Monday, 14 November 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (14.11.2016 முதல் 20.11.2016 வரை)

மேஷம்:

வாரம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் உச்சவலுவில் இருப்பதும், குரு பார்வையில் சுபத்துவம் அடைந்திருப்பதும் மேஷராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு அமைப்பு என்பதால் இந்த வாரம் கெடுபலன்கள் எதுவுமின்றி நற்பலன்கள் மட்டுமே நடைபெறும் வாரமாக இருக்கும். குறிப்பாக அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் உங்களுக்கு சனியின் கடுமையை தணிக்கும் கிரக நிலைமை இது.

சுக்கிரன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். அதே நேரத்தில் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் நல்ல விதமாக செயல்பட்டு உங்களுக்கு நன்மைகளை தரும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இந்த வாரம் மேன்மைகளை தரும்.

ரிஷபம்:

ராசிநாதனும் குருபகவானும் ராசியை பார்க்கின்ற அமைப்பு இந்த வாரம் ரிஷபத்திற்கு இருப்பதால் சோதனைகள் எதுவும் இல்லாத சாதனை வாரம் இது. பத்தாமிடத்தில் இருக்கும் கேதுவால் குறிப்பிட்ட சில ரிஷப ராசிக்காரர்களுக்கு சிகப்புநிற பொருட்களால் ஆதாயங்களும், ஆன்மீக ஈடுபாட்டோடு சிவபக்தி மேலோங்குதலும் இந்த வாரம் உண்டு.

இந்த வாரம் சிலருக்கு பெண்கள் விஷயத்தில் கருத்துவேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண்விரயங்களும் இருக்கும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண்உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இருக்கும். என்னதான் பிரச்னை என்றாலும் ராசிநாதன் வலுவுடன் இருப்பதால் அனைத்துக் கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும்.

எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் ஒன்று மனம் போல் நடக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்.

மிதுனம்:

ஆறு, எட்டுக்குடையவர்களின் பரிவர்த்தனை மிதுனராசிக்கு யோகத்தை தராது என்றாலும், பரிவர்த்தனையோடு சுபக்கிரகமான சுக்கிரன் இணைந்திருப்பதால் கெடுபலன்கள் யாவும் நன்மையாக மாறி மிதுனத்திற்கு நல்லவை நடக்கும் வாரம் இது. நான்காமிடத்தில் இருக்கும் குருபகவானால் உங்களில் தொழில் அமைப்புகளிலும் இதுவரை இருந்து வந்த இடர்ப்பாடுகள் நீங்கும்.

இந்தவாரம் எதிர்பாராத பணவரவுகளும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு. பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். வெகுநாட்கள் திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். செவ்வாய் வலுப்பெறுவதால் அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும்.. எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. செவ்வாய் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்குவார் என்பதால் அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.

கடகம்:

வாரத்தின் ஆரம்பமே ராஜயோகாதிபதி செவ்வாய் சுபத்துவமாகி ராசியைப் பார்ப்பதால் கடகராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. குறிப்பாக ராசிநாதனையும் செவ்வாயையும் இந்தவாரம் குருபகவான் பார்ப்பதால் உங்களுடைய சிந்தனை, செயல்திறன் இரண்டும் ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் இருக்கும் என்பதால் நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்கும் வாரம் இது.

ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வாரம் உங்களுக்கு விரயங்களும், செலவுகளும், பயணங்களும் உள்ள வாரமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் தாராளமாகவே இருக்கும். குறிப்பாக தந்தைவழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப்பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம்.

சிம்மம்:

ராசிநாதன் நீசத்தில் இருந்தாலும் யோகாதிபதி செவ்வாய் உச்சநிலை பெற்று வலுவாகி தனது எட்டாம் பார்வையால் ராசியை பார்ப்பதும், செவ்வாய் குருவின் பார்வையில் இருப்பதும் யோக அமைப்புகள் என்பதால் கடந்த சில வாரங்களாக உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் எதிர்மறைபலன்கள் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல இந்த வாரம் முதல் விலகி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும் வாரம் இது.

இதுவரை இருந்து வந்த அவஸ்தைகளும், சிக்கல்களும் தீரத் தொடங்கி நல்ல படியாக பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். வேலையில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு அது சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். உடல் நலம் சீராகும். பொருளாதாரம் மேன்மை பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும் இருக்கும் என்பதால் வீடு எந்த நேரமும் கலகலப்பும், சிரிப்புமாக இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள்.

கன்னி:

கன்னிநாதன் புதன் தன் நண்பரான நீச சூரியனுடன் இணைந்திருப்பதால் நண்பர்களால் பண விரையம் ஏற்படும் வாரம் இது. குறிப்பிட்ட சிலர் சிறுவயது முதல் நண்பர்களாக இருப்பவர்களுக்கு ஏதாவது உதவி செய்வதால் சிக்கல்கள் வரும் என்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். சுருக்கமாக சொல்லப் போனால் உதவி செய்யப் போய் உபத்திரவத்தை வர வைத்துக் கொள்ளும் வாரம் இது.

வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் இது வருமானம் அதிகம் உள்ள வாரம்தான். அதேநேரத்தில் வரும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாது. பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷப்படும்படியான சம்பவங்களும் அவர்களால் பெருமைகளும் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும்.

பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு இப்போது எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். பாக்கி வசூல் ஆகும்.

துலாம்:

ராசியில் ஒரு நீச கிரகம் அமர்ந்து, ராசிநாதன் சுக்கிரன் சனியுடன் இணைந்த சுமாரான வாரம் இது. கடன் ஸ்தானமான ஆறாமிடத்தை குருபகவான் வலுப்பெற்று பார்ப்பதால் குருதசை அல்லது குரு புக்தி நடப்பவர்களுக்கு கடன் தொல்லைகளால் மனக்கலக்கங்கள் வருகின்ற வரும் வாரம் இது. சனியும் செவ்வாயும் இடம் மாறி அமர்ந்து பரிவர்த்தனையோகம் உண்டாவதால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும்.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். வியாபாரிக்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில நல்ல அனுபவங்கள் இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம்.14-ம் தேதி இரவு 10 மணி முதல் 16-ந்தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடைபெறாது. மேற்கண்ட நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய ஆரம்பங்களோ எதுவும் வேண்டாம்.

விருச்சிகம்:

வார ஆரம்பத்தில் உச்சத்தில் இருக்கும் ராசிநாதன் செவ்வாய் அடைவதாலும், இவர்கள் இருவரையும் குருபகவான் பார்ப்பதாலும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேதனைகளும், சோதனைகளும் இல்லாத வாரம் இது. வெகுகாலத்திற்கு பிறகு சற்று நிம்மதியாக உணர்வீர்கள். விருச்சிகத்தின் கஷ்டங்கள் அனைத்தும் இனிமேல் படிப்படியாக விலகத் துவங்கும். இனிமேல் கஷ்டங்கள் இருக்காது என்பதை நீங்களும் உணர்கின்ற வாரம் இது.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அவசியத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியது வரலாம். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். புத்திர விஷயத்தில் நல்ல செய்திகள் இருக்கும். தெய்வதரிசனம் கிடைக்கும். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

இந்த வாரம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. 16-ந்தேதி இரவு 10 மணி முதல் 18-ம் தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்ட நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ, ஆரம்பமோ செய்வது பலன் அளிக்காது. நீண்ட தூர பிரயாணங்களை ஒத்தி வைக்கவும். யாரிடமும் வம்பு சண்டைக்கு போக வேண்டாம்.

தனுசு:

பனிரெண்டுக்குடைய செவ்வாய் வலுப்பெற்று எட்டாமிடத்தைப் பார்த்து, செவ்வாயை குருபகவான் பார்க்கின்ற சுபவாரம் இது என்பதால் இந்த வாரம் தனுசுராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இருக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தொழில் சிக்கல்கள் அனைத்தும் தீரத் துவங்கும் வாரம் இது. குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள்.

குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. அம்மா வழியில் செலவுகள் இருக்கும். என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.

பிள்ளைகள் வழியில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். 18-ம் தேதி இரவு 10 முதல் 21-ம் தேதி அதிகாலை 4 மணி வரை சந்திராஷ்ம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை செய்ய வேண்டாம். சந்திரனுக்கு உச்ச செவ்வாயின் பார்வையினால் இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கியமான முடிவுகளை இப்போது எடுப்பதும் சரிவராது.

மகரம்:

ராசியில் செவ்வாய் சுபத்துவமாகி உச்சமாக இருப்பது உங்களை சுறுசுறுப்பாக செயலாற்றவைக்கும் ஒரு அமைப்பு என்பதோடு குருவும் ராசியை பார்ப்பதால் செவ்வாய் தசை புக்திகள் நடந்து கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு சகோதர லாபம், பூமிலாபம், சிவப்பு நிறப் பொருட்கள் மூலம் நன்மை போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும் வாரம் இது. முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு நல்லபடியாக முடிவு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாரம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம்.

வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படும். வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

கும்பம்:

கொண்டாட்டம் என்றாலும், போராட்டம் என்றாலும் ஒன்று போலவே நினைப்பது கும்பத்தின் குணம் என்பதால், ராசியின் அவயோக கிரகங்கள் வலுவாக இருக்கும் இந்த வாரத்தை ஒரு யோகியின் மனநிலையோடு சுலபமாக உங்களால் சமாளிக்க முடியும். கும்பம் என்றுமே நிறைகுடம்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நீங்கள் நிரூபிக்கும் வாரம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.

இந்தவாரம் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வீண்பழி சுமத்தி வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் விஷயத்தில் செலவுகளும் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதோடு இவற்றிற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

ஒன்பதுக்குடையவர் உச்சமாக இருப்பதும், ராசிநாதன் குரு அவரையும் ராசியையும் பார்ப்பது மீனராசிக்கு இதுவரை கிடைக்காத கோட்சார யோக நிலைமைகள் என்பதால், இதுவரை உங்கள் வாழ்க்கையில் கிடைக்காத பாக்கியங்கள் இந்த வாரம் கிடைக்கும். எத்தகைய எதிர்ப்புகளும் உங்கள் முன் அடிபணியும் வாரமாக இது இருக்கும். பிறந்த ஜாதக அமைப்பில் நல்ல தசா புக்தி நடப்பவர்களுக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத நல்ல வாரம் இது.

சுக்கிரபலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் நல்லவாரம் இது. குறிப்பாக பெண்களுக்கு மிக நல்ல பலன்கள் நடக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள்.

வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. நல்ல நேரம் வரும்போது எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் கடன் வாங்கவோ அல்லது அடுத்தவருக்கு ஜாமீன் போடவோ கூடாது.

No comments :

Post a Comment