Saturday, December 10, 2016

ஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..! - 76

“ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றிய இரு பெரும் தலைவர்களின் ராஜயோகங்களை விளக்கி விட்ட நிலையில், ஆண்டு கொண்டிருந்த அரசியின் ஜாதகத்தை விவரிக்க தகுந்த நேரத்தை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் பரம்பொருளின் எண்ணம் வேறாக இருந்திருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவியாக விளங்கி, மகத்தில் பிறந்து, ஜெகத்தை ஆண்டு, அனைவரின் அகத்தையும் அள்ளிச் சென்று விட்ட இந்த மகாசக்தியின் ஜாதக அமைப்பை அவர் உயிருடன் இருக்கையில் விளக்க முடியாதது எனக்கு ஒரு மனக்குறைதான்.
தனிச் சிறப்பு வாய்ந்த இவரின் ராஜயோக விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.
ராஜயோகம் எனும் வார்த்தைக்கு அரசனாகும் அமைப்பு என்று பொருள். ஒருவர் பிறக்கும் நேரத்தில் வானத்தில் அமையும் கிரகங்களின் நிலை, அவற்றின் தொடர்பு மற்றும் இணைவின்படிதான் முதல் நிலை ஆட்சியாளர்கள் உருவாகிறார்கள்.

சிறப்பு வாய்ந்த ராஜயோகங்கள் சிறிதும் பழுதின்றி கோடியில் ஒருவருக்குத்தான் அமையும் என்பதை அடிக்கடி எழுதியிருக்கிறேன். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே ராஜயோகத்தைக் கொண்டவர்கள். அந்தச் சிலரிலும் தனித்துவம் பெற்றிருந்தவர் இந்த ‘மக’ ராணி.

அனைவரின் மனதையும் கலங்க வைத்து, இன்னும் சில ஆண்டுகள் இருந்திருக்கலாமே என்று ஏங்க வைத்துச் சென்று விட்ட இந்த துருவ நட்சத்திரம் பிறந்தது மகத்துவம் மிக்க மகம் நட்சத்திரத்தில்...!

சென்றமுறை கும்பகோணத்தில் நடந்த மகாமகப் பெருவிழாவின் போது மாலைமலரில் எழுதிய கட்டுரையில் இருபத்தியேழு நட்சத்திரங்களிலும் மகத்திற்கு மட்டும் உள்ள ஒரு சிறப்பாக “மகம் ஜெகத்தை ஆளும்” என்று ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டதன் சூட்சுமங்களை விளக்கியிருந்தேன்.

ஜோதிடம் என்பதே ஒளியைப் பற்றியதுதான். அனைத்து நட்சத்திர மற்றும் கிரகங்களின் முழுமையான ஒளிகளின் கலப்பைப் பற்றிச் சொல்லுவதுதான். இதனை தெய்வீகமாகப் பார்க்காமல் ஒளியாக – ஒளிகளில் உள்ள ஏற்ற இறக்கங்களாக – அதன் கூடுதல் குறைவுகளோடு பார்க்கத் தெரிந்து கொண்டு விட்டீர்களேயானால் இதில் உள்ள சூட்சுமங்கள் புலப்பட்டு விடும்.

எதிர்காலத்தைக் தெளிவாகக் கூறும் காலவியல் விஞ்ஞானமாகிய ஜோதிடக்கலை விவரிக்கும் முழுமையான தேஜஸ் எனப்படும் ஒளி உச்ச நிலையில் பிறக்கும் ஒருவர் மனிதர்களில் உன்னதமானவராகிறார். இதுவே சிருஷ்டியின் ரகசியம்.

அதன்படி அரசனை உருவாக்கும் ஆளுமை நாயகனான சூரியன், தனது சிம்ம வீட்டைத் தானே பார்க்கும் அமைப்பான மாசி மாதத்தில், சிம்மராசியின் பின்னே இருக்கும் இன்னொரு ஒளி பொருந்திய நட்சத்திரமான மகத்திற்கு நேர்கோட்டில் இருக்கும் போது, இவர்கள் இருவருக்கும் நடுவில் பவுர்ணமி நிலையில் சந்திரன் அமைகையில் பிறக்கும் ஒருவர் அரசனாகிறார்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் சூரியனின் ஒளியையும், அதைப் போன்ற இன்னொரு ஆற்றல் மிகுந்த நட்சத்திரமான மகத்தின் ஒளியையும், நூறு சதவிகித முழுமையுடன் சந்திரன் உள் வாங்கி பூமிக்குப் பிரதிபலிக்கும் வருடத்தின் ஒரே நாளான மாசி மகம் அன்று பிறந்த தெய்வக் குழந்தைதான் இந்தப் பேரரசி.

மாசி மாதம் மகம் அன்று பிறக்கும் அனைவருமே அரசராகி விடுவதில்லையே... ஒவ்வொரு வருடமும் பிறக்கும் எல்லோரும் சக்கரவர்த்தியில்லையே... இது ஏன்.?

இதற்காகத்தான் சூரியன் மற்றும் மகத்தின் ஒளியை நூறு சதவிகிதம் உள்வாங்கி என்று குறிப்பிட்டேன். கடந்த முறை நடந்த மகாமகத்தின் போது அதாவது மாசி மகத்தின் போது ராகு கேதுக்கள் சூரிய, சந்திரர்களுடன் இணைந்து கிரகண நிலை தோன்றியது.

இதனால் பூமிக்கு கிடைக்கும் சூரிய, சந்திரர்களின் ஒளி மங்கியது. இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தை அரசனாக வாய்ப்பில்லை. அரசில் பிழைக்கும் ஒரு கீழ்நிலை அலுவலராக இருக்கலாம்.

ஆனால் சூரிய, சந்திரர்கள் முழு ஒளியோடு இருக்கும் நிலையில், மகத்தின் ஒளியும் அவர்களுடன் இணையும் போது, மற்ற சுபக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகியோரின் சுப ஒளியும் கூடுதலாக சந்திரன் மூலம் பூமிக்கு கிடைக்கும் அமைப்பில், ( சுபக்கிரகப் பார்வை ) லக்னாதிபதியும் வலுப்பெற்று ஒரு குழந்தை ஜனித்தால் அது நிச்சயம் அரசனாகும். அந்த பரிபூரண அமைப்பில் உதித்தவர்தான் இந்த மாபெரும் தலைவி.

சரி... இவர் பிறந்த அன்று, அதே நேரத்தில் உலகில் எத்தனையோ குழந்தைகள் பிறந்திருக்குமே... அவர்கள் எல்லோரும் அரசன் ஆனார்களா என்ற கேள்வி எழுமாயின், நான் மேலே சொன்ன சூரியன், மகம் நட்சத்திரம், நிலவு ஆகியவற்றால் பூமிக்குக் கிடைத்த கூட்டு அதிகபட்ச ஒளியளவின் மையப்புள்ளி அன்று மைசூராகவே இருந்திருக்கும். அதனால்தான் அங்கு பிறந்த குழந்தை அரசியானது.

ராஜயோக ஜாதக சிறப்பு...!

ஜாதகப்படி இவருக்கு மிதுன லக்னம் சிம்மராசியாகி ( 24-2-1948 பகல் 2.34 மைசூர் ) லக்னாதிபதி புதன் திரிகோணமான ஒன்பதாம் பாவத்தில். நட்பு வீட்டில், குருவிற்கு நிகரான சுபரான பவுர்ணமிச் சந்திரனின் பார்வையில் அமர்ந்தது யோகம்.

மிதுனத்தில் பிறப்பவர்களுக்கு புதன் வலுவாக அமைந்திடின் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்பதன்படி இவரது புத்திக்கூர்மையும், அந்நிய மொழித் திறனும், குறிப்பாக ஆங்கிலமொழி ஆளுமையும் இவரை விமர்சிப்பவர்களால் கூட பாராட்டுப் பெற்றவை.

சுக்
ராகு
சூ
புத
24-2-1948
2.34 பகல்
மைசூர்
சனி
செவ்
சந்
குரு
கேது

சிறுவயதில் இவர் பள்ளிப் படிப்பில் முதல்நிலையில் இருந்ததற்கும், பின்னாட்களில் புத்தகங்கள் படிப்பதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்ததற்கும் ஜாதகத்தில் வலுப்பெற்ற புதனே காரணம். மேலும் சந்திர கேந்திரத்தில் இருக்கும் புதன் ஜோதிட அறிவையும் தருவார் எனும் விதிப்படி முழுமையான ஜோதிட அறிவும் இவருக்கு இருந்தது.

இவரது ஜாதகத்தில் சூரியன், புதன் இணைவால் உண்டாகும் புத - ஆதித்ய யோகத்தை சிலர் சிறப்பித்துச் சொல்வார்கள். ஆனால் ஞானிகளால் சொல்லப்பட்ட பெரும்பான்மையான யோக அமைப்புக்கள் நம்மால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கும் நான் எப்போதுமே புதனும், சூரியனும் இணைந்திருக்கும் புத - ஆதித்ய யோகத்தைச் சிறப்பாக எழுதியது இல்லை.

ஏனெனில் சூரிய, சுக்கிர, புதன் மூவரும் முக்கூட்டுக் கிரகங்கள் என்பதால் தொண்ணூறு சதவிகித ஜாதகங்களில் இவர்கள் மூவருமோ. இருவரோ இணைந்துதான் இருப்பார்கள்.

அதன்படி உலகில் பிறந்த முக்கால்வாசிப் பேர் இந்த யோகத்தைக் கொண்டு புத்திசாலியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறை உண்மை என்னவென்பது நம் அனைவருக்கும் தெரியும். ஜாதகப்படி இவரது அபாரமான அறிவுத்திறனுக்கு சூரியனும் புதனும் இணைந்த யோகத்தை விட புத்திக்கு காரகனான புதனை பூரணச் சுபச்சந்திரன் பார்த்ததே காரணம்.

அடுத்து ராஜயோகங்களைத் தரும் முதன்மை ஒளிக் கிரகங்களான சூரியனும் சந்திரனும் எவ்வித பங்கமும் இன்றி, குறிப்பாக தனது பகைவர்களான ராகு, சனியுடன் சேராமல் பவுர்ணமி யோகத்தில் அமைந்தது இவரது ஜாதகத்தின் முதல் நிலைச் சிறப்பு.

நான் அடிக்கடி எழுதுவது போல ஒருவர் அரசில் அங்கம் வகிக்க வேண்டுமானால் சிம்மம் வலுவாக இருக்க வேண்டும் என்ற விதிப்படி, இவருக்கு சிம்ம நாயகன் சூரியன் தனது வீடான சிம்மத்தைப் பார்த்து, பங்கமடையாத மூலத்திரிகோண வலுப்பெற்ற குருவும் தனது ஒன்பதாம் பார்வையால் சிம்மத்தைப் பார்த்தது ராஜயோக அமைப்பு.

அதிகாரத்தைத் தரும் கிரகமான செவ்வாயும், ஆளுமை ராசியான சிம்மத்தில் அதிநட்பு வலுவுடன் பவுர்ணமிச் சந்திரனுடன் இணைந்து பரிபூரண சுபத்துவமாகி குருவின் பார்வையில் அமர்ந்தது இவரை அரசியாக்கியது.

மீதி விளக்கங்களை அடுத்த வெள்ளி பார்க்கலாம்...

மரணத்தை முன் கூட்டியே சொல்ல முடியாதா..?

“அரசனைப் பற்றி ஏதாவது தெரிந்தாலும் சொல்லாதே” என்றுதான் வேத ஜோதிடம் அறிவுறுத்துகிறது. அதிகாரத்தில் இருப்பவரின் முடிவை வெளிப்படையாக எழுதுவதில் ஆயிரம் சிக்கல்கள் இருக்கின்றன. நாங்கள் எழுதினாலும் வெகுஜனப் பத்திரிகைகளில் அதை வெளியிடத் தயக்கங்கள் இருக்கும்.

பாதகாதிபதியின் தசையில், வலுவிழந்த எட்டுக்குடையவன் புக்தியில் இவ்விருவரும் சஷ்டாஷ்டகமாக இருக்கும் அமைப்பில் ஒருவருக்கு மரணம் நிகழ்ந்தே தீரும் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கிய விதி. அனுபவம் வாய்ந்த எந்த ஒரு ஜோதிடராலும் இதை முன்கூட்டியே கணிக்க முடியும்.

ஒருவரின் இறுதிநாள் என்பது நிரந்தரமான அமைப்பான, மாறவே மாறாத அவரது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பைக் கொண்டும், ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கும் கோட்சாரம் எனப்படும் அன்றைய தினத்தின் கிரக நிலையை வைத்தும் சொல்லப்பட வேண்டும்.

ஒருவரின் மரணதினம் அன்று, அன்றைய கோட்சார நிலையில் அவரது லக்னாதிபதியோ, ராசிநாதனோ அல்லது எட்டுக்குடையவனோ பலவீனமாகி வலுவிழந்து இருப்பார்கள் என்பதை நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

அதன்படி இந்த தேவதை மரணித்த டிசம்பர் 5-ம் தேதியின் கிரகநிலைகளின்படி இவரது மிதுன லக்னத்தின் ஆயுள் ஸ்தானாதிபதியும், நடைபெறும் புக்தியின் நாதனுமான சனிபகவான் பகைவீட்டில் அமர்ந்து சூரியனுடன் ஐந்து டிகிரிக்குள் இணைந்து அஸ்தமனமாகி முழுக்க வலுவிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே அமைப்பை வேறொரு கோணத்தில் இருந்து பார்த்தால் அன்றைய நாளில் இவரது ராசிநாதனான சூரியன் இருள்கிரகமான சனியுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பலவீனமாகி இருந்தார். மேலும் இவரது சிம்மராசியிலும் இன்னொரு இருள்கிரகமான ராகு அமர்ந்து ராசியும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.

சம்பவம் நிகழ்ந்த பிறகுதானே சொல்கிறீர்கள்? ஜோதிடர்களால் இதனை முன்கூட்டியே கணிக்க இயலாதா? என்ற கேள்வி எழுமாயின் தமிழகத்தின் பிரபல ஜோதிடரான யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ அவர்கள் இவரின் மரணத்தை முன்கூட்டியே கணித்துச் சொல்லியிருக்கிறார்.

மற்றொரு நிகழ்வாக ஆங்கில ஜோதிட இதழான Modern Astrology – ன் டிசம்பர் மாத இதழில் முனைவர் திரு.சி. டி. ரவீந்திரநாத் என்பவர் அக்டோபர் மாதம் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழக முதல்வர் இறப்பில் இருந்து தப்பிக்கவோ, உயிர் வாழவோ சாத்தியமில்லை என்று எழுதி இருக்கிறார்.

அனுபவமுள்ள ஜோதிடர்கள் பலர் இவரின் மரணத்தை முன்கூட்டியே கணித்திருக்கிறார்கள். நானும் தேர்தலுக்கு முன்பே இவரைப் பற்றி என்னிடம் கேட்ட நெருக்கமானவர்களிடம் இவர்தான் ஜெயிப்பார், ஆனால் ஜெயித்தவுடன் மருத்துவமனையில் இருப்பார் என்றே சொல்லியிருந்தேன்.

வலுப்பெற்ற பாதகாதிபதி கொடுத்துக் கெடுப்பார் என்ற அடிப்படையில் இவருக்கு வெற்றியைக் கொடுத்து ஆயுளுக்கு பாதகம் செய்வார் என்ற கணிப்பில் இந்த பலன் சொல்லப்பட்டது. அதிலும் குறிப்பாக குருதசை, சனிபுக்தி, ராகுவின் அந்தரத்தில் இவருக்கு பாதகம் நடக்கும் என்றும் கணிக்கப்பட்டது.

(டிசம்பர் 9 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

2 comments :

  1. அத்துடன் அன்றைய தினத்தில் உச்ச செவ்வாயுடன் சனி பரிவர்த்தனை பெற்றிருந்ததே. புதன் குரு பரிவர்த்தனை பெற்று லக்கினாதிபதி லக்கினத்தை பார்த்த நிலையும் இருந்தது. இருந்தும் இவரது ஆயுள் காலம் முடிந்தது வருந்த தக்க ஒன்றே.
    தங்கள் பதிவில் ராகு கேதுவுடன் சூரிய சந்திரர் இணைந்தால் நாடாளும் யோகம் கெடும் என்று கூறி இருக்கிறீர்கள். அமெரிக்கா அதிபர் தேர்வில் ஜெயிக்க வாய்ப்பே இல்லாத டொனால்ட் டிரம்ப் சிம்ம லக்கினத்தில் பிறந்து 4ம் வீட்டில் கேதுவுடன் சேர்ந்த நீச்ச சந்திரன் மற்றும் 10ம் வீட்டில் லக்கினாதிபதி சூரியனுடன் சேர்ந்த ராகு. சிறப்பு அம்சமாக லக்கினத்தில் செவ்வாய்.
    நாடாளும் யோகத்திற்கு செவ்வாய் வலு பெற வேண்டும் என்ற விதியின் படி ஜனாதிபதியாக அவர் வென்ற போது கோச்சார செவ்வாய் உச்சத்தில் இருந்தது. அவரது பிறந்த நாள் நேரம். 14 ஜூன் 1946 10:54 am ஜமைக்கா, நியூயார்க் . உங்கள் அலசல் பார்வையில் இவரது ஜாதகத்தை காண ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  2. சூட்சும சுபத்துவ குருவே சரணம் ஒரு பொதுவான கேள்வி ஜெயலலிதா ஜாதகத்தில் பாதகாதிபதி குரு ராசி கட்டத்தில் 7 ல் உள்ளது பாவக் கட்டத்தில் 6 ல் உள்ளது இதனால் பலன் மாறுபடுமா?

    ReplyDelete