Wednesday, 16 November 2016

2016 கார்த்திகை மாத பலன்கள்

மேஷம்:

கார்த்திகை மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்சவலுவில் அமர்ந்து அவருடன் சுபகிரகமான சுக்கிரன் சேர்ந்திருந்திருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு பெண்களால் நன்மைகளும், வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் உள்ள மாதமாக இருக்கும். ராசிநாதனின் உச்ச வலுவால் சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்துக் கஷ்டங்களும் ஆட்சி பெற்ற சூரியனைக் கண்டதும் பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி.

செவ்வாய்க்கு குருபார்வையும் இருப்பதால் உங்களால் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். வெற்றி கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் விரும்பியபடி நடக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு இந்த மாதம் நிம்மதி உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

ரிஷபம்:

தொழில்ஸ்தானம் வலுப்பெறுவதால் ரிஷபத்திற்கு இந்தமாதம் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பளஉயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து உங்களுக்கு நண்பராக இப்பொழுது மாறுவர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த நல்ல மாற்றங்கள் இந்த மாதம் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. சிலருக்கு வாகனமாற்றம் இருக்கும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும்.

சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெறுவது இந்த மாதம் ரிஷப ராசிக்கு மிகுந்த தனலாபத்தையும், மேன்மையான பாக்யங்களையும் அளிக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது. ஐந்தாமிடத்தில் இருக்கும் குருவினால் இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் நிறைவேறும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

கார்த்திகை மாதம் மிதுனராசிக்கு மேன்மையான மாதம்தான். மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதபகவான் நல்லநிலையில் இருப்பது உங்களுக்கு யோக அமைப்பு என்பதால் இந்தமாதம் மிதுனத்திற்கு நல்லமாதம் தான். இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் இப்போது நிறைவேறும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை.

சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.

பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ அருகில் வராது. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு இருக்கும்.

கடகம்:

ராசியின் யோகர்கள் குருவும், செவ்வாயும் ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தையும், ஒன்பதாமிடமான பாக்கியஸ்தானத்தையும் பார்ப்பதும் மிகவும் நல்ல அமைப்பு என்பதால் இந்த மாதம் கடகத்திற்கு நல்ல பலன்களை தரும் மாதமாக இருக்கும். கார்த்திகை முழுவதும் சுபநிகழ்ச்சிகளும், தூரஇடங்களில் இருந்து நல்லசெய்திகளும், பணவரவும் உள்ள மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் தொழில்துறையில் சாதனை படைப்பீர்கள்.

யோகக்கிரகங்கள் பலம் பெற்ற நிலையில் இருப்பதால் சிலருக்கு பொருள் சேர்க்கை இருக்கும். எதிலும் லாபம் வரும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் நினைத்தது போலவே நடக்கும். செவ்வாய் ராசியை வலுப்பெற்றுப் பார்ப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். நண்பர்களே உங்களின் கோபம் பிடிக்காமல் விலகிப் போக வாய்ப்பு இருக்கிறது.

கடக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நிறைய மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.

சிம்மம்:

ராசிநாதன் சனியுடன் இணைந்து ராசிக்கும் சனிபார்வை உள்ள மாதம் இது. கார்த்திகை மாதம் சிம்ம ராசிக்கு தடைகள் தாமதங்களைக் கொடுத்தாலும் குருபகவான் தொழில் வீடான பத்தாம் வீட்டைப் பார்த்து, பணவரவைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் இருப்பதால் எல்லாவற்றையும் நீங்கள் சுலபமாக சமாளிக்கும் மாதமாக இருக்கும். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற நேரங்களில்தான் சர்க்கரை போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. தாய், தந்தை விஷயத்திலும், பெண்கள் விஷயத்திலும் மனக் கசப்புகளும், வேண்டாத நிகழ்வுகளும் இருக்கும். புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள். நீண்டதூரப் பயணங்கள் அமையும். வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு.

யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. செவ்வாய் குரு வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள்.

கன்னி:

சனி, செவ்வாய் பரிவர்த்தனையால் இருவருமே பலம் பெற்ற நிலையை பெறுகிறார்கள். பரிவர்த்தனை யோகத்தால் மூன்று, ஐந்தாமிடங்கள் வலுப் பெறுவதால் இந்த மாதம் உங்களுக்கு பண வரவுகளும், நன்மைகளும் கிடைக்கும். சிலருக்கு மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும், மனஸ்தாபமும் இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் இவைகளில் நன்மைகள் உண்டு.

ஜீவனஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள்.

சிலருக்கு பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் உள்ள மாதம் இது. அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண்உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இருக்கும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம்.

துலாம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் பகை நிலையில் இருப்பதால் இந்தமாதம் துலாம் ராசிக்கு தூரப்பயணங்களையும், அலைச்சல்களையும் தரும். அதேநேரத்தில் தொழில்ரீதியான பிரயாணங்களால் நன்மைகளும், பணவரவும் இருக்கும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது உண்டு. சிலருக்கு தாயார் வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் இப்பொழுது கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் தனவரவுகளும் வருமானமும் இருக்கும்.

ரியல்எஸ்டேட், சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள், பெருவணிகர்கள் போன்றோருக்கு ஒரு பெரியதொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். சிலருக்கு கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கும்.

விருச்சிகம்:

ராசிநாதன் உச்சநிலை பெற்றிருப்பதால் பிரச்னைகள் எது வந்தாலும் அதை நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. குறிப்பாக வேலை, தொழில் போன்றவற்றில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். யோகாதிபதியான சூரியன் ராசியில் அமர்வது ஏழரைச்சனியில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் என்பதால் இந்தமாதம் உங்களுக்கு மனதைரியத்தைத் தரும் நிகழ்வுகள் மட்டுமே நடக்கும்.

சூரியன் வலுப்பெறுவதால் வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த அனைத்து விஷயங்களும் இந்த மாதம் முடிவுக்கு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும். ராசினாதனுக்குப் குரு பார்வை இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விருச்சிக ராசிக்காரர்கள் எந்த விஷயத்திற்காகவும் இனிமேல் கலங்கத் தேவையில்லை. இனி உங்களுக்கு நல்ல காலம்தான்.

செவ்வாய் பரிவர்த்தனை அடைவதன் மூலமாக ராசியில் இருக்கும் நிலை பெறுவதால் பின்னடைவுகள் எதுவும் இல்லாத மாதம் இது. நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். ராகு சுபநிலை பெறுவதால் லாபங்களும், பண வரவுகளும் அந்நிய, இன, மத, மொழிக்காரர்களால் நன்மைகளும் இருக்கும். இதுவரை பயமுறுத்தி கொண்டிருந்த சில விஷயங்கள் நல்லவிதமாக மாறும். விருச்சிகத்திற்கு கெடுபலன்கள் எதுவும் இனிமேல் இல்லை.

தனுசு:

மாதம் முழுவதும் ஒன்பதுக்குடைய சூரியன் பனிரெண்டாம் வீட்டில் மறைந்து சனியுடன் இணைந்து தடைகளை ஏற்படுத்தினாலும், அங்கே பரிவர்த்தனை யோகம் அமைவதால் இந்தமாதம் நல்ல மாதமாகவே அமையும். யோகாதிபதி செவ்வாய் குருவின் பார்வையில் இருப்பதாலும் இந்த மாதம் உங்களுக்கு யோகபலன்கள் நடக்கும். கிரகங்கள் வலுவாக இருப்பதால் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

சனி, சூரிய சேர்க்கையால் இந்தமாதம் உங்களுக்கு செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் இருக்கும். வருமானமும் தாராளமாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். ஆறாமிடம் வலுப்பெறுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.

அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. தகுதிக்கு மீறி செய்து தருவதாக சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக உறுதி அளிக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவர் கோபித்தால் கூட மற்றவர் அடங்கி போவது நல்லது.

மகரம்:

ராசியைக் குரு பார்த்து, பாக்யாதிபதி வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக கார்த்திகை இருக்கும். சிலருக்கு கணவர் மூலம் சந்தோஷமான விஷயங்களும், இன்னும் சிலருக்கு மனைவியினால் ஆதாயங்களும் உள்ள மாதம் இது. “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற வார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும் என்பதால் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வீடு மாற்றம், வாகன மாற்றம் இருக்கும். வருங்கால முன்னேற்றத்திற்கு வழி அமைக்கும் மாதம் இது. பணவரவு நன்றாகவே இருக்கும். நல்ல பொருளாதார நிலையும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் இருக்கும். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் அதிகம் உள்ள மாதம்தான். வருமானத்தை சேமிக்கத்தான் முடியாது. அரசியல் வாதிகளுக்கும், அரசுத் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.

மாத பிற்பகுதி அதிக நன்மைகளைச் செய்யும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண உறுதி உண்டு. நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்பொழுது பகவான் கிருஷ்ணர் குழந்தை வடிவில் வந்து அவதரிப்பார். சிலருக்கு அரசு வேலைவாய்ப்பு உண்டு. வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வேலை இடங்களில் வாக்குவாதங்களை தவிருங்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்கு ஏழில் ராகு, எட்டில் குரு, பத்தில் சனி என்ற கிரகநிலை இருப்பது சாதகமற்ற ஒரு கிரக அமைப்பு. இவைகளெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்களுக்குத்தான். ஜோதிடவிதிப்படி அஷ்டம குரு முடிந்த பிறகு வாழ்க்கை நல்லபடியாக செட்டில் ஆகும் என்பது உறுதி. அதேநேரத்தில் சினிமாவில்தான் கதாநாயகன் ஒரேபாட்டில் கோடீஸ்வரனாகி விடுவார். நிஜத்தில் நிதானமாகத்தான் எதுவும் நடக்கும். இனிமேல் கும்பத்திற்கு நிதானமாக நன்மைகள் நடக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிக்கனமாக இருக்க வேண்டிய மாதமிது. ஏழில் இருக்கும் ராகு பணவரவுகளையும், வர வேண்டிய வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது.

பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று பழி சுமத்தப்படுவீர்கள். சிலருக்கு நண்பர்களே எதிரியாவார்கள். பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். காரணமின்றி உங்களுக்கு உங்கள் மீதே கோபம் வரும். எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

மீனம்:

விட்டுப் போயிருந்த சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் இனிமேல் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் மாதமிது. அதிக முயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள்.

கடும் முயற்சி செய்தும் நடக்காத விஷயங்கள் இனிமேல் வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டுவர். அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்டவர்கள் இனிமேல் அதிர்ஷ்டசாலியாக புகழப்படுவீர்கள். எதிர்கால நல்வாழ்விற்கு நன்மைகளையும் செய்யும் மாதமிது. வழக்கு, எதிரிகள் தொந்தரவு அனைத்தையும் தூள்தூளாக்கும் நிலையில் குருபகவான் இருப்பது உங்களுக்கு சாதகமான நிலை.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் குறைவதற்கு வாய்ப்பில்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு. வெளிநாட்டு விஷயங்களில் லாபம் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் மேன்மையடைவார்கள். அடிக்கடி பிரயாணம் செய்வீர்கள். சிலர் அக்கா, தங்கைகளின் திருமணத்தை நடத்தி பார்ப்பீர்கள். வருமானத்திற்கு குறை இருக்காது.

No comments :

Post a Comment