Monday, 23 January 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (23.1.17 முதல் 29.1.17 வரை)

மேஷம்:

கடந்த சில வாரங்களாக கேதுவுடன் இணைந்து பலமிழந்து இருந்த ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் முதல் அந்த நிலை நீங்கி விட்டதால் இதுவரை எதிர்மறைபலன்களைச் சந்தித்து வந்த மேஷராசிக்காரர்களுக்கு தடைகள் அனைத்தும் நீங்கி அவர்கள் மனம் போலவே நன்மைகள் நடக்கும் வாரம் இது. இதுவரை வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் இப்போது உங்கள் மனம் போல நிறைவேறும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு சாதனைச்செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். அரசு ஊழியர்களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும்.

தொழில் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகி நிம்மதி இருக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். இதுவரை அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

ரிஷபம்:

வார இறுதியில் ராசிநாதன் சுக்கிரன் வருடம் ஒருமுறை அடையும் உச்ச வலுவை அடைவதால் இன்னும் சில வாரங்களுக்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு தடைப்பட்டிருந்த பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். உங்களின் எந்த முயற்சியும் வெற்றியடையும் என்பதால் நீங்கள் தயக்கமின்றி செயல்பட வேண்டிய வாரம் இது. அதேநேரத்தில் ராசிநாதனே ஆறுக்குடையவனாகி வலுப் பெறுவதால் உங்கள் எதிரிகள் கையும் ஓங்கியிருக்கும் வாரம் இது. எனவே எதிர்ப்புகளின் மேல் ஒரு கண் வைக்க வேண்டிய வாரம் கூட இது.

ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வாரம் யோகத்தை தரும். இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள்.

சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மிதுனம்:

வாரம் முழுவதும் ராசிக்கு ராசிநாதனின் பார்வையும் நான்கு, ஏழுக்குடையவர்கள் பரிவர்த்தனையும் மிதுனராசிக்கு யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால் இந்த வாரம் நீங்கள் சகோதர, சகோதரிகளின் மூலமும், வாழ்க்கைத்துணை வழியிலும் லாபங்களை அடையும் வாரமாக இருக்கும். உங்களுக்கு இந்த வாரம் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.

காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும். குழந்தைப்பேறு தள்ளிப் போன தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டு.

அலுவலகங்களிலும், தொழில் அமைப்புகளிலும் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அகலும். போட்டியாளர்கள் விலகுவார்கள். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் தீரும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் வெகு சீக்கிரம் குணமடைவார்கள். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.

கடகம்:

வார ஆரம்பத்தில் கடகநாதன் சந்திரன் நீச நிலைமையில் இருந்தாலும் வார இறுதியில் சூரியனுடன் இணைந்து அமாவசை யோகத்துடன் ராசியைப் பார்க்கும் நிலை பெறுவதால் இந்த வாரம் குறிப்பிட்ட சில கடகராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத வாரமாகவும், நீண்ட காலமாக நடக்காமல் இருந்த விஷயங்கள் நடக்கின்ற வாரமாகவும் இருக்கும். தனாதிபதியும் ராசியைப் பார்ப்பதால் இப்போது உங்களுக்கு தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை வரும்.

இதுவரை எட்டாம் வீட்டில் இருந்து உங்களின் பணவரவுகளை தடுத்துக் கொண்டிருந்த செவ்வாய் பகவான் அங்கிருந்து விலகும் வாரம் இது. செய்த வேலைக்கேற்ற கூலியும், வருமானமும் இதுவரை இல்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த கடக ராசிக்காரர்கள் இனிமேல் கையில காசு வாயில தோசை என்கிற அமைப்பை இந்த வாரம் முதல் அனுபவிப்பீர்கள். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிமையான நிகழ்ச்சிகள் இருக்கும்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சில இளையவர்கள் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணையை இன்னாரென்று தெரியாமலேயே சந்திப்பீர்கள். சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இப்போது பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு.

சிம்மம்:

ராசிநாதன் ஆறில் மறைந்தாலும் இந்த வாரம் முதல் சனிபகவான் அதிசார முறையில் அடுத்த ராசிக்கு செல்வதால் ராசிக்கும் ராசினாதனுக்கும் சனிபார்வை விலகுகிறது. எனவே இந்த வாரம் முதல் உங்களுக்கு இருந்து வந்த அதிர்ஷ்டத் தடை விலகுகிறது. சிம்மத்தினர் எந்த ஒரு செயலைச் செய்தாலும் முன்யோசனையுடன் சிறப்பாக செய்பவர்கள் என்பதால் அதிர்ஷ்டமும் இனிமேல் உங்களுக்கு கைகொடுத்து உங்கள் செயல்திறனை மேம்படுத்தும் வாரம் இது.

இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். இனிமேல் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்கவே நடக்காது. கிணற்றில் போட்ட கல்லாக நகர முடியாமல் இருந்த அனைத்து விஷயங்களும் தற்போது விரைவாக தீர்வினை நோக்கிச் செல்லும்.

இந்த வாரம் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட துறையினர் சிறப்படைவார்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு சொந்தவீடு அல்லது வாகனம் அமையும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள்.

கன்னி:

எட்டுக்குடைய செவ்வாய் ராசியைப் பார்த்து சில மனக்கஷ்டங்களை உங்களுக்குக் கொடுத்தாலும் அவருக்கு குருபார்வை இருப்பதாலும், ராசிநாதன் புதன் பரிவர்த்தனை அமைப்பில் வலுவாக இருப்பதாலும் கன்னிக்கு கெடுதல்கள் இல்லாத வாரம் இது. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு இந்தவாரம் மனதை போட்டு குழப்பிக்கொண்டும் தவறாக ஏதேனும் நடந்து விடுமோ என்று அச்சபட்டுக்கொண்டும் இருப்பீர்கள். கடவுளின் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு என்பதால் எதுவும் எல்லை மீறாது. கவலை வேண்டாம்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இந்த வாரம் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. மனம் இந்த வாரம் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொள்ளும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கும். புதிய வாகனம் அமையும். வாரத்தின் பிற்பகுதி பணவரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும். உங்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தால் அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.

துலாம்:

இந்த வாரம் முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையில் அமர்ந்து ராசியில் அமர்ந்து குரு பார்வையும் பெறுவதால் உங்களுடைய தைரியமும், செயல்திறனும், சாமர்த்தியமான நடவடிக்கைகளும் சிறப்பாக வெளிப்படும் வாரம் இது. குறிப்பிட்ட சில துலாம் ராசிக்காரர்கள் ஏதேனும் ஒரு செயலால் நற்பெயரும், புகழும் அடைவீர்கள். ராசியை செவ்வாய் வலுப்பெற்று பார்ப்பதால் எதற்கெடுத்தாலும் கோபமும், எரிச்சலும் வர வாய்ப்பிருகிறது. யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

தேவை இல்லாமல் அடுத்தவரை பகைத்து கொள்ளக் வேண்டாம். வயதானவர்களுக்கு நோய்கள் தொல்லை கொடுக்கும். நடுத்தர வயதை கடந்தவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். இந்த வாரம் உங்களுடைய ஜீவன அமைப்புகள் வலுப்பெறுவதால் அலுவலங்களில் உங்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானத்துடன் நல்ல பெயரும் உண்டு.

சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட வியாபாரிகள் நல்ல இலாபம் அடைவார்கள். இனிமேல் பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். இதுவரை விழிப்புடனும், மனக்கட்டுப்பாடுடனும் இருந்ததன் மூலம் கஷ்டமான ஏழரைச்சனி காலத்தை சமாளித்து விட்டீர்கள். சனி அதிசார முறையில் அடுத்த ராசிக்கு போய் விட்டதால் இனிமேல் துலாம் ராசியினரை துன்பங்கள் எந்த நிலையிலும் அணுகாது.

விருச்சிகம்:

கேதுவுடன் இணைந்து வலிமையிழந்திருந்த ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் முதல் அவரிடமிருந்து விலகி உச்ச சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையில் இருக்கப் போவதால் உங்களின் கவலைகள் அனைத்தும் விலகி உங்களுக்கு ஆனந்தம் வரப் போகின்ற ஆரம்ப வாரம் இது. ராசியில் இருக்கின்ற சனியும் இந்தவாரம் முதல் அதிசார முறையில் அடுத்த ராசிக்குச் செல்வது கிட்டத்தட்ட ஜென்மச்சனி விலகியது போலத்தான் என்பதால் விருச்சிகத்தின் தொல்லைகள் அனைத்தும் விலகிப் நல்லவை நடக்க ஆரம்பிக்கும் வாரம் இது.

பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும் வாரம்தான். அதேநேரத்தில் சனிபகவான் இரண்டில் இருப்பதால் உங்களுக்கு தொழில் நன்றாக நடந்தாலும் பண வரவை தடுப்பார் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்லதொகையோ கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ரியல்எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். இனிமேல் உங்களுக்கு எதிலும் கெடுதல்கள் இல்லை. இந்த வாரம் முதல் எல்லா விஷயத்திலும் நன்மைதான். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே இந்த வாரம் முதல் வெற்றி பெறும். அனுஷத்திற்கு பிரச்னைகளில் இருந்து விடுதலை உண்டு.

தனுசு:

ராசிநாதனும், ஜீவனாதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெறும் யோகவாரம் இது என்பதால் இந்த வாரம் முழுவதும் தனுசு ராசிக்கு நற்பலன்களும், நல்ல பெயரும், பொருளாதார மேன்மைகளும் இருக்கும் என்பது உறுதி. வார ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் மிகவும் முன்னேற்றமாக இருக்கும்.

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். சிலருக்கு அனைத்திலும் தடங்கல்கள் இருக்கும்.

தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

மகரம்:

ஆறுக்குடையவன் ஆறாமிடத்தை பார்த்து வலுப்படுத்தினாலும் அவர் ராசியின் யோகர் என்பதாலும் ஜீவனாதிபதி சுக்கிரன் உச்சபலம் பெற்று வலுத்திருப்பதாலும் மகர ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்கள் நடக்கும் வாரம் இது. அதே நேரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் உங்களின் போட்டி, பொறாமைக்காரர்கள் உங்களை கவிழ்க்கப் பார்ப்பார்கள் என்பதால் நீங்கள் நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய வாரம் இது.

கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் இப்போது நடக்கும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கும் மிகவும் நல்ல பலன்கள் உண்டு. நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும். அவிட்டத்திற்கு அதிர்ஷ்டம் தரும் வாரம் இது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல நேரம்.

கும்பம்:

கடந்த சில வாரங்களாக ராசியில் அமர்ந்து உங்களை எரிச்சலும், ஏமாற்றமும் படுத்திக்கொண்டிருந்த செவ்வாய் பகவான் இந்த வாரம் முதல் ராசியில் இருந்து விலகுவதால் இதுவரை கருத்துவேற்றுமையாலும் வேலை விஷயங்களாலும் பிரிந்து கிடந்த குடும்பத்தினர் ஒன்று சேரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வாரம் இது. குறிப்பிட்ட சில கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிவன் கோவில் திருப்பணி செய்யும் வாய்ப்பு தேடி வரும்.

மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். சிலருக்கு வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள்.

எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். காவல்துறை, வனத்துறையில் பணி புரிபவர்களுக்கு சம்பள உயர்வு இதரபடிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். வாரம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும்.

மீனம்:

ஆறுக்குடைய சூரியன் பதினொன்றாமிடமான லாபத்தில் அமர்ந்திருக்கும் நல்ல வாரம் இது. ராசினாதனும் ஏழுக்குடைய புதனும் பரிவர்த்தனையாகி யோகாதிபதி செவ்வாய் ராசியில் அமர்வதால் கோட்சார நிலையில் மீனத்திற்கு குறைகள் சொல்ல முடியாத, சொல்லக்கூடாத வாரம் இது. ஆயினும் பிறந்த ஜாதக நிலைப்படி இதுவரை பணப் பிரச்சினையில் இருந்து வந்த மீனராசிக்காரர்களுக்கு இப்போது புதிய மாற்றங்கள் ஆரம்பிக்கும். இதுவரை லட்சியங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இந்தவாரம் முதல் அதற்கான ஆரம்ப வேலைகளில் இறங்குவீர்கள்.

உங்களில் சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும். முப்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற வைபவங்கள் இல்லத்தில் உண்டு.

பணவரவு நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. சேமிப்பு என்பதை மனதில் இருத்தி கொஞ்சமாவது சேமியுங்கள். உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்டவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். மீனராசிக்கு குறை சொல்ல முடியாத கோட்சார நிலைகள் இருப்பதால் பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அமைப்புகள் சரியில்லை என்றால்தான் கஷ்டப்படுவீர்கள்.

No comments :

Post a Comment