Tuesday, 17 January 2017

மாலைமலர் வார ராசிபலன்கள் (16.1.2017 முதல் 22.1.2017 வரை)

மேஷம்:

ராசிநாதன் வலுவால் இந்த வாரம் மேஷராசிக்காரர்களுக்கு எதிர்ப்புகளை ஜெயிக்கும் வல்லமையும், எதையும் நிதானமாக சிந்தித்து எதிர்கொள்ளும் போக்கும் உண்டாகும் என்பதால் இந்த வாரம் உங்களுக்கு நல்லவாரம்தான். ராசிநாதன் செவ்வாயை குருபகவான் பார்ப்பது யோகநிலைமை என்பதால் உங்களின் பணவரவும், சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும்.

அஷ்டமச் சனி விலகப் போகிறது. உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப் போகிறது. எவரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வீண் வாக்குவாதங்கள், தேவையற்ற விவாதங்கள், அரசியல்பேச்சுக்கள், அரட்டைகள் போன்றவைகள் வேண்டவே வேண்டாம். இதன்மூலம் வேலை செய்யும் இடங்களில் உங்களின் மதிப்பையும், மரியாதையும் கீழிறங்கச் செய்வார் சனி. சிலருக்கு வேலைமாற்றம் அல்லது டிபார்மெண்ட் மாற்றம் அல்லது டிரான்ஸ்பர் போன்ற பலன்கள் நடக்கும். அவைகள் எதிர்காலத்துக்கு நல்லது என்பதால் மாற்றத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

சிண்டு முடிந்து விட சகுனிகள் தோன்றுவார்கள் என்பதால் கவனம் தேவை. மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு திருமணம் உறுதியாகும். கலைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சிறப்படைவார்கள்.

ரிஷபம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் நட்பு வீட்டில் பத்தாம் வீட்டில் இருப்பதும், இன்னும் சில நாட்களில் உச்சவலு அடையப் போவதும், பணத்திற்குக் காரணமான புதபகவான் தன் வீட்டைத் தானே பார்ப்பதும் இந்த வாரம் ரிஷபராசிக்கு எதிலும் நன்மைகளையும், புத்துணர்ச்சி மற்றும் புதிய சிந்தனைகளையும் கொடுக்கும் வாரம் என்பதால் இந்த வாரம் யோக வாரமே. தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் சூடுபிடித்து நாளுக்கு நாள் விருத்தி அடையும்.

இதுவரை இருந்து வந்த விரையங்கள் இனிமேல் இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியும். எதிரிகள் ஒழிவார்கள். போட்டிகள் விலகும். கடன்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வேலை, தொழில் செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் வெகு நாட்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். புதனால் இந்த வாரம் உங்களின் மதிப்பு மரியாதை கூடும்படியான நிகழ்ச்சிகள் இருப்பதோடு அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் யாராவது உங்களுக்கு உதவி செய்யும் வாரமாக இருக்கும்.

கணவன் மனைவி உறவு மனத்தாங்கலுடன் இருந்தாலும் அதில் அன்பு இழையோடும் என்பதால் எந்தப் பிரச்னையும் இருக்காது. உலகிலேயே நல்ல கணவன் என்று மனைவியிடம் பெயரெடுத்த ஆண்மகனே கிடையாது என்று சொல்வார்கள். மனைவியைத் திருப்திப்படுத்தும் மந்திரத்தை ஆண்கள் தெரிந்து கொள்ளுவது நல்லதுதான்.

மிதுனம்:

மிதுனநாதன் புதன் தன் வீட்டையே பார்ப்பது யோகநிலைமை என்பதால் மிதுனராசிக்காரர்களின் அபாரமான புத்திசாலித்தனமும் அடுத்தவர்களை துல்லியமாக எடைபோடும் உங்களுடைய நுணுக்கமான திறமைகளும் வெளிப்படும் வாரமாக இது இருக்கும். ராசிநாதன் புதன் இப்போது பரிவர்த்தனை யோகநிலையில் குருவின் மூலம் சுபவலுப் பெறுவதால் வாரத்தின் முதலிரண்டு நாட்கள் சாதாரணமான நிகழ்ச்சிகள் இருந்தாலும் வார இறுதியை சந்தோஷமாக கழிப்பீர்கள் என்பது உறுதி.

வார ஆரம்பத்தில் பணவரவு குறைந்து நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதால் எதையும் யோசித்து செய்ய வேண்டிய இது வாரமாக இருக்கும். அதேநேரத்தில் வராது என்று கைவிட்ட பணம் எதிர்பாராத இடத்திலிருந்து வரும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் மனவருத்தம் ஏற்படலாம். அவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்காமலும், அவர்களுக்கு உதவிகள் எதுவும் செய்யாமலும் ஒதுங்கி நிற்பது புத்திசாலித்தனம்.

வெளிநாடு, வெளிமாநிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், நீண்டதூரப் பயணங்களும் இருக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கடந்த சிலமாதங்களாக இருந்து வந்த தடைகள் விலகப் போகிறது. இதுவரை இருட்டில் இருந்து வந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை வரும். குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியும்.

கடகம்:

உங்களது ராசிநாதன் சந்திரன் இரண்டு நாட்கள் குருவின் இணைவில் இருப்பதால் இந்த வாரம் உங்களுக்கு நன்மைகளை செய்யும் வாரமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறைகளையும், சங்கடங்களையும் ஐந்தாமிட சனி ஏற்படுத்துவார் என்பதால் பருவவயதுக் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் அக்கறை காட்டி அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதும் நல்லது.

உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இனிமேல் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். ஆரோக்கியக்குறைவையும், உடல்நலப்பிரச்சினைகளையும் சந்தித்தவர்கள் சீக்கிரமாக குணமடைவீர்கள். மருத்துவர்களுக்கு அடங்காத நோய்களும் இப்போது பரம்பொருளின் கருணையால் விரைவில் குணமாகும். இதுவரை மருத்துவத்துக்கென ஒரு தொகையை ஒதுக்கி வைத்தது விலகி இனிமேல் அப்படி செய்ய வேண்டியது இருக்காது.

சிம்மம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியன் குருபகவானின் பார்வையில் இருப்பதும் ஐந்து, ஒன்பதாம் இடங்கள் வலுப்பெறுவதும் சிம்மராசிக்கு யோகமான அமைப்புகள் என்பதால் இதுவரை சில விஷயங்களில் உங்களுக்கு இருந்து வந்த பிடிவாதத்தை நீங்கள் தளர்த்திக் கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் புதிய கோணத்தில் நீங்கள் அணுகும் வாரமாக இது இருக்கும்.

செவ்வாய் எட்டில் இருந்து இளைய சகோதரர்களை உங்கள் விருப்பத்திற்கு எதிராக நடக்கும்படி செய்தாலும், மூத்தவர் என்ற முறையில் மன்னித்து பொறுத்துப் போவீர்கள். ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்றபடி இளையவர்களுக்கு ஒன்று என்றால் மனம் பதைத்துப் போவீர்கள். அனைத்து விஷயங்களும் கிணற்றுக்குள் போட்ட கல்லாக இருந்து உங்களை டென்சனாக இருக்கச் செய்தாலும் முடிவில் எல்லோரும் உங்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து உங்கள் வழிக்கு வருவார்கள்.

பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். பணவரவு இருக்கும். புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் நீண்ட காலம் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு உங்கள் எண்ணம் போலவே நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான அடிப்படை நிகழ்ச்சிகள், ஆள் அறிமுகங்கள் இப்போது நடைபெறும்.

கன்னி:

ராசிநாதன் புதன் நான்காம் வீட்டில் அமர்ந்து குருவுடன் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் இளைய வயது கன்னிராசிக்காரர்களுக்கு எதிர்கால கனவுகள் நிறைவேற ஆரம்பிக்கும் வாரமாக இது இருக்கும். மூன்றாம் இடம் வலுப்பெறுவதால் இதுவரை விடாமுயற்சியுடன் நீங்கள் முயற்சித்து வந்த ஒரு விஷயம் தற்பொழுது உங்களுக்கு சாதகமாக மாறும். சுக்கிர பலத்தால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உண்டாகும்.

அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கைத்துணையிடம் அனுசரணையாக இருப்பீர்கள். அவரால் அனுகூலம் உண்டு. வீட்டுப்பொருள் வாங்குவீர்கள்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த வாரம் நன்மையை அளிக்கும். குடியானவனின் வீட்டில் குதூகலம் இருக்கும், ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும்.

துலாம்:

ராசிக்கு இரண்டில் சனி, இருந்து இதுவரை எல்லா விஷயங்களிலும் உங்களுக்குத், தடைகளையும், விரையங்களையும் கொடுத்து வந்த ஏழரைச் சனி அமைப்பு அதிசார முறையில் இன்னும் சில தினங்களில் விலகப் போகிறது என்பதால் துலாம் ராசிக்காரர்கள் துயரங்கள் இன்றி சந்தோஷப்படும் வாரமாக இது இருக்கும்.

பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை சனிபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பிள்ளைகளால் செலவுகளும், அவர்களின் படிப்பு முன்னேற்பாடுகளுக்கான அலைச்சல்களும் உங்களுக்கு இருக்கும்.

செவ்வாய் சுபவலுப் பெற்றதால் உங்களுடைய முயற்சிகள் தற்பொழுது வெற்றி பெறும். எனவே முயற்சியை கைவிடாது ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் உங்கள் வசம்தான். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். தேவையற்ற விதத்தில் யாரிடமாவது வம்புச்சண்டை வருவதற்கோ, கோபத்தில் யாரையாவது திட்டி அவர்களை விரோதித்துக் கொள்வதற்கோ வாய்ப்பு இருப்பதால் பேசுவதில் நிதானம் தேவைப்படும் வாரம் இது.

விருச்சிகம்:

அதிசார முறையில் இன்னும் சில நாட்களில் ஜென்மச்சனி உங்களை விட்டு விலகப் போவதால் கடல் .நடுவே மிதப்பவனுக்கு கட்டை ஒன்று சிக்கினார் போல இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நீங்கள் நன்றாக செயல்பட்டு உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக உண்டாக்கிக் கொள்ளும் நிகழ்வுகளை அமைத்துக் கொள்ளும் நல்ல வாரம் இது.

யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறுதுரும்பும் பல்குத்த உதவும் என்பதை நினைவில் வையுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் நீங்கள் பணிந்து போவது ஒன்றும் தவறில்லை. புலி பதுங்குவது நல்லநேரம் வரும்போது பாய்வதற்குத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ராசிநாதன் குருவின் பார்வையைப் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு இந்த வாரம் பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உங்களைப் பிடிக்காதவர்களின் கை தற்போது ஓங்கினாலும் இறுதி வெற்றி உங்களுக்குத்தான் என்பதை நினைவில் வையுங்கள். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். அதே நேரத்தில் பெரிய இழப்புக்களுக்கும் வாய்ப்பு இல்லை.

தனுசு:

ராசிநாதனின் பரிவர்த்தனையால் ராசி வலுவாவதோடு சூரியனும், செவ்வாயும் குருவின் பார்வையில் அமர்ந்து வலுப் பெறுவதால் இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களின் மனிதநேயமும் அடுத்தவர்களுக்கு உதவும் தன்மையும் உங்களின் அருகில் உள்ளவர்களுக்கு வெளிப்படும் வாரமாக இது இருக்கும். செவ்வாய் வலுப்பெறுவதால் பணவரவிற்கு பஞ்சம் இல்லை. அதேநேரம் நண்பர்களில் ஒருவர் விலகிப் போக வாய்ப்பு இருக்கிறது.

இந்த கால கட்டத்தில் அதிர்ஷ்டம் கொஞ்சம் குறையும். சிறு விஷயங்களுக்குக் கூட மிகப் பெரிய முயற்சிகள் தேவைப்படும். எனவே எந்த ஒரு விஷயத்தையும் அசட்டையாகவும் கவனக்குறையாகவோ எடுத்துக் கொள்ளாமல் முழு கவனத்துடன் செய்வதன் மூலம் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வாழ்க்கையை இழந்தவர்களுக்கு புதிய அமைப்புக்கள் இந்த வாரம் தோன்றும்.

மகரம்:

மகரராசியின் ஆறு, எட்டு, பனிரெண்டுக்குடையவர்களான புதன், சூரியன், குருபகவான் மூவரும் ஒருவருக்கொருவர் சம்மந்தப்படுவதாலும் ஆறு, எட்டு, பனிரெண்டாம் பாவங்கள் வலுப்பெறுவதாலும் இந்த வாரம் மகரராசிக்காரர்கள் நிழலின் அருமையை வெயிலில் தெரிந்து கொள்வது போன்ற சம்பவங்கள் நடக்கும் வாரமாக இருக்கும்.

வாரம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மேம்பாடானதாகவும் பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டி ருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக இந்த வாரம் கை கொடுக்கும்.

மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும். குடும்பத்தைப் பிரிப்பதற்கு சகுனி வேலை செய்வதற்கு மூன்றாவது நபராக ஒருவர் உருவாவார் என்பதால் எவரையும் நம்பாமல் குடும்பத்து பிரச்சினைகளை கணவர்-மனைவி இருவர் மட்டும் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்னைகளை ஜெயிக்கலாம்.

கும்பம்:

ராசிநாதன் சனி இன்னும் சில தினங்களில் அதிசார முறையில் உங்களின் பதினொன்றாம் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் அமைப்புடன் மாற இருப்பதால் இந்த வாரம் கும்பராசிக்காரர்களின் குடும்பங்களிலும், வீட்டிலும் சுபகாரியங்களுக்கான முன்னோட்டங்கள் மற்றும் முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். மேலும் சிலருக்கு சுபகாரிய விரைய செலவுகளும் இருக்கும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு நிரந்தரமாக கடன்கள் அடைந்து நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இதுவரை மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இருந்து வந்த நோய்கள் தீரும். சூரியன் வலுவாக இருப்பதால் உங்கள் கையில் தாராளமான பண நடமாட்டம் இருக்கும். தந்தைவழியில் ஆதரவான விஷயங்களும் ஆதாயங்களும் உண்டு. நீங்கள் விரும்பிக் கேட்ட பொருளை அப்பா வாங்கி தருவார்.

மனம் உற்சாகமாக இருக்கும். ஏழில் ராகு இருந்து உங்களுடைய செயல் திறமையை முடக்கிப் போட்டு உங்களை சோம்பலாக்க பார்த்தாலும் ராசியில் இருக்கும் சுக்கிரன் உங்களுக்கு நன்மைகளையே அதிகம் செய்வார் என்பது நிச்சயம். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பரம்பொருளின் கருணையினால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். பனிரெண்டாமிடம் சுபபார்வை பெறுவதால் ஏற்றுமதி இறக்குமதி வெளிநாடு, வெளிமாநிலம் தொடர்புள்ளவர்கள் நன்மைகளை அடைவீர்கள்.

மீனம்:

தன, லாபஸ்தானம் எனப்படும் இரண்டு, பதினொன்றாம் இடங்கள் இந்த வாரம் வலுப்பெற்று தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் வேலை, தொழில், வியாபரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நீங்கள் ஒன்றுக்கு இரண்டாக லாபங்களைச் சம்பாதிக்கும் வாரமாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு.

எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.

நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

No comments :

Post a Comment