Monday, 6 February 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (6.2.17 - 12.2.17)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

வார ஆரம்பத்தில் நான்கிற்குடைய சந்திரபகவான் உச்சம் பெற்று லாபம் தரும் அமைப்புகளில் இயங்குவதால் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலையும் எதிலும் தடைகள் இல்லாத லாப நிலையும் இருக்கும் என்பதால் மேஷத்திற்கு இந்த வாரம் நல்ல வாரமே. தைரிய ஸ்தானாதிபதி புதன் வலுப்பெறுவதாலும் உங்களுடைய மனதைரியம், ஆக்கத்திறன்கள், வலுவடைந்து உங்களின் எல்லா செயல்களிலும் புத்திசாலித்தனமும், விவேகமும் வெளிப்படும் வாரமாகவும் இது இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு கைப்பொருள் திருட்டுப் போகும் அமைப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். செல்போனை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரியன் பத்தில் குருபார்வையுடன் அமர்வதால் பிள்ளைகள் உங்களுக்கு பெருமை தேடித் தருவார்கள். பிள்ளைகளுக்குரிய கடமைகளை நீங்கள் சரியாக செய்ய முடியும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் வாரம் முழுவதும் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வாரம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற அனைத்து உல்லாசங்களிலும் ஈடுபடுவீர்கள். ஆனால் தேர்வு நேரத்தில் ஏதோ ‘மாய மந்திரம்’ செய்து பாசாகி விடுவீர்கள். கணவன்மனைவி உறவு சுமாராக இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு இந்த வாரம் அறிமுகம் இல்லாத நபர்கள் மூலம் ஆதாயம் அல்லது என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் கருதாத செய்த உதவியால் இன்றைக்கு சரியான நேரத்தில் பதில் உதவி என்பவை நடக்கின்ற வாரமாக இருக்கும். உங்களுக்கு உதவிகள் என்பதை போல நீங்களும் அடுத்தவர்களுக்கு உதவி செய்து நற்பெயர் வாங்கும் வாரம் இது. சிலருக்கு வாழ்க்கைத்துணை அமைவதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் இருக்கும்.

புத்திர விஷயத்தில் நல்ல செய்திகள் இருக்கும். தெய்வதரிசனம் கிடைக்கும். எட்டில் சனி இருப்பதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை தள்ளி வையுங்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

வயதானவர்கள் உடல் நலத்தில் அக்கறை வைக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் சிலருக்கு மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும்.

மிதுனம்:

ராசியை சனி, செவ்வாய் வலுப்பெற்று பார்த்து ராசிநாதன் புதனும் எட்டில் மறைந்திருந்தாலும், புதனுக்கு குருபார்வை இருப்பதால் மிதுனத்திற்கு வர இருக்கும் கெடுதல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி உங்களுக்கு நன்மைகள் நடக்கும் வாரமிது. எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத மறைமுக இலாபம் கிடைக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு அடிக்கடி பயணம் இருக்கும். சிலருக்கு வேலை மாறுதல், இடம் மாற்றங்கள் ஆகியவை உண்டு. ராசிநாதன் எட்டில் இருப்பதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். அதேநேரத்தில் அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். பெண்களுக்கு மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். சிறு கலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

கடகம்:

யோகாதிபதிகளான சூரியன், குரு, செவ்வாய் மூவரும் நல்ல இடங்களில் வலுவான அமைப்புகளில் இருப்பதால் கடக ராசிக்கு இந்த வாரம் பின்னடைவுகள் எதுவும் இல்லாமல் நினைத்தகாரியம் யாருடைய தயவுமின்றி நிறைவேறும் வாரமாக இருக்கும். உங்களில் சிலருக்கு வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும்.

ஒருசிலர் சுக்கிரனின் தயவால் திருமண உறுதி கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் இந்த வாரம் எதிர்கால வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பீர்கள். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் உச்சமாக இருப்பதால் உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் ஆறில் மறைந்தாலும் அவரை யோகாதிபதி குரு பார்ப்பதால் வாரம் முழுவதும் டென்ஷனுடன் நீங்கள் இருக்க வேண்டி இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் அனைத்தும் நீங்கி பணவரவும் பொருளாதார லாபங்களும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். என்ன இருந்தாலும் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை முழுக்க நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் மறுபடியும் லேசாக எட்டிப் பார்க்கும். அதேநேரத்தில் உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும். வாயதானவர்கள் உடல்நலத்தின் மீது அக்கறை வைக்கவும். உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். கவனமாக இருங்கள்.

தர்மகாரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் வரும். ஒருசிலர் உங்களை ஆலயத்தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கம்ப்யூட்டர் சம்பந்தமாக படித்த இளைய பருவத்தினருக்கு நல்ல வேலை இப்போது கிடைக்கும். வருமானத்தில் குறை சொல்லமுடியாத வாரம் இது. அதிலும் செவ்வாய், புதன் இரண்டு நாட்களும் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் இருக்கும். சிலருக்கு குழந்தைகளால் செலவுகளும், குழந்தைகளுக்கான எதிர்கால அமைப்பில் முதலீடு போன்ற பலன்களும் இருக்கும்.

கன்னி:

ஏழில் செவ்வாய் நிலை கொண்டிருப்பது கன்னிக்கு கிடைக்கும் பண வரவை தடுக்கும் ஒரு அமைப்பு என்றாலும் வாரம் முழுவதும் சுக்கிரன் உச்சநிலையில் வலுவாக அவருடன் இருப்பதால் சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரமாகவே இது இருக்கும். அதேநேரம் செவ்வாய் இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பேச்சில் கவனமாக நீங்கள் இருக்க வேண்டியது இருக்கும். பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.

வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை ஜென்மகுரு ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஒன்பது, பத்துக்குடையவர்கள் வலுப்பெற்று குருபார்வையில் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். அந்தஸ்து கௌரவம் உயர்வான நிலையில் இருக்கும். சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் மதகுருக்களின் நேரடி ஆசிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பொருட்கள் சேதமின்றி மீதமுமின்றி லாபத்திற்கு விற்பனையாகும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள்.

துலாம்:

வார ஆரம்பத்தில் ஜீவனாதிபதி சந்திரன் எட்டில் மறைந்து சந்திராஷ்டம நிலையில் இருந்தாலும் பனிரெண்டில் மறைந்திருக்கும் குருவின் பார்வையைப் பெறுவதால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மறைமுகமான தனலாபங்கள் கிடைக்கும் வாரமாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரனின் உச்ச வலுவால் அந்தஸ்து கௌரவம் கூடும்படியான செயல்கள் இருக்கும். பொதுஇடத்தில் மதிப்பும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கையிலும் இந்தவாரம் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. உங்களை நம்பி ஒருவர் சொன்ன விஷயத்தை அடுத்தவரிடம் உளறி விடாதீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் குழப்பங்கள் இருக்கலாம். பருவவயது குழந்தைகள் ஏதாவது வம்பிழுத்துக் கொண்டு வரலாம். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

ஸ்டேஷனரி, புக்ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த வாரம் முன்னேற்றமாக இருக்கும். 5-ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 7-ம் தேதி அதிகாலை 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்கள் எதையும் செய்ய வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்ற முடியாது.

விருச்சிகம்:

ராசிக்கு இரண்டில் சனி வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். சோம்பலை ஒதுக்கித் தள்ளி சுறுசுறுப்புடன் இருந்தால் வெற்றி நிச்சயம். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இளையவர்களுக்கு இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும் வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு வழி திறக்கும். விருச்சிகத்திற்கு இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை.

ராசிநாதன் வலுவாக இருப்பதால் நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். பெண்களுக்கு இது நல்ல வாரம்தான்.

7-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 9-ம் தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கியமான முடிவுகள் எடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.

தனுசு:

சுக்கிரனின் உச்ச வலுவால் ஆறாமிடம் வலுப்பெறுவதால் இனம்புரியாத கலக்கங்களும் எதிர்காலத்தை பற்றிய நிச்சயமற்ற நன்மையும் உங்களுடைய மனதை போட்டு அழுத்தி கொண்டிருந்தாலும் இன்னும் சில நாட்களில் ஐந்தாமிடத்திற்கு மாறப்போகின்ற உங்கள் அதிர்ஷ்ட ஸ்தானாதிபதி செவ்வாயின் தயவினால் அனைத்தும் நல்ல விதமாக முடியும் வாரமாக இது இருக்கும்.

யோக கிரகங்கள் நன்மைகள் தரும் அமைப்பில் உள்ளதால் தனுசு ராசிக்கு யோக வாரமாகவே இது இருக்கும். குறிப்பாக 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு எதிர்கால நன்மைகளை அடையாளம் காட்டும் வாரம் இது. நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அவசியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம்.

எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி செயல்கள் இந்த வாரம் கை கொடுக்காது. யாரையும் நம்ப வேண்டாம். பணம் எடுத்துப் போகும்போது மிகுந்த கவனம் தேவை. 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 11-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கங்கள் போன்றவைகளை இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

மகரம்:

வார ஆரம்பமே ஏழாம் அதிபதி சந்திரன் உச்சமடையும் நாளாக ஆரம்பமாவதால் இது வாழ்க்கைத்துணை மூலம் நன்மைகளும் லாபங்களும் கிடைக்கும் வாரமாக இருக்கும். இதுவரை திருமணம் தாமதமாகி வந்த இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் உண்டு. ராசி வலுவுடன் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் நல்ல வருமானத்துடன் எந்தவித பாதிப்பும் இன்றி சுமுகமாகவே நடக்கும்.

ஆறுக்குடைய புதன் அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்து ராசியில் இருப்பதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு இது வசந்த காலம்.

இதுவரை தாழ்வு மனப்பான்மையில் இருந்தவர்கள் விலகப் பெறுவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இந்தவாரம் நடக்கும். 11-ம் தேதி காலை 9 மணி முதல் 13-ம் தேதி மதியம் 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எதிலும் கவனத்துடனும் நிதானத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கையை பாதிக்கும் எவ்வித முடிவுகளையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

கும்பம்:

ஏழில் இருக்கும் ராகுவினால் இந்த வாரம் அன்னிய, இன, மத மொழிகாரர்களை நண்பர்களாக, பங்குதாரர்களாக கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு லாபங்கள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வாழ்க்கை துணை மூலமும் நல்ல செய்திகள் உண்டு. தொழில் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குருவின் இரண்டாமிட பார்வையால் பணத்துக்கு கஷ்டங்கள் இருக்காது.

வியாபாரிகள் தொழில் இடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வெகுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் தற்பொழுது முடியும். வேற்றுமத நண்பர்கள் கை கொடுப்பார்கள். இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. பெண்களுக்கு நல்லபலன் நடக்கும் வாரமிது.

முதலீடு இன்றி தனது புத்திசாலித்தனத்தை வைத்து சொந்ததொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுயதொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத்தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் இருக்காது. பூர்வீகச்சொத்துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை தள்ளி வைப்பது நல்லது.

மீனம்:

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் இயங்குவதாலும் தன, லாப, பாக்கிய ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதாலும் இந்த வாரம் மீன ராசிக்கு எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும் வாரமாக இருக்கும். அதேநேரத்தில் ராசியில் சுக்கிரன் வலிமை பெறுவதால் உங்களுடைய செயல்களில் “இரண்டும் கெட்டான்தனம்” இருக்கும். சில விஷயங்களில் சட்டென ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிப்பீர்கள்.

இந்த வாரம் பெண்கள் பற்றிய புது விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராசியின் எதிரி சுக்கிரன் செவ்வாயுடன் இணைவதால் பெண்களால் ஏதேனும் பிரச்னைகள் வருமோ என்று உங்களை யோசிக்க வைக்கலாமே தவிர சுக்கிர செவ்வாய்க்கு குருபார்வை இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நூறு சதவிகிதம் உங்களுக்கு நடக்காது. கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. உங்களில் எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்ல வாரம் இது.

பெரும்பாலான ராஜகிரகங்கள் நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது என்பதால் உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம். மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். இதுவரை தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த மந்தநிலையும் அதிர்ஷ்டக்குறைவும் விலகும்.

No comments :

Post a Comment