Monday, 13 February 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (13.2.17 - 19.2.17)

மேஷம்:

மேஷநாதன் செவ்வாய் வாரம் முழுவதும் உச்ச சுக்கிரனுடன் இணைந்திருப்பது யோக அமைப்பு என்பதால் உங்களுக்கு இப்போது தொழில் வருமானம் மற்றும் பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்ப்புகள் தொந்தரவு செய்யாது. உங்களைப் பிடிக்காதவர்கள் அடங்கி இருப்பார்கள். உங்களுடைய சிந்தனை, செயல் திறன் அனைத்தும் மேலோங்கி நல்ல நிலைமையில் இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகள் உண்டு. ஆரோக்கியக்குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னிய மத நண்பர் கை கொடுப்பார். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் பெண்கள் உதவுவார்கள். பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு அவர்கள் மூலம் நன்மை உண்டு.

மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் உண்டு. வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் மிகுதியாக இருக்கும். ஆனாலும் நல்லபெயர் கிடைக்கும். கையருகே சாப்பாடு இருந்தாலும் எடுத்துச் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்றம் தரும் நிகழ்வுகள் உண்டு.

ரிஷபம்:

சனி பகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் குறிப்பிட்ட சில ரிஷபத்தினருக்கு வேலைக்காரர்களால் விரையங்களும், அவர்கள் மூலம் பண இழப்பு நிகழ்ச்சிகளும் இந்த வாரம் நடக்கும் என்பதால் கொடுக்கல், வாங்கல்களிலும், வெளி இடங்களுக்கு பணத்தை கொடுத்து விடுவதிலும் கவனம் தேவை. குறிப்பாக வேலைக்காரர்கள் திருடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும்.

அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வார ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

தந்தை வழி உறவினர்களால் சிறு பிரச்சினைகள் வரும். பங்காளித் தகராறு உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்களில் கவனமாக இருங்கள். தந்தையின் சொத்தை பிரிப்பது போன்ற பாகப்பிரிவினைகள் இப்போது வேண்டாம். கூடுமானவரை சொத்துப் பிரச்னைகளைத் தள்ளி வைப்பது நல்லது. நீண்ட தூர பிரயாணங்களை வார ஆரம்பத்தில் ஒத்தி வைப்பது நல்லது. பயணங்களால் சில சங்கடங்கள் இருக்கலாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் நல்ல விதமாக தீரும் வாரமாக இது இருக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் முன்னேற்றம் காணுவீர்கள். சனியின் கேந்திர பலத்தினாலும் சுக்கிரன், செவ்வாய் இணைவினாலும் அனைத்து எதிரிகளையும் உங்களால் ஜெயிக்க முடியும் என்பது உறுதி.

வேலை, வியாபாரம் போன்றவற்றில் இருந்த சிக்கல்கள் இப்போது தீரும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமண உறுதி செய்தல் அல்லது திருமணம் நடத்தல் போன்ற சிறப்புப்பலன்கள் இருக்கும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிய சம்பவங்கள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

ராசிக்கு மூன்றில் ராகு, ஒன்பதில் புதன், பத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் அனைத்து மிதுனராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அவரவர் வயதுக்கேற்ற திருப்புமுனைகள் இப்போது நடக்கும். நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பூமி சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வீட்டு கட்டிக் கொடுக்கும் பில்டர்கள் செங்கல், மணல், ஜல்லி போன்றவை விற்பனை செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும்.

கடகம்:

கடகத்திற்கு இப்போது தொட்டது துலங்கும் நேரம் என்பதால் ஜீவன அமைப்புகளான வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் நீங்கள் நீண்ட காலமாக செயல்படுத்த நினைத்திருந்த திட்டங்களை இப்போது செய்யலாம். அதன் மூலம் உங்களுக்கு லாபங்கள் இருக்கும். இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும்.

பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். உச்ச வலுவுடன் இருக்கும் சுக்கிரனால் பெண்கள் மூலமாக இந்த வாரம் வீண் பிரச்சினைகள் வரும் என்பதால் அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது. குறிப்பாக பெண்களின் கீழே வேலை செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வாரம் காட்டுகிறது.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம். சீருடை அணியும் தொழில் புரிபவர்களுக்கு குறிப்பிடத்தக்க நல்ல பலன்கள் இருக்கும்.

சிம்மம்:

இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்கள் எடுக்கும் காரியம் யாவும் வெற்றி பெறும் என்பது உறுதி. வார இறுதியில் ராசிநாதன் ராசியைப் பார்ப்பதும், குருபகவான் இரண்டில் இருப்பதும் நல்ல அமைப்புகள் என்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இப்போது கை கொடுக்கும். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும்.

வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள். ஒரு சிலருக்கு நீண்ட நாள் வராத வாடகை குத்தகை பணம் இந்த வாரம் வசூலாகும். இதுவரை குலதெய்வ வழிபாட்டில் குறை வைத்திருப்பவர்கள் குலதெய்வத்தை தரிசிக்கமுடியாதவர்கள் இப்போது நேர்த்திக்கடன்களை தேடிச் சென்று நிறைவேற்ற ஆரம்பிப்பீர்கள். ஒரு சிலருக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைகளும், நவக்கிரக சுற்றுலாக்களும் இருக்கும்.

விவசாயிகளுக்கு இது நன்மை தரும் வாரம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். அம்மாவழி ஆதரவு இப்போது பரிபூரணமாக உண்டு. தாய்வழி சொந்தங்கள் உதவுவார்கள். மூத்த சகோதரிகளால் லாபம் இருக்கும். நீங்களும் அவருக்கு உதவ முடியும்.

கன்னி:

ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் விரயாதிபதி சூரியனுடன் இணைவதால் இந்த வாரம் அனைத்து விஷயங்களும் தடைகளும், தாமதங்களாகவே இருக்கும் என்பதோடு கவனம் தேவைப்படும் வாரமாகவும் இது இருக்கும். இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள், ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. ராசியை சனி, செவ்வாய் இருவரும் பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் பிடிவாதத்தைக் காட்டுவீர்கள்.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் அனைத்து பிரச்னைகளையும் வெற்றிகரமாக தீர்க்கலாம் என்பதை புரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த வாரம் உங்கள் வாரம்தான். வெளிநாட்டுப் பயணத்திற்கு இது வரையிருந்து வந்த தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். வழக்குகள் வெற்றி பெறும். தந்தையின் ஆதரவு பூரணமாய்க் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் திடீர் லாபம் உண்டு.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு போன்ற வகைகளில் தொழில் அமைப்புகளில் இருப்பவர்கள் லாபம் பெறும் வாரமாக இது இருக்கும். வலுப்பெற்ற ராகுவாலும், உச்சம் பெற்ற சுக்கிரனாலும் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். தொழில், வியாபாரம் போன்றவைகளில் மிகவும் நல்ல பலன்களும் பண வரவுகளும் இருக்கும்.

ராசிநாதனுடன் இணைந்து செவ்வாய் வலுவுடன் ராசியை தனது எட்டாம் பார்வையால் பார்ப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

அம்மாவால் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள். யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

விருச்சிகம்:

கடந்த சில மாதங்களாக மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்த விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் முதல் நிம்மதியை தரும் சம்பவங்களும், நல்ல செய்திகளைக் கேள்விப்படுதலும் இருக்கும். இனிமேல் எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் பிறக்கும் வாரம் இது. ஏழரைச்சனி நடப்பதால் பொருளாதார நிலைமைகள் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் செலவுகளை தவிருங்கள்.

விருச்சிக ராசிக்கு சனியின் தாக்கம் இன்னும் கொஞ்சகாலத்திற்கு நீடிக்கும் என்பதால் வாராவாரம் சனிக்கிழமை இரவு சிறிதளவு எள்ளை தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் ஞாயிறு புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்திற்கு உணவிடுங்கள். கறுப்புநிற நன்றியுள்ள பிராணிக்கு அன்புடன் விருப்பமான உணவு அளியுங்கள். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்த்தவர்கள் இனிமேல் மனம் மாறி உங்களுக்கு சாதகமாக திரும்புவார்கள்.

கிரக நிலைமைகள் சாதகமாக இல்லை என்றாலும் ராசிநாதன் வலுப்பெற்றால் ராசிக்கு கெடுதல்கள் நடக்காது என்ற விதிப்படி உங்களுக்கு இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். அதே நேரத்தில் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் தேக்க நிலைகளும் இருக்கும். இந்த வாரம் முதல் விருச்சிகராசிக்காரர்கள் எதையும் சமாளிக்கும் திறனும், தைரியமும் பெறுவீர்கள் என்பது உறுதி. சனியின் தாக்கத்தை இனிமேல் சுலபமாக சமாளிப்பீர்கள்.

தனுசு:

தனுசுக்கு ஏற்பட்டு வந்த பிரச்னைகள் அனைத்தும் இந்த வாரம் சுமுகமாக தீரும் வாரமாக இருக்கும். அதேநேரம் சுக்கிரன் வலுப்பெறுவதால் அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம். அனாவசியமான வாக்குவாதங்களை தவிருங்கள். தேவையின்றி எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

தனுசுக்கு ஏழரைச் சனியின் தாக்கம் தொடங்க இருப்பதால் இளைஞர்கள் புதிதாக எந்த முயற்சிகளும் ஆரம்பிக்க கூடாது. இப்போது எந்த நிலை இருக்கிறதோ அதே நிலை நீடிக்கும்படி பார்த்துக் கொண்டாலே போதும். தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

மேலதிகாரிகளிடம் மோதல் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தரங்கமான விஷயங்களை அனாவசியமாக யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உயரதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. நான்காம் வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்திருப்பதால் வயதான தாயாரை கொண்டவர்கள் அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது.

மகரம்:

மகர ராசிக்கு இந்த வாரம் தொழில், வேலை, வியாபாரம் போன்ற உங்களது ஜீவன அமைப்புகளில் வீண் செலவுகள் இல்லாமல் வருமானங்கள் உள்ள வாரமாக இருக்கும். தாராளமான பணப்புழக்கம் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயணங்களும், ஞானிகள் தரிசனமும் கிடைக்கும். பிறந்த ஜாதகத்தின்படி குரு தசை புக்தி நடப்பவர்கள் நல்ல பலன்களை அடைவீர்கள். அரசாங்கத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், மற்றும் குரூப்ஒன் போன்ற தேர்வுகளில் வெற்றி உண்டு.

ஏற்கனவே தேர்வு எழுதி முடிவுகளுக்கு காத்து இருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் தடையின்றி நடக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவி தேடி வரும். இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மகர ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

வீடு விஷயமான எந்த விஷயங்களையும் இன்னும் ஒருமாதம் ஒத்திப் போடுங்கள். புதிய வாகனம் வாங்குவதையும் ஒருமாதம் தவிர்க்கலாம். 11-ம் தேதி காலை 9 மணி முதல் 13-ம் தேதி மதியம் 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எதிலும் கவனத்துடனும் நிதானத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கையை பாதிக்கும் எவ்வித முடிவுகளையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

கும்பம்:

யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் இந்த வாரம் வலுவான .நிலையில் இருப்பதாலும், ராசியை ராசிநாதன் சனி பார்ப்பதாலும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த சில விஷயங்களை நீங்கள் முடித்துக் காட்டும் வாரமாக இது இருக்கும். மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். மூத்த சகோதரஸ்தானம் வலுவாக இருப்பதால் அண்ணன், அக்காக்கள் மூலமாக நன்மைகளும், உதவிகளும் உண்டு.

போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்சநாட்களுக்கு பங்குச்சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. தாயாரைப் பார்த்து ஆசீர்வாதம் பெற்று வருவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது.

வெளிநாடு, வெளிமாநிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், நீண்டதூரப் பயணங்களும் இருக்கும். ஸ்டேஷனரி, புக்ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இது முன்னேற்றமான வாரமாக இருக்கும். 13-ம் தேதி மதியம் 3 மணி முதல் 16-ம் தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.

மீனம்:

செவ்வாய் ராசியில் சுபருடன் இணைந்து சுபரின் பார்வையில் இருப்பதால் குறிப்பிட்ட சில மீன ராசிக்காரர்களின் இளைய சகோதரத்திற்கு நன்மை தரும் விஷயங்களும், நீண்ட நாட்களாக இழுபட்டுக் கொண்டிருந்த தங்கையின் திருமண விஷயம் உறுதியாவதும் உள்ள வாரமாக இது இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள். சிலருக்கு சகோதரிகளால் செலவு உண்டு. அதேநேரத்தில் என்னதான் செய்தாலும் அண்ணன் ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் கூறுவதையும் கேட்க வேண்டியிருக்கும்.

ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். அரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப் பளுவும் இனிமேல் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

வாரம் முழுக்க அலைச்சல்களும் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். 16-ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 18-ம் தேதி மதியம் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் அலுவலங்களில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவருடன் மனஸ்தாபங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் நிதானம் தேவை.

No comments :

Post a Comment