Saturday, 1 October 2016

கன்னி: 2016 அக்டோபர் மாத பலன்கள்

கன்னி:

மாதத் துவக்கத்திலேயே பரிவர்த்தனை அமைப்பின் மூலம் ராசிநாதன் புதன் ராசியிலேயே இருக்கும் நிலை அமைவதால் அக்டோபர் மாதம் கன்னிராசிக்கு சிறப்புக்களை மட்டுமே தரும் மாதமாக இருக்கும். மேலும் பிற்பகுதியில் மாதம் முழுவதும் ராசிநாதன் ராசியில் உச்சம் பெறுவதும் பின்னர் சுக்கிரனுடன் இணைவதும் நல்ல அமைப்புகள் என்பதால் கன்னிக்கு சந்தோஷங்களும், குடும்பத்தில் நன்மைகளும், தொழிலில் மேன்மைகளும் உள்ள மாதமாக இது இருக்கும்.

சமீபகாலமாக வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் இந்த மாதம் உண்டு. பூர்வீக சொத்து சம்மந்தமாக பிரச்சனைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெகுசிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பெண்களுக்கு உற்சாகமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதம் நல்ல பணவரவு இருக்கும் என்பதால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து விடுவீர்கள். அதிலும் தனஸ்தானாதிபதி சுக்கிரன் இரண்டில் ஆட்சி பெறுவது நல்ல அமைப்பு. வீண்செலவு செய்யாதீர்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை.

3,5,6,9,11,15,20,21,22,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ந்தேதி காலை 11 மணி முதல் 18-ந்தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய தொழில் முயற்சிகளோ, வீடு மாற்றம் தொழில் மாற்றம் போன்றவகளையோ செய்ய வேண்டாம். எவரிடமும் வாக்குவாதமும் செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment