Monday, 20 February 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (20.2.2017 - 26.2.2017)

மேஷம்:


வாரத்தின் ஆரம்ப நாளே சந்திராஷ்டமமாக அமைந்தாலும் ராசிநாதன் செவ்வாய் குருவின் பார்வையில் இருப்பதால் மேஷராசிக்கு இது கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரமாக இருக்கும். இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் போன்ற விஷயங்கள் வரும். வருமானத்தைச் சேமிக்க முடியாமல் இந்த வாரத்திலேயே செலவும் செய்ய வேண்டி இருக்கும். புதிய முயற்சிகளையும் தொலை தூர பிரயாணங்களையும் இந்த வாரம் தவிர்க்கவும்.


முப்பது வயதுக்கு உட்பட்டவர்களை அஷ்டமச்சனி கடுமையாக வாட்டி வதைத்து விட்டது. இன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத இளைய பருவத்தினர் இனிமேல் நல்ல பலன்கள் நடக்கப் பெறுவீர்கள். இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும்.

நீண்ட நாட்களாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். இதுவரை சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறப் போகும் நல்லகாலம் வந்து விட்டது. கவலை வேண்டாம். நீண்டகால மருத்துவம் தேவைப்படும் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை இந்தவாரம் கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் பங்குச்சந்தை விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும்.


நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை விலகும்.

தெய்வ தரிசனம் கிடைக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் குறிப்பிட்ட சிலர் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். 21-ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 23-ம் தேதி பகல் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது இருக்கும் என்பதால் எதிலும் தயக்கத்துடன் இருப்பீர்கள்.

மிதுனம்:


ஏழாமிடத்தில் சனி அமர்ந்து ராசியை பார்ப்பதால் குறிப்பிட்ட சில மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணைவரிடம் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், கசப்பான அனுபவப் பரிமாறால்களும் இருக்கும் என்பதால் எல்லா விஷயத்திலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். பேச்சினால் தொழில் செய்யக்கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கு வீடுமாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் இருக்கும்.


வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் எட்டில் மறைந்தாலும் யோகாதிபதி சுக்கிரன் உச்ச வலுவுடன் இருப்பதால் எல்லா விஷயங்களும் இழுத்துக்கொண்டே போய் இறுதியில்தான் நிறைவாக முடியும் என்பதால் உங்களுக்கு இப்போது பொறுமை தேவைப்படும். வலுப்பெற்ற செவ்வாய் ராசியை பார்ப்பதால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

தந்தைவழியில் எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இனிமேல் கைகூடி வரும். 23-ம் தேதி பகல் 12 மணி முதல் 25-ம் தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். தொழில் விஷயங்களில் முதலீடுகள், விரிவாக்கங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது.

கடகம்:


வாரத்தின் ஆரம்பநாட்களில் ராசிநாதன் சந்திரன் நீசபங்க ராஜயோக வலுப் பெறுவதால் இந்த வாரம் இனிய வாரமாகவே கடகத்திற்கு அமையும். ஆனாலும் வார இறுதிநாட்கள் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. கடகராசிக்காரர்களுக்கு சென்ற சில வாரங்களாக எந்த விஷயங்களில் பிரச்சினைகள் இருந்து வந்ததோ அவை அனைத்தும் உங்கள் மனம்போல உங்கள் விருப்பப்படியே தீர்ந்து நன்மைகள் நடக்கும் வாரமாக இது இருக்கும்.


ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் ஆசி பெறுவீர்கள். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய வாரம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனிதயாத்திரை போகமுடியும். குறிப்பிட்ட சிலருக்கு ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள்.

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி சிந்தனைகள் செயல்கள் கை கொடுக்காது. 25-ம் தேதி இரவு 7 மணி முதல் 28-ம் தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், அறிமுகங்கள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வாழ்க்கையை மாற்றும் முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

சிம்மம்:


மாசி மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்ப்பார் என்பதால் சிம்மராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரமாக இது இருக்கும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இந்தவாரம் நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும்.


ஜென்மராசியில் ராகு இருந்து உங்களுடைய செயல்திறமையை முடக்கிப் போட்டு உங்களை சோம்பலாக்க பார்த்தாலும் மற்ற யோக கிரகங்கள் வலுவாக இருப்பதால் ராகுபகவான் நன்மைகளையே அதிகம் செய்வார் என்பது நிச்சயம். சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு இந்த வாரம் ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும். கருத்து வேற்றுமையால் சண்டை போட்டு பிரிந்திருந்தவர்களுக்கும் இது பொருந்தும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

கன்னி:


யோகாதிபதி சுக்கிரன் உச்சமாக இருந்தாலும் அவர் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் பலவீனம் பெறுகிறார். ஆனாலும் அவர் ராசியைப் பார்க்கிறார் என்பதால் எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடந்தே தீரும். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாரம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


உயரமான இடங்களுக்கு செல்லும் போது கவனம் தேவை. புதிய முயற்சிகள், முதலீடுகளை இந்த வாரம் தவிர்க்கவும். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பெண் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.

வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில நல்ல அனுபவங்கள் இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

துலாம்:


வாக்குஸ்தானாதிபதியான செவ்வாயுடன் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் கூடி உச்ச நிலையில் இருப்பதால் இந்த வாரம் நீங்கள் மனமுவந்து சொல்லும் வார்த்தைகள் பலிக்கும் என்பதால் துலாம்ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சில துலாத்தினர் எதையும் பேசிச் ஜெயிக்கின்ற வாரமாக இருக்கும். சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குழந்தைகள் பேரில் சேமிக்க முடியும். தனலாபங்கள் இருக்கும்.


குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.

மூத்த அண்ணன், அக்காக்கள் உதவுவார்கள். தந்தை வழி உறவினர்களிடம் பிரச்னைகள் வரலாம். குறிப்பிட்ட சிலருக்கு பெண்களால் லாபம் உண்டு. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். ஒரு சிலருக்கு குலதெய்வ வழிபாடோ புனித யாத்திரையோ அமையும். இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற இனங்களில் பின்னடைவுகள் இருக்காது.

விருச்சிகம் :

ஐந்தாமிடத்தில் கூடி இருக்கும் ராசிநாதன் செவ்வாயும், உச்ச சுக்கிரனும் உங்களுடைய மனதைரியத்தையும், செயல்திறனையும் கூடுதலாக்கும் அமைப்பு என்பதால் இதுவரை இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று தயங்கிக் கொண்டிருந்த விருச்சிக ராசிக்காரர்கள் யாவரும் துணிச்சலுடன் செயலாற்றும் வாரமாக இது இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும்.

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். செலவுகள் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் நன்மைகள் நடைபெறும். வயதானவர்கள் புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும்.. கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். 30 வயதுகளில் இருப்பவர்களின் பின்னடைவுகள் மற்றும் எதிர்மறை பலன்கள் அனைத்தும் நீங்கி எதிர்காலம் பற்றிய நல்லவைகள் தொடங்கும் வாரமாக இது இருக்கும்.

தனுசு :

முப்பது வயதுகளுக்கு மேலாகியும் இதுவரை செட்டிலாகாமல் இருக்கும் இளம் வயது தனுசு ராசிக்காரர்கள் அனைவருக்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். சகோதர விஷயத்தில் நன்மைகளும், சுப நிகழ்ச்சிகள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவைத்தொகை கைக்கு வரும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது கருவுறுதல் இருக்கும்.

இந்த வாரம் சிலருக்கு மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல தொழிலிலும், வீட்டிலும் ஏதேனும் ஒரு விஷயத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படும் நிலைமை இருக்கும். குறிப்பாக சிலர் வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும் அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும் நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். கிரகங்கள் யோக நிலையில் இருப்பதால் இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த வாரம் திருப்பு முனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

மகரம் :

மூன்றில் இருக்கும் செவ்வாய், சுக்கிரனும், ராசியில் இருக்கும் புதனும் யோக அமைப்புகள் என்பதால் இந்த வாரம் மகர ராசிக்கு கெடுதல்கள் தடைகள் அனைத்தும் நீங்கி அதிர்ஷ்டம் ஆரம்பமாகும் வாரமாக இருக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க ஆரம்பங்கள் இருக்கும்.

தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம்.

தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் இந்த வாரம் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள் அதிகம் இருக்கும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று அனைத்திலும் வருமானம் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் பரம்பொருளின் அருளினால் சுலபமாக முடிந்து நன்மைகளும், லாபங்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இது நல்ல வாரம். ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் முன்னேற்றமாக இருக்கும்.

இரண்டில் செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த வாரம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும்.

விவசாயிகள், மக்கள்பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு வார முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் நல்ல பலன்களும் நடக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. நாளை நீங்கள் நன்றாக இருக்கப் போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும்.

மீனம் :

மீன ராசிக்கு அடிப்படை அஸ்திவாரங்களை கிரகங்கள் செய்யும் அமைப்பு வலுவாக இருப்பதால் இந்த சாதகமான நேரத்தில் இளைய பருவத்தினர் தங்களது எதிர்காலத்தை பற்றிய திட்டமிடலையும் அதை நோக்கி போவதற்கான அடிப்படைகளையும் அமைத்துக் கொள்ளுவது நல்லது. சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். தந்தைவழியில் நன்மைகளும், பிள்ளைகள்வழியில் நல்லசெய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு.

இந்தவாரம் மனச்சுமைகள் எதையும் கொடுக்காத நல்ல வாரமாகவே இருக்கும். எட்டாமிடம் வலுப்பெறுவதால் சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகளில் ஓரளவு வருமானம் இருக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.

உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள்.

No comments :

Post a Comment