Wednesday, February 1, 2017

தனுசு: 2017- பிப்ரவரி மாத ராசிபலன்கள்

தனுசு:

ராசியில் சனி இருப்பதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். அதேநேரத்தில் அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். ஒன்பதில் இருக்கும் ராகுவுடன் சுக்கிரன் தொடர்பு கொள்வதால் பெண்களால் மனக்கஷ்டங்களும் குறிப்பாக சிலருக்கு அந்நிய மத வேற்று மத, இன, மொழி இளம் பெண்களால் மனக்கசப்புகளும், பிரச்சினைகளும் இருக்கும்.

அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் மறுபடியும் லேசாக எட்டிப் பார்க்கும். அதேநேரத்தில் கடன் உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும். உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும் நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். கவனமாக இருங்கள். அவசியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். ஆடம்பர விஷயத்தில் செலவு இருக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம்.

வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரும். மூன்றாம் மனிதரின் கோள்மூட்டலை நம்பி ஒருவருக்கொருவர் மனச்சங்கடத்திலும் இருப்பீர்கள். வெளிநாடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் கைகொடுக்கும். சிலர் வெளிநாடு செல்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத மறைமுக இலாபம் கிடைக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். சிலருக்கு வேலை மாறுதல், இடம் மாற்றங்கள் ஆகியவை உண்டு.

1,2,3,4,7,8,9,19,20,21 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 11-ம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கங்கள் போன்றவைகளை இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment