Tuesday, 17 January 2017

2017 தை மாத பலன்கள்

மேஷம்:

தை மாதம் மேஷராசிக்கு நல்ல பலன்களை தரும் மாதமாகவே இருக்கும். யோகாதிபதி சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இருப்பது உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பணவரவுகளும், லாபங்களும் இருக்கும்.

வெளி மாநிலத்தவர்கள் இந்த மாதம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். இதுவரை வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் மனதிற்கு பிடித்தமான விரும்பிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். கறுப்புநிறப் பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் போன்றவர்களுக்கு மனது சந்தோஷப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும். வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுப்பெறுவதால் தை மாதம் உங்களுக்கு நல்ல மாதமாகவே இருக்கும். கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ அருகில் வராது. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

சனி எட்டில் இருப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவுகள் இந்த மாதம் நன்றாக இருக்கும் என்பதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும்.

மிதுனம்:

தை மாதம் மிதுனத்திற்கு நல்ல மாதமாகவே அமையும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. எதிர்பாராத பணவரவு இருக்கும்.

வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும் வேலையில் பாராட்டப் படுவீர்கள். என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பண வரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். இந்த மாதம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

கடகம்:

கடகராசிக்கு யோகாதிபதிகளான செவ்வாய் குரு சூரியன் நல்ல நிலையில் இருப்பதோடு ஒருவருக்கு ஒருவர் கேந்திர கோணங்களில் இருப்பதும் சூரியனையும் செவ்வாயையும் குரு பார்ப்பதும் மிகவும் யோகமான கிரக அமைப்புகள் என்பதால் இந்தமாதம் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில நல்ல அனுபவங்கள் இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள்.

விவாகரத்து வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் இப்போது உண்டு. ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணத்திற்கான நல்ல செய்திகள் கிடைக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு இது உயர்வு தரும் மாதம். அதேபோல கடல்துறை, மீனவர்கள், கடலோரங்களில் இருப்பவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயங்கள் உண்டு, வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக பிரயாணம் செய்வீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வரும். தனாதிபதி சூரியன் மாதம் முழுவதும் ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத பணவரவு இருக்கும்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் ஆறில் மறைவது சிறப்பான நிலை அல்ல என்றாலும் சூரியனுக்கு யோகாதிபதி குருவின் பார்வை இருப்பதால் சாதகமற்றவை நடந்து விடுமோ என்று தோன்றினாலும் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல மறைந்து கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி. மாதம் முழுவதும் ஒன்பதுக்குடைய செவ்வாய்க்கும் குருவின் பார்வை இருப்பது சிறப்பு என்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக இருக்கும்.

மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கவலைகள் இந்தமாதம் தீரும். நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த பிள்ளைகளின் திருமண விஷயங்கள் விஷயங்களில் இப்போது நல்லவை நடக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலை விஷயங்களிலும் பெண்ணால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இப்போது விடிவுகாலம் பிறக்கும். பொறுப்பான பதவி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. எதிலும் முதல் நிலையில் இருப்பீர்கள்.

எதிலும் விட்டுக் கொடுத்து போங்கள். எல்லாவற்றிலும் ஈகோ பார்ப்பதே உங்களின் பலமாகவும் சிலநேரங்களில் பலவீனமாகவும் இருக்கும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக வரிகள் வசூலிக்கும் துறையினருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும்.

கன்னி:

தை மாதம் உங்களை பெறுத்தவரையில் விசேஷமான மாதம்தான். மாதத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும். வரும் வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். பொதுவில் நன்மைகள் மட்டுமே உள்ள மாதம் இது. வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும்.

மனைவியால் நன்மைகள் இருக்கும். இதுவரை அடுத்தவரை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் கை கூடும்.

தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். சிலருக்கு பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும் என்றாலும் பணவரவு தடைபடாது. சமீபத்தில் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.

துலாம்:

ஏழரைச்சனியின் முக்கால்வாசி பகுதியை கடந்துவிட்ட உங்களுக்கு இன்னும் சில நாட்களில் அதிசார அமைப்பில் அடுத்த ராசிக்கு சனி செல்லப் போவதால் இனிமேல் கெடுபலன்களை தருகின்ற வலிமையை இழக்கிறார். எனவே இனிமேல் துலாம் ராசிக்கு துன்பங்கள் எதுவும் இல்லை. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் லாபங்களும் இருக்கும்.

சிலருக்கு வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும், பணத்தேவைகள் நிறைவேற்றுதலும் உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம். அழகுக்கலை, மாடலிங், முடி திருத்துவோர், சமையல், லாட்ஜிங் சம்பந்தப்பட்ட துறையினருக்கு சிக்கல்கள் தீரும் மாதமாக இது இருக்கும். பொதுவாக அனைத்து தரப்பு துலாம் ராசியினரும் கொஞ்சம் நிம்மதியாக உணருவீர்கள்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம்.. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் சிலருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் பயத்தைக் கொடுக்கும். ஒன்றும் ஆகாது. பத்து நாட்களில் சரியாகி விடும். பயப்பட வேண்டாம். ஏழரைச் சனி முடியும் தருவாயில் இருப்பதால் இனிமேல் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை.

விருச்சிகம்:

விருச்சிகராசிக்கு இதுவரை ஜென்மச்சனியாக சோதனைகளைத் தந்து கொண்டிருந்த சனிபகவான் இன்னும் சில நாட்களில் அதிசார முறையில் அடுத்த ராசிக்கு செல்லப் போகிறார். இது ஒருவகையில் உங்களுக்கு ஜென்மச்சனி விலகும் அமைப்புத்தான். எனவே இந்த மாதம் முதல் உங்களுக்கு சோதனைகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். நன்மைகள் இனிமேல் நடக்க இருப்பது உங்களுக்குத் தெரியும் வகையில் சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் இருக்கும்.

சனி விலகுவதோடு குருவும் சூரியனும் நல்ல நிலைமையில் இருப்பதும், ராசிநாதன் செவ்வாய், குரு, சூரியன் மூவரும் ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோண அமைப்பில் இருப்பதும், முக்கியமாக செவ்வாயும் சூரியனும் குருபார்வையில் இருப்பதும் சோதனைகளை தடுத்து நிறுத்தி உங்களை பாதுகாக்கும் அமைப்பு என்பதால் இதுவரை கஷ்டப்பட்ட உங்களுக்கு தை பிறந்தால் வழிபிறக்கும் என்று முதுமொழிப்படி இந்த மாதம் நல்வழி திறக்கும்.

மாதம் முழுவதும் சூரியன் பலத்துடன் இருக்கிறார் என்பதால் இந்த மாதம் குழந்தைகளால் சந்தோஷமான செய்திகள் இருக்கும். இந்த அமைப்பு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வலுப்படுத்தும் என்பதால் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் அனைத்து விருச்சிகராசிக் காரர்களுக்கும் இனிமேல் நல்ல காலம் பிறக்கும்.

தனுசு:

ராசிநாதன் குருபகவான் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பது இந்த மாதம் உங்களின் பணவரவுகளையும், தனலாபம் மற்றும் பொருளாதார மேன்மையை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பு என்பதால் தைமாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி. ஒருசிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும்.

பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

மகரம்:

தை மாதம் மகரராசிக்கு எந்தவிதமான பின்னடைவுகளையும் தராது என்பதோடு வேலையில் இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் நீங்குதல், வழக்குகள் சாதகமாகுதல் மற்றும் பொருளாதார மேன்மைகளைத் தரும் மாதமாகவும் இருக்கும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான மாற்றங்கள் இருக்கும்.

மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கி அலுவலகங்களில் நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள்.

இனிமேல் வாழ்க்கை சிறிது மாற்றத்துடன் செல்லத் துவங்கும். அதிசார முறையில் ஏழரைச் சனி ஆரம்பிக்க இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். இருக்கும் வேலை தொழிலை கவனமாக கண்ணும் கருத்துமாகப் பாருங்கள். அரசனை நம்பி புருஷனைக் கைவிடுவது போன்ற சில சம்பவங்கள் நடக்கும். எதிலும் நிதானமாக பெரியவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படுவது நல்லது.

கும்பம்:

இந்த மாதம் ராசிநாதன் சனி அதிசார முறையில் உங்களுக்கு யோகம் தரும் லாப ஸ்தானத்தில் வர இருப்பதால் இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். இரும்பு, பெயின்ட், பெட்ரோல் தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.

நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும்.

சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.

மீனம்:

இதுவரை ஒன்பதாமிடத்தில் அமர்ந்து பாக்கியம் எனப்படும் உங்களின் அதிர்ஷ்ட விஷயத்தில் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த சனிபகவான் இந்த மாதத்துடன் பத்தாமிடத்திற்கு மாறி உங்களுக்கு நன்மைகளை செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறார் என்பதால் மீனத்திற்கு இனிமேல் யோகம்தான். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். வீட்டில் சுபகாரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும்.

ராசிநாதனின் நண்பர்களான சூரியன், செவ்வாய் இருவரும் சுபத்தன்மை பெற்றிருப்பதால் இதுவரை உங்களை எதிர்த்து வந்தவர்கள் மனம் மாறி உங்கள் கருத்துகளை ஆதரிக்கும் மாதமாக இது இருக்கும். மாதம் முழுவதும் வலுப்பெற்றிருக்கும் சுக்கிரன் உங்களுக்கு பெண்களால் எரிச்சலையும், அவர்கள் மூலமான எதிர்மறை பலன்களையும், செலவுகளையும் தருவார் என்பதால் இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்வது நல்லது.

ஆசிரியர்பணி, மார்கெட்டிங், விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், ஆலோசனை சொல்பவர்கள், ஊராட்சி நகராட்சி மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்கள், இன்சூரன்ஸ், வெரிபிகேசன் துறை, தபால் மற்றும் கூரியர்துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள். தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப்போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். பொதுவில் குறைகள் இல்லாத மாதம் இது.

1 comment :

  1. when Sani enters in 10th house. be careful those employers. sani in 8th house or any other does not much impact on employers.

    ReplyDelete