Wednesday, February 1, 2017

மிதுனம்: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் புதன் ஏழாவது கேந்திரத்தில் இருந்து ராசியைப் பார்த்து வலுப்படுத்துவதால் கேட்ட இடங்களில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் மாதமாகவும் உங்களுடைய சிந்தனை செயல்திறன், தைரியம் ஆகியவை சிறப்பாக செயல்படும் மாதமாகவும் இது அமையும். சனிபகவான் அதிசார நிலையில் ஏழாமிடத்திற்கு மாறி ராசியோடு தொடர்பு கொள்வதால் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை முழுக்க நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.

வயதானவர்கள் உடல்நலத்தின் மீது அக்கறை வைக்கவும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். ஒருசிலர் திருமண உறுதி கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் இந்த மாதம் எதிர்கால வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தடைகளுக்குப் பிறகு வெற்றி உண்டு. அரசுத்துறையில் உயரதிகாரிகளாக இருப்பவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நிர்ப்பந்தங்கள் வரலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டுமென்றே சிலர் திரிவார்கள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்.

இதுவரை குலதெய்வ வழிபாட்டில் குறை வைத்திருப்பவர்கள் குலதெய்வத்தை தரிசிக்கமுடியாதவர்கள் இப்போது நேர்த்திக்கடன்களை தேடிச் சென்று நிறைவேற்ற ஆரம்பிப்பீர்கள். ஒரு சிலருக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைகளும், நவக்கிரக சுற்றுலாக்களும் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறுக்குவழி சிந்தனைகள் செயல்கள் இப்போது கை கொடுக்காது. யாரையும் நம்ப வேண்டாம். பணம் எடுத்துப் போகும்போது மிகுந்த கவனம் தேவை.

2,4,6,8,9,12,13,14,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி பகல் 12 மணி முதல் 25-ம் தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். தொழில் விஷயங்களில் முதலீடுகள், விரிவாக்கங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது.

No comments :

Post a Comment