Monday, 31 October 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (31.10.2016 - 6.11.2016)

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் இந்தவாரம் முதல் உச்சவலுப் பெறுவதால் இன்னும் சில வாரங்களுக்கு மேஷராசிக்கு மேன்மைகளை தரப் போகும் வாரம் இது. கடந்த சில மாதங்களாக எல்லாவகையிலும் சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கும் மேஷத்தினருக்கு ராசிநாதன் வலுப்பெறுவதால் கடல் நடுவே மிதப்பவனுக்கு கட்டை ஒன்று அருகில் வந்தாற்போல் உங்களின் குறைகள் தீருகின்ற வாரம் இது. இதுவரை கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்த அனைத்து விஷயங்களும் இனிமேல் உங்களுக்கு சாதகமாக மாறி நன்மை அளிக்கும்.

குறிப்பாக இதுவரை உங்களைப் பிடிக்காமல் மறைமுகமாக உங்கள் முதுகிற்குப் பின்னால் உங்களைப் பற்றி தவறாக பேசியவர்கள் இந்த வாரம் அதற்கு வருந்துவார்கள். எட்டு, பத்துக்குடையவர்கள் வாரம் முழுவதும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் எதிர்ப்புகளையும், எதிரிகளையும் நீங்கள் ஜெயிக்கும் வாரம் இது. அதே நேரத்தில் எதிரி என்று தெரிந்தே சூழ்நிலை காரணமாக அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.

கைகளில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு தொழில் செய்யும் டெய்லர்கள், இறைச்சிக் கடையில் பணிபுரிபவர்கள், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினர் உள்ளிட்டவர்கள் இந்த வாரம் நல்ல திருப்பு முனையான பலன்களைப் பெறுவீர்கள். வாரஆரம்பத்தில் 1-ம் தேதி காலை 8 மணி முதல் 3-ம் தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை செய்ய வேண்டாம். சனியும், சந்திரனும் ஒன்று சேர்வதால் மேற்கே போவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

ரிஷபம்:

ராசிக்கு சுக்கிரனின் பார்வையோடு யோகாதிபதிகள் வலுவாக இருப்பதும் ரிஷப ராசிக்கு நல்ல அமைப்பு என்பதால் இந்தவாரம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற அனைத்திலும் நல்லபலன்கள் மட்டுமே நடக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுகள் இருக்கும். குறிப்பாக செவ்வாய் எட்டாமிடத்தில் இருந்து மாறுவதால் நிலவிவகாரங்களில் இதுவரை மாட்டிக்கொண்டு சிக்கலில் இருந்தவர்கள் இந்த வாரம் அனைத்தும் சாதகமாகி பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவீர்கள்.

சுக்கிரன் நல்லநிலைகளில் இருப்பதால் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகள் இருக்கும் வாரம் இது. இதுவரை கடன் தொல்லைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அதனை தீர்ப்பதற்கான வழிகள் தோன்ற ஆரம்பிக்கும். வாழ்க்கையில் இதுவரை செட்டிலாகாமல் இருக்கும் 30-வயதிற்குட்பட்டவர்களுக்கு உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் நபர் ஒருவர் அறிமுகமாவார். அவர் மூலமாக உங்களை எதிர்கால வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டு இனிமேல் செட்டில் ஆவீர்கள்.

ஏழு, ஒன்பதிற்குடையவர்கள் பரிவர்த்தனையாகி, நான்கிற்குடைய சூரியன் நீசம் பெறுவதால் வெளியே சொல்லிக்கொள்ள முடியாத நீசவழிகளில் பணத்தை செலவு செய்வீர்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்வதற்கு முன் ஒன்றுக்கு நான்கு முறை யோசிப்பது நல்லது. 3-ம் தேதி இரவு 9 மணி முதல் 6-ம் தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் செய்வதை தவிர்க்கவும். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எந்த விதமான முக்கிய முடிவுகளையும் இப்போது எடுக்க வேண்டாம்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் ஆறில் மறைவு, அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் எட்டில் உச்சம் என சாதகமற்ற அமைப்புடன் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. ராசிநாதனை விட ஆறுக்குடையவன் வலுப்பெறுவது கடன், நோய், எதிரி, தொந்தரவுகளை கொடுக்கும் என்றாலும் செவ்வாய், சனி பரிவர்த்தனை ஆவதால் மிதுனத்திற்கு கெடுதல்கள் எதுவும் வராமல் நன்மைகள் மட்டுமே நடக்கின்ற வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு கடன் விவகாரங்களில் மனஅழுத்தம் இருக்கும் என்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது.

வாரம் முழுவதும் புதன் நல்ல இடங்களில் இருப்பதாலும், செவ்வாய் சனி பரிவர்த்தனை யோகம் மூலம் பூமிலாபம் ஏற்படுவதாலும், மிதுன ராசிக்காரர்கள் தாயார் விஷயத்திலும் வீடு, வாகன அமைப்புகளிலும் நன்மைகளை அனுபவிக்கும் வாரமாக இது இருக்கும். வீடு கட்டுவதற்கு அல்லது கட்டிய வீடு வாங்குவதற்கு தடையாக இருந்த அமைப்புகள் இந்த வாரம் விலகுகிறது.

பெண்களுக்கு இதுவரை மன அழுத்தத்தைத் தந்து கொண்டிருந்த அலுவலக விஷயங்கள் இந்தவாரம் முதல் நல்லபடியாக தீர ஆரம்பிக்கும். குறிப்பாக டார்க்கெட் வைத்து வேலை செய்யச் சொல்லும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் நிம்மதியைப் பெறுவீர்கள். 6-ம் தேதி காலை 8 மணி முதல் 8-ம் தேதி மாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. மாறாக உச்சசெவ்வாயை சந்திரன் புனிதப்படுத்துவதால் சிலருக்கு செவ்வாய் சம்பந்தப்பட்ட பூமி மற்றும் சகோதர விஷயங்களில் லாபம் இருக்கும்.

கடகம்:

ராஜயோகாதிபதி செவ்வாய் இந்த வாரம் முதல் உச்சமடைகிறார். அவரின் உச்சநிலை சிலவாரங்களுக்கு நீடிக்கும் என்பதால் யோககிரகத்தின் பார்வை ராசியில் பட்டால் ராசி வலுப்பெறும் என்ற விதிப்படி கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை சமாளிக்க முடியாமல் இருந்த சிக்கல்களும், பிரச்சினைகளும் படிப்படியாக தீர ஆரம்பிக்கும் வாரமாக இது இருக்கும்.

வாரம் முழுவதும் உச்சசெவ்வாய் ராசியை பார்க்கும் நிலையில் தனாதிபதி சூரியன் நீசமாவதால் சிறு விஷயத்திற்கும் நீங்கள் கோபப்படும் வாரமாக இது இருக்கும். பிள்ளைகள் உங்களின் கோபத்தை பார்த்து உங்களின் அருகில் வருவதற்கு கொஞ்சம் தயங்கவே செய்வார்கள். இளைய சகோதரர்களால் இந்த வாரம் தேவையற்ற பிரச்னைகளும், மனகசப்புகளும் இருக்கும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. ‘’தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’’ என்ற தெய்வப் புலவரின் திருவாக்கு இந்த வாரம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

தொழில், வியாபாரம், வேலை போன்ற ஜீவன அமைப்புகள் சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பண வரவிற்கு தடை இருக்காது. அந்நிய மத, இன, மொழிக்காரர்கள் இந்த வாரம் உதவுவார்கள். குறிப்பாக ஒரு இஸ்லாமிய நண்பர் உங்களின் பிரச்னைகளை தீர்ப்பார். குறிப்பிட்ட சிலருக்கு வீடு யோகமும், பழைய வாகனங்களை மாற்றி புது வாகனம் வாங்கும் அமைப்பும் உருவாகிறது. அம்மாவால் ஆதாயங்களும், ஆதரவும் இருக்கும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் வலுவிழந்து நீசமாகி, ராசியில் ராகுவும் இருக்கிறார். தொழில் அமைப்புகளிலும், வீட்டிலும் மன சங்கடங்களை சந்தித்து கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த வாரம் யோகாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று, தனது எட்டாம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால் இதுவரை தொழில், வேலை விஷயங்களில் இருக்கும் சிக்கல்கள் இந்த வாரம் முதல் தீர துவங்கும். வேலையில் நிம்மதி கிடைக்காதவர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் உண்டு.

சிம்மநாதன் சூரியன் நீசமாக இருந்தாலும் யோகாதிபதி செவ்வாய் பரிவர்த்தனை யோகம் அடைவதால் நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் எதுவும் நன்றாக நடக்குமா என்ற சந்தேகத்திலும் சூரியன் உங்களை வைத்திருப்பார். ராசிக்கு சனிபார்வை இருப்பதால் உங்களுடைய எண்ணங்களிலும், செயல்களிலும் தன்னம்பிக்கை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.

பனிரெண்டு ராசிகளில் சிம்மத்தை மட்டுமே அரசனைக் குறிக்கும் ராஜராசி என்று ஞானிகள் சொல்வதால் சிம்மத்தில் பிறந்தவர்கள் ஒருபோதும் சோடை போக மாட்டீர்கள். அரசுத்துறையினருக்கு அதிகாரிகளின் ஆதரவு இந்த வாரம் இல்லையென்றாலும் அவர்களின் தொந்தரவு கண்டிப்பாக இருக்காது. ராசியில் இருக்கும் ராகுவை செவ்வாய் சனி பார்ப்பதால் காவல்துறை மற்றும் சட்டத் சேர்ந்தவர்களுக்கு இந்த வாரம் மேன்மையான பலன்கள் நடக்கும். குறிப்பாக வக்கீல்கள் வளம் பெறுவீர்கள்.

கன்னி:

ராசிக்கு மூன்று, ஐந்துக்குடையவர்கள் பரிவர்த்தனை பெறுவதும் ராசிநாதன் மூன்றாம் இடத்தில் இருப்பதும் கன்னிக்கு நல்ல பலன்களை தரும் ஒரு அமைப்பு என்பதால் இந்த வாரம் உங்களுடைய வேலை தொழில் அமைப்புகளில் நீங்கள் நல்லபெயரை சம்பாதிக்கும் வாரமாக இருக்கும். அதிலும் கணக்கு, கணிப்பொறி போன்ற துறையை சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு வேலையை சிறப்பாக செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.

ராசிநாதன் புதன் வார இறுதியில் வலிமைபெறத் துவங்குவதால் இந்தவாரம் கன்னிக்கு நல்ல வாரமே. குறிப்பாக சிலருக்கு அன்னியமத நண்பர்களின் ஆதரவு இந்த வாரம் இருக்கும். விரையாதிபதி சூரியன் குடும்பஸ்தானத்தில் நீசம்பெற்று எட்டுக்குடைய செவ்வாய் பரிவர்த்தனை அடைவதால் குடும்ப செலவுகளில் இந்த வாரம் விரையங்கள் இருக்கும். ஒரு சிலர் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி சேமிப்பை கரைய வைப்பீர்கள். சிலருக்கு குழந்தைகள் வழியில் செலவுகள் இருக்கும்.

பனிரெண்டாம் வீட்டில் இருக்கும் ராகுவால் வெளிநாட்டு தொடர்பு மேம்படும். வெளிதேசங்களில் இருந்து நல்ல செய்திகள் உண்டு. வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளின் பிரசவ தேவைகளுக்காகவோ அல்லது பேரன், பேத்திகளை பார்ப்பதற்காகவோ சிலர் வெளிநாட்டு பயணம் செல்வீர்கள். ஆலைத் தொழிலாளர்கள், நெருப்பு வேலைகளில் இருப்பவர்கள், விமானநிலையம் சம்மந்தப்பட்டவர்கள், விமானப்பணிப்பெண்கள் போன்றவர்கள் உயர்வு பெறுவீர்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதும், ஜீவன ஸ்தானத்தை ஒரு உச்ச கிரகம் பார்ப்பதும் சுக, தன ஸ்தானாதிபதிகள் பரிவர்த்தனை பெறுவதும் துலாம் ராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் இந்த வாரம் உங்களுக்கு நன்மையான வாரம்தான். குறிப்பிட்ட சிலருக்கு வீடு, வாகனம், தாயார் போன்ற அமைப்புகளில் நல்ல பலன்கள் நடக்கும். உங்களில் சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

பத்திரிக்கைத்துறையினர், நிருபர்கள், கணக்கு மற்றும் அக்கவுண்ட் சம்பந்தப்பட்டவர்கள், கல்வி நிலையங்கள் நடத்துபவர்கள், ஏஜெண்டுகள், பச்சை நிறப் பொருட்கள் விற்பவர்கள் உள்ளிட்ட புதனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் நல்ல நன்மைகள் இனிமேல் இருக்கும். இளைய சகோதரிக்கு சுபகாரியங்கள் நடப்பதற்கு முன்னேற்பாடுகள் இந்த வாரம் உண்டு. சிலருக்கு தங்கைகளின் திருமணம் உறுதியாகும். ஆன்மிக எண்ணங்கள் கூடுதலாக இருக்கும். ஒரு சிலருக்கு ஆன்மிக யாத்திரையும் உண்டு.

விவசாயத்துறையில் உள்ளவர்கள் வளம் பெறுவார்கள். குறிப்பாக பணப்பயிர் உருவாக்கும் விவசாயிகளுக்கு இப்பொழுது நன்றாக இருக்கும். பெண்களுக்கு சிறப்பான வாரமிது. கணவரும் குழந்தைகளும் சொல்பேச்சை கேட்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்பவராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் நடக்கும். சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு வெளிமாநிலம் செல்லும் அமைப்பு இருக்கிறது.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் இந்தவாரம் மூன்றாமிடத்தில் உச்ச வலுப்பெறுவதால் இன்னும் சிலவாரங்களுக்கு விருச்சிக ராசிக்காரர்களின் தொல்லைகள் அனைத்தும் கட்டுக்குள்ளும், உங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும் வாரமாக இருக்கும். சனி நடக்கும் நேரங்களில் ராசி வலுவாக இருந்தால் கெடுபலன்கள் நடக்காது என்ற விதிப்படி இன்னும் ஆறு வாரங்களுக்கு ஏழரைச்சனியின் கெடுபலன்கள் உங்களை ஒன்றும் செய்யாது என்பது உறுதி.

ஜென்மச்சனியாக செயல்பட்டு கொண்டிருக்கும் சனிபகவான் தற்போது அனுஷ நட்சத்திரத்தில் இருந்து விலகி கேட்டை நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் கடந்த சில மாதங்களாக இந்த இரண்டு நட்சத்திரக்காரர்களும் கடுமையான நெருக்கடிகளில் சிக்கி சங்கடங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். சனிபகவான் இன்னும் சில மாதங்களில் உங்கள் ராசியிலிருந்து வெளியேறப் போவவதால் அடுத்தவருடம் ஆரம்பத்திலேயே உங்களுக்கு நிம்மதி கிடைத்து இதுவரை நடந்து கொண்டிருக்கும் எதிர்மறை அமைப்புகள் கட்டுக்குள் இருக்கும் ஏழரைச்சனியின் கடுமைகள் இனிமேல் இருக்காது.

குறிப்பிட்ட சிலர் இந்த வாரம் குலதெய்வ தரிசனம் செய்வீர்கள். ராசியில் இருக்கும் சனி பகவானால் பணத்திற்காக பொய் சொல்ல வேண்டி இருக்கும். அதே நேரத்தில் கடமைக்காக பொய் சொல்ல வேண்டிய வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மேன்மை அடைவீர்கள். 30 வயதுகளில் இருப்பவர்களுக்கு இந்த வருட முடிவிற்குள் செட்டில் ஆக வேண்டிய அனைத்து அமைப்புகளும் உருவாகி விடும் என்பதால் இந்த வாரம் நல்ல வாரமே.

தனுசு:

ஐந்துக்கதிபதி செவ்வாய் உச்சம் பெற்று ஐந்தாமிடத்தை பார்ப்பதும், நான்காம் வீட்டுக்கதிபதி குருபகவான் நாலாம் வீட்டையே பார்ப்பதும் கேந்திர கோண யோக அமைப்பு என்பதால் இந்தவாரம் முதல் ஆறுவாரங்களுக்கு தனுசு ராசிக்காரர்களுக்கு பணவரவுகளில் இருக்கும் தடை அனைத்தும் நீங்கும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகங்களில் இருந்து வந்த முட்டல் மோதல் அனைத்தும் நீங்கும் வாரமாகவும் இது இருக்கும்.

அதேநேரத்தில் பாவக்கிரகங்கள் இரண்டு பனிரெண்டாமிடங்களில் கிரகங்கள் பரிவர்த்தனையோகம் பெற்று பாக்கியாதிபதி சூரியன் நீசநிலையும் அடைந்திருப்பதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் வீண்செலவுகளும் மன வருத்தங்களும் உள்ள வாரமாக இருக்கும். குறிப்பாக இந்த வாரம் வாழ்க்கை துணையிடம் வாயைக் கொடுக்க வேண்டாம். பதிலடி பெரும் அளவில் வரும் என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

எவ்வளவு வருமானம் வந்தாலும் சம்பாதித்த பணம் எங்கே போனது என்று தேடும் நிலையில் தான் வாரம் முழுவதும் இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஆலயப்பணி செய்வதற்கு வாய்ப்புகள் வரும். ஆற்று ஓரத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இறைவாக்கும் தரிசனமும் கிடைக்கும். புதிதாக சிலருக்கு இந்த வாரம் தியானம், யோகா போன்ற ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு வரும். அலுவலகத்தில் சில பெண்கள் தலைமைப் பொறுப்பிற்கு வருவீர்கள். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.

மகரம்:

இந்தவாரம் ராசியில் செவ்வாய் உச்சம் பெறுவது உங்களை எரிச்சல்படுத்திப் பார்க்கும் சாதகமற்ற அமைப்புதான் என்றாலும் அவர் ராசிநாதனுடன் பரிவர்த்தனையாவதால் ராசிநாதன் சனி ராசியிலேயே ஆட்சி பெற்ற நிலை உண்டாகி மகரத்திற்கு நன்மைகளும், மேன்மைகளும் மட்டுமே நடக்கும் வாரமாக இது இருக்கும். அலுவலகங்களிலும், குடும்பத்திலும் இதுவரை தடையாக இருந்த அனைத்து விஷயங்களும் விலகி புகழ் கிடைக்கும் வாரமாக இது இருக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு கோட்சார அமைப்புகள் சாதகமான அமைப்பில் இருப்பதால் குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர பெரும்பான்மையான மகரத்தினருக்கு பிரச்னைகள் எதுவும் தற்போது இல்லை. இளைய பருவத்தினர் உல்லாசங்களை அனுபவிக்கும் வாரம் இது. ராசிநாதன் சனியுடன் சுக்கிரன் இணைந்திருப்பதால் புதியபெண் நண்பர்கள் இந்த வாரம் கிடைப்பார்கள். எந்த ஒரு சுகத்தையும் வரம்புக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த வருடம் ஏழரைச்சனி ஆரம்பிக்க இருப்பதால் எதிலும் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள்.

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல அமைப்புகளில் இருப்பதால் திடீர் தனலாபம் இந்த வாரம் உண்டு. குறிப்பாக பங்கு சந்தை இந்த வாரம் கை கொடுக்கும். அதே நேரத்தில் எதிலும் பேராசைப்பட்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். மூத்த சகோதரரால் விரையம் இருக்கும். சிலருக்கு பார்த்து வந்த வேலையில் மாற்றம் அல்லது கம்பெனி மாற்றம் இருக்கும். எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டு. இப்போது வரும் மாற்றம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும்.

கும்பம்:

பத்து, பனிரெண்டுக்குடையவர்களின் பரிவர்த்தனை உங்களில் வெளிநாடு, வெளி மாநிலம் போன்றவைகளில் வேலை, தொழில் அமைப்புகளை கொண்டவர்களுக்கு நன்மைகளை செய்யும் என்பதால் இந்த வாரம் அயல்நாட்டு யோகம் உங்களுக்கு கிடைக்கும் வாரமாக இருக்கும். பிறந்தஇடத்தை விட்டு வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவீர்கள். ராசிநாதன் சனி ஆட்சி பெற்ற அமைப்பைப் பெறுவதால் வெற்றியும், மனநிம்மதியும் கிடைக்கும் வாரமாக இது இருக்கும்.

ராசிக்கு எட்டில் இருக்கும் குரு தொழில் விஷயத்தில் உங்களுடைய கணிப்புகளை தவற வைத்து உங்களை டென்ஷனில் தள்ளுவார் என்றாலும் சனிபகவான் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் அனைத்திலும் சுலபமாக மீண்டு வருவீர்கள். வயதான தகப்பனாரை கொண்டவர்களுக்கு தந்தையால் செலவுகளும், மன வருத்தங்களும் தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். அப்பாவின் பேச்சைக்கேட்டு நடப்பது நல்லது. அதனால் வீண் வாக்குவாதங்களையும், குடும்ப குழப்பங்களையும் தவிர்க்க முடியும்.

அடங்கி இருந்த கடன் அமைப்புகள் மீண்டும் தலை தூக்கும் என்பதால் இந்த வாரம் கடன் விஷயங்களில் கவனமாக இருங்கள். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்பதால் கடன் கொடுத்தவனை பார்த்து ஒளிவதை விட நேரில் சந்தித்து தவணை கேளுங்கள். சிலருக்கு அரசனை நம்பி புருசனைக் கைவிடும் நிகழ்வுகள் இருக்கும் என்பதால் எதிலும் முடிவெடுக்குமுன் எச்சரிக்கையும் நிதானமும் தேவைப்படும் வாரம் இது.

மீனம்:

ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதும் இரண்டு, ஒன்பதுக்குடைய செவ்வாய் பதினொன்றில் உச்சம் பெற்று தன் இரண்டாம் வீட்டையே பார்ப்பதும் தனயோகம் என்பதால் ஒன்று, இரண்டாமிடங்கள் வலிமையாகி பணத்தின் மூலமாக நீங்கள் சந்தோஷம் பெறும் வாரமாக இது இருக்கும். கடந்த நான்கு வருடங்களாக பொருளாதார நிலைமையில் சிக்கல்களை சந்தித்து கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் முதல் அவை நீங்கி நல்ல வருமானம் தரும் வேலை, தொழில் அமைப்புகளை பெறுவீர்கள்.

உங்களில் அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பில் இருப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு குறிப்பிடத்தக்க நல்லமாற்றம் உண்டு. அந்தஸ்து கௌரவம் கூடும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கிடைக்கும் தனவரவையும் பணலாபத்தையும் அனாவசியமாக செலவு செய்து விடாமல் சேமித்து வைக்கவும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.

இதுவரை கஷ்டங்களை மட்டும் சந்தித்துக் கொண்டிருந்த இளைய பருவத்தினர் இனிமேல் அனைத்தும் மாறி தங்களுக்குரிய வேலை வாய்ப்பு திருமணம் போன்றவைகள் நிறைவேறப் பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஆர்டர்கள் அதிகமாக கிடைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்ப்புகள் போட்டியாளர்கள் ஒழிந்து அனைத்தும் உங்கள் வசமாகும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வயதானவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.

No comments :

Post a Comment