதோடு மற்றவர் செய்யும் தவறை பொறுத்து போவதும் நல்லது. அலுவலகங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மிகப்பெரிய பிரச்சினைகள் என்று எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் உச்ச வலிமையுடன் இருப்பது இந்தவாரம் உங்களுக்கு முழுமையான நன்மைகள் கிடைக்கும் வாரமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ராசியின் இன்னொரு யோகாதிபதியான செவ்வாய் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதும் இதை உறுதி செய்கிறது. அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த நிலுவைத்தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல் போன்ற விஷயங்கள் இப்போது கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்து வந்த போட்டிகள் மறைந்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்களே தனிக்காட்டு ராஜாவாக உலா வருவீர்கள். ராசியை செவ்வாய் பார்ப்பதால் சிலருக்கு காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். இத்தனை நாள் பிரச்னைகளை கண்டு ஒதுங்கிப் போயிருந்த நீங்கள் இப்பொழுது வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள் என்பதால் நிதானமும் எச்சரிக்கையும் தேவைப்படும் வாரம் இது. பெண்களுக்கு இந்தவாரம் நல்ல வாரமாக இருக்கும்.

சிலருக்கு உடல் ரீதியான சிறு தொந்தரவுகள் இருக்கலாம் என்பதால் உடல் நலத்தில் அக்கறை வையுங்கள். திரைப்படக் கலைஞர்களுக்கு மேன்மை வரும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். கடக ராசிக்கு நிறைவான அமைப்புகளை கிரகங்கள் கொடுத்துக் கொண்டிருப்பதால் அனைத்து பாக்கியங்களும் கிடைத்தே தீர வேண்டிய வாரமாக இது இருக்கும்.

சிம்மம்:

சிம்மநாதன் இந்த வாரம் முழுவதும் தனது வீட்டைத் தானே பார்த்து வலுப்படுத்துவதோடு தன, தொழில் ஸ்தானாதிபதிகள் புதன் சுக்கிரனும் வலுவாக இருக்கிறார்கள் என்பதால் இந்தவாரம் சிம்மராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் தயங்காமல் எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத் துணைவர் மூலம் உதவிகள் இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். கூட்டுத் தொழில் தற்போது லாபம் தரும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும்.

சூரியன் வலுவுடன் இருப்பதால் நீங்கள் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வெல்லும் வாரமாக இது இருக்கும். இழந்து போன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் மீண்டும் பெறுவீர்கள். போராட்ட குணமுடைய சிம்ம ராசிக்காரர்களை சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை பிறருக்கு உணர்த்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். அரசு தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.

அரசியலில் இருப்போருக்கும் கலைஞர்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும். சீருடை அணியும் காவல்துறை ராணுவம் போன்ற அரசுப்பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும். மேலதிகாரிகளால் அடிக்கடி விரட்டப்படுவீர்கள் குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள்.

கன்னி:

வார ஆரம்பத்தில் கன்னிநாதன் புதன் ஆறாமிடத்தில் நட்பு வலுவுடன் இருந்தாலும் சூரியன் மற்றும் கேதுவுடன் இணைந்திருப்பதால் உங்களுடைய செயல்கள் சிந்தனைகள் அனைத்திலும் ஒரு தேக்கநிலை இருக்கும். எதிலும் தைரியமாக அடியெடுத்து வைக்க சற்று யோசிக்கும் வாரமாக இது இருக்கும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தனாதிபதி சுக்கிரன் உச்சவலுப் பெறுவதால் வெகு நாட்களுக்குப் பிறகு பணவரவு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். அதேநேரத்தில் விரயஸ்தானம் வலுப் பெறுவதால் சேமிக்க முடியாத அளவுக்கு விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். வருமானத்தை மனைவியின் கையில் கொடுத்து பத்திரப் படுத்தினால் மட்டுமே செலவிலிருந்து தப்பிக்க முடியும். குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம்.

எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். கலைத்துறையினருக்கு இந்தவாரம் நீண்டநாட்களாக போக்கு காட்டிக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பு வீடு தேடி வந்து கிடைக்கும். டெக்ஸ்டைல், கார்மெண்ட் போன்ற ஆடை சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

துலாம்:

ஆறுக்குடைய குரு தனது ஆறாம் வீட்டையே பார்த்து வலுவாக்கினாலும் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் உச்சம் பெற்று இருக்கும் அமைப்பில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. ராசிநாதனின் வலுவால் துலாம் ராசிக்காரர்களின் திறமைகள் வெளிப்படும் வாரமாக இது அமையும். போட்டி இருந்தால்தானே ஜெயிக்க முடியும் என்பதற்கு இணங்க இந்த வாரம் எதிரிகளை வெல்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.

ஏழாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பதால் திடீரென முகத்தை சிடுசிடுவென மாற்றிக்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறிப் போவார்கள். நீங்களே இந்த வாரம் மற்றவர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருப்பீர்கள். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். வேலை கிடைக்காத இளையபருவத்தினர் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனவருத்தம் இந்த வாரம் இருக்கலாம். நீங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்து அது சிக்கலில் முடிந்து கடைசியில் அந்த சிக்கலையும் நீங்களே தீர்க்க வேண்டிய வரும் என்பதால் பிள்ளைகளின் மேல் ஒரு கண்வைக்கவும். நீண்ட தூர பிரயாணங்களை வார ஆரம்பத்தில் ஒத்தி வைப்பது நல்லது. பயணங்களால் சில சங்கடங்கள் இருக்கலாம்.

விருச்சிகம்:

விருச்சிக நாதன் செவ்வாய் இந்த வாரம் ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதால் அனைத்திலும் குழப்பங்கள் உள்ள வாரமாக இது இருக்கும். சிலர் ரகசியமான வேலைகளை செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். அதேநேரத்தில் வாழ்க்கையில் இதுவரை செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு ஆறுதல் தரும் வாரமாகவும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும்.

வார ஆரம்பத்தில் நான்காமிடம் வலுப்பெறுவதால் அம்மாவின் வழியில் ஏதேனும் அனுகூலமான விஷயங்கள் நடக்கும். சிலருக்கு வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த தாய்வழி சீதனங்கள் சொத்துக்கள் தற்பொழுது கிடைப்பதற்கான வழிபிறக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். புனிதயாத்திரை செல்ல ஆர்வம் காட்டுவீர்கள். இளையபருவத்தினருக்கு வேலை விஷயமான பயணங்கள் இருக்கும். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும்.

பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். அலுவலகத்தில் அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக இது நல்லவாரம்தான். 6-ம் தேதி காலை 8 மணி முதல் 8-ம் தேதி மதியம் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்க வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகமாகும் நபர்கள் பின்னாளில் உங்களுக்கு தொந்தரவாக இருப்பார்கள் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு:

தனுசுநாதன் குருபகவான் தொழில் ஸ்தானத்தில் வலிமைக் குறைவு இல்லாமல் இருப்பதால் இந்த வாரம் தனுசுராசிக்கு நன்மைகளை அளிக்கும் வாரமாக இருக்கும். அதே நேரத்தில் விரயாதிபதி செவ்வாய் வலுவுடன் இருப்பதால் உங்களை செலவு வைக்கக்கூடிய சம்பவங்களும் இந்த வாரம் நடக்கும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது.

பாக்கியஸ்தானத்தில் இருக்கும் ராகுவால் சிலருக்கு மறைமுகமான வருமானங்கள் தற்போது இருக்கும். பொதுவாக ராகு எப்படி சம்பாதித்தோம் என்று வெளியில் சொல்லமுடியாத வகையில் பணம் தரும் கிரகம் என்பதால் இப்போது இது போன்ற வழிகளில் தனுசுராசிக்காரர்களுக்கு வருமானம் வரும். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு வெளிநாடு வெளிமாநிலம் போன்ற மாற்றங்கள் இருக்கும்.

தனுசுக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை இப்போது சந்திப்பீர்கள். 8-ம் தேதி மதியம் 12 மணி முதல் 10-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள், சொந்த தொழில் செய்பவர்கள் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

மகரம்:

வார ஆரம்பத்தில் எட்டுக்குடைய சூரியன் எட்டாமிடத்தையே பார்ப்பதால் தேவையற்ற மனக்கலக்கம் உருவானாலும் நண்பர்கள் சுக்கிரனும், புதனும் வலுவான நிலைமையில் இருப்பதால் எந்த ஒரு பிரச்சினையையும் இப்போது உங்களால் சமாளிக்க முடியும். எட்டில் இருக்கும் ராகுவால் சிலருக்கு கூட்டுத்தொழில் விஷயங்களிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் ஏமாற்றம் இருக்கும் என்பதால் பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பத்தாம் வீட்டைப் பார்க்கின்ற வலுவான செவ்வாயால் மருத்துவத் துறையில் இருப்பவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், வீடு கட்டித்தரும் புரோமோட்டர்கள், இறைச்சி வியாபாரிகள் போன்றவர்களுக்கு மிகச்சிறந்த நன்மைகள் இருக்கும் என்பதால் இந்த வாரம் பணவரவுக்கு ஏற்ற வாரம்தான். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

கலைத்துறையினர் வாய்ப்புகளை பெறும் வாரமாக இது இருக்கும். நூதனக் கருவிகளை இயக்கும் துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். 10-ம் தேதி மாலை 5 மணி முதல் 13-ம் தேதி அதிகாலை 12 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு தெளிவற்ற நிலையில் இருக்கும் என்பதால் இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்வது நல்லது.

கும்பம்:

கும்பநாதன் சனி வார ஆரம்பத்தில் ராசியைப் பார்த்து நல்ல நிலையில் இருந்தாலும், ஆறுக்குடைய சந்திரன் இந்தவாரம் ஆறில் வலுவாவது பணவரவைக் கட்டுப்படுத்தி குழப்பங்களைத் தரும் அமைப்பு. அதேநேரம் யோகாதிபதி சுக்கிரன் இரண்டாம் வீட்டில் உச்சமாக இருப்பதால் நீங்கள் கவலைப்பட எதுவுமில்லை. பிறந்த ஜாதக வலுப்பெற்ற சிலர் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இதுவரை தன்னம்பிக்கை இன்றி இருந்து வந்த சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் இந்தவாரம் நடக்கும்.

வேலைசெய்யும் இடங்களில் சுமுக சூழ்நிலை இருக்கும். இனிமேல் வேலை, தொழில் விஷயங்களில் நன்மைகள் கும்பத்திற்கு அதிகம் உண்டு. இதுவரை இருந்து வந்த வீண்விரயங்கள் தடுக்கப்பட்டு இனி நல்ல விஷயத்திற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும். தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். ராசிநாதன் ராசியைப் பார்ப்பதால் எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். செப்டெம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் மிகுந்த யோககாலம் ஆரம்பிக்க இருப்பதால் கும்ப ராசிக்கு இனிமேல் யோகம்தான்.

மீனம்:

எட்டுக்குடைய சுக்கிரன் இந்தவாரம் ராசியில் உச்ச வலுப்பெறுவதால் உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ளும் சில விஷயங்களை இப்பொழுது செய்வீர்கள். இன்னொரு நிலையாக வலுப்பெற்ற செவ்வாய் வாக்குஸ்தானத்தில் ஆட்சி நிலையில் இருப்பதால் தேவையில்லாமல் எதையாவது பேசி வேண்டப்பட்டவர்கள் மனங்களை நோக அடிப்பீர்கள். வயதான தாயாரின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். மருத்துவ விஷயங்களுக்கு இந்தவாரம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

திரவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள், துறைமுகம் சம்பந்தபட்டவர்களுக்கு இந்தவாரம் திடீர் தனலாபம் பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு இந்தவாரம் பணிபுரியும் இடங்களில் நல்ல திருப்பங்கள் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் தொல்லைகள் வரும் என்பதால் அலுவலகங்களில் வீண் அரட்டையை தவிர்க்கவும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வியாபாரிகளுக்கு சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல வாரம். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள்.

No comments :

Post a Comment