Monday, 7 November 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (7.11.16 - 13.11.16)

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் வலுவான நிலையில் இருப்பதோடு இந்த வாரம் யோகாதிபதி சந்திரனும் நல்ல இடங்களில் இருப்பதால் மேஷராசிக்கு பூர்வ புண்ணிய பலத்தினால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதோடு குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். சந்திரன் வலுப்பெறுவதால் இந்த வாரம் மனோதைரியம் அதிகமாக இருக்கும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள்.

பெரிய அளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பணம் எடுத்து போகும் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. பருவ வயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். மூத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

ரிஷபம்:

சிவப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், விளையாட்டுத்துறையினர், ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டும் துறையினருக்கு தனலாபம் உள்ள வாரம் இது. கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். எவரையும் நம்ப வேண்டாம்.

இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குறிப்பாக சித்தியால் நன்மை அடைவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் வருவது போல் முதலில் காட்டி பிறகு அதிக நஷ்டம் ஏற்படலாம் என்பதால் யூக வணிகத்தில் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும் உங்களின் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும்.

மிதுனம்:

ஆறாமிடம் வலுப்பெறுவதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு விடும். கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதால் அனைத்திலும் கவனம் தேவை. வேலைமாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இருக்கும்.

குறிப்பிட்ட சில பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலைவிஷயமாக வெளிநாடு செல்வீர்கள். முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதை சிறிதுகாலம் ஒத்திப் போடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரப்படக் கூடாது.

சிலருக்கு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு விருப்பப்பட்ட அமைப்பில் வேலை கிடைக்கும். உங்களைக் குழப்புவதற்கென்றே சிலர் அருகில் இருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படாமல் என்றுமே நீங்கள் தனித்தன்மையுடையவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சுயமாகவே ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு தந்தையின் மருத்துவச்செலவுகள் இருக்கும்.

கடகம்:

எந்த ஒரு செயலும் அதிகமுயற்சி இன்றி வெற்றியாக முடிந்து உங்களுக்கு சந்தோஷம் தரும் வாரமாகும் இது. வாழ்க்கைத்துணை மூலம் இந்த வாரம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள். சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும்.

பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தவாரம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். ஒரு சிலருக்கு நீண்டகாலமாக நிலுவையில் இழுத்துக் கொண்டிருந்த கடன் தொகையோ சம்பள தொகையோ இந்தமாதம் நல்லபடியாக செட்டில் ஆகி கைக்கு கிடைக்கும்.

வார ஆரம்பத்தில் சந்திரன் வலுவாக இருப்பதால் பணப்பிரச்னைகள் எதுவும் வராது. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் இருக்கும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் கடுகடுப்பாக இருப்பீர்கள். தேவையின்றி கவலைப்பட்டு எரிந்து விழுவீர்கள். மற்றவர்கள் உங்களைக் கண்டு பயந்து விலகுவதற்கு சந்தர்ப்பம் இருப்பதால் எங்கும் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் குடும்பத்தில் அனைவரிடமும் மகிழ்ச்சி இருக்கும்.

சிம்மம்:

தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளில் இந்தவாரம் குறைகள் இருக்காது. மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும்.

எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும். பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச் சின்ன சிக்கல்கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான். வருமானம் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும்.

இதுவரை அலுவலகங்களில் பொறாமை மற்றும் துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பப் பதிலடி கொடுக்கத் தொடங்குவீர்கள். பணவரவுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்குவதால் இனிமேல் நிலையான வருமானம் வரத்துவங்கும். இதுவரை உங்களைப் பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். அனைத்தும் நன்மையாகும் வாரம் இது.

கன்னி:

வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சிறந்த வாரம்.

ராகுதசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இருக்கும். லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு அனைத்துக் காரியங்களும் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். சிலருக்கு அதிகாரப்பணியும் வி.ஐ.பி.க்கள் அறிமுகமும் இந்த வாரம் உண்டு.

நண்பர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். அரசு தனியார் ஊழியருக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும். நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

துலாம்:

பணவரவு சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பற்றாக்குறை இருக்காது. சிலருக்கு இளைய சகோதர்களால் வீண்விரயங்களும் செலவுகளும் இருக்கும். வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் இலாபத்துடன் நடக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்கள், காவல்துறையினர் போன்றவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள்.

குடும்பாதிபதி செவ்வாய் உச்சம் பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. இளையபருவத்தினருக்கு அலைச்சல்களும் எதிர்காலத்தை பற்றிய பயங்களும் இருக்கும். பெரியவர்களுக்கு காரியத் தடையும் சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு.

நட்புக்கிரகங்கள் யோகநிலையில் இருப்பதால் உங்களுக்கு தொட்டது துலங்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். நினைத்தது நடக்கும். எனவே நீங்கள் நீண்டகாலமாக நினைத்திருந்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள இது தகுந்த நேரம். பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகள் வலுவாக நடப்பவர்கள் இன்னும் சில இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதால் கிரகங்கள் தருகின்ற இந்த அதிர்ஷ்ட நிலைமையைப் பயன்படுத்தி சுறுசுறுப்புடன் செயலாற்றினால் இந்த வாரம் எல்லாம் கைகூடும்.

விருச்சிகம்:

ஏழரைச்சனி நடப்பதால் எந்த ஒரு விஷயமும் நீண்டமுயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் விரக்தி ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது. மூன்றாமிடத்தில் இருக்கும் செவ்வாயால் உங்களின் மனதைரியம் அதிகரித்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் இந்தவாரம் முதல் உண்டு.

கிரகநிலைகள் சாதகமற்ற அமைப்பில் இருப்பதால் சிலருக்கு மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. குறிப்பிட்ட சிலர் சாமியாவது பூதமாவது நான் உழைத்தால் எனக்குச் சோறு என்பீர்கள். என்னை மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதனை செய்கிறார் என்று நீங்கள் நினைக்கின்ற நேரம் இது. இளையவர்களுக்கு இருக்கும் வேலையில் மன அழுத்தம் உண்டு. எல்லா சோதனைகளும் இன்னும் கொஞ்ச காலம்தான்.

சிலருக்கு கடன் வாங்கி செலவு செய்யவேண்டி வரும்.. வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். பெண்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம்.

தனுசு:

குடும்பத்தில் ஒருவர் கோபத்தைக் காட்டினாலும் இன்னொருவர் அதைப் புரிந்துகொண்டு பணிந்து போவது ஒன்றும் கௌரவக்குறைச்சல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பங்குச்சந்தை யூகவணிகம் ரேஸ் லாட்டரி போன்றவைகள் இந்தவாரம் கை கொடுக்காது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம்.

தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் திருப்திகரமான நல்ல பலன்கள் இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு தற்போது திருமணம் கை கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு நல்ல செய்தி உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் செலவு இருக்கும். வெளிநாட்டு விஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வயதானவர்கள் தங்கள் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு செல்வீர்கள்.

பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே இருக்கும் என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்தநேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை தொழில் ஜீவன அமைப்புகளில் இடையூறுகள் எதுவும் இல்லாமல் சகஜமாகவே செல்லும்.

மகரம்:

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் யோசித்து செயல்படுவீர்கள் என்பதால் உங்களின் நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த வாரம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதிலிருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை நன்றாக இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்று வெளிப்படையாக சொல்ல முடியாத சில வகைகளில் குருபகவான் வருமானங்களைத் தருவார்.

கும்பம்:

வார ஆரம்பத்தில் கிரகநிலைகள் உங்களுக்கு டென்ஷன் வரும் விஷயங்களைச் செய்தாலும் செவ்வாய் வலுப்பெற்று இருப்பதால் வருகின்ற சிறிய பிரச்னைகள் இரண்டு நாட்களில் தீர்ந்து விடும் என்பதால் கவலைப் பட ஒன்றுமில்லை. எதிரிகள் அனைவரும் ஓடிப் போவார்கள் என்பது உறுதி. சுக்கிரனும் பலம் பெறுவதால் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல கடைசி நிமிடத்தில் போய் விடும் என்பது நிச்சயம். சகோதரிகளுக்கு உதவீர்கள்.

ஏழுக்குடைய சூரியன் வலுவிழந்திருப்பது வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வரும் என்பதைக் காட்டுவதால் குடும்பத்துப் பிரச்னைகளில் பொறுத்துப் போவதன் மூலம் நன்மைகள் நடக்க வைக்கலாம் என்பதால் நீங்கள் பொறுமை காட்ட வேண்டிய வாரமாக இருக்கும். குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

நண்பர்கள் மத்தியில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் உண்டு. சுக்கிரன் வலுப்பெறுவதால் பெண்களால் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளிடமிருந்து சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு பெறுவீர்கள்.

மீனம்:

எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்லவாரம் இது. இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனிமேல் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இனிமேல் இருக்காது.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இப்போது உங்கள் மனம் போல் நடக்கும். பணவரவுக்கு இருந்த தடைகள் நீங்கி இனிமேல் சரளமாக பணம் கிடைக்கத் துவங்கும். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டு. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரம் முன்னேறும் தொழில் சிறக்கும்..

No comments :

Post a Comment