Monday, 26 December 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (26.12.2016 முதல் 1.1.2017)

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் இணைந்து சனியுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆன்மிக உணர்வு மேலோங்கி இருக்கும். தெய்வத்தின் அருளுடன் பிரச்சினைகள் அனைத்தையும் சமாளிப்பீர்கள். பிறக்கின்ற புது வருடத்தில் நீங்கள் நன்றாக இருக்கக்கூடிய அமைப்புகளில் காலூன்றுவதற்கான முன்னேற்பாடுகளை இந்த வாரம் செய்து கொள்வீர்கள். நல்ல மாற்றங்கள் இருக்கும் வாரம் இது.

வீண்பழி சுமத்தி வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம்.

கலைத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். சுக்கிரபலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. 25-ம் தேதி இரவு 9 மணி முதல் 28-ம் தேதி காலை 9 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் சுபகாரியங்களைச் செய்வதோ, புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதோ வேண்டாம். குறிப்பாக புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதையும் தவிர்க்கவும்.

ரிஷபம்:

ராசிநாதன் ஒன்பதாமிடமான திரிகோணத்தில் குருவின் பார்வையில் இருப்பதோடு ராசிக்கும் சுபக்கிரக பார்வை இருப்பதால் ஐந்து, ஒன்பதாமிடங்கள் வலுப்பெற்று உங்களுடைய எண்ணங்கள் யாவும் பலிதமாகும் வாரம் இது. குறிப்பாக பெண்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளில் இருப்பவர்கள், நிறைய பெண்கள் வேலை செய்யும் அலுவலங்களில் இருப்பவர்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான பொருள் விற்பவர்களுக்கு இந்த வாரம் நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் அனைவரும் நன்மைகளையும், பணவரவுகளையும் பெறுவார்கள். ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூக வணிக தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் இந்த வாரம் வெற்றியை தரும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ இந்த வாரம் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம். 28-ம் தேதி காலை 9 மணி முதல் 30-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களையோ புதிய முயற்சிகளையோ செய்ய வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுப்பதும் ஒத்தி வைக்கவும்.

மிதுனம்:

ராசிநாதன் தனது நண்பருடன் சேர்ந்து ராசியை பார்த்துக் கொண்டிருப்பது ஒரு சிறப்பான அம்சம் என்பதாலும் குருவுடன் அவர் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகள் தீருகின்ற வாரமாக இருக்கும். குறிப்பாக முதல் திருமண விஷயமாக விவாகரத்து வழக்குகளில் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சமரச தீர்வாகவோ, அல்லது சாதகமான தீர்ப்பாகவோ அமைந்து நிம்மதி கிடைக்கும் வாரம் இது.

ஏழாம் வீடு வலுப்பெறுவதால் வாழ்க்கைத் துணைவர் மூலம் இந்த வாரம் சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் வாரமாக இருக்கும். ஒரு சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும். முயற்சி ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள்.

பாக்கிய ஸ்தானம் வலுப்பெறுவதால் பூர்வீக சொத்து விஷயங்களில் நன்மைகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 30-ம் தேதி இரவு 9 மணி முதல் 2 -ம் தேதி அதிகாலை 4 மணி வரை சந்திராஷ்ட நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக வடக்கு நோக்கி நீண்ட பிரயாணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

கடகம்:

வார ஆரம்பத்திலேயே ராசிநாதன் சந்திரன் நீச நிலையில் சனியுடன் இணைந்து பாவத்துவ அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் கடக ராசிக்காரர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இரட்டை மனநிலையில் இருப்பீர்கள். தெளிவான முடிவெடுக்க முடியாத மனத் தடுமாற்றம் இந்த வாரம் உங்களுக்கு இருக்கும். எனவே முக்கிய முடிவுகள் எடுப்பதை இந்த வாரம் புதன்கிழமை வரை ஒத்தி வைக்கலாம். அனைத்திலும் தடைகள் இருக்கும் வாரம் இது.

பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிகையுடன் இருக்கவும். விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம். ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்து ஐந்திற்குடையவன் எட்டில் மறைவதால் பிள்ளைகள் வழியில் செலவு இருக்கும். பிள்ளைகள் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டு வரலாம் என்பதால் குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். சகோதர உறவு சற்று முன் பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம். தந்தை விஷயத்திலும் பூர்வீக சொத்து விஷயத்திலும் எதிர்மறையான பலன்கள் இருக்கும்.

சிம்மம்:

கடந்த சில வாரங்களாக சிம்மத்திற்கு இருந்து வரும் பின்னடைவுகள் படிப்படியாக தீர ஆரம்பிக்கும் வாரம் இது. இரண்டு பெரும்பாவிகளான செவ்வாயும், சனியும் ராசியைப் பார்ப்பதால் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் சிம்மத்தினருக்கு இந்த வாரம் ஆறுதலான செய்திகள் கிடைக்கும். குறிப்பாக இதுவரை உங்களுக்கு இருந்து வந்த வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் வருமானம் கையில் தங்க ஆரம்பிக்கும் வாரம் இது.

வருமானத்திற்கு குறைவு இருக்காது. அதிக பணம் புரளும் இடங்களில் பணி புரிபவர்கள் வங்கித்துறையினர் போன்றவர்கள் இந்த வாரம் அலுவலகங்களில் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள். வெளிநாட்டில் இருக்கும் சிம்மராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் நடக்கும். எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய சில விஷயங்களை இப்போது சிலர் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும் வாய்ப்புகள் உள்ளது.

வேலையில் இருப்பவருக்கு பதவிஉயர்வு, ஊதியஉயர்வு, போன்ற பலன்கள் நடைபெறும். செவ்வாய் வலுப்பெறுவதால் எதற்கெடுத்தாலும் கோபம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோபத்தைக் கட்டுபடுத்துங்கள். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு இப்போது உறுதி ஆகும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு.

கன்னி:

கன்னிநாதன் புதன் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்து மூன்று, ஆறுக்குடைய செவ்வாயும், சனியும் இடம் மாறி அமர்ந்திருப்பதால் இந்த வாரம் உங்களின் எதிர் முகாமில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும் வாரமாக இருக்கும். எதிரி மனம் மாறி உங்கள் நண்பனாகும் வாரம் இது. இந்த வாரத்தில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் முழுமையாக உபயோகப் படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக இருக்கக் கூடிய அமைப்பினை பெறுவீர்கள்.

உங்களில் அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். சிலருக்கு ஏதேனும் ஒரு வகையில் திடீர் பண வரவு உண்டு. ராசிக்கு செவ்வாய் பார்வை உள்ளதால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இருக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை.

கணவன் மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. சிலருக்கு கோர்ட், காவல்துறை போன்ற இடங்களுக்கு போக வேண்டி இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

துலாம்:

பொது வாழ்வில் இருக்கின்ற துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகார பதவிகளும், மன மகிழ்ச்சியும் கிடைக்க இருக்கின்ற வாரம் இது. இதுவரை உங்களின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த தடைகள் அனைத்தும் உங்களின் கண் முன்னே நீங்குவதை இப்போது உங்களால் பார்க்க முடியும். குறிப்பிட்ட சிலருக்கு தொழில் துறைகளில் சாதிக்கக்கூடிய அமைப்பும், வேலையிடங்களில் முன்னேற்ற மாறுதல்களும் இருக்கின்ற வாரம் இது.

பதினொன்றில் இருக்கும் ராகுவால் உங்களால் இப்போது எதையும் சாதித்துக் காட்ட முடியும். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் மிகப்பெரிய உதவிகளை உங்களுக்கு செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். குறிப்பிட்ட சிலர் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு சென்று வருவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள்.

புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய கிளைகள் ஆரம்பிக்கலாம். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் இந்த வாரம் முன்னேற்றம் அடைவீர்கள். அரசு ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரம்.

விருச்சிகம்:

வார ஆரம்பத்திலேயே மனோகாரகனான சந்திரன் நீச நிலையில் சனியுடன் அமர்ந்திருப்பதால் எதிர்காலத்தை பற்றிய கலக்கங்களும், குழப்பங்களும் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் வாரமாக இது இருக்கும். இன்னும் சில மாதங்களில் உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் ஜென்மச்சனி அமைப்பு விலக இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு முன்னேற்றத்தை மனதில் கொள்ள வேண்டிய வாரம் இது.

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். தந்தை வழியில் விரயங்களும் தகப்பனாரால் மனக்கஷ்டங்களும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.

எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடந்தே தீரும். அதேநேரம் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும் வாரமாகவும் இது அமையும். செலவு செய்ய பணம் வேண்டுமே? எனவே பணவரவுக்கும் பஞ்சமிருக்காது. சுயதொழில் புரிவோருக்கும் நல்ல வருமானம் இருக்கும். வாரஇறுதியில் அரசுஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் நன்மைகள் நடக்கும்.

தனுசு:

ராசிநாதனின் பரிவர்த்தனையும், மூன்று, பனிரெண்டுக்குடைவர்களின் இடமாற்ற அமைப்பும், தனுசுக்கு யோகத்தையும், நன்மைகளையும் தருகின்ற கிரக நிலை என்பதால் இந்த வாரம் கெடுபலன்கள் எதுவுமின்றி நன்மைகள் மட்டுமே நடக்கின்ற வாரமாக இருக்கும். சிலருக்கு தம்பி, தங்கைகளுக்கு எதிர்கால வாழ்க்கை அமைத்து கொடுப்பதற்கான செலவுகள் இந்த வாரம் உண்டு. மூத்த பிறப்பு என்பது தந்தைக்கு சமம் என்பதை நிரூபிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கும். வாரம் முழுவதும் பணவரவிற்கு ஏற்ற நாட்கள்தான். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும்.

சூரியன் வலுவாக இருப்பதால் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் இனிமேல் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள்.

மகரம்:

தன, லாபாதிபதிகளான செவ்வாயும், சனியும் பரிவர்த்தனை யோக நிலையில் இருக்கிறார்கள். ராசிநாதனுடன் ஏழுக்குடைய சந்திரன் இணைந்திருப்பதால் மகர ராசிக்கு நண்பர்கள், கூட்டாளிகள், பங்குதாரர்கள் மூலமான சந்தோஷ நிகழ்ச்சிகள் இருக்கும் வாரமாக இது இருக்கும். அதே சமயத்தில் ஏழுக்குடையவன் நீசம் பெறுவதால் வாரத்தின் இறுதி இரண்டு நாட்களில் குடும்பத்திற்காக வீண் செலவுகள் இருக்கும் என்பதால் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.

யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் இந்த வாரம் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. வார ஆரம்பத்தில் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. தொழில் மேம்படும்.

வேலை செய்யும் இடத்தில் சந்தோசம் இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களும் நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். உங்கள் உடல்நலம் மனநலம் வெகு சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டம் கூடி வரும் தெய்வ அருள் உங்களுக்கு உண்டு. பிள்ளைகளால் பெருமை வரும். குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியும். வியாபாரிகளுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் கலைஞர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல வாரம் இது.

கும்பம்:

ராசியில் செவ்வாய், கேது இணைந்திருப்பதால் உங்களுடைய குணங்களில் தற்போது மாறுதல் ஏற்படும் வாரம் இது. சிலருக்கு காரணமின்றி எரிச்சலும், கோபமும் இந்த வாரம் வரும். தாயார் ஸ்தானாதிபதியான சுக்கிரன் சனி பார்வையில் பனிரெண்டில் மறைந்திருப்பதால் வீடு, வாகனம், அம்மா விஷயத்தில் வீண் செலவுகள் இருக்கும். முக்கியமான விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்பட வேண்டிய வாரம் இது.

வார ஆரம்பத்தில் ஆறுக்குடைய சந்திரன் நீசம் பெறுவதால் உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழக்கும் வாரமாக இது இருக்கும். இதுவரை கடன் தொல்லைகளில் சிக்கி நிம்மதியை இழந்தவர்களுக்கு இந்த வாரம் அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். ஒரு சிலர் வெளிநாட்டுக்கு செல்வீர்கள். பணவரவில் குறையேதும் இல்லை. வெகு நாட்களாக எதிர் பார்த்த ஒரு தொகை கிடைக்கும்.

பெண்கள் விஷயத்தில் சற்றுத் தள்ளியே இருங்கள். மனம் சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் இருந்தாலும் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். சுக்கிரன் வலுப்பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும் வகையில் சில ஆரம்பங்கள் இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு.

மீனம்:

கிரக நிலைகள் இப்போது சாதகமாக இருப்பதாலும் ஒன்பது, பத்துக்குடையவர்கள் பரிவர்த்தனையின் மூலம் வலுவடைந்திருப்பதாலும், ராசியின் எதிர் நிலைக் கிரகங்கள் வலுவற்ற நிலையில் இருப்பதாலும், இந்த வாரம் மீனத்திற்கு பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாமல் சிக்கல்கள் அனைத்தும் தீருகின்ற வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு ஏற்கனவே சிலருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள், விரோதங்கள் மறைகின்ற வாரம் இது.

தர்மகர்மாதிபதிகளான குருவும், செவ்வாயும் வலுப்பெறும் நல்ல வாரம் இது. பரம்பொருளின் அருளினால் இந்த வாரம் மீன ராசிக்கு அனைத்து விதமான நன்மைகளும் தாராளமாக உண்டு. குறிப்பிடத்தக்க அளவில் பண வரவுகள் இருக்கும் என்பதால் பொருளாதார நிலையும் மேன்மையாகவே இருக்கும்.­ நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் இப்போது செட்டில் ஆகி நல்ல லாபம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரும்.

யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் அனைவருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் நிச்சயமாக மனதிற்கு சந்தோஷமான சம்பவங்களும், லாபங்களும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாடு தொடர்பான காண்ட்ராக்ட் விஷயங்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றிகளும் லாபங்களும் இருக்கும். மொத்தத்தில் தொட்டது துலங்கும் வாரம் இது.

1 comment :

  1. Thanks for the information... I really love your blog posts... specially those on Rasi palan today

    ReplyDelete