Monday, 2 January 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (2.1.17 முதல் 8.1.17வரை)

மேஷம்: 


வார ஆரம்பத்தில் லாபஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து ராசிநாதன் செவ்வாயுடன் இணைந்து அவரை சுபத்துவப் படுத்துவதால் மேஷத்திற்கு அனைத்தும் நன்றாக நடக்கும் வாரம் இது. ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகுவிற்கு சந்திரன், செவ்வாய், சுக்கிரன் தொடர்பு இருப்பதால் இந்த வாரம் ராகு தசை, ராகு புக்தி நடக்கின்ற மேஷ ராசிக்காரர்களுக்கு நல்லபலன் நடக்கும்.


பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. சிலருக்கு கோர்ட், காவல்துறை போன்ற இடங்களுக்கு போக வேண்டி இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான அரசு ஊழியர்களுக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.

சுற்றி உள்ளவர்களின் செய்கைகளால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இருக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவது தந்தை வழியில் விரயங்களும் தகப்பனாரால் மனக்கஷ்டங்களும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் தேவை. மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது.

ரிஷபம்:

வாரம் முழுக்க சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதாலும், குருபகவான் ராசியை பார்ப்பதாலும், தனாதிபதி புதன் வலுப்பெற்றிருப்பதாலும் ரிஷபத்திற்கு கஷ்டங்கள் கொடுக்காமல் இஷ்டங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு யோககிரகங்கள் பத்தாமிடத்தில் இருப்பதால் இதுவரை தள்ளிப்போய் இருந்த வேலைவாய்ப்பு உடனே நடப்பதும், அப்பாய்மெண்ட் ஆர்டர் கையில் கிடைப்பதும் இந்த வாரம் இருக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. வார ஆரம்பத்தில் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. தொழில் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசம் இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களும் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.

யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் இந்த வாரம் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். உடல்நலம் மனநலம் சிறப்பாக இருக்கும். தெய்வ அருள் உங்களுக்கு உண்டு. பிள்ளைகளால் பெருமை வரும். குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் கலைஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல வாரம் இது.

மிதுனம்:

ராசிநாதன் ராசியை பார்த்து ஐந்துக்குடையவன் ஒன்பதில் இருக்கும் சுக போக வாரம் இது. மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுடைய சுகத்திற்காகவும், மன சந்தோஷத்திற்காகவும் செலவுகள் செய்வீர்கள். ஆறாமிடத்தில் இருக்கும் சனிபகவானால் உங்களை எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். இதுவரை உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்தவர்கள் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கு நெருக்கமாகும் வாரம் இது.

சுக்கிரன் வலுப்பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும் வகையில் சில ஆரம்பங்கள் இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. சிறு கலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. பிள்ளைகள் வழியில் செலவுகளும் மனக்கஷ்டங்களும் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வெகு சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும்.

கடகம்:

ராசிக்கு எட்டில் நான்கு கிரகங்கள் அமர்ந்து வார ஆரம்பமே சந்திராஷ்டம நாளாக அமைவதால் இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் உங்களுக்கு குழப்பங்களைத் தரும். கூடவே தெளிவற்ற தன்மையும், பிறர் உங்களை எரிச்சல் படுத்தி பார்ப்பதும் இருக்கும். என்னவென்று புரியாத ஒரு தயக்கத்துடனும், நிதானத்துடனும் எல்லா விஷயங்களையும் எதிர் கொள்வீர்கள். அலுவலகத்தில் சில விஷயங்கள் ஏறுக்குமாறாக இருக்கும். அனைத்தையும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்த வேண்டிய வாரம் இது.

எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடந்தே தீரும். அதேநேரம் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும் வாரமாகவும் இது அமையும். செலவு செய்ய பணம் வேண்டுமே? எனவே பணவரவுக்கும் பஞ்சமிருக்காது. வாரஇறுதியில் அரசுஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் நன்மைகள் நடக்கும்.

சூரியன் வலுவாவதால் இந்த வாரம் சுயதொழில் புரிவோருக்கும் நல்ல வருமானம் இருக்கும். அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். சிலருக்கு ஏதேனும் ஒரு வகையில் திடீர் பண வரவு உண்டு.

சிம்மம்:

ராசியை இரண்டு யோகாதிபதிகள் வலுப்பெற்று பார்ப்பதால், வார ஆரம்பத்தில் சிம்மராசிக்கு அனைத்து நன்மைகளும் நடக்கின்ற வாரமாக இருக்கும். வாரத்தின் நடுப் பகுதி சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் எதிலும் முடிவெடுக்க சற்று தயங்குவீர்கள். அதேநேரத்தில் சந்திரனை குரு பார்ப்பதால் கெடுபலன்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த ஒரு விஷயம் இந்த வாரம் கைகூடி வரும்.

உங்களின் அந்தஸ்து கௌரவம் சிறப்பாக இருக்கும் வாரம் இது. பெரும்பகுதி நாட்களில் சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதால் பணவரவிற்கும் குறைகள் இருக்காது. புதனின் வலுவால் முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரிகளுக்கும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் நல்ல பலன்கள் இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். சிம்மத்திற்கு இந்த வாரம் தொட்டது துலங்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். தெய்வ வழிபாடு செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

கன்னி:

ராசிநாதனும், குருபகவானும் பரிவர்த்தனையில் அமர்ந்து ராசியை செவ்வாய் எட்டாம் பார்வையாக பார்க்கின்ற வாரம் இது. கன்னி ராசிக்காரர்களுக்கு தூர இடங்களில் இருந்து நல்ல தகவல்கள் வருகின்ற வாரமாக இது இருக்கும். அறிவு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும், பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு துறைகளில் வேலை செய்பவர்களுக்கும் இந்த வாரம் முன்னேற்றங்கள் இருக்கும்.

செவ்வாய் ராசியை பார்ப்பதால் எந்த ஒரு விஷயத்திற்கும் எரிச்சல்படுவீர்கள் என்பதோடு கோபமும் அடிக்கடி தலைகாட்டும். அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும் என்றாலும் எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்குப் பின்பு நீங்கள் வெற்றிகரமாக முடிக்க முடியும். குறிப்பிட்ட சிலருக்கு வடக்கு நோக்கிய பயணம் இருக்கும். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் சிறப்புக்கள் சேரும். ஒரு சிலருக்கு தாயார் மூலம் மனக்கஷ்டங்களும் வீண் செலவுகளும் இருக்கும் என்பதால் அம்மாவைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

இந்த வாரம் எதிலும் சிறிது தடைகளும் தாமதங்களுமாக இருக்கும். அதே நேரத்தில் அந்தஸ்து கௌரவத்திற்கு எந்த வித குறைவும் வராது. பணவரவும் திருப்தியாக இருக்கும். இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இந்த வாரம் இருக்கின்றன. இளைய பருவத்தினரை அவர்களது பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.

துலாம்:

மூன்று, பனிரெண்டிற்குடையவர்கள் பரிவர்த்தனையாவதால் இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு இளைய சகோதர, சகோதரிகளின் மூலம் நன்மைகளும், அவர்களுக்காக செலவுகள் செய்வதும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரம் நீண்ட தூர பிரயாணங்கள் உண்டு. இளைய பருவத்தினர் சிலருக்கு வடக்கு திசையில் வேலை அமைப்புகள் உருவாகி, இருக்கும் இடத்தை விட்டு வெளியிடங்களுக்கு மாறுதல் ஆவீர்கள்.

தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும். சூரியன் வலுவாக இருப்பதால் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும்.

சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம். ராசிநாதன் வலுவாக இருப்பதால் நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் சுபத்துவமான இருப்பதால் விருச்சிகத்திற்கு கெடுதல்கள் இல்லாத வாரம் இது. ஆயினும் இளைய பருவத்தினருக்கு நன்மைகள் நடப்பதற்கு தடை இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாக அசையாமலேயே இருக்கும். வருடத்தின் ஆரம்பம் சுபத்துவமாக இருப்பதால் இனிமேல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு துயரங்கள் என்று சொல்ல எதுவும் இல்லை. ஆயினும் நன்மைகள் படிப்படியாகத்தான் நடக்கும்.

பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் சிலர் நீண்டதூரப் பயணம் செய்வீர்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் இனிமேல் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.

ஒருவருடைய வாழ்க்கையில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஏழரைச்சனி யார் நல்லவர் யார் கெட்டவர், எது நல்லது எது கெட்டது என்ற அனுபவத்தை தரும், எனவே இப்போது உங்களுக்கு கிடைக்கும் சில அனுபவங்கள் கசப்பாக இருந்தாலும் இன்னும் சில் மாதங்களில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் போது சனி ஜென்மச்சனி எனும் நிலையிலிருந்து மாறி பாதச்சனியாக மாறப் போகிறார் என்பதால் விருச்சிக ராசிக்கு இனி வேதனைகள் எதுவும் இல்லை.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் வலுவாக இருப்பதாலும், மூன்றாமிடம் சுபத்துவமாக இருப்பதாலும் அனைத்து விஷயங்களிலும் தெளிவான மனதுடன் நீங்கள் தைரியமாக முடிவெடுக்கும் வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு பெண்கள் விஷயத்தில் நல்லதும் கெடுதலுமான இரட்டை பலன்கள் இருக்கும். பெண் உறவுகள் விஷயத்தில் செலவுகளும், வீண் மனஸ்தாபங்களும் இந்த வாரம் உண்டு.

தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் இந்த வாரம் நன்மைகள் நடக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு. எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு.

மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். ஆறாமிடம் வலு இழப்பதால் எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் உண்டு. சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் சித்திக்கும். பிள்ளைகள் வழியில் செலவு இருக்கும். நீங்கள் சொல்வது ஒன்று. பிள்ளைகள் செய்வது ஒன்றுமாக இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தள்ளிப் போடுவது நல்லது.

மகரம்:

மகரநாதன் சனி பரிவர்த்தனை யோகத்திலும், பாக்கியாதிபதி புதன் வலுவுடனும் இருப்பதால் வாரம் முழுவதும் நல்ல பலன்கள் நடக்கின்ற வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு நீசதிரவம் எனப்படும் பெட்ரோல், ஆசிட் போன்றவைகள் சம்பந்தப்பட்ட தொழில் தொடர்புகள் ஏற்படும். மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத லாபம் உண்டு. ஆலைகளில் பணி புரியும் உழைப்பாளிகளுக்கு வேலைப்பளு குறைவாக இருக்கும். பொதுவாக மகரத்தினர் சாதிக்கும் வாரம் இது.

இந்த வாரம் எந்தவிதமான எதிர்மறைபலன்களும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு இதுவரை நடந்து வந்த சாதகமற்ற நிலை மாற்றம் அடைந்து இனிமேல் அனைத்தும் உங்கள் பக்கம் நன்மையாக திரும்பும் நிலை ஆரம்பிக்கிறது. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்டவர்கள், திரவ பொருள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல பணவரவு ஒன்றினை இப்பொழுது அடைவார்கள். இரண்டிற்குடைய தனாதிபதி வலுவாக உள்ளதால் திடீர் பண வரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும் வாரமாகவும் இந்த வாரம் இருக்கும். கணவன்-மனைவி உறவு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பெரிய உரசல்கள் இன்றி சந்தோஷமாகவே இருக்கும்.

கும்பம்:

கும்பத்தினரின் குறைகள் அனைத்தும் தீர ஆரம்பிக்கும் வாரம் இது. கடந்த சில மாதங்களாகவே அஷ்டமகுருவின் சாதகமற்ற போக்கால் கும்ப ராசிக்காரர்களுக்கு எவ்வித நற்பலனும் நடக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக செவ்வாய் சனியின் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொழில் அமைப்புகளிலும் சரிவர எதுவும் நடக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மேற்கண்டவை அனைத்தும் நல்லபடியாகி தீர ஆரம்பிக்கும் வாரமாக இது இருக்கும்.

குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய கிளைகள் ஆரம்பிக்கலாம். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும்.

ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் இந்த வாரம் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.

மீனம்:

மீனத்தினருக்கு ராசியை குருபகவான் பார்ப்பதால் எதுவுமே எல்லை மீறாத, துன்பங்கள் இல்லாத நல்ல வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் செவ்வாய் பனிரெண்டில் சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் குறிப்பிட்ட சிலருக்கு பெண்கள் விஷயத்தில் வீண் பிரச்சினைகளும், அபவாதங்களும், பெயர் கெடுதல்களும் இருக்கும் என்பதால் உடன் வேலை செய்யும் பெண்களிடத்திலோ, உறவுகள் விஷயத்திலோ கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.

வியாபாரிகளுக்கு இது நல்லவாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். சுக்கிரன் மறைவது உங்களுக்கு சிறப்பான நிலை என்பதால் ஏதாவது சேமிக்க முடியும்.

பெண்களுக்கும் இந்த வாரம் நல்ல வாரமே. மாமியாரை உங்கள் பேச்சைக் கேட்க வைப்பீர்கள். தனாதிபதி வலுப்பெறுவதால் தகுந்த நேரத்திற்கு பணம் வந்து அனைத்தும் சமாளிக்கப்படும் யோகாதிபதிகள் வலுப்பெற்றுள்ளதால் குறிப்பிட்ட சில மீனராசிக்காரர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். வாரம் முழுவதும் பணவரவிற்கு ஏற்ற நாட்கள்தான். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.

1 comment :

  1. சூரியன் சனி சேர்க்கை சனி 9ம் வீட்டு அதிபதியாக இருந்தாலும் கெடுதியான அமைப்பா ஐயா?

    ReplyDelete