Tuesday, 25 October 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (24..10.2016 முதல் 30.10.2016)

மேஷம்:

வாரம் முழுவதும் ஆறுக்குடைய புதபகவான் ராசியை பார்ப்பதால் இது நீங்கள் எதையும் சந்தேகப்படும் வாரமாக இருக்கும். குறிப்பாக மேஷராசி மனைவிகள் கணவன்களைச் சந்தேகப்படுவீர்கள். எதுவும் கெடுதலாக நடந்து விடுமோ என்கின்ற இனந்தெரியாத மனக்கலக்கங்கள் சிலருக்கு இருக்கும். ஆயினும் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் நல்லவைகள் மட்டுமே உங்களுக்கு நடக்கும் வாரம் இது.

எட்டாமிடத்தில் சுக்கிரன் இந்தவாரம் சனியுடன் இணைந்திருப்பது அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வீண் செலவுகளையும், விரயங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பு என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பதோடு வீண்வம்பு விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்ய வேண்டும். அஷ்டமச்சனி முடியும்வரை புதியமுயற்சிகள் எதுவும் கை கொடுக்காது.

எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே கண்ணும்கருத்துமாக திறம்பட செய்வது நல்லது. உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

ரிஷபம்:

ரிஷபநாதன் சுக்கிரன் சனியுடன் சேர்ந்து ராசியைப் பார்க்கின்ற நல்ல வாரம் இது. இயற்கை சுபக்கிரகங்களான குருவும், சுக்கிரனும் ரிஷபத்தை பார்ப்பதால் ராசி வலுப்பெற்று ரிஷபராசிக்காரர்கள் எண்ணங்கள் யாவும் பலிதமாகும் வாரம் இது. நான்காமிடத்தின் அதிபதியான சூரியன் வலுவிழப்பதால் ஏற்கனவே தாயை இழந்து தந்தையை மட்டும் கொண்டவர்கள் அவரது ஆரோக்கியத்தின் மேல் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

குருபகவான் ராசியைப் பார்க்கும் நிலையில், சுக்கிரன் சனியுடன் இணைவதால் இந்த வாரம் உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களுடன் வீண்வம்புக்கு வந்து உங்களிடம் தோற்றுப்போய் பாடம் கற்றுக் கொள்ளும் வாரமாக இருக்கும். செலவுகளைச் சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டு.

முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். தந்தைவழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும்.

மிதுனம்:

வார ஆரம்பத்திலேயே தனாதிபதி சந்திரன் ஆட்சி பெற்றிருப்பதால் மிதுன ராசிக்காரர்களின் பணக்கஷ்டங்கள் தீரும் வாரம் இது. இதுவரை சொந்த வீடு இல்லாத மிதுனத்தினருக்கு தற்போது வீடு அமைவதற்கான ஆரம்பக் கட்ட நிகழ்வுகள் இருக்கும். சிலருக்கு சிந்தனை முழுவதும் சொந்த வீட்டைப் பற்றியே சுற்றிச்சுற்றி வரும். ராசிநாதன் வலுப்பெற்றுள்ளதால் சொத்துக்கள் சேரும் வாரம் இது.

வார ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், இலாகா மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு.

முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். பணம் வருவதற்கு பொய் சொல்ல வேண்டி இருக்கலாம். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும்.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் ராசியிலேயே இருப்பதும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தை யோகாதிபதிகளான குருவும், செவ்வாய் பார்வையிட்டு வலுப்படுத்துவதும் இந்தவாரம் கடகராசிக்கு இதுவரை தடைப்பட்டிருந்த யோகஅமைப்புகள் மற்றும் இதுவரை கிடைக்காமல் போன பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் கடகராசிக்காரர்களின் செயல்திறன் வெளிப்படும் வாரம் இது.

யோகாதிபதி செவ்வாயின் வலுவினால் தடைகள் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள் என்பது உறுதி. கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். அதேநேரத்தில் மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

குடும்பத்தில் ஒருவர் ஏதாவது பேசிவிட்டாலோ, திட்டிவிட்டாலோ மற்றவர்கள் பொறுத்துப் போங்கள். குடும்பப் பிரச்னைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து மனம் விட்டு உட்கார்ந்து பேசினாலே ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம் என்பதை கருத்தில் கொள்வது நல்லது. தந்தைவழி உறவினர்களிடமும், பங்காளிகளிடமும், குறிப்பாக அத்தைகளிடம் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

சிம்மம்:

ராசிநாதன் நீசநிலை பெற்று வலுவிழந்து, ராசியில் ராகு அமர்ந்து, ராசிக்கு சனி பார்வை இருக்கும் வாரம் இது. கிரகநிலைகள் சாதகமான அமைப்பில் இல்லாததாலும் அவயோகக் கிரகங்கள் வலுப்பெற்று இருப்பதாலும் டல்லான மனநிலையில் இருப்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு கடன் தொல்லைகளோ, எதிரி தொந்தரவோ, ஆரோக்கியக்குறைவுகளோ இருக்கும். என்ன பிரச்சினை என்றாலும் இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்தும் சரியாகும் என்பதால் குறை சொல்ல முடியாத வாரம் இது.

சுகஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரனும், சனியும் ஆரோக்கிய விஷயத்தில் உங்களுக்கு கஷ்டங்களையும் வீண்செலவுகளையும் கொடுத்தாலும் சுகஸ்தானாதிபதி செவ்வாய் குருவின் வீட்டில் இருப்பதால் எல்லாவற்றிலும் உங்களுக்கு இறுதியில் சாதகங்கள் நடைபெறும். கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது. ஹவுசிங் லோன் இப்போது கிடைக்கும். தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

நண்பர்கள் உறவு கூட்டுத் தொழிலில் நன்மைகள் ஆகியவை சுமுகமாக இருக்கும். குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு இருப்பதால் எதுவும் எல்லைமீறிப் போகாது என்பது உறுதி. யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள்.

கன்னி:

வாரம் முழுக்க நான்காமிடத்தில் செவ்வாய் அமர்ந்து யோகாதிபதி சுக்கிரனும் சனியுடன் இணைந்திருப்பதால், பெண்கள் மூலமான மனவருத்தங்களும் செலவுகளும் உள்ள வாரம் இது. விரையாதிபதி சூரியன் சுக்கிரனின் வீட்டில் நீசமாவதால் உங்களைச் சுற்றியுள்ள பெண்களுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும். அது சுபச்செலவா? அல்லது வீண்செலவா? என்பது உங்களுடைய பிறந்த ஜாதக அமைப்பை பொறுத்தது. பொதுவாக கன்னிக்கு நல்ல பலன்கள் நடக்கும் வாரம்தான் இது.

யோகாதிபதி சுக்கிரன் சனியுடன் இருக்கும் நிலையில் ராசிநாதன் நட்புவலுப் பெற்றிருப்பதால் சிலருக்கு இதுவரை இருந்து வந்த கடன், நோய், எதிரி தொந்தரவுகள் அனைத்தும் சாதகமாக மாறி தீர்வுக்கு வரும் வாரமாக இது இருக்கும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வாரம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள்.

சிலருக்கு தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாகப்பிரிவினைகள் முடிந்து உங்கள் பங்காக ஒரு நல்லதொகையோ, சொத்துக்களோ கிடைக்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்றும் இப்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

துலாம்:

வார ஆரம்பமே தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் ஆரம்பிப்பதால் துலாம் ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும் வாரம் இது. குறிப்பாக பதினொன்றாம் வீட்டில் ராகு வலுவாக இருப்பதால் சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகை லாபங்களும் இன்னும் சிலருக்கு இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக வருமானங்களும் உள்ள வாரமாகவும் இது இருக்கும்.

இதுவரை இருந்து வந்த எதிர்மறைபலன்கள் யாவும் மாறி இனிமேல் நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் தடைகளை சந்தித்து கொண்டிருந்தவர்களின் தொழில் சிறக்கும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரம் முன்னேறும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும்.

சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் வரும். நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது, எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது. சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் இரண்டில் வலுவாக அமர்ந்து, சுபக்கிரகமான சுக்கிர பகவான் சனியுடன் இணைந்து, அவருடைய கெடுபலன்களை குறைக்கும் வாரம் இது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை நடந்து வரும் சாதகமற்ற பலன்களிலிருந்து உங்களை மீட்டெடுக்கும் வாரமாக இந்த வாரம் அமையும். குறிப்பாக கடந்த நான்கு வருடங்களில் தொழில் விஷயங்களில் அகலக்கால் வைத்து புலிவாலைப் பிடித்ததுபோல் நடத்தவும் முடியாமல் விடவும் முடியாமல் திணறி கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் வாரம் இது.

விருச்சிகநாதன் செவ்வாய் உச்சத்தை நோக்கிப் போகும் வலுவான நிலையில் இருப்பதால் இதுவரை இருந்து வரும் சிக்கல்களுக்கு தீர்வுகளை தரும் வாரமாக இது இருப்பதோடு புதிதாக எந்த சிக்கல்களும் வராத வாரமாகவும் இருக்கும். பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். செலவு செய்வதில் கண்டிப்புடன் இருங்கள்.

எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாக்குக் கொடுப்பதோ வேண்டாம். பணவரவு இருக்கும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் பணத்திற்கு தட்டுப்பாடு இருக்காது. எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் என நீண்டகால குறைபாடுகள் உள்ளவர்கள் அசட்டையாக இருக்க வேண்டாம். சிறு உடல்நலக்குறைவு என்றாலும் உடனே கவனிப்பது நல்லது.

தனுசு:

வார ஆரம்பமே சந்திராஷ்டம நாளாக அமைவதால் முதல் இரண்டுநாட்கள் மனச்சங்கடங்கள் இருக்கும் வாரம் இது. உங்களை வெறுப்பேற்றிப் பார்ப்பதற்கே பக்கத்தில் உள்ளவர்கள் ஆசைப்படுவார்கள். ராசியில் செவ்வாய் இருப்பதால் நீங்களும் அதற்கேற்றார்ப் போலத்தான் நடந்து கொள்வீர்கள். 30 வயதுகளில் இருக்கும் தனுசுராசிக்காரர்கள் தற்போது வேலை, தொழில் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் புதிய தொழில் அமைப்புகள் எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது.

மனம் எதிலும் நிலைகொள்ளாமல் சரியான முடிவுகள் எடுக்கத் தடுமாறும் வாரமாக இது இருக்கும். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ் கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நன்மை அடைவார்கள். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு.

உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். 22-ந்தேதி மதியம் 3 மணி முதல் 24-ந்தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய தொழில் முயற்சிகள், தொழில் விரிவாக்கங்கள், புதியவரை சந்தித்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம். இந்த நாட்களில் நீங்கள் செய்வது எதிர்கால நன்மைக்கு நல்லவைகளாக இருக்காது.

மகரம்:

ராசிநாதன் சனிபகவான் சுபரான சுக்கிரனுடன் இணைந்து, இன்னொரு சுபரான குருபகவான் ராசியை பார்க்கும் யோகவாரம் இது. மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த மனக்கலக்கம் இந்தவாரம் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு எதிர்கால நன்மைகளுக்கான ஆரம்பங்கள் இப்போது நடக்கும். பத்தாம் வீட்டில் சூரியன் நீசமாக இருப்பதால் தகப்பனார் உடல்நிலையில் கவனம் வைக்க வேண்டும்.

வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும்.

முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. 24-ந்தேதி இரவு 10 முதல் 27-ந்தேதி காலை 8 மணி முதல் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். புதிய முயற்சிகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. யாரையும் இந்த நாட்களில் முதல் முறையாக அறிமுகப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம்.

கும்பம்:

வார ஆரம்பத்தில் ஆறில் சந்திரனும், எட்டில் குருவும் அமர்ந்து உங்களுடைய மனசஞ்சலத்தை அதிகமாக்குவார்கள். அதேநேரத்தில் ராசிநாதன் சனி சுக்கிரனுடன் இணைந்து, ஒன்பதாம் வீட்டில் யோகாதிபதி புதன் இருப்பதால் வரும் துன்பங்கள் அனைத்தையும் அனுபவங்களாக ஏற்றுக்கொண்டு சுலபமாக சமாளிப்பீர்கள். எதிலும் சீக்கிரமாக முடிவு எடுக்க முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். என்னதான் யோசனை பலமாக இருந்தாலும் கடவுள் அருள் உங்கள் பக்கம்தான் என்பதால் இறுதி வெற்றி உங்களுக்குதான்.

சுக்கிரன் பகை பெற்று சனியுடன் இருப்பதால் உங்களுக்கு ஆகாத எதிரிகளை நீங்கள் சிரித்த முகத்தோடு உறவாடிக் கெடுக்கும் வாரமாக இது இருக்கும். எதிலும் நேர்வழியில் செல்லுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கணவன் மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளும், கோர்ட் கேஸ் போன்றவைகள் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம். 27-ந்தேதி காலை 8 மணி முதல் 29-ந்தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவுடன் இணைவதால் கெடுதல்கள் எதுவும் கும்ப ராசிக்கு இருக்காது.

மீனம்:

இதுவரை கோட்சார நிலைமைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருந்த நிலைமை மாறி தற்போது மீனராசிக்கு எல்லாமே சுபமாக முடியக்கூடிய காலகட்டம் கூடி வந்திருப்பதால், இதுவரை நடக்காமல் இருந்த அனைத்து நல்ல விஷயங்களும் இப்போது நடக்கும். கடந்த நான்கு வருடங்களாக எதுவுமே கைவரப் பெறாமல் நிம்மதியில்லாத சூழல்களில் இருந்து வந்த மீனத்தினர் அனைத்தும் மாறி நன்மைகள் நடக்கப் போவதை இந்தவாரத்தில் இருந்து உணருவீர்கள். இனி எல்லாம் உங்களுக்கு சுபம்தான்.

உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். வாரம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். பெண்களுக்கு மிகவும் நல்ல வாரமாக இது அமையும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் கைகொடுக்கும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் கூடி வரும். 29-ந்தேதி காலை 8 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் தவிர்ப்பது நல்லது. ஆயினும் கெடுதல்கள் எதுவும் இருக்காது.

No comments :

Post a Comment