Monday, 28 November 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (28-11-2016 முதல் 4-12-2016 வரை)

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் வலுவான நிலையில் குருவின் பார்வையில் இருப்பதால் மேஷராசிக்காரர்களுக்கு சிக்கல்களோ தொல்லைகளோ இல்லாத வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு கூடப்பிறந்தவர்களிடம் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் இந்தவாரம் முதல் முடிவுக்கு வரும். பங்காளிகளால் உண்டான சொத்துத் தகராறுகள், நிலப்பிரச்சினைகள், விவசாயம் மற்றும் செம்மண் பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும் வாரம் இது.

இந்த வாரம் மேஷராசிக்கு சுமாரான வாரம் என்று சொல்லும் அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் சுக்கிரன் ராசினாதனுடன் இருப்பதால் குடும்பத்திலும் மனைவி மூலமான மனநிறைவுகள் இருக்கும். வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் நன்கு யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் தடைப்பட்டு வீட்டை முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வார ஆரம்பத்தில் 28-ம்தேதி மதியம் 2 மணி முதல் டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை 3 மணி வரையும் சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை செய்ய வேண்டாம். சனியும், சந்திரனும் ஒன்று சேர்வதால் மேற்கே போவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

ரிஷபம்:

வார இறுதியில் ரிஷபநாதன் சுக்கிரன் உச்ச செவ்வாயுடன் இணைவதும், ராசியும், ராசிநாதனும் குருபார்வையில் இருப்பதும் நல்ல அமைப்புகள் என்பதால் இதுவரை சில விஷயங்களில் முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருந்த ரிஷபராசி காரர்கள் தைரியமாக முடிவெடுக்கும் வாரம் இது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்கின்ற மனநிலைமையில் இதுவரை இருந்தவர்கள் இப்போது தெளிவான ஒரு முடிவினை எடுப்பீர்கள்.

தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மளமளவென தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக நல்லவேலை கிடைக்கும். இருக்கும்.

சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3-ம் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களையோ புதிய முயற்சிகளையோ செய்ய வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுப்பதும் ஒத்தி வைக்கவும்.

மிதுனம்:

வார இறுதியில் ராசிநாதன் புதன் இந்த வாரம் ராசியை பார்க்க இருப்பதாலும், யோகாதிபதி சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பதாலும் மிதுனத்திற்கு மேன்மைகளை தரும் வாரம் இது. வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்த மிதுனத்தினர் இந்த வாரம் முதல் பின்னடைவுகள் நீங்கி வருமானங்கள் வரத் துவங்குவதை காண்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வார இறுதியில் நல்ல பணவரவும் உண்டு.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் இந்தவாரம் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இந்தவாரம் உண்டு.

பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் சிறிதளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுவில் இந்த வாரம் சிறப்பான வாரம்தான். டிசம்பர் 3-ம் தேதி மதியம் 2 மணி முதல் 5-ம் தேதி இரவு 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக வடக்கு நோக்கி நீண்ட பிரயாணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள்.

கடகம்:

வாரம் முழுவதும் யோகாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதும், தனாதிபதி சூரியன் எட்டுக்குடைய சனியுடன் சேர்ந்திருப்பதும் இந்த வாரம் எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு வரும் என்பதைக் காட்டுகிறது. இரண்டு, எட்டுக் குடையவர்கள் ஒன்று சேர்ந்து அதில் பரிவர்த்தனை யோகம் உண்டாகி இருப்பதால் உங்களைப் பிடிக்காதவர்களிடமிருந்து தனலாபம் கிடைக்க வேண்டும் என்பது இந்தவார பலன். எனவே கடகராசிக்கு மறைமுகமான பணவரவு கிடைக்கின்ற வாரம் இது.

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் இயங்குவதால் இது தொல்லைகள் எதுவும் இல்லாமல் மனமகிழ்ச்சியும், சந்தோஷமும் எல்லா விஷயத்திலும் இருக்கும் வாரமாக இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சகோதரர்கள் உதவுவார்கள்., குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவாரம் செய்வீர்கள். பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தொடர்பு இடைவெளி எனப்படும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த ஐந்தாமிட சனியை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.

சிம்மம்:

ராசியில் ராகு அமர்ந்து, சனி பார்வையும் அவருக்கு இருப்பதால் உண்டான சாதகமற்ற விளைவுகள் இந்த வாரம் முதல் தீரத் துவங்கும் என்பதால் சிம்மத்திற்கு நல்லவைகள் நடக்கும் வாரம் இது. ராசிநாதன் சூரியனும் சனியுடன் இணைந்திருப்பதால் குறிப்பிட்ட சிலருக்கு குழப்பங்களும், ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்ற மனக்கலக்கமும் இருக்கும் என்றாலும் சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் என்பதால் உங்களை மீறி எதுவும் நடந்து விடாது.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். சிலர் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நீண்ட நாள் வராமல் இருந்த நீங்கள் எதிர்பார்த்த தொகை இந்த வாரம் கிடைக்கும். அரசு, தனியார் துறைகளில் மேல் வருமானம் வருகின்ற துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம்.

முறைகேடாக பணம் வரும் துறைகளில் இருப்பவர்கள் அதிகமான வருமானத்திற்கு ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி:

ராசிநாதனும், தொழில் ஸ்தானாதிபதியுமான புதன் நான்காமிடத்தில் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்த்து பலப்படுத்துவதால் தொழில் விவகாரங்களில் கன்னி ராசிக்காரர்கள் சாதிக்கும் வாரம் இது. எட்டுக்குடையவன் உச்சமாகி எட்டாமிடத்தைப் பார்ப்பதால் பிறந்த இடத்தை விட்டு வெளிநாடு வெளிமாநிலம் போன்றவைகளில் வேலை செய்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்க பெறுவீர்கள். சிலருக்கு அலுவலகங்களில் பாராட்டுகளும், நற்பெயரும் கிடைக்கும் வாரம் இது.

சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதால் தொழில், வேலை விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இன்றி சிறப்புகள் இருக்கும் வாரமாக இது இருக்கும். காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதம் இந்த வாரம் கிடைக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து இந்தவாரம் தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. சேமிக்க முடியும்.

தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு நல்லபெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். ஜாமீன் போடுவது, கியாரண்டி தருவது இந்த வாரம் கூடாது. அதனால் சிக்கல்கள் வரும். பலநாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.

துலாம்:

ஏழரைச்சனியின் இறுதி நிலையில் இருக்கும் உங்களில் சிலருக்கு விட்ட குறை தொட்ட குறையாக இன்னும் இருந்து வரும் கடன் தொல்லைகளும், வழக்கு விவகாரங்களும் உங்களுக்கு சாதகமாக முடிய இருக்கும் வாரம் இது. தனாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று குருவின் பார்வையில் இருப்பதால், இனிமேல் வராது என்று கைவிட்ட தொகை கிடைப்பதும், திருப்பிக் கொடுக்க வழிமுறைகள் தெரியாமல் இருந்த கடனை அடைக்க வழி பிறப்பதும் இந்த வாரம் நடக்கும்.

உங்கள் கௌரவத்திற்கும், நன்மதிப்பிற்கும் பங்கம் எதுவும் இல்லாத வாரம் இது. வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலைமை மாறி வியாபாரம் சூடுபிடிக்கும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கடை திறக்க முடியும். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள். ஏற்கனவே இருந்து வரும் சிக்கல்கள் அனைத்தும் இந்த வாரம் முதல் படிப்படியாக தீர ஆரம்பிக்கும்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ.ஏ.எஸ், குரூப் ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும். மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். மகன், மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துவதற்கு. முன்னேற்பாடுகள் இந்தவாரம் உண்டு.

விருச்சிகம்:

ராசிநாதன் உச்சமாகி குருவின் பார்வையில் இருப்பதோடு, இன்னொரு சுபரான சுக்கிரனும் அவருடன் இணைவதால் இதுவரை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் திக்குத் தெரியாமல் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எந்தத் திசையில் இனிமேல் செல்வது என்று வழிகாட்டும் வாரமாக இது இருக்கும். விருச்சிகத்தின் வேதனை தீரும் காலம் அருகில் இருப்பதால் இனிமேல் புதிய தொல்லைகள் எதுவும் உங்களுக்கு உருவாக போவது இல்லை.

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் ஆரம்பத்தில் சில சங்கடங்கள் உங்களுக்கு இருந்தாலும் வாரத்தின் பிற்பகுதியில் அனைத்தும் தீர்ந்து நிம்மதியும், பிரச்னை இல்லாமையும் உள்ள வாரம் இது. மூன்றில் ராசிநாதன் செவ்வாய் உச்சவலுப்பெற்று இருந்தாலும் உங்கள் ராசிநாதன் செவ்வாயே ஆறாமிடத்திற்கும் அதிபதி என்பதால் நீங்களே உங்களுக்கு எதிரான செயல்களை செய்வீர்கள் என்பதால் கவனமுடனும் இருக்க வேண்டும்.

அதே நேரம் இந்த வாரம் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள் கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள்.

தனுசு:

ராசிநாதனும், பத்துக்குடையவனும் இந்த வாரம் பரிவர்த்தனையாவதால் குருபகவான் ராசியிலேயே இருக்கும் நிலை உண்டாகி தனுசு ராசிக்காரர்களின் எண்ணங்கள் யாவும் பலிக்கும் வாரம் இது. சிலருக்கு புதியதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும், ஆட்களும் தற்போது அறிமுகமாவார்கள். அடுத்த வருடம் முதல் ஜென்மச்சனி ஆரம்பமாக இருப்பதால் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய முயற்சிகளை செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செய்ய வேண்டிய வாரம் இது.

சிலருக்கு இருக்கும் வாகனத்தை விட நல்லவாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

கெடுபலன்கள் வருவது போலத் தோன்றினாலும் கடைசி நேரத்தில் விலகி எதிர்ப்புகள் ஒழியும். வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.

மகரம்:

ராசியில் சுக்கிரன் அமர்வதும் அவரை ஒன்பதாமிடத்துக் குரு பார்ப்பதும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் அமைப்பு என்பதால் மகரராசிக்கு யோகம் தரும் வாரம் இது. நான்காமிட அதிபதி உச்சம் பெற்று சுக்கிர சேர்க்கை குரு பார்வையோடு வீடு, வாகனம் தரும் நான்காமிடத்தையே பார்ப்பதால் இதுவரையில் சொந்த வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு இப்போது இவைகள் அமைவதற்கான வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இந்த வாரம் உருவாகும்.

ராசிநாதன் அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்து பலவீனமாக இருப்பதால் தொழில், வேலை விஷயத்தில் ஏதாவது தவறான முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதையும் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்ய வேண்டிய வாரம் இது. பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை செலவிட வேண்டியது இருக்கும்.

தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வியாபாரம் உயரும். சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்களும் உண்டு. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

கும்பம்:

ராசியில் கேது அமர்ந்து ராசிநாதன் சனி, சூரியனுடன் இணைவதால் குறிப்பிட்ட சில கும்பராசிக்காரர்களுக்கு ஆன்மீக ஈடுபாடும், சிவத்தொண்டு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும் வாரம் இது. எட்டாமிடத்தில் குரு அமர்ந்து பனிரெண்டில் உள்ள செவ்வாயை பார்ப்பதால் குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி பெண் உறவினர் வகையில் விரையமும், செலவுகளும் உண்டு. வருமானமும் சிக்கனமாகத்தான் இருக்கும் என்பதால் எதிலும் கையைச் சுருக்க வேண்டிய வாரம் இது,

எதிர்பார்ப்புகள் அனைத்தும் தடைகளுடனும் தாமதங்களுடனும் நிறைவேறும் வாரமாக இது இருக்கும். கும்பத்திற்கு இது சுமாரான வாரம்தான். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். அப்பா விஷயத்திலும், தந்தைவழி உறவினர் விஷயத்திலும் சாதகமற்ற பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பூர்வீக சொத்தில் வில்லங்கங்களும் தந்தை வழி சொத்தை அனுபவிக்க முடியாமல் தடைகளும் வரும் வாரமாகவும் இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக உங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். வீடோ நிலமோ விற்ற பணம் விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


மீனம்:

வார ஆரம்பமே சந்திராஷ்டம நாளாக அமைந்தாலும் ஒன்பதுக்குடையவன் உச்சமாகியிருப்பதும், ராசிநாதன் ராசியை பார்ப்பதும் மீனத்திற்கு நல்ல பலன்களை கொடுக்கும் அமைப்பு என்பதால் இந்த வாரம் உற்சாகமும், புத்துணர்ச்சியும் தரும் வாரமாக இருக்கும். வெகு நாட்களாக தீராமல் தொல்லை கொடுத்து வந்த பிரச்னைகளை இந்தவாரம் உங்களால் தீர்க்க முடியும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் உங்களுக்கு நம்பிக்கையூட்டும் வாரம் இது.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

ராசியை குருபகவான் வலுப்பெற்றுப் பார்ப்பதால் பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். மீனராசிக்காரர்கள் புத்திசாலிகள் என்பதாலும் நுணுக்கமான வேலைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள் என்பதாலும் இந்த வாரத்தின் சாதகமான கிரகநிலையை நல்லமுறையில் உபயோகப்படுத்திக் கொள்வீர்கள்.

No comments :

Post a Comment