Monday, 3 October 2016

குருஜியின் மாலைமலர் வாரராசிபலன்கள் (3.10.2016 - 9.10.2016)

மேஷம்:

வார ஆரம்பத்தில் ஆறுக்குடைய புதன் உச்சமடைவதாலும், ஆறாமிடத்தில் குரு இருப்பதாலும் இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சாதகமற்ற பலன்கள் நடக்கும் வாரமாக இருக்கும். வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக வேறு இருப்பதால் எதிலும் ஒரு விட்டேத்தியான மனப்பான்மையுடனும், சோம்பல், விரக்தியுடனும் இருப்பீர்கள். மேஷ ராசிக்காரர்கள் சுறுசுறுப்பை வளர்த்து கொள்ள வேண்டிய வாரம் இது.

வார ஆரம்பத்தில் சந்திரன் நல்லநிலையில் இருப்பதால் பணவிஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தாயார் விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகள் உண்டு. தாயார்வழி உறவினர்கள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க விரும்பும் சிலருக்கு அதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஏதேனும் ஒரு நல்ல காரியத்துக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். மூத்த அண்ணன், அக்காக்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வீடு வாகன விஷயங்களில் நல்லவை நடக்கும்.

ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் பிடிக்காத ஒருவரிடம் சந்தர்ப்பவசத்தால் பேசியாக வேண்டி இருக்கும். எதிர்ப்புகள் வலுப்பெறும் என்பதால் கவனம் தேவை. உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். எதிலும் அனுசரித்து விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 5-ந்தேதி அதிகாலை 2 மணி முதல் 7-ந்தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் செய்வதோ, தூரப் பிரயாணங்கள் செல்வதோ வேண்டாம். எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

ரிஷபம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி வலுவுடன் இருப்பதும், வார மத்தியில் ஐந்துக்குடையவன் உச்சமடைவதும் யோகஅமைப்புகள் என்பதால் இந்த வாரம் ரிஷபராசிக்கு அனைத்து நன்மைகளும் நடக்கும் வாரமாக இருக்கும். ராசிநாதனுடன் சந்திரன் இணைவதால் இளைய சகோதர, சகோதரிகளுக்கு இந்த வாரம் ஏதேனும் நல்லவைகளைச் செய்து கொடுப்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பெண்கள் மூலமான லாபங்கள் உண்டு.

ராசியின் நண்பர் புதனும், ராசிநாதன் சுக்கிரனும் வலுவான நிலையில் இருப்பதால் அனைத்து எதிர்ப்புகளையும் தடங்கல்களையும் சமாளித்து வெற்றியாக்குவீர்கள். ஐந்தாமிடம் வலுப்பெறுவதால் நீண்ட நாட்களாக முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த விஷயத்தை முடித்துக் காட்டி லாபம் பெறுவீர்கள். அதேநேரத்தில் ராசி சனியின் பார்வையில் இருப்பதால் செய்வது தவறாகவே இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். சிலருக்கு வேற்றுமொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்போது உண்டு.

இதுவரை சொந்தவீடு அமையாதவர்கள் இப்போது செய்யும் முயற்சிகள் பலன் அளிக்கும். குழந்தைகள் வழியில் செலவு உண்டு. கல்லூரி, பள்ளி செல்லும் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற விரயங்கள் இருக்கும். 7-ந்தேதி மதியம் 2 மணி முதல் 10-ந்தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதியமுயற்சிகள், தொழில்முதலீடுகள், தொழில் விரிவாக்கங்கள் போன்றவைகளை இந்தநாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பதும் நல்லது.

மிதுனம்:

இதுவரை வக்ரநிலையில் ராகுவுடன் இணைந்து பலவீனமாகி இருந்த ராசிநாதன் புதன் இரண்டுமே நீங்கி நான்காமிடத்தில் உச்சம் பெறுவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் நடக்கும் வாரம் இது. ராசிநாதன் வலுப்பெறுவதால் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். முகத்தில் இருக்கும் சந்தோஷம் வெளிப்படையாக தெரியும்படி நடந்து கொள்வீர்கள். சிலருக்கு வீட்டிலும், வெளியிலும் நல்ல பெயர் கிடைக்கும். பதவி கிடைக்கும் வாரம் இது.

மிதுனநாதன் புதன் யோகநிலை பெற்றிருப்பதால் இந்த வாரம் கெடுதல்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. பத்தாமிடம் வலுப்பெற்று இருப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்மையான வாரமாக இருக்கும். நீண்டநாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பரையோ, மனைவி வழி தூரத்து உறவினரையோ இந்த வாரம் சந்திப்பீர்கள். சிலருக்கு வடமாநில அல்லது வெளிநாட்டுப் பயணம் உண்டு.

தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனிதயாத்திரை போகமுடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் ஆசி பெறுவீர்கள். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்யக்கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இடமாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

கடகம்:

வார ஆரம்பத்தில் கடகநாதன் சந்திரன் வலுவான நிலையில் இருந்தாலும் மத்தியில் இரண்டு நாட்கள் சனியுடன் இணைந்து நீசநிலை பெறுவதால் இந்த வாரம் உங்களுக்கு குழப்பங்களைத் தரும் வாரமாக இருக்கும். முக்கியமான விஷயங்களில் சரியான முடிவு எடுக்கமுடியாமல் தடுமாறுவீர்கள். குறிப்பாக இளைய பருவத்தினர் இது சரியா, அது சரியா? இதைச் செய்யலாமா? அல்லது அதைச் செய்யலாமா? என்று அலைபாயும் வாரம் இது.

யோகாதிபதியான செவ்வாயும் குருவும் வலுவாக இருப்பதால் எவ்வித கெடுபலன்களும் உங்களுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. அதே நேரத்தில் சூரியன் மூன்றாமிடத்தில் புதனுடன் இருப்பதால் இந்த வாரம் இளைய சகோதரர்களால் செலவுகள் வரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும் எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது.

யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கவனம் தேவை. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய வாரமாக இது இருக்கும். சிலருக்கு தொழில்மாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் போன்ற அமைப்புகள் இந்த வாரம் ஏற்படும். சிலருக்கு வெளிமாநிலம் அல்லது வெளிதேச பிரயாணம் இருக்கும். ஒரு சிலர் பொருளாதார பின்னடைவுகளை சந்திப்பீர்கள். அண்ணன்கள் உதவுவார்கள்.

சிம்மம்:

தனாதிபதி புதன் வலுப்பெறுவதாலும், ராசிநாதன் சூரியனும், குருபகவானும் இரண்டாமிடத்தில் வலுவான அமைப்புகளில் இருப்பதாலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்லவைகள் நடக்கும் வாரம் இது. சகாய ஸ்தானாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் இதுவரை உங்களுக்கு உதவி செய்ய மறுத்தவர்கள் உங்களின் உண்மை உள்ளத்தைப் புரிந்து கொண்டு தேடி வந்து உதவி செய்வார்கள். குறிப்பிட்ட சிலருக்கு நல்ல பணவரவு இந்தவாரம் உண்டு.

இந்த வாரம் நீங்கள் செலவு செய்யும் வாரமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் கடன் வாங்கி செலவு செய்ய மாட்டீர்களே. எனவே பணவரவும் இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை இந்த வாரம் வாங்குவீர்கள். தந்தை வழியிலும் இந்த வாரம் செலவுகள் உண்டு. பூர்வீகச்சொத்தில் ஏதாவது மனக்கஷ்டங்கள் வரலாம். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவின் மருத்துவ செலவுகளும் உண்டு.

வெளிநாட்டில் இருக்கும் சிம்மராசிக்காரர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கான திருப்புமுனை சம்பவங்கள் இந்த வாரம் நடக்கும். ஒரு சிலர் தங்களுடைய வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான கடிதங்கள் வரும். ஆனால் வேலைதான் இழுத்தடிக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு தொழில் விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. தன்னுடைய திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பணவரவு இருக்கும்.

கன்னி:

வாரம் முழுவதும் ராசி சுபத்துவமாக இருப்பதாலும், ராசிநாதன் புதன் உச்ச வலுவில் ராசியில் உள்ளதாலும் இந்தவாரம் கன்னி ராசிக்காரர்களின் மனம் போல் அனைத்தும் நடக்கும் வாரமாக இருக்கும். இதுவரை முடிக்க முடியாமல் இருந்த விஷயங்களை வெற்றிகரமாக முடித்து சாதித்துக் காட்டுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு எதிர்கால முன்னேற்றங்களுக்கான ஆரம்பங்களும், அறிமுகங்களும் இந்த வாரம் இருக்கும்.

அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் இந்த வாரம் உங்களை விட்டு விலகுவார்கள். செலவுகள் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சியாகவும், யோகாதிபதி புதன் உச்சவலுவுடனும் இருக்கும் நல்லவாரம் இது. இதுவரை தொழில் அமைப்புகளில் மந்த நிலையையும், தேக்கத்தையும் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இந்த வாரம் முதல் அனைத்திலும் முன்னேற்றம் வரக் காண்பீர்கள். குறிப்பாக 40 வயதுக்குட்பட்ட துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லபலன்கள் உண்டு. ராசியில் ஜீவனாதிபதி வலுப்பெறுவதால் பெண்கள் பணிபுரியும் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மேன்மைகள் இருக்கும்.

ராசிநாதன் வலுவாகி யோகக்கிரகங்களும் வலுப்பெற்று இருப்பதால் துலாம் ராசிக்காரர்கள் இந்தவாரம் உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி உங்களுக்கு கிடைக்கும். பெண்களால் செலவுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். இந்த வாரம் தந்தையைப் பற்றியோ தந்தைவழி உறவினர்கள் பற்றியோ கவலைகள் வரும் வாரமாக இருக்கும். வயதான தந்தையை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும்.

சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான வில்லங்கள் இந்த வாரம் கிளம்பும். வார மத்தியில் ஜீவனாதிபதி வலுக்குறைவதால் பணிபுரியும் இடங்களில் சிக்கல்கள் இருக்கும். மேலதிகாரிகளால் சங்கடங்கள் உண்டு. அதிகாரி சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. வியாபாரிகளுக்கு போட்டிகள் இருக்கும். வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் குறையாது. வருமானத்தை விட அதிக செலவு வைக்கும் வாரம் இது. எதிலும் சிக்கனமாக இருங்கள். அனைத்து விஷயங்களிலும் மனைவியின் ஆலோசனை கேட்பது நல்லது.

விருச்சிகம்:

பதினொன்றாமிடத்தில் இருக்கும் குரு எத்தனை சோதனைகள் வந்தாலும் பரம்பொருளின் துணையுடன் அனைத்தையும் எதிர்கொண்டு மனஉறுதியுடன் சமாளிக்கும் ஆற்றலை தற்போது உங்களுக்குக் கொடுத்து கொண்டிருப்பதால் விருச்சிகராசிக்காரர்கள் எதற்கும் கலங்கத் தேவையில்லாத வாரம் இது. சோதனைகள் நடந்து கொண்டிருக்கும் சிலருக்கும் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அடையாளம் காட்டத்தான் அது நடக்கிறது என்பதை புரிந்து கொண்டால் சோதனைகளை சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை உணர்வீர்கள்.

பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். எதிரிகள் கை ஓங்கும். ஆயினும் எல்லாம் பரம்பொருளின் கருணையால் உங்களுக்கு நன்மையாகவே முடியும். பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகளை யோசித்து கலக்கம் அடைவீர்கள். செலவிற்கு ஈடான வருமானம் அடுத்த வாரம் முதல் வரத் துவங்கும் என்பதால் இந்த மனக்கலக்கம் தற்காலிகமானதுதான். கவலை வேண்டாம்.

புதன் பதினொன்றாம் வீட்டில் குருவுடன் இணைந்திருப்பதால் சிலர் இந்த வாரம் வெளிநாடு செல்வீர்கள். பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குறிப்பிட்ட சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் இந்த வாரம் உண்டு. வெகு நாட்களுக்கு பிறகு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும். உங்கள் கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.

தனுசு:

ஒன்பது, பத்துக்குடைய சூரியனும் புதனும் வலுவாக ராசிநாதனுடன் இணைவதால், எவ்வித சோதனைகள் வந்தாலும் அனைத்தையும் உங்களுடைய சாதூர்யமான பேச்சாலும், அடுத்தவரை நோகடிக்காத பண்பாலும் விரட்டி விடுவீர்கள் என்பதால் தனுசுராசிக்கு இது நல்ல வாரம்தான். விரையாதிபதி வலுப்பெறுவதால் வீண்செலவுகள் தற்போது உங்களுக்கு இருந்து கொண்டிருந்தாலும் வருமானத்திற்கும் குறைவிருக்காது என்பதால் இது சோதனைகள் இல்லாத வாரமே.

லாபஸ்தானாதிபதியான சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் நன்கு சம்பாதித்து உங்களை கிண்டல் செய்தவர்களை வாயடைக்கச் செய்வீர்கள். நான்காம் வீடு குருபார்வையினால் வலுப்பெறுவதால் தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் இந்த வாரம் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டு.

ராசிநாதன் குரு சூரியனுடன் நெருங்கி இணைந்து வலுவிழப்பதால் உங்கள் செயல்களில் பதற்றம் இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும். சிலநேரங்களில் சுற்றி உள்ளவர்களும் உங்களை அதிகமாக வெறுப்பேற்றுவார்கள். இந்த நிலைமை சிலநாட்கள் மட்டுமே இருக்கும். ராசிநாதன் சூரியனிடமிருந்து விலகியதும் அனைத்து நன்மைகளும் நடக்கும். ஏற்கெனவே முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்ல முறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும்.

மகரம்:

இதுவரை எட்டில் அமர்ந்து கிடைக்க இருந்த வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக் கொண்டிருந்த புதபகவான் இந்த வாரம் முதல் ஒன்பதாமிடத்திற்கு மாறி உச்ச வலுப்பெறுவதால் மகர ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் எதுவுமின்றி அனைத்துத் தடைகளும் விலகும் வாரமாக இது இருக்கும். குறிப்பாக தொழில் அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை நீங்கி அதிகமுயற்சி இன்றியே லாபங்களும், நன்மைகளும் நடக்கும் வாரம் இது.

வலுவான எதிர்ப்புகளை நீங்கள் ஜெயிக்கும் வாரமாக இது அமையும். குறிப்பாக பெண்களால் இந்த வாரம் நன்மைகளும், வரவுகளும் இருக்கும். அதேநேரம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும் வாரம் இது. மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது செலவுகளை குறைக்கும்.

எட்டில் இருக்கும் ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் திடீர் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடவேண்டாம். பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். ராசிநாதன் வலுப்பெற்றுக் காணப்படுவதால் திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் நல்ல செய்திகளை தரும் வாரமாக இருக்கும். குறிப்பாக இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய சம்பவங்கள் ஏற்படும்.

கும்பம்:

கும்பராசிக்காரர்களுக்கு குருட்டு அதிர்ஷ்டம் கிடைக்கும் வாரம் இது. எட்டுக்குடைய புதபகவான் சுபத்துவம் பெற்று எட்டாமிடத்தில் வலுப்பெறுவதால் இனிமேல் வராது என்று முற்றிலும் நம்பிக்கை இழந்து கைவிட்ட ஒரு தொகையோ அல்லது அவ்வளவுதான் இனி நடக்காது என்று மறந்துவிட்ட ஒரு விஷயமோ இந்தவாரம் உங்களுக்கு சாதகமாக நடந்து, கிடைத்து உங்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வாரமாக இது இருக்கும்.

கும்பராசிக்கு இனிமேல் அனைத்திலும் மாற்றங்களும், ஏற்றங்களும் இருக்கும் என்பது உறுதி. முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் இனிமேல் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள். பெண்களுக்கு மிகவும் நன்மை தரும் வாரம் இது. எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் போடும் வாரமாக இது அமையும். சில புதிய அறிமுகங்கள் இந்த வாரம் உங்களுக்கு உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு.

அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிலோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். அப்பாவின் ஆசிர்வாதத்தால் இந்த வாரம் சில நன்மைகளை பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தவர்களுக்கு இந்த வாரம் தீர்வு கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதமாக திரும்பும். சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். வீட்டுக்கனவு நனவாகும்.

மீனம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதும், ஏழாம் அதிபதி புதபகவான் அவருடன் உச்சம் அடைவதும் இந்த வாரம் மீனராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை நண்பர்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் லாபங்களும், நன்மைகளும் உள்ள வாரமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. ஆறாமிடத்தில் இருக்கும் ராகுவும் உங்களின் எதிரிகளின் தலையைத் தட்டி வைப்பார் என்பதால் எதிர்ப்புகள் இன்றி நீங்கள் நடைபோடும் வாரம் இது.

முதல் திருமணம் கசப்பில் முடிந்து விவகாரத்து ஆனவர்களுக்கு இந்த வாரம் இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான சம்பவங்கள் இருக்கும். சிலருக்கு ஆன்மீக சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு. வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். தாயார்வழி செலவுகளும் இந்த வாரம் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். முப்பது வயதிற்குட்பட்டவர்கள் நீண்ட பிரயாணம் செல்வீர்கள். வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து விட்டது.

பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் கையில் தாராளமாக நடமாடும். வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். 2-ந்தேதி மதியம் 1 மணி முதல் 5-ந்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் புதிய முயற்சி எதையும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment