Monday, 21 November 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (21.11.16 முதல் 28 .11.16)

மேஷம்:

மேஷநாதன் செவ்வாய் வாரம் முழுவதும் உச்சநிலையில் இருப்பதால் கஷ்டங்கள் எதுவும் உங்களுக்கு வந்துவிட போவதில்லை. அதேநேரத்தில் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் பெண்கள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தங்களும் இருக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு நெடுந்தூர பயணங்கள் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் இது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. எட்டில் சனி இருப்பதால் சிறு காய்ச்சல் என்றாலும் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. வயதானவர்கள் உடல்நலத்தில் அக்கறை வைக்க வேண்டும். பழைய வாகனங்களை ரிப்பேர் பார்ப்பதை விட வேறு வாகனம் வாங்குவது நல்லது.

ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள்.

ரிஷபம்:

ரிஷபநாதன் சுக்கிரன் பகை வீட்டில் இருப்பதோடு இருபெரும் பாவக்கிரகங்களான செவ்வாய். சனிக்கு நடுவில் கத்திரி யோகத்துடன் இருப்பதால் இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு தடைகளும், தாமதங்களும் உள்ள வாரமாக இருக்கும். அதேநேரத்தில் ராசியை யோகாதிபதி பார்ப்பதால் அனைத்தும் இழுபறியாக இருந்தாலும் கடைசி நேரத்தில் சாதகமாக முடியும். தெய்வதரிசனம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள்.

கணவன்-மனைவிக்குள் ஏதாவது ஒரு விஷயத்தில் சந்தேக விதையை ஏழாமிட சனி விதைப்பார் என்பதால் மூன்றாம் நபர் சொல்வதை நம்பாமல் இருப்பது நல்லது. எனக்குத் தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்கு தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் சந்தேக வேலைகளை சனி செய்வார் என்பதால் எண்ணங்களிலும் பேச்சிலும் நிதானம் இந்தவாரம் தேவைப்படும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள்.

மிதுனம்:

ராசிநாதன் வலுவாக இருப்பதால் மிதுனத்திற்கு தொட்டது துலங்கும் வாரம் இது. இதுவரை உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் உங்களுக்கு பணிந்து வருவதையும், நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் உடனடியாக உங்களுக்கு சாதகமாக முடிவதையும் இந்த வாரம் நீங்கள் பார்க்க முடியும். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.

கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டு. தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும்.

பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல வாரம். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இப்போது நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் வலுவான நிலைகளில் இருக்கும் நிலையில், ராஜயோகாதிபதி செவ்வாய் ஏழாம் வீட்டில் குருவின் பார்வையுடன் சுபத்துவமாக அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் இந்த வாரம் கடக ராசிக்கு எல்லா வழிகளிலும் நன்மைகள் மட்டுமே இருக்கும். எதிர்ப்புகள் பலவீனமாகி கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும் வாரம் இது. மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும்.

குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அவர்களின் வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இந்த வாரம் இருக்கும். அதேநேரத்தில் தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம்.

கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டி இருக்கும். யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்கள், பிரச்சனையை தள்ளி வைப்பது நல்லது. சகோதரவிஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது.

சிம்மம்:

இதுவரை உங்களை ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இரட்டை மனநிலைமையில் இருக்க வைத்திருந்த கிரகநிலைகள் இந்த வாரத்துடன் முடிவடைவதால் சோம்பலாகி கிடந்த உங்களின் அனைத்து விஷயங்களும் இந்த வாரம் முதல் சுறுசுறுப்பாக நடைபெற துவங்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த வாரம் திருப்புமுனையாக அமையும்.

புதன் வலுப்பெற்று இருப்பதால் கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். கடை வைத்திருப்பவர்களுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது.

விவசாயிகளுக்கும், கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் சுமாரான பலன்கள்தான் நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் சிம்ம ராசிக்காரர்கள் நன்மைகளை அடைவார்கள்.

கன்னி:

கன்னிநாதன் புதன் பரிவர்த்தனை மூலம் வலுவாக இருக்கும் யோகாதிபதியும் நண்பருமான சனியுடன் இணைந்திருப்பதால் இந்த வாரம் கன்னிக்கு கஷ்டங்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இப்போது உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள். செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை யோகம் அடைவதால் இந்த வாரம் குறிப்பிட்ட சிலர் வடமாநில பயணங்களும், கடல் தாண்டி செல்லுதலும் இருக்கும். இளைஞர்கள் பெங்களூர், ஐதராபாத், பயணிப்பீர்கள். சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள்.

புதிய வீடு கட்டுவதற்கோ பெருநகரங்களில் இருப்பவர்கள் நல்ல இடத்தில் சொந்தமாக பிளாட் வாங்கவோ உண்டான ஆரம்பங்கள் இந்த வாரம் உண்டு. பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கலைஞர்களுக்கு நல்ல வருமானம் வரும் வாரம் இது. விவசாயிகளுக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

துலாம்:

இந்த வாரம் துலாம் ராசிக்கு சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். ஆனாலும் செவ்வாய் சனி பரிவர்த்தனை பெறுவதாலும் அதில் செவ்வாய் உச்சமடைவதாலும் அனைத்துமே தடங்கலாகவும் இருக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு செல்வதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம்.

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு உடல் கோளாறுகள் வரலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள். கடன் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வீடு வாங்குவது விஷயமாக ஹவுசிங் லோன் வாங்க வேண்டியிருக்கும். வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் வியாபார வேலை இடங்களில் கூடவே சிரித்துப்பேசி உங்களை கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். எதிலும் கவனமாக இருங்கள். வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்லபலன்கள் இருக்கும். பிடித்தமில்லாத வேலையில் இருந்தவர்கள் உங்களுக்கேற்ற தகுதியான வேலையில் சேர்வீர்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். உங்களுடைய பேச்சுக் கேட்கப்படும். ஆலோசனை ஏற்கப்படும்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் உச்சவலுவுடன் சகாய வீட்டில் இருப்பதாலும், வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் நிலை பெற்று இருப்பதாலும் இந்த வாரம் விருச்சிக ராசிக்கு பிக்கல், பிடுங்கல் எதுவும் இல்லாமல் எதையும் சுலபமாக சமாளிக்கும் வாரமாக இருக்கும். இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்திருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும். சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு சாதகமான நிலை வரும்.

அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில்மாற்றம், வீடுமாற்றம் போன்றவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

தனுசு:

ராசிநாதன் சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் யோகாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் மூலம் நல்ல பலன்களும், பொருளாதார லாபங்களும் கிடைத்து அதன் மூலம் சந்தோஷம் அடையும் வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் விரயாதிபதி தன ஸ்தானத்தில் உச்சம் அடைவதால் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது நல்லது.

‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த வாரம் தனுசு ராசிக்காரர்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ராசியில் சுக்கிரன் இருப்பதால் பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு.

ஏழரைச் சனி நடப்பில் உள்ளதால் சிலருக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் நடைபெறும். குறிப்பிட்ட சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்:

வாரத்தின் ஆரம்பமே சந்திராஷ்டமத்தில் ஆரம்பிப்பதால் இந்த வாரம் மகர ராசிக்கு சுமாரான பலன்களைத் தரும் வாரமாகத்தான் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தங்களும் இருக்கும் என்பதால் பருவவயதுக் குழந்தைகள் மேல் அக்கறை கொள்வது நல்லது. வியாபாரிகளுக்கு இது சுமாரான காலகட்டம்தான். அரசு, தனியார்துறை ஊழியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. சட்டத்தை மீறி யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள்.

சாப்ட்வேர் போன்ற நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையுடன் கவனமுடன் இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இந்த நேரங்களில் நிறைவேற்ற முடியும். தொழில் ஸ்தானம் வலுவாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

இந்த வாரம் அதிர்ஷ்டம் கை கொடுக்காது. உழைப்பை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டியிருக்கும். முயற்சி தன்மெய் வருத்தக் கூலி தரும் என்ற தெய்வப்புலவரின் வாக்கு உண்மை என நீங்கள் உணரும் வாரம் இது. 21-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 23-ம் தேதி பகல் 2 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இந்த நாட்களில் புதிய தொழில் முயற்சிகள் அல்லது தொழில் விரிவாக்கம் போன்றவைகளை செய்வது நல்லபலன் தராது.

கும்பம்:

கடந்த சில வாரங்களாக தொழில் அமைப்புகளில் மந்தநிலையையும், பண இழப்பையும் பெற்று வந்த கும்ப ராசிக்காரர்களுக்கு இனிமேல் நல்ல பலன்கள் நடக்க துவங்கும் வாரமாக இது இருக்கும். யோகாதிபதி சுக்கிரன் குருவின் வீட்டில் அமர்ந்து வீடு கொடுத்த குரு எட்டில் மறைந்திருப்பதால் இந்த வாரம் குறிப்பிட்ட சில கும்பராசிக்காரர்களுக்கு தாய், தந்தை வழியில் மனச்சங்கடமான நிகழ்வுகளும் பெற்றோர்களால் செலவுகளும் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.

மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும், சுபகாரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் எந்தவித சிக்கலும் இன்றி நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள்.

அடுத்தவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும் என்பதால் யாருக்கும் எதுவும் தருவதாக ப்ராமிஸ் செய்யும் முன் யோசிப்பது நல்லது. 23-ம் தேதி பகல் 2 மணி முதல் 26-ம் தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகள், முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். மனம் இந்த நாட்களில் ஒருநிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி வைக்கவும்.

மீனம்:

ராசிநாதன் குருபகவான் ராசியைப் பார்க்கும் நிலையில், செவ்வாயும் வலுவாகி இரண்டாமிடத்தைப் பார்ப்பதால் மீனராசிக்கு மேன்மைகளும், நன்மைகளும் நடக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பாக மஞ்சள் நிறப்பொருள் விற்பவர்கள், அந்தணர்கள், ஆலயம் சம்பந்தப்பட்ட பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான நன்மைகள் இருக்கும். தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு இந்தவாரம் அபாரமான நன்மைகள் உண்டு, இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். ஊடகத்துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல வாரம். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.

வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். 26-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 28-ம் தேதி மதியம் 2 மணிவரை சந்திராஷ்டமநாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதியஆரம்பங்கள், தொழில்மாற்றங்கள், வேலை முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். யாருடனும் சண்டை போடாமல் இருப்பது நன்மையை தரும்.

No comments :

Post a Comment