Monday, 19 December 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (19.12.16 முதல் 25.12.16 வரை)

மேஷம்:

வாரம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் பதினொன்றில் கேதுவுடன் இணைந்திருப்பதும், சனியுடன் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதும் மேஷராசிக்கு நன்மை தரும் அமைப்புகள் என்பதோடு பண வரவிற்கு காரணமான சுக்கிரனும் நட்பு நிலையில் இருப்பதால் இந்தவாரம் உங்களுக்கு பணவரவுகளும், தொழில் மேன்மைகளும், சந்தோஷ நிகழ்ச்சிகளும் இருக்கும். நெருப்பு சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்பவர்கள் இன்னும் நான்கு வாரங்களுக்கு கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சனி இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் பிரச்னைகள் வரும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள்.

புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. அஷ்டமச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது. கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். கோர்ட் கேஸ் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம்.

ரிஷபம்: 

வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் நட்பு வலுப் பெற்று இருப்பதும் உங்களின் யோகாதிபதியான புதபகவான் பரிவர்த்தனையில் இருப்பதும் நன்மைகளை தரக்கூடிய அமைப்பு என்பதோடு ராசியை சனிபகவான் சூட்சுமவலுப்பெற்று பார்ப்பது இந்த வாரம் ரிஷபத்திற்கு அனைத்து காரியங்களும் தடைகள் எதுவும் இன்றி வெற்றிகரமாகவும் சாதகமாகவும் முடியும் என்பதை காட்டுகிறது. இந்தவாரம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும்.

முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள்.

பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் முதலீடு செய்யலாம். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். குறிப்பிட்ட சிலருக்கு வேலைமாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் ஆகியவை நடக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்போது வேலை கிடைக்கும் கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை.

மிதுனம்:

ராசிநாதன் புதனும் ஜீவனாதிபதி குருவும் பரிவர்த்தனை பெறுவதன் மூலம் வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புகளுக்கான பத்தாமிடம் வலுப்பெறுவதால் மிதுனராசிக்காரர்களுக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரமாக இது இருக்கும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.

சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் உண்டு.. பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். 

குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். மிதுனராசிப் பெண்கள் குடும்பத்திலும், வேலை செய்யுமிடத்திலும் அனுசரித்து போங்கள். ஒரு பெண் நினைத்தால் எதையும் ஆக்கலாம் அழிக்கலாம் என்பது உலகவிதி. எந்தக் குடும்பத்தில் அதன் தலைமைப் பெண்மணி விழிப்புடன் இருக்கிறாளோ அந்தக் குடும்பத்தை எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட நிஜம். பொதுவில் உற்சாகமான வாரம் இது.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் ஆட்சியாக இருப்பதும், வாரம் முழுவதும் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டில் பரிவர்த்தனை யோக வலுவுடன் இருப்பதும், கடகராசிக்கு நன்மை தரக்கூடிய அமைப்புகள் என்பதால் உங்களுடைய அனைத்துக் காரியங்களும் இப்போது வெற்றி பெறும் வாரமாக இது இருக்கும். சிலருக்கு இப்போது கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது. தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். வீட்டில் சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். வேறு சில மங்கள நிகழ்ச்சிகளும் உண்டு. இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கூடுதல் சம்பளத்துடன் நிச்சயமாகக் கிடைக்கும். கணவன் மனைவி உறவு, கூட்டுத் தொழிலில் நன்மைகள் ஆகியவை சுமுகமாக இருக்கும்.

டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் அளவான நன்மை அடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாகப்பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ கிடைக்கும். பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்றும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் நட்பு நிலையில் இருப்பதும் வாரம் முழுவதும் யோகாதிபதி செவ்வாய் ஏழில் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதும் சிம்மத்திற்கு நன்மை தரும் அமைப்புகள் என்பதால் இந்த வாரம் சிம்மத்திற்கு நல்ல வாரமே. அதே நேரத்தில் ராசிக்கு சனியின் பார்வை இருப்பதால் எந்த விஷயமும் நேரிடையாக முடிவுபெறாமல் சுற்றிவளைத்து மூக்கைத் தொடும் விஷயமாகவே அமையும் என்பதால் அனைத்திலும் நிதானமும், கவனமும் இந்த வாரம் உங்களுக்கு தேவைப்படும்.

இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு நேரம் கை கொடுக்கும். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலை தொழில் விஷயமாக எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்யுங்கள்.

கன்னி:

கடந்த சில வாரங்களாக சனியுடன் இணைந்து வலுவிழந்து இருந்த ராசிநாதன் புதன் தற்போது குருவுடன் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பது இந்த வாரம் கன்னிராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் இந்த வாரம் முழுமையும் கன்னிக்கு நன்மை தரும் விதமாக அமையும் என்பது உறுதி. சிலருக்கு தந்தைவழியில் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். 

எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். நல்ல புத்திசாலித்தனம் கொண்ட உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள்.

இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத்துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும் வாரம் இது.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் வாரம் முழுவதும் நட்பு நிலை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் யோகாதிபதியான புதன் ஆறுக்குடையவனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் இந்த வாரம் துலாம் ராசிக்கு எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் முதலில் தடைகள் வந்து பிற்பகுதியில் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறி தீர்வு கிடைக்கும். வார பிற்பகுதியில் பணவரவு சரளமாக இருக்கும். பணத்திற்கு தட்டுபாடு இருக்காது. எனவே எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும்.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் என நீண்டகால குறைபாடுகள் உள்ளவர்கள் அசட்டையாக இருக்க வேண்டாம். சிறு உடல்நலக்குறைவு என்றாலும் உடனே கவனிப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களிடமும், பங்காளிகளிடமும், குறிப்பாக அத்தைகளிடம் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

குடும்பத்தில் எதற்கும் பொறுத்துப் போங்கள். குடும்பப் பிரச்னைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து மனம் விட்டு உட்கார்ந்து பேசினாலே ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம். இளைய வயதில் இருப்பவர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்னைகளும் அணிவகுத்து வரும். பெண்களுக்கு இது சுமாரான வாரம்தான். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் எல்லா வேலையையும் உங்கள் தலை மேல்தான் சுமத்துவார்கள்.

விருச்சிகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் இணைந்து பரிவர்த்தனை யோக அமைப்புடன் சுபத்துவத்துடன் நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதால் விருச்சிகத்திற்கு இது திருப்புமுனை வாரமாக இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலையும் தீர்வும் கிடைக்கும் வாரமாக இருக்கும். முருகப் பெருமானின் பூரண அருளுடன் பிறந்த நீங்கள் எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் எப்போதும் உங்களுக்கு உண்டு.

சனியைத் தவிர்த்து மற்ற கிரகங்களின் நற்பலன் இந்த வாரம் உங்களுக்கு முழுமையாகக் கிடைப்பதால் இப்போது நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நம்பிக்கையை கை விடாதீர்கள். சிலருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் இப்போது நடக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும். சேமிப்புகள் செய்ய முடியும்.

வரும் புத்தாண்டில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வாரிசு உருவாகி வீட்டில் தவழ்ந்து விளையாடப் போகிறது. நேர்த்திக் கடன்களை செலுத்தாமல் இருப்பவர்கள் உடனடியாக நல்லபடியாக நிறைவேற்றலாம். குலதெய்வ வழிபாடு சரிவரச் செய்யாதவர்கள் உடனே அதைச் செய்யுங்கள். பெண்கள் மேன்மை அடைவீர்கள். மாமியார் மாமனார் வகையிலும் நல்லபலன்கள் இருக்கும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் தனாதிபதியும் தனகாரகனுமான குரு வலுவாக இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.

தனுசு:

ராசியில் அமர்ந்துள்ள புதனும் ராசிநாதன் குருவும் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் குரு உங்கள் ராசியிலேயே அமரும் நிலை பெறுகிறார். இந்த அமைப்பு தனுசுராசிக்கு இந்த வாரம் அனைத்து நன்மைகளையும் லாபங்களையும் தரும் என்பதைக் காட்டுக்கிறது. அதேநேரத்தில் சுக்கிரனின் அதிநட்பு நிலையால் ஆறாமிடம் வலுப்பெறுவதால் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்ப்புகள் உள்ள வாரமாகவும், நடுத்தர வயதுள்ளவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டிய வாரமாகவும் இது இருக்கும்.

அரசு, தனியார்துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பினருக்கும் நல்லவாரம் இது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி தொல்லைகள் இல்லாமல் ஜாலியான அனுபவங்கள் இருக்கும். பெற்றோருக்கு மகன், மகள் விஷயங்களில் நல்லவை நடக்கும். நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.

வீடு கட்ட ஆரம்பங்கள் சிலருக்கு இப்போது உண்டு. பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள். தந்தை வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். .

மகரம்:

நான்கிற்குடைய செவ்வாய் இந்த வாரம் கேதுவுடன் இணைந்து சனியுடன் பரிவர்த்தனை பெறுவதால் இந்த வாரம் மகர ராசிக்காரர்களுக்கு தாயார் விஷயத்தில் வருத்தங்களும், செலவுகளும் உள்ள வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயத்தில் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்ற நிலையும் சிலருக்கு பழைய வாகனங்களால் வீண் விரையங்களும் இருக்கலாம் என்பதால் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது.

சொந்தத் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும் சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

இளைஞர்களுக்கு இந்த வாரம் கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கப் போவதால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. 18-ம் தேதி மதியம் 1 மணியில் இருந்து 20-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் எந்த விஷயத்திற்கும் கோபப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு வரும் என்பதால் கவனம் தேவை.

கும்பம்:

ராசிநாதன் சனியும் பத்தாமிட அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால் இதுவரை செய்யாமல் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த சில விஷயங்களில் உங்களுடைய தயக்கங்கள் விலகி இந்த வாரம் பளிச்சென்று தெளிவான சில முடிவுகளை எடுப்பீர்கள். எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாகவும் இருப்பீர்கள். அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது உங்களுக்கு வெற்றியைத் தரும் 

செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் நடக்கும். முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சகோதர சகோதரிகளுக்கு நீங்கள்தான் உதவி செய்யும்படி இருக்கும். என்னதான் அவர்களுக்கு செய்தாலும் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வதையும் கேட்க வேண்டியிருக்கும். 20-ம் தேதி இரவு 9 மணி முதல் 23-ம்தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது. புதிய முடிவுகள் எதையும் செய்ய வேண்டாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, புதியவர்களை அறிமுகப்படுத்தி கொள்வது ஆகியவையும் தவிர்ப்பது நல்லது.

மீனம்:

ஒன்பதுககுடைய செவ்வாயும், பத்துக்குடைய குருவும் தனித்தனியே பரிவர்த்தனை பெற்றாலும் இருவருமே ஆட்சி நிலை பெறும் நல்ல வாரம் இது. ஆறுக்குடைய சூரியன் பத்தாம் வீட்டில் வலுவுடன் இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு இப்போது நீங்கள் கடன் வாங்க வேண்டி இருக்கும். எனவே வருமானக் குறைவுகளும், செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் இது உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், யூகத்திறமைக்கும் ஏற்ற வாரமும் கூட. மனதிற்குள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை செயல்படுத்தி சோதனை செய்வீர்கள்.

குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். சகோதர உறவு மிகவும் நன்றாக இருக்கும். கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும்.

வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும். 23-ம் தேதி காலை 8 மணி முதல் 25-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் வீடு கட்ட ஆரம்பிப்பது போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் தவிர்க்கவும். நீண்ட தூர பிரயாணங்கள் எதையும் இந்த தினத்தில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment