Monday, 27 February 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (27.2.17 - 5.3.17)

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி வலுப் பெறுவதாலும், ஐந்துக்குடையவன் ஐந்தைப் பார்ப்பதாலும் இந்தவாரம் மேஷராசிக்கு வர இருக்கின்ற துன்பங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல உடனே விலகி விடும் என்பதால் மேஷராசிக்காரர்கள் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லாத வாரமாக இது இருக்கும். ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் இந்த வாரம் மீண்டும் சேருவீர்கள்.

பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சனைகள் தொந்தரவுகள் தராது. நடுத்தரவயதுடையவர்கள் உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக்குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள்.

இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது. இந்த உலகில் வலிமை உள்ளதுதான் வாழும் என்பதை மறந்து விடாதீர்கள். எதையும் சமாளிக்கும் திறன் கொண்ட உங்களுக்கு இப்போது நன்மைகள் மட்டும்தான் நடக்கும். சிலருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இந்தவாரம் உண்டு. அதேநேரம் செலவுகள் நிறைந்த வாரமாகவும் இது இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி மூலமும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமும் செலவுகள் இருக்கும்.

ரிஷபம்:

ராசியின் யோகாதிபதி புதன் நட்பு நிலையில் அமர்ந்து ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதால் இந்த வாரம் நண்பர்கள் மூலம் ரிஷப ராசிக்காரர்கள் ஆதாயங்களும், உதவிகளும் பெறும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அன்னிய, இன மத மொழி நண்பர்கள் நல்ல உதவிகளை செய்வார்கள். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் இனிமேல் வேறுவிதமான வடிவங்களைப் பெறும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும்.

வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை வேலை விஷயமாக இப்போது செய்வீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. அலுவலகத்தில் நடக்கும் சில சம்பவங்கள் உங்களை எரிச்சல்படுத்திப் பார்க்கும் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பாக்கியஸ்தானம் வலுவிழந்து காணப்படுவதால் பூர்வீகச்சொத்து தொடர்பான விஷயங்கள் மற்றும் தந்தையால் கிடைக்கும் நன்மைகள் தடைப்படும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலர் வயதான தந்தைக்கான மருத்துவ செலவுகள் மற்றும் தந்தையால் விரையம் போன்ற அமைப்புகளை எதிர்கொள்ளும் வாரமாகவும் இது இருக்கும். குடும்பச்சொத்துக்களை தற்போது விற்கக்கூடாது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை உருவாகும்.

மிதுனம்:

ஆறு, பனிரெண்டாமிடங்கள் வலுப்பெற்று இருப்பதாலும் ஆறுக்குடையவன் லாபத்தில் அமர்ந்து தனது ஆறாமிடத்தையே பார்ப்பதாலும் இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு கடன் வாங்கி விரையம் செய்யும் அமைப்பு இருப்பதால் ஏதேனும் ஒரு வீடு வாங்குதல், கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்கு கடன் வாங்க அடிபோடும் வாரம் இது. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் அனைத்து மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அவரவர் வயதுக்கேற்ற திருப்புமுனைகள் இப்போது நடக்கும்.

நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் நீங்கள் மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் வாரம் இது. இதுவரை இருந்து வந்த மிகச் சிறிய தயக்கத்தையும், சோம்பலையும் உதறித்தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே மிகப்பெரிய நன்மைகளை தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

நீங்கள் சொன்ன சொல்லும், கொடுத்த வாக்குறுதியும் பலிக்கும் வாரம் இது. ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக அமர்ந்து நல்ல யோக அமைப்புப் உண்டாகுவதால் மிதுனத்திற்கு இது யோக வாரம்தான். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை வாழ்க்கையில் கிடைக்காத நல்ல அனுபவங்கள் இப்போது கிடைக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

கடகம்:

இந்த வாரம் முதல் செவ்வாய் வலுவடைந்து ராசியைப் பார்க்கிறார் என்பதால் காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் கூட உங்களது இந்த மாற்றத்தால் உங்களை விட்டு விலகி ஓடுவார்கள். அப்பாவின் ஆதரவு இந்த வாரம் கிடைப்பது கஷ்டம். நீங்கள் மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எதிலும் மூன்றாம் மனிதரை நம்பாமல் நீங்களே எதிலும் நேரிடையாக செயல்படுவது நல்லது. ராசியை யோகர் வலுப்பெற்று பார்ப்பதாலும் பணவரவைக் குறிக்கும் தனஸ்தானம் வலுப்பெறுவதாலும் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருக்கும் கடன் தொகையோ, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சம்பள உயர்வு தொகையோ கிடைக்கும் வாரமாக இருக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம்.

தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு துறை சார்ந்த நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டவோ நல்ல பிளாட் வாங்கவோ முடியும்.

சிம்மம்:

மாசி மாதம் முழுவதும் சிம்மத்திற்கு நல்ல மாதம் என்பதாலும் ராசியில் ராகு இருக்கும் தோஷத்தை ராசியைப் பார்க்கும் சூரியன் நிவர்த்தி செய்வதாலும் இந்த வாரம் சிம்மராசிக்கு சிக்கல்கள் எதுவும் இல்லாமல் சிறப்புகள் மட்டுமே உள்ள வாரமாக இருக்கும். அதேநேரம் ராசிக்கு சனிபார்வை ராசிக்கு விலகி விட்டாலும் மாசிமாதம் முழுவதும் ராசிநாதன் சூரியனுக்கு சனிபார்வை இருக்கிறது. எனவே எதிலும் உங்களுக்கு கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை இருக்கும்.

எதிர்ப்புகள் உங்களை லேசாக அசைத்து பார்க்கும் வாரமாக இது இருக்கும். ராசிநாதன் சனியால் பார்க்கப்படுவதால் நீங்களும் சற்று குழம்பித்தான் போவீர்கள். சிம்மம் என்றுமே சிங்கம் என்பதால் எந்த ஒரு எதிர்ப்பும் வார இறுதியில் உங்களை விட்டு விலகி ஓடும் என்பது நிச்சயம். அர்த்தாஷ்டம சனி விலகி கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும்.

ராசியில் இருக்கும் ராகுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். 28-ம் தேதி அதிகாலை முதல் 2-ம் தேதி அதிகாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

கன்னி:

ராசிநாதன் புதன் ஆறில் அமர்ந்து பனிரெண்டுக்குடைய சூரியனுடன் இணைந்துள்ளதால் இந்த வாரம் உங்களுக்கு தொலைதூரங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட தொலைவு பயணங்களும் மேற்கு திசையால் நன்மைகளும் பெற்றோரால் உதவிகளும் இருக்கும். வாரம் முழுவதும் புதன் நண்பர் சனியின் பார்வையில் இருப்பதால் இந்த வாரம் கன்னிக்கு வருமானங்களும், சந்தோஷங்களும் உள்ள வாரமாக இருக்கும்.

மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்கள் இந்தவாரம் இருக்கும். இன்னும் சில காலத்திற்கு உங்களுக்கு கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் துணிவுடன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது உறுதி.

இந்தவாரம் உங்கள் யோகாதிபதி சுக்கிரன் செவ்வாயிடமிருந்து விலகி சுயத்தன்மை பெற்று உங்கள் ராசிக்கு நன்மை செய்யும் அதிகாரத்தை பெறுகிறார். எனவே ஏற்கனவே நீங்கள் யோசனையின்றி செய்த காரியங்கள் அனைத்தையும் இப்போது முறைப்படுத்தி நன்மைகளை வழங்குவார் என்பது உறுதி. 2-ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 4-ம் தேதி காலை 6 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

துலாம்:

வார ஆரம்பத்தில் பத்துக்குடையவன் சுபத்துவம் அடைவதால் துலாம் ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் முன்னேற்றம் அடைந்து பொருளாதார மேன்மையை நீங்கள் அடையப் போகும் வாரமாக இது இருக்கும். சென்ற வருடத்தை போல இந்த வருடம் கஷ்டங்கள் எதுவும் துலாம் ராசிக்கு இருக்காது. அதிலும் ராசிநாதன் சுக்கிரன் நீண்டநாள்களுக்கு உச்சநிலை பெறும் அமைப்பில் உள்ளதால் இனிமேல் ஏழரைச்சனி அமைப்பு உங்களுக்குக் கெடுதல்களைத் தராது.

குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட பயணங்களும், ஆன்மீகம் சம்பந்தபட்ட யாத்திரைகளும் இருக்கும். ராசிநாதன் உச்சமாகி ஆறாமிடத்தை வலுப்படுத்தும் வாரம் இது என்பதால் நடுத்தர வயதை தாண்டியவர்கள் தங்களுடைய உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் வைக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரம் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படும்.

இளையபருவத்தினர் ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். இந்த வாரம் யோகத்தை தரப்போவதோடு மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது. 4-ம் தேதி காலை 6 மணி முதல் 6-ம்தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்:

ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நடக்கும் மாற்றங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. ஒரு டாக்டர் இப்போது உங்கள் நோய்க்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருந்து எப்போதுமே கசக்கும் என்றாலும் அது நோயை தீர்க்கும் என்பதுதான் உண்மை. விரைவில் ஜென்மச்சனி முடிய இருப்பதால் இனிமேல் என்றென்றும் விருச்சிக ராசிக்கு சந்தோஷம்தான்.

தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தில் இருக்கும் சனியால் இந்த மூன்று அமைப்புகளும் பாதிக்கப்படும் என்பதால் தனவரவு சுமாராகத்தான் இருக்கும். அதே நேரத்தில் கவலைப்படும்படியாக வருமானம் குறையவே குறையாது. உங்களுடைய தேவைகள் பரம்பொருளால் கண்டிப்பாக நிறைவேற்றித் தரப்படும். வேலை தேடிக் கொண்டிருக்கும் இளம் பருவத்தினருக்கு நீங்கள் விரும்பியவாறே அதிக சம்பளத்துடன் இப்போது வேலை கிடைக்கும்.

பத்துக்குடைய சூரியனை சனி பார்ப்பதால் வேலை தொழில் விஷயங்களில் பொறுமையாக இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் உங்களை எரிச்சல் படுத்தி பார்ப்பதற்கென்றே சில வருவார்கள் என்பதால் உங்கள் பொறுமையும் எல்லை மீறும் வாரமாகவும் இது இருக்கும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். இதனால் மனவருத்தம் வீண் விரோதங்கள் வரலாம்.

தனுசு:

தனுசுராசிக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. முப்பது வயதுகளில் இருக்கும் இளையபருவத்தினர் அடுத்த முப்பது வருடங்களுக்கு தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டிய அனுபவங்களை இப்போது சனிபகவான் தருவார் என்பதால் சனியை நினைத்து கலக்கம் எதுவும் தேவையில்லை. அதேநேரத்தில் முப்பதுகளை தாண்டி நாற்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு இந்த சனி பொங்குசனியாக செயல்பட்டு நன்மைகளைத் தரும் என்பதால் நடுத்தர வயதுக்காரர்கள் பயப்படவும் தேவையில்லை.

பிள்ளைகள் விஷயத்தில் மனமகிழ்ச்சியான சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி இப்போது வரன் உறுதியாகும். கலைஞர்களுக்கு வெற்றிகள் தரக்கூடிய அமைப்புகளும் நிகழ்சிகளும் இந்த வாரம் உருவாகும். நீண்ட நாட்களாக கமிஷனை எதிர்பார்த்து செய்துவந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும்.

உறவினர்களால் சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரலாம். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் மாறுவார்கள். வழக்குகள் சாதகமாக இருக்காது. சின்ன விஷயங்கள் பெரிதாகி தொந்தரவு தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றபடி வேலை கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.

மகரம்:

ஒன்பதாமிடத்தில் குரு இருந்து ஏழுக்கதிபதி இரண்டில் இருப்பது மகர ராசிக்கு திருமண அமைப்புகளை துரிதப்படுத்தும் கிரக நிலைகள் என்பதால் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகளும் ஏற்கனவே மணமாகி முதல் திருமணம் முறிந்தவர்களுக்கு இரண்டாவது நல்ல அமைப்பு உருவாக உள்ள வாரமாகவும் இது இருக்கும். இந்த வாரம் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். வாரம் முழுவதும் உதவிகள் கிடைக்கும்.

லாபாதிபதி செவ்வாய் பகவான் இந்த வாரம் முதல் சொந்த வீட்டில் இருக்கப் போவதால் இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் வரும். நண்பர்கள் உதவுவார்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள்.

நடுத்தர வயதுடையவர்கள் உடல்நலத்தில் அதிக கவனமுடன் இருப்பது நல்லது. சிறிய விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து குணமாக்கிக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருந்தால் சிறிய குறைகள் பெரிதாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு பாக்கிய ஸ்தானம் வலுவடைவதால் எதிர்பார்க்காத மறைமுகமான பண வரவுகள் இந்த வாரம் உண்டு.

கும்பம்:

பதினொன்றாமிடத்தில் சனி இருப்பது ஒரு யோக அமைப்பு என்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாத முன்னேற்றங்கள் மட்டுமே இருக்கும் வாரமாக இது இருக்கும். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு கும்பத்திற்கு தொட்டது துலங்கும். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் இந்த வாரம் முழுவதும் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற இனங்களில் நல்லவைகள் நடக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். இதுவரை தடங்கலாகிக் கொண்டிருந்த தொழில் முன்னேற்றங்கள் அனைத்தும் எந்த ஒரு சிக்கலும் பின்னடைவும் இல்லாமல் முன்னேற்றமாக சென்று உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வாரமாக இது இருக்கும். ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு தொழில் விஷயத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு குறையும் இருக்காது.

வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு தொழில் ரீதியான வருமானங்கள் உண்டு. கும்ப ராசிக்கு ஏற்றங்களைத் தரும் வாரம் இது.

மீனம்:

மீனத்திற்கு இந்த வாரம் குறைகள் எதுவும் சொல்வதற்கு இல்லை. கோட்சார நிலைகள் சாதகமாக அமைந்தும் ஒரு மீனராசிக்காரர் கஷ்டபடுகிறார் என்றால் அது அவருடைய பிறந்தநேர ஜாதக அமைப்புபடி சரியில்லாத தசாபுக்திகளோ, வீட்டில் கணவன்-மனைவி, குழந்தைகள் யாருக்காவது மேஷம் அல்லது விருச்சிக ராசியாக இருந்தால் மட்டுமே மீனத்திற்கு கஷ்டமாக இருக்கும். ராஜகிரகங்கள் அனைத்தும் சாதகமாக இருப்பதால் வாரம் முழுவதும் இப்போது நன்மைதான்.

சந்திரன் நல்ல இடங்களில் வலம் வருவதால் இந்த வாரம் மீன ராசிக்கு செலவுகள் செய்வதற்கு ஏற்ப அதிகமான வருமானங்களும் லாபகரமான பிரயாணங்களும் உள்ள வாரமாக இருக்கும். இரண்டில் செவ்வாய் இருப்பதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

ஆறாமிடத்தில் சுபத்துவமான ராகு இருந்து உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வலுவுடனும், எதிர்ப்புகளை அடக்கும் திறனுடனும் இருப்பதால் மீனராசிக்காரர்கள் எதைப்பற்றியும் கலங்காமல் காரியமாற்றும் வாரமாக இது இருக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்தவாரம் கை கொடுக்கும்.

No comments :

Post a Comment