Saturday, 17 December 2016

மீனம்: 2016 - மார்கழி மாத பலன்கள்

மீனம்

இதுவரை மீனராசிக்கு தடைப்பட்டு வந்த பணவரவுகள் அனைத்தும் நீங்கி இந்த மாதம் முதல் சரளமாக பணம் கிடைக்கத் துவங்கும் மாதமாக மார்கழி மாதம் இருக்கும். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். பொருளாதாரம் மேன்மை பெறும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். ஆறாமதிபதி பத்தில் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம்.

செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும்.

சிலருக்கு அப்பாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தந்தையைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

No comments :

Post a Comment